இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள் உருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்.

உருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்.

இந்திய ராணுவம் எம் மண்ணை விட்டு போன போது, தேச விரோத சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை அள்ளி கொடுத்து விட்டு கப்பலேறியது; அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தங்கள் “வளப்புகள்” புலிகளை அழித்து விடுவார்கள் என்று? அதையும் இங்கே தங்கிய துரோகிகளும் நம்பினது தான் ஆச்சரியம்?? எதோ ஒரு குருட்டு தைரியத்திலும், வேறு வழியில்லாமலும் தமிழர் பிரதேசங்களில் முகாமிட்டிருந்தார்கள்.

அதில் PLOTE அமைப்பை சேர்ந்த துரோகிகள் மாணிக்கதாசன் (மாணிக்கதாசன் வவுனியாவில்,அவனது முகாமின் வீட்டு கூரையில் பொருத்தி வைத்திருந்த புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டான்) தலமையில் “முசல்குத்தி”என்னும் இடத்தில் முகாமிட்டிருந்தது. அதை தாக்கும் உத்தரவு கிடைக்கபெற்றதும் மன்னார் மாவட்ட தளபதி சுபனண்ணையால் அதற்கான வேவு பாக்கப்பட்டிருன்தது. இறுதி வேவுக்காக லெப். கேணல் நவநீதண்ணையின் தலமையில் ஆறு பேர் கொண்ட அணியில் நானும் மன்னார் சென்றேன்.

அங்கு சென்று எமது படையணிக்காக காத்திருக்கும் போது எனது காலின் பாதம் வீங்கி, நடக்க முடியாது போய்விட்டது. அப்போது தான் இரண்டு நாட்களுக்கு முன் குத்திய ஆணி நினைவுக்கு வந்தது. அதனால் வைத்தியத்தின் பின் ஓய்விற்காக பண்டிவிரிச்சான் என்னும் இடத்துக்கு சுபன் அண்ணை அனுப்பி வைத்தார். அங்கு தான் முதல் முதலில் டேவிட்டை சந்தித்தேன். ஒரு நாளிலேயே இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டிருந்தோம்.

டேவிட்டின் ஆர்ப்பாட்டம் இல்லாத பேச்சும், நட்பு பாராட்டும் தன்மையும் என்னையும் அவனோடு இணைத்து விட்டிருந்தது. மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. ஆனால் எனக்கும் டேவிட்டுக்குமான நட்பு வேர் விட்டு கிளைபரப்பி இருந்தது. இதனூடே எமது அணிகள் வந்த பின் துரோகிகள் மீதான தாக்குதல் தொடங்கியது. சண்டை தொடங்கியவுடனேயே மாணிக்கதாசன் பின் பக்கத்தால் ஓடவும் எம்மால் முகாம் அழிக்கப்பட்டு பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டது.

அடுத்த நாள் டேவிட்டை விட்டு பிரிந்து சென்று விட்டேன். எமது கடமை எம்மை பிரித்து இருந்தாலும் அவனது நினைப்பு என்னுள் இருந்தது. அதன் பின் நானும் வேலையின் நிமித்தம் எதிரி பகுதிக்குள் சென்றதால் அவனை சந்திக்கும் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது. 1993இல் மீண்டும் நல்லூர் ரோட்டில் வைத்து கேணல் லக்ஸ்மன்ணை மற்றும் டேவிட்டையும் கண்டேன்.

என்னை கண்டதும் இருவரும் ரோட்டெண்டும் பாக்காமல் கட்டியணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். அப்படியே என்னோடு என் வீட்டுக்கு வந்து குடும்பத்தாரையும் கண்டு சென்றார்கள்.

அதன் பின் நான் எனது பணிக்கு செல்லும் வரை டேவிட்டின் CB125 எங்கள் வீட்டு வாசலிலேயே நிக்கும். நான் புறப்படும் நாளும் நெருங்கி கொண்டிருந்தது, அப்போது ஒருநாள் வந்த டேவிட் கூறினான், மச்சான் நான் கடல்புலிக்கு போக போறன் அண்ணை ஒமெண்டிட்டார் என்றான் சந்தோசத்துடன்.

அதன் படி அவனும் 1993ன் நடுப்பகுதியில் கடற்புலிக்கு சென்ற பின் இருவரும் சந்திப்பது அரிதாகி விட்டிருந்தது. நானும் எனது பணி நிமித்தம் தொலைவிடம் சென்றமையால் இருவரது சந்திப்பும் குறுகிவிட்டிருன்தது.

யாழ் நகரை சூரியகதிர் நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது, நான் வெளி இடமொன்றில் பணியில் இருந்த போது, எனது இரு சகோதரனும், போராட்டத்தில் இணைந்திருந்த படியால் எந்தவித உதவியுமில்லாது, நோய்வாய் பட்டிருந்த என் தாயையும் எனது தங்கையையும் கடைசி நேரத்தில் டேவிட்டே பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு சென்றிருந்தான்.

நான் இல்லாத நேரத்தில் எனக்கு பதிலாக எனது கடமையை எனது போராளி நண்பர்கள் செய்திருந்தனர். அதில் முக்கியமாக கேணல் மிரோச் (சேரலாதன்) அவர்கள் தங்குவதற்கு வீடு ஒன்றை கட்டி கொடுத்து (தென்னோலை மற்றும் மண் கொண்டு கட்டபட்ட வீடு) தங்கைக்கு வேலையும் எடுத்து கொடுத்திருந்தான். இது தான் எங்கள் போராளிகள். கடமை தவிர்ந்த நேரங்களில் நட்பிற்கே முதலிடம் கொடுப்பார்கள்.

1998 இன் இறுதியில் முக்கிய தேவையின் நிமித்தம் நான் வன்னிக்கு அழைக்க பட்டிருந்தேன். அந்த நேரத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கையால் வன்னிக்கான தரைவழிப் பாதைகள் அடை பட்டு போயிருந்தது. அதனால் கேணல் ரமணன்ணையின் வழி நடத்துதலில் லெப். கேணல் ஜஸ்டின் துணையுடன் மட்டக்களப்புக்கு வந்திருந்தேன்.

இனி அங்கிருந்து படகில் வன்னி செல்ல வேண்டும் அந்த நாளும் வந்தது எனக்கு அந்த இடம் புதிதென்ற படியால் ஜஸ்டின் எனக்கு உதவியாக படகு நிக்கும் வாகரை என்னும் இடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு சென்ற போது அவர்களும் ஆயத்தமாக, பயணப் படுவோரும் ஆயத்தமாக இருக்கும் போது ஒரு வலிய கையொன்று என்னை பின்னால் இருந்து கட்டியணைத்தது.

நான் “திமுரிக்கொண்டு”திரும்பினால் என் நண்பன் டேவிட். இருவரது ஆனந்தத்துக்கும் அளவே இல்லை. வந்திருந்த படகு தொகுதிக்கு கட்டளை அதிகாரியாக டேவிட் வந்திருந்தான். பயணப் படுவோர் எல்லோரும் பயணிகள் படகில் ஏறிவிட்டார்கள் நான் தான் ஏறவேண்டும்.

அப்போது டேவிட் அதில போகாதை வா மச்சான் என்ரை படகில கதைச்சு கொண்டு போவம் என்றான். நானும் எப்படியோ என்னை கொல்லுரை முடிவோட இருக்குறாய் என்றபடி படகேறினேன். இரண்டு கரும்புலிகள் படகு பாதுக்காப்பு கொடுக்க ஐந்து தாக்குதல் படகுகளின் நடுவில் பயணிகள் படகுடன் எமது கடற்பயணம் ஆரம்பமானது.

நிலவு இல்லாத கரும் இருட்டில் நட்சத்திரங்களின் ஒலியில் “கருவிகளின்” (radar) துணையுடன் படகுகள் வேகமெடுத்தது. அந்த ரம்மியமான பொழுது மனதுக்கு இதமாக இருந்தது. டேவிட் என்னுடன் கதைப்பதும் படகுத் தொகுதிக்கு கட்டளை இடுவதுமாக எமது பயணம் தொடங்கியது. இருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி சென்றோம்.

எத்தனையோ தடவை படகில் பயணப் பட்டாலும்,படகின் வேகம் காரணமாக நான் வாந்தி எடுப்பது வழமை. அன்று ஏனோ அதை எடுக்கவில்லை. நாம் திருமலையில் இருந்து 40 கடல் மைல்கல் தொலைவில் எதிரியின் கதுவியில் முட்டாமல் செல்வதற்காக டேவிட்டின் வழிகாட்டுதலில் கடலின் உயர சென்றோம்.

அப்போது கடல் புலிகளின் பிரதான கட்டு பாட்டு மையத்தில் இருந்து வந்த தகவல் காங்கேசன்துறையில் இருந்து எதிரியின் படகுகள் வருகின்றது, தங்கள் கட்டளை வரும் வரை வண்டிகளை நிறுத்தும் படி பணித்தார்கள். டேவிட்டும் படகை நிறுத்தி வைத்திருக்க கட்டளையிட்டு பின் குறிப்பிட்ட நேரத்தின் பின் “அனுமதி” கிடைத்ததும் பயணத்தை தொடங்கினோம். நாங்கள் திருகோணமலைக்கு நேரில் வரும் போது மீண்டும் தொலைதொடர்பு அலறியது.

எம்மை இனம் கண்ட எதிரிகளின் சண்டை படகுகள் எம்மை நோக்கி வருவதாகவும் தாக்குதலுக்கு தயாரகும் படியும் கூறப்பட்டது. உடனே டேவிட்டிடம் இருந்து எல்லா படகுகளுக்கும் கட்டளை பிறப்பித்து உடனேயே ஒரு தாக்குதல் வியூகம் அவனால் வகுக்கப்பட்டது. அதன் படி பயணிகள் படகை ஒரு சண்டை படகு காவல் காக்க அனுப்பி அதை சற்று உயர்வாக அனுப்பி விட்டு அதை எதிரி அண்ட விடாமல் L வடிவில் பாதுகாப்பு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தோம்.

அப்போது டேவிட் புன்னகையுடன் சொன்னான் மச்சான் அவன்ற ஒன்பது டோராவை (சண்டை படகு) கதுவி (radar) காட்டுது, அனேகமா உனக்கு சங்கு தான் என்டான். ஏன் எனக்கு மட்டும், உனக்கும் தான் என்றேன். அவனும் புன்னகையுடன் எதிரியின் ஒன்பது சண்டை படகை எங்களின் நான்கு சண்டை படகும் இரண்டு கரும்புலிகள் படகும் தடுக்க ஆயத்தமாகின.

இதில் டேவிட் சண்டை பிடிப்பதை விட பயணிகள் படகை பாதுகாக்கவே முயச்சித்து தப்பவே வியூகம் வகுத்தான் காரணம் அந்த பயணிகள் படகில் அந்த “நேரத்தில் முக்கியமான” ஒருவர் பயணித்தார்.

எனக்கு இது புது அனுபவம் அதனால் ஒரு வித உச்சாகத்தில் இருந்தேன். சண்டை படகுகள் எம்மை நெருங்கி விட்டன, இதோ எதிரியை கிட்ட வரும் வரை தாக்க வேண்டாம் என்று டேவிட் கட்டளை இட்டு தொடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது எதிரியே சண்டையை ஆரம்பித்தான்.

பதிலுக்கு எமது படகுகளும் தாக்குதலில் இறங்கின கடும் சண்டை மூண்டு விட்டது. கடும் சண்டையின் போது தான் டேவிட்டின் ஆளுமையை கண்ணூடே கண்டேன். அவனை நினைக்கும் போது பெருமையாக இருந்தது.

எந்த சலனமும் இல்லாது உடனுக்குடன் கட்டளைகளை வழங்கினான். அவனது எண்ணமெல்லாம் பயணிகள் படகை சேதமில்லாது கரை சேர்ப்பதே. அப்போது எமக்கு உதவிக்கு செழியன் தலமையில் இன்னொரு படகு தொகுதி ஒன்று வந்து சண்டையில் இறங்கவும் டேவிட் அவனுக்கு கிடைத்த கட்டளைப்படி சண்டையில் இருந்து விலகி கரையை அடைந்தோம்.

இப்படியே கரை வந்து பணிக்கு சென்ற பின் ஒரு நாளில் செய்தியின் ஊடாக அறிந்தேன் மன்னாரில் நடந்த படகு வெடி விபத்தில் டேவிட் வீரச்சாவென்று. எங்களுக்கு மரணம் புதிதல்ல தான் எவ்வளவு உறுதியாக இருந்தாலும், எமை அறியாமலே சில நேரம் உடைந்து தான் போகிறோம்.

அந்த காலகட்டத்தில் டேவிட் வீரச்சாவடையும் வரை ஆழ்கடலின் பெரும்பாலான சண்டைகள் டேவிட்டாலேயே வழிநடத்தப் பட்டது. டேவிட்டின் வீரசாவின் பின் தளபது சூசை அண்ணை தனது ஆதங்கத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில், டேவிட்டின் ஆளுமை பற்றி சிலாகித்து கூறினார். எந்த இறுக்கமான சண்டை என்றாலும் எனது தெரிவு டேவிட் தான்.

லெப். கேணல் சாள்சின் வீரச்சாவின் பின் (கிளாலி கடல் நீரேரியில் 11.06.1993 இல் வீரச் சாவடைந்தார்) எனக்கு கிடைத்த சிறந்த கட்டளை அதிகாரி டேவிட். அவனது இழப்பு கடற்புலிகளுக்கே பெரிய இழப்பு. அவனது மரணம் தலைவரையும் ஆட்கொண்டதையும் கூறி நினைவு கூர்ந்தார்.

வீரர்கள் அழியலாம் அவர்களது வீரம் என்றும் அழிவதில்லை.

– துரோணர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments