ஓயாத அலைகள் -03 ல் எதிரியை ஓடஓட விரட்டிய சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா.!
அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள்
1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள்.
சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவாள். எதுவுமே விளங்காத மற்றவர்கள் கொல் என்று சிரிப்பதுடன் அவளது கோபமும் பறந்து விடும். தாக்குதல் பயிற்சிகளின்போது சிங்களத்தில் கத்திச் சண்டைப் பயிற்சி செய்வாள் தான் நன்றாகச் சண்டை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவளிடம் நிறையவே உண்டு. எதிரியை ஓடஓட விரட்டிய ஓயாத அலைகள் -03 சமரில் இவள் இரு காலிலும் காயமுற்றாள்.
எப்போதும் தான் ஒரு வேவு நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என பொறுப்பாளரிடம் அடம்பிடிப்பாள். இறுதியில் அவளின் திறமையும், ஆர்வமும் அப்பணிக்கு அவளைத் தெரிவாக்கியது தரையிறக்கச் சமரின் ஒரு கட்டமான இத்தாவில் பகுதி தாக்குதல் நடவடிக்கையில் வேவு அணியில் ஒருவராகச் செயற்படும் சந்தர்ப்பம் இவளுக்குக் கிடைத்தது. இறுதியில் 5 பேர் கொண்ட அணிக்குரிய வேவுப் பொறுப்பாளராக உயர வைத்தது.
சாவகச்சேரிப் பகுதியில் நின்ற அபிநயா வேவுக்குச் சென்று வந்த பின்பு தான் பார்த்தவற்றை துல்லியமாக குறிப்பிடுவதுடன் எதிரியின் உரையாடலையும் கேட்டு வந்து எமக்குத் தமிழாக்கம் செய்வாள். கேட்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கும். அதே நேரம் அவளது திறமையை எண்ணி மனம் வியக்கும் தனித் துணிவு என்பது அபிநயாவுடன் கூடப் பிறந்த ஒன்று.
சில நாட்களின் பின்னர் இவள் அரியாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டாள் . அதுவே அவளது இறுதிக் களமாகவும் அமைந்தது. நல்ல துணிச்சல்காரியாக, ஒரு நல்ல வேவுப்புலியாக, எல்லோருக்கும் நல்லவளாய், வல்லவளாய் மண்ணுக்காய் வாழ்ந்து வரலாறாகிப் போன அபிநயாவின் நினைவுடனும் நடக்கின்றோம் விடியலை நோக்கி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”