இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்களங்கள் சமர்க் களங்களில் ‘கமரா’க்கள்.

சமர்க் களங்களில் ‘கமரா’க்கள்.

சமர்க் களங்களில் ‘கமரா’க்கள்.
புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’

‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது.

ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள் நடாத்திய வீரச்சமர் பிரசித்தி பெற்றது.

அந்த வரலாற்றுச் சமரைத் தத்ரூபமாகப் படம்பிடித்த இரண்டு புலிவீரர்களை, அண்மையில் தலைவர் அவர்கள் பரிசளித்துப் பாராட்டினார்.

புலிப்படை வீரர்களின் ஆக்ரோசத் தாக்குதலில் சுருண்டு விழுகின்ற எதிரியின் படையாட்கள். தப்பினோம் பிழைத்தோமென சகாக்களையும் தளபாடங்களையும் கைவிட்டோடுகின்ற சிங்கள வீரர்கள். தகர்த்தழிக்கப்படுகின்ற பகைவனின் நம்பிக்கை நட்சத்திரமான போர் டாங்கிகள்.

குண்டுவீசவீசக் குமுறியெழுந்து போரிடும் புலிப்படை வீரர்கள்.

கை ஒன்றை முற்றாக இழந்த நிலையிலும், களத்தில் வீழும்வரை வீரமுடன் சண்டையிட்டு முன்னேறுகின்ற தமிழ்மறவன் என்ற கப்டன் கல்கத்.

சமரின் ஒரு முனையை வழி நடாத்தி, எதிரியின் குண்டுச் சிதறல்களால் களப்பலியாகின்ற நாயகன் எனும் லெப்டினன்ட் கேணல் நரேஸ்.

இப்படியாக, முழுமையான அந்தச் சமரையே அதன் வீரத்தன்மையையும் தியாகத் தன்மையையும் குறையாத உயிரோட்டத்தோடு கமராக்களினால் பதிவுசெய்துகொண்டு வந்திருந்தார்கள் அந்தப் புலிவீரர்கள்.

பரிசு பெற்றவர்களில் ஒருவர் சுதாகர். இவர் விடியோ படப்பிடிப்பாளர். அடுத்தவர் சுதாகரன். புகைப்படமெடுக்கும்போது படுகாயமடைந்ததால் ஊன்றுகோல்களின் உதவியுடன் நடந்துவந்த அவருக்கு, மேடையிலிருந்து இறங்கிவந்து தலைவர் பரிசை வழங்கினார்.

“முன்னே இருந்து சுட்டுக்கொண்டு இருக்கும் எதிரிக்கு முன்னால் நின்று, திருப்பிச்சுட முடியாத ஒரு கருவியுடன் படமெடுப்பது என்பது ஒரு சாதாரண காரியமல்ல. சண்டை முனைகளில் படமெடுப்பதற்கு வித்தியாசமான ஒரு மனத்துணிச்சல் தேவை” என, அந்தப் பரிசளிப்பு நிகழ்வில் கருத்துரை வழங்கும்போது கூறிய தலைவர் அவர்கள், “சண்டைகளில் படமெடுக்கும் போராளிகளை, எமது வேவு வீரர்களைப் போன்றவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் எந்த நொடியிலும், பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பம் குறைந்த சாவு அவர்களுக்கு ஏற்படலாம். அண்மைக் காலத்தில்கூட, புலோப்பளைச் சமரில் குமணன் என்ற போராளியையும், பூநகரிச் சமரில் ஈழப்பிரியா என்ற பெண் போராளியையும், படம் பிடிக்கும் பணியில் நாம் இழந்திருக்கிறோம்” என அவர்களை நினைவுகூர்ந்தார்.

லெப்டினன்ட் குமணன், மன்னார் முருங்கனைச் சேர்ந்தவன். செல்வரட்ணம் குணரட்ணம் என்பது அவனது இயற்பெயர். மன்னார் மாவட்ட தாக்குதற் படையணியில் வீடியோ படப்பிடிப்பாளனாக அவன் இருந்தான். கடந்த யூன் மாதத்தில், புத்தளம் மாவட்டத்திற்குள் எதிரியின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தினுள் ஊடுருவி, பகைவன் சற்றும் எதிர்பாராத மையமான இலவன்குளம் என்ற இடத்திலிருந்த காவற்படையின் அரண்கள் மீது புலிவீரர்கள் நடாத்திய இருவேறு அதிரடித் தாக்குதல்களை, குமணன் முழுமையாகப் படம்பிடித்திருந்தான்.

அந்த வெற்றிகரமான நேரடிச் சண்டைகளின் படங்கள், எமதியக்கத்தின் ‘நிதர்சனம்’ தயாரிப்பான ‘ஓளிவீச்சு’ வீடியோ சஞ்சிகையின் யூன் மாத வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

2ம் லெப்டினன்ட் ஈழப்பிரியா யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவள். நவரட்ணம் மதிவதனி என்பது அவளது இயற்பெயர். வீடியோ படைத்துறைக்கு அவள் புதியவள். ஏமதியக்கத்தின் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவள். ‘ஒப்பறேசன் தவளை’ அவளுடைய முதற்களம். ஆதில் வீடியோ படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு, அச்சமரிலேயே களப்பலியாகினாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ படமாகினும் சரி, அல்லது புகைப்படமாகினும் சரி, போர்க்களங்களைப் படம் பிடிப்பதென்பது ஒரு அசாதாரணமான காரியம்தான். உயிராபத்து நிறைந்த அபாயகரமான ஒரு முயற்சி அது. வெளி ஆட்களைப் பொறுத்தவரை இது ஒரு பிரமிப்பூட்டும் வீரச்செயல்.

சண்டையிடும் அணிகளுள் ஒருவராக தானும் ஒரு போர் வீரராக ஆனால், துப்பாக்கிக்குப் பதிலாக ‘கமரா’வினைக் கையிலெடுத்து, படம் பிடிப்பதற்காக ஒரு போராளி களத்தில் இறங்குகிறார்.

சமர்க்களம் ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்கும். ஒரு இம்மியும் பிசகாமல் எதிரியின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அவதானித்து, அதற்கமைய அதி துரிதமாக் செயற்பட வேண்டிய சூழ்நிலை அது. காற்றுக்குப் பதிலாக துவக்கு ரவைகளும் பீரங்கிக் குண்டுகளும் வீசும் அந்த ரணகளத்தில், ‘கமராவை’வை கண்ணுக்குள் நுழைத்துக்கொண்டு படம் பிடிப்பது எத்தகைய ஆபத்தான பணி என்பதை விபரிக்கத் தேவையில்லை.

புலோப்பளையில் புகைப்படமெடுக்கும்போது பலத்த காயத்துக்குள்ளாகி, சுய நினைவு அற்ற நிலையில் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சுதாகரன் சொன்னார்:

“எமது தோழர்கள் ஆக்ரோசமாகப் போரிட்டு, வெற்றிக் கூக்குரலோடு களத்தில் முன்னேறும்போது எமக்குள் பிரசவகிக்கும் உற்சாகம், எங்களுக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டுமென எம்மைத் தூண்டுகிறது. அந்த நேரத்தில் வேறெதுவும் மனதை ஈர்க்காது.”

புலோப்பளைச் சமரைத் திறம்பட வீடியோ படம்பிடித்த சுதாகர் கூறினார்:

“போரிடும்போது எங்கள் படைவீரர்கள், வெளி ஆட்களால் நம்புதற்கரிய விதமாகப் படைக்கின்ற வீர சாதனைகளையும், அவர்கள் புரியும் உயரிய தியாகங்களையும் நேரடித் தரிசனங்களாக உலகிற்குக் காட்டவேண்டும் என்ற உணர்வு மட்டுமே, அந்த நேரங்களில் மேலோங்கி நிற்கும்; குண்டுகளைப் பற்றி யோசிக்க அங்கு நேரமிருக்காது”

சாதரணமாக ஒரு போர் விமானம் எமக்கு மேலே வட்டமிடுவதைக் கண்டாலே, தன்னிச்சியாக எம் கால்கள் பதுங்குகுழி நோக்கியோடுகின்றன. கணிசமான ஒரு தூரத்தில் நிகழும் ஒரு குண்டு வீச்சின் அதிர்விற்கே, நிற்கும் இடத்திலேயே விழுந்து படுத்து நாம் பாதுகாப்புத் தேடுகின்றோம். எமது சுய எண்ணப்பாடுகளுக்கு அவகாசமில்லாமல், இயல்பு உந்துதலாக இவை நடந்துவிடுகின்றன. இத்தகைய ஒரு நிலையிலிருந்து, கையில் ஆயுதங்களும் இன்றி சண்டைகளில் அவர்கள் ஆற்றும் பணியை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்தப் பணியில் ஈடுபட்டு வீரச்சாவை அணைத்துக் கொண்ட நண்பர்களைக் தவிர, பலர் படுகாயமடைந்துள்ளார்கள்: சிலது உடலில் அங்கங்களையும் இழந்துவிட்டார்கள்.

சதா குண்டுகள் அதிரும் இரத்தக்களத்தில் பதற்றமின்றி, தளர்வின்றி, நிதானமாக, செயற்திறன்மிக்க விவேகத்துடன் அபாரமான துணிச்சலோடும், அர்ப்பண உணர்வோடும் அந்த அரிய பணியை ஆற்றுகின்ற எங்கள் நண்பர்கள் போற்றுதற்குரியவர்கள்.

சர்வதேச மட்டத்தில் செய்திப்பரம்பல் உலகில் போர்முனைகளை நேரடியாகக் களத்தில் நின்று படம்பிடிப்பது, மிகப் பிரபல்யமான ஒரு துறைசார் செயற்பாடு. உலகின் பல்வேறு காலங்களில் நடந்த பிரசித்திபெற்ற போர்க்களையெல்லாம், இப்போது அதே உயிரோட்டத்துடன் நாம் பார்க்கக்கூடியதாக, படத்துறை வல்லுனர்கள் எடுத்துத்தந்துள்ளார். அங்கெல்லாம் நடந்த ஆச்சரியமான சம்பவங்களை வெளி உலகிற்குத் தந்தவர்கள் படப்பிடிப்பாளர்கள்தான் என்று சொல்லலாம். நிகழ்காலத்திலும் அவர்கள் தந்துகொண்டே இருக்கின்றார்கள்.

அதேபோலவே, இன்றைய காலத்தில் தமிழீழத்தில் நடக்கின்ற சுதந்திரப் போரட்டத்தை மரணத்தின் விளிம்படியில் நின்று எங்கள் வீரர்கள் படங்களாக உருவாக்குகின்றார்கள்.

இருப்பினும், எங்கள் வீரர்களை சர்வதேச படப்பிடிப்பாளர்களோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால், எம்மவர்கள் ஒரு ஆயத பாணியைப் போல யுத்தத்தின் உச்சமுனையில் நிற்பார்கள். ஆனால், வெளிநாடுகளில் கணிசமான தொலைவில்தான் நிற்பார்கள். சில சமயங்களில் அது கி.மீ. அளவிலும் இருக்கும். ஏனெனில், எம்மவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மிகச் சாதாரணமான ‘ஆகக்குறைந்ததூர உள்வாங்கும் சத்திகொண்ட’ கமராக்களுடன்தான் களத்தில் இறங்குகின்றார்கள் ஆனால் வெளிநாடுகளில், அதி சக்திவாய்ந்த நவீன தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்ட ‘மிகக் கூடியதூர உள்வாங்கும் சக்தி கொண்ட’ படப்பிடிப்புக் கருவிகளுடன் சண்டையின் உச்சமுனைக்குப் பின்னே நின்றுதான், போர் அரங்கைப் படம் பிடிப்பார்கள். ஆனால், உயிர் ஊசலாடும் அபாயகரமான சூழ்நிலையில் நின்று எம்மவர்கள் பணியாற்றுகின்றார்கள்.

இவர்கள் எடுக்கும் படங்கள் எல்லாம், கிடைக்கக்கூடிய வசதிகளுடன், இயலுமான அளவுக்கு நல்லமுறையில் பேணப்பட்டு வருகின்றன. வருங்கால சந்ததிகளுக்கு, இன்றைய கால போராட்டத்தின் கனபரிமாணத்தையும் பெற்றெடுக்கும் விடுதலையின் பெறுமதியையும் அவை உணர்த்தும்.

குண்டு மழையில் குளித்து, வெடிமருந்துப் புகையைச் சுவாசித்து, சாவு விளையாடும் சண்டைமுனைகளிலிருந்து எம் போராளிகள் எடுத்துத்தந்த படங்கள், காலநதியில் கரைந்து போகாதவை; எக்காலத்திலும் உயிர்த்துடிப்போடு விளங்கப் போகின்றவை. வீடியோ நாடாக்களாகவும் புகைப்படச் சுருள்களாகவும் உள்ள அவை தலைசிறந்த ‘யுத்த ஆவணங்களா’கப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

இன்றைய காலத்தில் எங்கள் தாயக மண்ணில் நிகழும் வீர சுதந்திரப் போராட்டத்தை எங்கள் வீரர்கள் படைக்கும் தீர சாதனைகளை வேறெங்குமே காணமுடியாத அதி உன்னத அர்ப்பணிப்புகளையெல்லாம் கமராக்களிற்குள் குவியச் செய்து, எமது போராளிகள் படங்களாக உருக்கொடுக்கின்றார்கள். இவை இக்காலத்திலும் எக்காலத்திலும் எங்கள் பெருமைகளை உரத்துச் சொல்லும்!

 -விடுதலைப்புலிகள்  இதழ் குரல்  45-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments