வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக்
1990ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான். கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன். ஆனால், இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான். ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது.
(அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடி திரிந்து தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவது) எதிரியின் ஆக்கிரமிப்புத்தான் இதற்கு காரணம். அந்தநேரம் எம்மிடம் எதிரியின் போர் விமானங்களையோ போர் உலங்கு வானுர்திகளையோ சுட்டு வீழ்த்துவதற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளோ விமான எதிர்ப்பு ஆயுதங்களோ இருக்கவில்லை. எம்மிடம் இருந்த மிகப் பலம் வாய்ந்த ஆயுதமான உயிராயுதம் அதாவது கரும்புலிகள். இவர்களைப் பயன்படுத்தி ஒரு பெரும் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்டது. அதாவது எமது மக்களினதும், போராளிகளினதும் சாவுக்குக் காரணமான விமானங்களை அதன் இருப்பிடம் தேடிச் சென்று அழிப்பதே திட்டமாகும். இது இலகுவான காரியமல்ல எத்தனையோ இராணுவ காவலரன்கள், இராணுவ ரோந்துகள், இராணுவ மினிமுகாம்கள் இவைகளை மிகவும் அவதானத்துடன் கடந்து செல்ல வேண்டும். அதே நேரம் சின்னத் தவறாகிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அதேவேளை எதிரியும் தாக்குதல் திட்டங்களை விளங்கிக்கொண்டு தன்னை இன்னும் பலப்படுத்திவிடுவான்.
இவற்றை கடந்து சிறுகச் சிறுக சேர்த்த அசோக் தலைமையிலான அணியின் வேவுத் தகவலின் அடிப்படையில் பலாலி விமான நிலையம் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டப்பட்டு அணிகள் புறப்பட்டு சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தூடனான நேரடி மோதலில் பல வெற்றிகளுக்கு வேவுத் தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்த மேஐர் அசோக் 02 .08.19994 அன்று வீரச்சாவடைந்தார். இருப்பினும் இவர் கூட்டிச் சென்ற கரும்புலிகள் தமது இலக்கை வெற்றிகரமாக அழித்து புதிய வரலாற்றை எழுதி வீரச்சாவடைந்தனர்.
அசோக்கின் சகோதரி 26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா படையினருக்கான வெடிமருந்து ஏற்றிச் சென்ற சிறிலங்கா கடற்படையின் ‘உகண’ கப்பலை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் தானும் ஒரு கரும்புலியாகி கடலிலே காவியம் படைத்த கடற்கரும்புலி மேஐர் சந்தனா ஆகும்.