தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன்.
கிளிநொச்சி மாவட்டம் கந்தபுரம் தான் வீரனினசொந்த ஊர். க.பொ.த.சாதாரண தர கல்வியை 1995ல் முடித்த சோமசுந்தரம் மோகனசுந்தரம் என்ற பதினாறு வயது மாணவன் விடுதலைப் போராட்டத்தின்பால் கவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். “சரத்பாபு – 10” பயிற்சித் தளங்களில் அடிப்படை பயிற்சியை முடித்த வீரன் யாழ். மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். யாழ் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி வீரன் தொடர்ந்து வன்னிக் காடுகளில் கடமையாற்றினான்.
1996ம் ஆணடு லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணியில் வீரன் இணைக்கப்பட்டான். தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தனது போராட்ட வாழ்க்கையை தொடர்ந்தான் வீரன். “ஓயாத அலைகள் – 01 “முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக செயற்பட்டான். இவனுடைய கல்வியறிவும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவனை தளபதிகளின் விசேட பார்வைக்குள் கொண்டு சென்றன. இதனால் இவன்”ஓ.பி” போராளியாக சிறப்பு பயிற்சி பெற்று ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் திறன்பட செயற்பட்டான். இச்சமரில் வீரன் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இதனால் சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு வீரன் மீண்டும் தாக்குதல் அணியில் இணைந்து கொள்ள விரும்பினான். ஆனால் இவனுடைய உடல் நலன் கருதி படையணியின் தாக்குதல் தளபதியும் நிர்வாகப் பொறுப்பாளருமான மதன் அவர்கள் வீரனை ஆளுகைத் தளத்தில் அறிக்கைக்காரனாக கடமையில் ஈடுபடுத்தினார். “சேரா நவம்பர்” தளத்தில் வீரன் தனது சக தோழர்களான சேந்தன், தமிழரசன் முதலானோருடன் அறிக்கை பணிகளில் முழுமையாக ஈடுபட்டான். 1998ல் படையணியின் ஆளுகைத் தளம் வட்டக்கச்சிக்கு மாறிய போது வீரன் அங்கு அறிக்கை போராளியாகச் செயற்பட்டான்.
1999ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள பொறுப்பேற்ற போது மீண்டும் தாக்குதல் அணிக்கு திரும்பிய வீரன் முதுநிலை அணித் தலைவன் நியூட்டன் அவர்களின் கொம்பனியில் ஒரு செக்சன் லீடராக களமிறங்கினான். இந்நாட்களில் முன்னரங்க வேலைகளிலும், காவற் கடமையிலும் முழுவீச்சுடன் வீரன் ஈடுபட்டிருந்தான். குழப்படிகளூம் முன்முயற்சிகளும் நிறைந்த இளம் அணித்தலைவனான வீரன் படையணியின் பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தான்.
வீரன் திறமையான சண்டைக்காரன் மட்டுமின்றி விளையாட்டு கவிதை புனைதல், வாசித்தல், கலை நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்துவது முதலான பல்துறை சார்ந்த போராளிக் கலைஞனாகவும் விளங்கினான். சதுரங்க ஆட்டத்திலும் வீரன் வல்லவனாக இருந்தான். ஊரியான், பரந்தன், சுட்டதீவு களமுனைகளில் போராளிகளின் ஒன்றுகூடலின் போது வீரன் தயாரித்து நடத்தும் “மேஜர் பிரியக்கோண் இசைக்குழு” நிகழ்ச்சி போராளிகளிடையே மிகப் பிரபலமாக இருந்தது. போராளிக் கலைஞர்களை தனக்கேயுரிய துள்ளலான குரலில் வருணனையுடன் வீரன் அறிமுகப் படுத்தும் போது மிகுந்த கரவொலி எழுப்பி போராளிகள் வரவேற்பர். இவனுடைய நகைச்சுவை ததும்பும் கதைகளாலும் அறிவிப்புகளாலும் ஒரு சிறந்த போராளிக் கலைஞனாக படையணி வட்டாரத்தில் வீரன் பெரிதும் மதிக்கப்பட்டான்.

2001ம் ஆணடு முகமாலை களமுனையில் பிளாட்டூன் லீடராக வீரன் கடமையாற்றினார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் முன்னணி கொமாண்டரான கப்டன் வான்மீகி அவர்கள் வீரச்சாவைத தழுவிக் கொண்ட போது, அவருடைய இடத்தில் வீரன் நின்றிருந்தது முதுநிலை அணித் தலைவன் அமுதாப்புடன இணைந்து தீவிரமாக களமாடினார். இச்சமரில் அதிரடி செக்சன் கொமாண்டர் கப்டன் மகேஷ் அவர்கள் வீரச்சாவைத தழுவிக் கொண்ட போது அவருடைய அணியையும் வீரன் பொறுப்பேற்று திறம்பட சமர் செய்தார். இச்சமரில் வீரனின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இதன் பின்னர் படையணி நாகர்கோவில் களமுனையில் கடமையில் இருந்த போது வீரன் பிளாட்டூன் லீடராக செயற்பட்டார்.
2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் படையணி போர்ப் பயிற்சிக் கல்லூரியில் நிலை கொண்டிருந்தது. அங்கு வீரன் நிர்வாகத்திலும், பயிற்சிகளிலும் கடமையாற்றினார். இக்காலத்தில் வீரன் மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சி, கிளைமோர் பயிற்சி முதலான சிறப்புப பயிற்சிகளில் ஈடுபட்டார் புதிய போராளிகள் படையணிக்கு வந்தபோது வீரன் கொம்பனி லீடராக பொறுப்பேற்று இளம் போராளிகளின் சிறப்புப பயிற்சியில் ஒரு முன்னுதாரணமான அணித் தலைவனாக செயற்பட்டார். படையணியின் ஒரு பகுதி முகமாலை முன்னரங்கில் கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த போது வீரன் கொம்பனி லீடராக கடமையைத் தொடர்ந்தார். பின்னர் வீரன் நாகர்கோவில் களமுனையில் பகுதிப் பொறுப்பாளனாக சில மாதங்கள் கடமையாற்றினார். இக்காலத்தில் களமுனையில் நிலை கொண்டிருந்த மகளிர் தாக்குதலணி மற்றும் அரசியற்துறை தாக்குதலணி ஆகியவற்றோடு வீரன் சிறந்த ஒருங்கிணைப்பை கொண்டிருந்து பாதுகாப்பு கடமைகளைச் செவ்வனே செய்தார். 2005ல் மீணடும் போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு திரும்பிய வீரன் கொம்பனி பொறுப்பாளராக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார்.
2006ம் ஆணடு மன்னார் களமுனை பாதுகாப்பை உறுதிப்படுத்த இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் போது காடுகளூடாக நீண்ட முன்னரண் வரிசையை அமைக்கும் வகையில நிலைகளை தெரிவு செய்து தகடுகள் போட ஒரு கொமாண்டரை அனுப்புமாறு தேசியத் தலைவர் படையணியை பணித்த போது வீரன் இக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். சுமார் ஒரு கிழமைக்கும் மேலாக மன்னார் மாவட்டத்தின் பெரும் காடுகளில் வீரன் தனது குழுவுடன் சுற்றித் திரிந்து சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவுக்கு நீண்ட முன்னரண் நிலைகளை தெரிவு செய்து தகடுகளை கட்டி வரைபடம் தயாரித்து தனது கடமையைச் சிறப்பாக செய்து முடித்தார். இந் நடவடிக்கையில் வீரனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது.
மீண்டும் வட்டக்கச்சி தளத்திற்கு திரும்பிய வீரன் அங்கு பல்வேறு கடமைகளில் செயலாற்றினார். தமிழீழ தேசத்தின் கிழக்கு பகுதியில் சிங்கள ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெரும் தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் வடக்கிலும் எதிரி பெரும் யுத்த முனைப்புக்களை செய்யத் துவங்கியிருந்தான். இதனால் அவசரமாக படையணி முகமாலை களமுனையில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தப்பட்டது. இதன் போது வீரன் தாக்குதல் தளபதியாக நியமிக்கப்பட்டு கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நாட்களில் வீரன் எதிரியின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் பல்வேறு கடமைகளில் ஓய்வின்றி ஈடுபட்டார்.
2006ம் ஆணடு ஆவணி மாதம் 11ம் நாள் திடீரென யுத்தம் வெடித்த போது வீரன் தீவிரமான முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தினார். தொடர்ந்து எதிரியின் முன்னரங்க நிலைகளை கைப்பற்ற தடையுடைப்பு அணிக்கு தலைமை ஏற்று தடையை உடைத்து வீரன் முன்னேறினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் ஆவணி மாதம் 13ம் நாள் வீரன் படுகாயமுற்றார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் வீரன் உறுதியாகவும் தெளிவாகவும் தன்னுடன் நின்ற மகளிர் போராளிகளுக்கு திட்டங்கள் வழங்கினார். பின்னர் தனது கைத்துப்பாக்கியை தனது சக அணித் தலைவியிடம் கொடுத்து தனது சிறப்புத் தளபதி கோபித்திடம் ஒப்படைக்க பணித்தார். பின்னர் களமுனை துணை மருத்துவ நிலையத்திற்கு தூக்கி வரப்பட்ட வீரன் அங்கு வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்.
எந்நேரமும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படும் வீரன் போராளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். வீரன் மக்களை ஆழமாக நேசித்தார். மக்கள் மத்தியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்தினார். தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட உன்னதமான போராளியாக விளங்கினார். லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன் அவர்களின் போராட்ட வாழ்க்கை தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன்.