இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி உயிராயுதம் கடலன்னையின் புதல்வர்கள்.!

கடலன்னையின் புதல்வர்கள்.!

கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்……!
 
 அவன் ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன்.
 
மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான்.
 
சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் .
 
பக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்?” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்துபோய் விடுகின்றவன் அவன்.
 
ஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கேட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடிவேலைகள் செய்து கொண்டிருப்பான்.
 
சப்பாத்து கட்டாயம் அணியவேண்டிய அவனது பள்ளிகூடத்தில் ஏழை நண்பனொருவன். “அம்மா காசுக்கு கஸ்ரபடுறா….” என்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன்.
 
குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில கூடச் சாப்பிடேல மச்சான் ….” என்று விம்மிய உற்ற நண்பனிடம், அவன் அடியோடு மறுமறுக்க கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான புவீத்திரன்.
 
ஒரு மென்மையான் உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறிக்கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கேட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை.
 
வீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி. பிற்காலத்தில், இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தாலும் அவன் தன்னைத்தானே நோந்துகொல்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்; ஆனால், நியாயம் கதைக்க மாட்டான். பொய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான்.
 
அது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான், குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான்.
 
 
 
 
அவனுக்கு 12 வயதே இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்ப வரவில்லை; அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள்.
 
புவீந்திரன் அழுதான், அப்போது அவனுக்கு அது மட்டும்தானே தெரியும். ஆனால், அம்மாவின் இழப்பு அந்த பிஞ்சு உள்ளத்தில்ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது.
 
ஓய்வாக இருக்கும் கருக்கள் பொழுதுகளில் அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார் சுதந்திரத்தை நோக்கிய எழுட்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவீத்திரன் மட்டும் ஆர்வத்தோடு இருந்து கேட்டான். ஏற்கனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கபடுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம், படக்கதைகளைக் கேட்கும்போது, ஒடுக்கப்படும் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்த போராட்டங்களின் நியாயத் தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டு பார்த்து விழிக்கும் எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இருக்கும். கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன் வீரவணக்க நாளில் வேர்கள் இணையம் மீள் வெளியீடு செய்கின்றது
 
இந்த விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், இதயத்தை பிழியச்செய்கிற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்துதான்; அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்ககூடும்.
 
புவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார் ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருகின்ற பிள்ளைப்பாசம் வெளிப்பாடு கண்டபோது, வந்தவர் அப்பாவிடம் சொன்னதை, அப்பா மகனிடம் கேட்டார். “தம்பி… வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து … வீட்டோட நிக்கலாம் தானே?….” அப்பா இழுக்க, மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்.
 
“இயக்கத்திற்க்கு போனது, விலத்திக்கொண்டு வாரத்துக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட… திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்திலை நான் சாகவும் கூடும், அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை.…” வந்தவருக்கும் அப்பாவும் மெளனித்துப் போனார்கள்.
 
கூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்தபின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…… இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டுட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம்.
 
ஒரு மணித்துளி திகைத்துப்போனவன், நின்று திரும்பி நிதானமாக சொன்னான்.
 
“எனக்கு கால்தான் நொண்டி, என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாய் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய் தான் இருக்கின்றது. அங்கங்கள் போனதைப்பற்றி எனக்குக் கவலையில்லையடா….. மனதில் உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டேன். பெரிய சாதனை ஒன்றை செய்துதான் சாவேன்……”
 
அந்த நண்பர்களுக்கு அது அப்போது புரியவில்லை; சிரித்துக்கொண்டு போனவர்கள்; ஆனால், இப்போது வியத்து நிற்கின்றார்கள்.
 
“பிரபல கரும்புலி போறார்” இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.
 
ஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால், ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து இழுத்து, ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான்.
 
அவனை ஒரு “கரும்புலிப் பைத்தியம்” என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன.
 
எவருமில்லாத தனியறையொன்றில், ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிற்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருப்படுத்திக் கொண்டு, வரைபடத்தைத் தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான்.
 
“…..டோறா இதாலதான் வரும்……”
 
“…..உங்கட வண்டிகள் இந்த மாதிரி வியூகத்தில அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்…..”
 
” ….அந்த நேரம், இந்த விதமாகப் பக்கவாட்டில், உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்….”
 
“…..டோறா புகையாகும்……”
 
ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும், அவனைப் பார்க்க சிரிப்புதான் வரும்.
 
புவீந்திரன்!
 
அவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல; வித்தியாசமான மனிதனும் கூட.
 
அவன் அமைதியானவன்; ஆனால் சொம்போறியல்ல, உற்சாகமானவன். ஆனால் குளப்படிக்காரனல்ல.
 
அவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம்.
 
அவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டுமே தான் காணமுடியும்.
 
இயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இயற்கைக் குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும்.
 
இயலாத காலோடும்கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான்.
 
கிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலை ஒன்றிற்கான அழைப்பின் பெயரில், துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால், அவன் திரும்பி வரும்போது அவனது உடுப்புகள்முற்றத்து வெளியில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன்தான் புவீந்திரன்.
 
முகாமிற்கு யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால், அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறை ஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்துவந்து விடுவதற்கிடையில்…… வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு, அவன் பேணிகளை கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன்.
 
ஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சுப் பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக்கொண்டிருந்தவன். கொஞ்ச நாட்களில், மற்றவர்கள் மெச்சக்கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான்.
 
அறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று. நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும், கவிதை, கட்டுரைகளை எழுதிக்கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்….” என்று கெஞ்சுகின்ற நண்பர்களிடமும் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப்பைக்குள் மடித்து வைப்பான் காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1அல்லது 2 மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி, அதன் பிறகும் விழித்திருந்து, நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன்.
 
புவீந்திரன்!
 
புலி வீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம்.
 
உன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள்.
 
சூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக்கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம், சிறு பிள்ளை மாதிரித் தத்தளித்து கையைக் காலை வயசுக்கு விசுக்கி, ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்திப் பழகினாய்.
 
“பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன் கூட சரியாய் அடிக்கமாட்டான்….” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டு, பயிற்சி முகாமிலிருந்து அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் “ரச்” தந்த போது, வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டு, ரைபிள் பிடித்துச் சொல்லித்தர, நீ மட்டுமே ஒரு “புல்”லும், ஒரு “நைனும்” அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய்.
 
எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம். நல்லதற்ற ஒரு வார்த்தையச் சொல்லி “இன்னாரிடம் கேட்டுப் பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால், அங்கு சென்று நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய்.
 
கால் இயலாமல் இருந்தும். மெல்ல மெல்ல படகோட்டப் பழகி, கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப்படகுகளிற்கு ஒட்டியாய் இருந்தாய்.
 
இன்னும்…. இன்னும்…..
 
இவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும்.
 
புவீந்திரன் ! சாதனையொன்றைச் செய்துதான் சாவேன் என்றாயா? சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல; அது சாதனைகளின் ஒரு குவியல்.
 
“கனோன்” எடுத்து சாதனை. அது இரண்டாக இருந்ததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு “பிப்ரி” எடுத்தது இன்னொரு சாதனை. டோறா ஒன்றை முழுமையாக் நொறுக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை .
 
“ஆசிரீல ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் என்று சாள்ஸ் அண்ணன் சொல்லுறவர்….” என்று அடிக்கடி. கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறத்துக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய்.
 
அந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது.
 
 
 
கட்டைக்காட்டிலிருந்து…., பலாலிக்கு ரோந்து செல்லும் டோறாவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்த தாக்குதல் மையம் இருந்தது.
 
மணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள்.
 
உங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும்.
 
உள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய அந்த நாளில் உங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது.
 
சோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி, “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது?….” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்தபோது, மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம்.
 
எல்லாமே தயார்.
 
 
 
 
தக்கைவண்டி, சண்டைப்படகுகள், தாக்குதற் கருவிகள், தாக்கும் வீரர்கள், மணியரசன், நீ …. எல்லாமே….., ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காக கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள்.
 
நள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விடவேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக்கொண்டிருக்கும்.
 
மறுநாள் மதியமோ, மாலைவரையோ அந்தத் தேடல் நீடிக்கும்.
 
எதிரி வரமாட்டான், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள்.
 
 
 
 
உற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள்.
 
29.08.1993 அன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிடுந்தவன் கடலில் வந்தான்.
 
பொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா?
 
காத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல்.
 
தனியறையில் “வரைபடத்தை விரித்துவைத்து, நீ காற்றுக்கும் விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்” எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது .
 
அப்போது நாங்கள் சிரித்தோம்.
இப்போது….
 
 
 
 
இரண்டு “கனன் பீரங்கி”களையும், இரண்டு “பிப்ரி கலிபர்” களையும் மூழ்கிக்கொண்டிருந்த “டோறா” விலிருந்து தோழர்கள் எடுத்துக்கொண்டு வந்தார்கள் .
 
புவீந்திரன் வரமாட்டான்……!
மணியரசனும் வரமாட்டான்….!
 
 
 
 
கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்…..
 
மணியரசன்!
 
“பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன்.
 
அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன.
 
இந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக்கோலம்.
 
மணியரசன் குறுகுறுத்தவன். பஜிரோவில் வருகின்றவர் வீட்டிற்குள் போய் அலுவல் முடித்து விட்டு, போன வேகத்திலேயே திரும்பிவந்தால் கூட, பஜிரோ அடுத்த பக்கமாகத் திரும்பி நிற்கும். “ஆரடா தம்பி பஜிரோவைத் திருப்பி விட்டது?” வந்தவர் தேடினால், ஒதுக்குப் புறமாக மணியரசன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பான். அது மோட்டர் சைக்கிளானால், ஒரு “8” அடித்துவிட்டுத் திரும்பி நிற்கும். உள்ளே போனவர் வெளியில் வந்தால், எதோ முக்கிய வேலையில் முழ்கியிருப்பவனைப் போல, தூரத்திலிருந்து ஓரக்கண்ணால் பார்ப்பான். முகாமிற்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு பொருள், துண்டுகளாகப் பிரித்து மேசையில் வைக்கபட்டிருக்கும், யாருடைய வேலை இது என்று யாரும் கேட்பதில்லை.
 
மணியரசன் குறுகுறுத்தவன் தான்; குழப்படிக்காரன் தான், ஆனால் எவருடைய கோபத்திற்கும் ஆளாகின்றவனல்ல.
 
ஒரு தடவை அவனோடு பழகியவர்களுக்கு, இன்னொரு தடவை அவனை நினைவுபடுத்தத் தேவையில்லை. எல்லோருடைய நினைவுகளிலும் நிலைத்துவிடும் வசீகரம் அவனிடமிருந்தது, மிகக் குறுகியகாலத் தொடர்புசாதன வேலையில், கவன் சேர்த்து வைத்திருந்த முகம் தெரியாத நண்பர்கள் பலர். எந்த நிலையத்தில் தகவல் பகிர்வதனை வேலை செய்பவராக இருந்தாலும், அவனோடு கதைக்காமல் அவர்கள் அலைவரிசையை மூடிக்கொண்ட நாட்கள் மிகக் குறைவு. மணியரசா! உனது அன்பின் வீச்சுத் தூரம், தமிழீழத்தின் எல்லைகளைத் தொட்டிருந்ததடா!
 
மணியரசனுக்கு ஒரு பொழுது போக்கு, மற்றவர்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது. அவனிருக்குமிடத்தில் வாய்திறக்க அநேகமானவர்களுக்குப் பயம். ட்ரக் ஓடும் ஐம்பது வயது ஐயாவிலிருந்து, புதிதாக இயக்கத்திற்கு வரும் சின்னப் பையன் வரை, வயது வேறுபாடின்றி, எல்லோருமே அவனுடைய அறுவைக்கு இலக்கு, ஆனாலும் மணியரசா! “இயக்கம் பொமர் வாங்கினா, அதை இறக்க எங்களிட்டை ஒரு ‘றண்வே’ இருக்கு” என்று, மயிரில்லாத உன் முன்பக்கத் தலை அறுவைக்கு உள்ளாகும்போது கூட, மேல் மயிரைத் தட்டிவிட்டு, உருமறைப்புச் செய்து கொண்டு, புன்னகையோடு அந்தக் கிண்டலை ஏற்றுக்கொள்ளும் உனது நட்பின் பண்பு உயர்ந்தது.
 
ஊரிலும், பள்ளிக்கூடத்திலும் கனியூட் என்று செல்லமாக அழைக்கப்பட்ட வேதநாயகம் ராஜரூபன் தான் எங்கள் மணியரசன்.
 
குடும்பத்தில் கடைசித் தங்கைச்சிக்கு நேரே மூத்த இவன். 7ஆவது பிள்ளை.
 
மணற்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தில் படிக்கும்போது, அதன் உதைப்பந்தாட்டக் குழுவொன்றில் சிறந்த ஒரு விளையாட்டு வீரனாக இருந்தான். படிப்பிலும் கெட்டிக்காரனாம்.
 
அப்பா தொழிலுக்குப் போகும்போது, இடைக்கிடை அவரோடு கடலுக்குப் போகிறவன், திறமையான நீச்சல்க்காரனாகவும் ஆகியிருந்தான்.
 
1991இன் நடுப்பகுதியில் இவன் இயக்கத்திற்கு வரும்போது 8ஆம் வகுப்போடு படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தான் வந்தான்.
 
அவன், எல்லாத் திறமைகளும் ஒருங்கிணைந்திருந்த ஒரு போராளி. இந்தத் தேசம் அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறையவே இருந்தது; அவற்றை வழங்கும் ஆற்றலையும் அவன் கொண்டிருந்தான். ஆனால் , ஒரு கரும்புலித் தாக்குதல்தான் அவனுடைய பிரதான குறியாக இருந்தது. கடைசியிலும் அதைத்தான் அவன் செய்தான்.
 
கடற்கரும்புலிகளின் 1வது பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுக்கும்போதே, பயிற்சிகளில் ஆர்வம் நிறைந்தவனாகவும், பரிட்சைகளில் அதிக புள்ளிகள் பெற்றவனாகவும் திகழ்ந்தான்; சிறந்த ஒரு விடுதலை வீரனாக முளைவிட்டான்.
 
அவனுடைய தெளிவான பேச்சு தன்மையும், விடயங்களைக் கிரகித்துக்கொள்ளும் வேகமும் தான் அவனை தகவல் பரிவர்த்தனை வேலைக்கு ஏற்றவனாக இனம் காட்டின. தகவல் தொடர்புச் சாதனம் கற்பிக்கும் பாடத்திட்டமானது பொதுவாக, “இவ்வளவு காலப்பயிற்சி” என வரையறுக்கப்பட்டது. ஆனால், மணியரசன் அதனைக் கற்றுக் கொண்டுவிட்ட நாட்களை விரல் மடிப்பிற்குள் அடக்கிவிடலாம்.
 
இரண்டே வருடகால அவனுடைய போராட்ட வாழ்வின் மிகப்பெரும்பாலான நாட்கள், தொடர்பு சாதனம் பார்க்கும் வேளையிலேயே அவனை ஈடுபடுத்தின. அந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் அவன் புரிந்துணர்ந்திருந்த போதிலும், சண்டைக்குப் போகவேண்டுமென்ற ஆதங்கமே அவனிடம் மேலோங்கியிருந்தது. கங்கை அமரன் வன்னிக்குப் புறப்பட்டால் தானும் வரபோவதாக நச்சரிப்பான்; பிருந்தன் மாஸ்ரர் கிளாலிக்கு வெளிக்கிட்டால், தன்னையும் கூட்டிச் செல்லுமாறு அடம்பிடிப்பான். தன்னோடு நிற்கும்போதே, சண்டைக்கு அனுப்பும்படி மணியரசன் தனக்கு எழுதும் கடிதங்களை வாசிக்கவேண்டிய வில்லங்கம், தளபதி சூசைக்கு இருந்தது.
 
 
 
 
அவனது ஆசை ஓரளவு பூர்த்தியாக வர – வடமராட்சியிலுள்ள தலைமைத் தளத்தில் பகல் முழுவதும் ‘ செற் ‘ கதைத்துக் கொண்டிருப்பவன் , இரவுகளில் – கிளாலியின் சண்டைமுனையில் ஒரு எல்.எம்.ஜீயுடன் வலம்வரத் துவங்கினான்.
 
இறுதிக் காலத்தில்…. முழுமையாக, கிளாலியின் மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதுகளிலும், ஒரு கரும்புலித் தாக்குதலிலே மணியரசனுடைய பிரதான குறியாக இருந்தது. எங்களுக்குள் சுழன்று திரிந்த அந்த இனிய நண்பன், அதைத்தான் செய்து முடித்தான்.
 
அவனுடைய கடைசி நாட்களில் அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தன.
 
 
 
தனது முகம்தெரியாத நண்பர்களிடம் வானலைகளினூடாக விடைபெற்றான். அந்த தொடர்பு சாதனத்திடமிருந்தும் விடைபெற்றான்.
 
கிளாலிக் கடலில் சிதைந்து போன நிலையிலும், மதன் அதிகமாய் மிதந்து வந்தபோது, நாங்கள் பக்குவமாய் எடுத்து வந்து துயிலுமில்லத்தில் விதைக்கையில், கண்ணீரோடு மதனுக்கு மண் போட்டான். அந்த நேரத்தில் எனக்கு மண் போடும் பாக்கியம் ஒருவருக்கும் கிடைக்காது என்று நினைத்திருப்பானோ….?
 
தோரணம் கட்டி பந்தல் போட்டு மதனுக்கும், வரதனுக்கும் அஞ்சலி செய்த போது, வீதி வீதியாகத் திரிந்து பார்த்தான். இன்னும் நாலு நாளில் தனக்கும் இப்படித்தான் செய்வினம் என்று நினைத்திருப்பானோ….?
 
இப்போது அவன் போய்விட்டான்; எங்களால் எட்ட முடியாத தொலைவுக்கு. எங்களைக் கிண்டல் செய்துகொண்டிருக்க அந்த அறுவைக்காரன் இப்போது இல்லை. இயக்கம் ‘பொமர்’ வாங்கினால் இறக்கி ஓட அந்த ‘றண்வே’ யும் இப்போது இல்லை.
 
வெளியீடு :- (1993  கடற் புலிகள் சிறப்பிதழ்)   விடுதலைப்புலிகள்  இதழ் 
 
 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments