இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

லெப். கேணல் நாகதேவன்.

பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன்.
 
“நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு நாகதேவன் என்ற இளம் போராளியாக கேணல் கிட்டு படையணியில் சேர்க்கப்பட்டார். பூநகரியை மீட்ட “தவளை” சமரில் தனது முதலாவது களப்பணியில் கால் பதித்தான் இளம் போராளி நாகதேவன். தொடர்ந்து யாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றினான். பின்னர் மணலாற்றுக் காடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான பல தாக்குதல்களில் தாக்குதலணியில் ஒரு போராளியாக நாகதேவன் களமாடினான். இவனுடைய கல்வியறிவு புதிய ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் பொறுப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்டு மோட்டார் அணியில் இவனை இணைத்தனர். 60 மி.மீ மோட்டார் சூட்டாளனாக திறம்பட செயல்பட நாகதேவன் விரைவிலேயே 81 மி.மீ. அணியில் இடம்பெற்றார். மோட்டாரை இயக்குவதில் தேர்ந்த சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் விளங்கிய நாகதேவன் தனது களப்பணியைத் தொடர்ந்தார்.
 
1995 ல் நாகதேவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணி யில் இணைக்கப்பட்டார். “ஓயாத அலைகள் – 01” முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் கனரக ஆயுத அணியில் சூட்டாளனாக செயற்பட்டார். இவருடைய கள அனுபவங்களும் போராளிகளை வழிநடத்தும் திறனும் இவரை செக்சன் லீடராக உயர்த்தின. 1997ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் செக்சன் லீடராக மிகத் தீவிரமாக நாகதேவன் களமாடினார். இச்சமரில் தனது இடுப்புப் பகுதியில் படுகாயமுற்ற நாகதேவன் இறக்குந்தறுவாயில் சக போராளிகளால் மீட்கப்பட்டு மருத்துவப் பிரிவு போராளிகளின் தீவிர சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்டார். சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மோட்டார் அணியில் இணைந்து கொண்டார். “ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி மீட்புச் சமரில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக அயராது களமாடிய நாகதேவன் படையணி போராளிகளிடையே பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார்.
 
கிளிநொச்சி மீட்புச் சமருக்குப் பிறகு ஊரியான் பரந்தன் முன்னரங்கில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக நாகதேவன் தொடர்ந்து கடமையாற்றினார். படையணியின் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைப்பாளரும் இளம் தளபதியுமான மதன் அவர்களின் கட்டளையின் கீழ் எமது நீண்ட முன்னரண் வரிசையைப் பாதுகாப்பதில் நாகதேவன் மிகுந்த ஊக்கமுடன் செயற்பட்டார். படையினரின் புகழ்பூத்த கொம்பனிப் பொறுப்பாளர்கள் வீரமணி, நியூட்டன், இராசநாயகம், கோபித் முலானோருடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணிய நாகதேவன் முன்னரண் இளம் அணித் தலைவர்களை திறமான ஓ.பி போராளிகளாக வளர்ப்பதில் பெரும் முயற்சி எடுத்தார். இந்நாட்களில் ஈழவாசன், தாவீதின், நிலான், மதி உள்ளிட்ட பல இளம் போராளிகளை மோட்டாரை இயக்குவதில் தேர்ந்தவர்களாக வளர்த்தெடுத்தார். 1999ம் ஆண்டு 8ம் மாதம் எதிரி பரந்தன் ஊரியான் பகுதியில் மேற்கொண்ட பாரிய படை நகர்வுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் நாகதேவன் சிறப்புடன் செயற்பட்டு சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
 
“ஓயாத அலைகள் 03” சமரில் ஒட்டுசுட்டான், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், பரந்தன் முதலான அனைத்து களமுனைகளிலும் மோட்டார் சூட்டாளனாக இடையறாது செயற்பட்டார். “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையில் “பாலா” மோட்டார் அணி லீடராக பொறுப்பேற்று கடமையாற்றினார். 2001ல் முகமாலை கிளாலி முன்னரங்கில் மோட்டார் அணி லீடராக கடமையைத் தொடர்ந்தார். இந்நாட்களில் படையணியில் 60 மி.மீ மோட்டார் அணிகளை உருவாக்கி பயிற்றுவித்ததில் நாகதேவன் பெரும் பங்காற்றினார். இளம் செக்சன் லீடர்களான சிலம்பரசன், வீரமறவன், இசைச்செல்வன், ஜெயசீலன், சாந்தீபன், யாழ்வேந்தன், கலைச்செல்வன், றமணன் முதலானோர் நாகதேவனுடன் இணைந்து சிறந்த சூட்டாளர்களாகவும் வரைபடக்காரர்களாகவும் “ஓ.பி.” போராளிகளாகவும் சிறப்புடன் செயற்பட்டனர். சக மோட்டார் அணிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணுவதில் நாகதேவன் முக்கியத்துவம் அளித்தார். இவருடைய சக தோழன் வைத்தியை மோட்டாரில் பயிற்றுவித்து அவனை சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் நாகதேவன் உருவாக்கினார்.
 
2001 தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் இவருடைய” பாலா ” அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு தாக்குதலணி போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இச்சமரில் மகளிர் போராளிகளின் மோட்டார் அணியொன்று எதிரியின் சுற்றிவளைப்புக்கு உள்ளான போது, நாகதேவன் உடனடியாக துணைத் தளபதி கோபித் அவர்களின் கட்டளையைப் பெற்று தனது மோட்டாரை பின்பக்கமாக திருப்பி மகளிர் போராளிகளுக்கு ஆதரவாக செறிவான சூடுகளை வழங்கினார். சிங்கள இராணுவத்தினரின் முற்றுகையை உடைத்து மகளிர் போராளிகளை பாதுகாப்பாக வெளியேற்றிய இம் முக்கிய சமரில் நாகதேவனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் இவருடைய சக தோழர்களான றமணனையும் வைத்தியையும் நாகதேவன் சிறப்பாக வழிநடத்தினார். இவருடைய அணியிலிருந்த பல போராளிகள் காயமடைந்த நிலையில் இவருக்கு உதவுவதற்காக வந்த மகளிர் போராளிகளை சிறப்பாக நெறிப்படுத்தி தொடர்ந்து களமாடி இச்சமரின் வெற்றிக்கு வழிகோலினார். இதற்காக தேசியத் தலைவரிடம் பாராட்டையும் சிறப்புச் சான்றிதழையும் வைத்தியும் நாகதேவனும் பெற்றுக் கொண்டனர்.
 
 
 
2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் நாகதேவன் பயிற்சித் தளங்களில் செயற்பட்டார். பல இளம் போராளிகளை மோட்டார் அணியில் பயிற்றுவித்த நாகதேவன், தொடர்ந்து தாக்குதல் அணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்றுச் செயற்பட்டார். மட்டக்களப்பில் துரோகி கருணாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி கோபித் அவர்களின் பொறுப்பின் கீழ் நாகதேவன் பிளாட்டூன் லீடராக தீரமுடன் களமாடினார். இவருடைய சக தோழர்களான செங்கோலன், தென்னரசன் ஆகியோரும் இந்நடவடிக்கையில் பிளாட்டூன் லீடர்களாக களமிறங்கி போராடினர். மட்டக்களப்பு நடவடிக்கைக்கு பிறகு வன்னிக்கு திரும்பிய நாகதேவன் மீண்டும் பயிற்சி தளங்களில் நின்று தாக்குதல் தளபதியாக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார்.
 
2006ம் ஆணடு 8ம் மாதம் முகமாலை களமுனையில் எமக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையே போர் மூண்ட போது நாகதேவன் தாக்குதல் தளபதியாக சிறப்புத் தளபதி கோபித்தின் கீழ் நின்றிருந்தது தாக்குதலணிகளுக்கு தளங்களை அமைப்பதிலும் கனரக ஆயுத போராளிகளை பயிற்றுவித்து ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார். இச்சமரில் ஓகஸ்ட் மாதம் 13ம் நாள் எதிரியின் தொடர் காவலரண்களை தாக்கிக் கைப்பற்ற நாகதேவன் கடுமையாக சமராடினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிய நாகதேவன் அங்கே படுகாயமுற்று வீரச்சாவைத தழுவிக் கொண்டார்.
 
தமிழீழ தாயக விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடிய லெப். கேணல் நாகதேவன் அமைதியான இயல்பும் தொலை நோக்கும் பொறுப்புணர்வும் மிக்க போராளியாக, தனது போராட்ட வாழ்க்கை முழுவதும் களமுனைகளிலேயே செயற்பட்ட ஒப்பற்ற போராளியாக திகழ்ந்தார். போராளிகளிடையே சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். இயக்கத்தில் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் அவர் முன்னோடியாக ஊக்கமுடன் செயற்பட்டார். தனது சிறப்பான செயற்பாடுகளுக்காக தளபதிகளாலும் எமது தேசியத் தலைவராலும் பலமுறை பாராட்டுக்களைப் பெற்ற போராளியாக நாகதேவன் விளங்கினார். “நவம்பர்” என்று போராளி களால் அன்போடு அழைக்கப்பட்ட லெப். கேணல் நாகதேவன் அவர்களின் துணிவும் பொறுப்புணர்வும் வீரமும் தமிழீழ வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments