இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்…

அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது. அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அஜித்தாக்காதான் எடுத்திருப்பா’ என்று. இன்று இந்தத் துப்பாக்கியில் இருக்கும் கவலையீனம்தான் நாளை எமது போராளிகள் உயிரைக்கொடுத்தெடுத்த துப்பாக்கிகளிலும் இருக்கும். அவர்களின்ரை உயிர்கள் தான் இந்த துப்பாக்கிகள். ஆனபடியால் அவற்றை எங்கட உயிரைவிட மேலாக நினைக்க வேண்டும். கவனமாக அவற்றை நேசித்தபடிவைத்திருக்க வேண்டும் என்று கூறி திரும்பத் தருவா.

இந்தக்காலத்தில்தான் எங்களுடைய பாசறை அமைந்திருக்கும் பகுதி ஒரு சிறு அழகான குடியேற்றமாக அற்புதமான பூங்காவாக மாறிக்கொண்டிருந்தது. ஒரே பாதையைச் சுற்றி எமது வாசஸ்த் தலங்களாக சாக்குக் கொட்டில்கள். அத்தனை கொட்டில்களுக்கும் இடையில் ஓரு வித்தியாசமாக பளிச்சென்று ஒழுங்கா அமைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் ஓழுங்காக துப்பரவாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த குழுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள் யாவும் நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டிருக்கும் அல்லது சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கும். பார்த்த உடனேயே பட்டெண்டு சொல்லிவிடலாம் அது அஜித்தாவின் குமு என்று.
அந்த அளவிற்கு வேலைகளைச்சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்றும், எந்தளவுகெதியாக வேலைகளைச்செய்கிறோமோ அந்தளவிற்கு இயக்கத்தின் வளர்ச்சி, போராட்ட வளர்ச்சி விரைவுபெறும் என்பதும், தரப்படுகின்ற வேலைகளை மகிழ்வுடன் ஏற்றுச்செய்ய வேண்டும் என்பதும் அஜித்தாக்காவினுடைய விரிவுரைகளாக இருக்கும். விரிவுரைகளுக்கு மட்டுமல்ல அஜித்தா, அந்த விரிவுரைகளுக்கு விளக்க குறியீடாகவும் இருந்தவள்.
அஜித்தா இந்த போராட்டத்திற்குக்காலடி எடுத்து வைத்த காலகட்டம் வித்தியாசமானது. பெண்கள் தாமும், தமது குடும்பமும், வீட்டு வேலைகளும் தான் உலகம் என்று எண்ணியிருந்த சமூக அமைப்புக்குள் இருந்து அந்தத் தடைகளை உடைத்து வெளியேற வேண்டிய காலம்.
யாழ். மாவட்டத்திலிருந்து நேரடியாக ஆயுத பயிற்சிக்குப்பெண்கள் அனுப்பப்படவில்லை. ஆனாலும் இந்த சமூகத்தின் மாறுபட்ட பார்வைகளுக்கு மத்தியில் இந்தத் தேசத்திற்காக ஏதோ ஓரு வகையில் தன்னுடைய செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதனால் விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கத்தினூடு தனது வேலைகளைச் செய்தாள்.
தொடர்ந்து கால ஓட்டத்தில் பெண்களுக்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அஜித்தாவும் ஓருத்தி. இயக்கத்தில் ஏற்கனவே ஓரு அண்ணா, முடக்கொள்கையில் ஊறிப்போன சமுதாய அமைப்பு, அத்தகைய சூழலில் இருந்து அஜித்தா இயக்கத்துக்கு வந்தமை அவள் விடுதலையை எந்த அளவிற்கு நேசித்தாள் என்பதனைப்புலப்படுத்தும்.
ஓழுங்கான பயிற்சி.அப்போது எந்த வேளையிலும் ஓட்டத்தில் அஜித்தா தான் முதல். பயிற்சியை முடித்து இந்த மண்ணில் இருந்து எதிரியை வீழ்த்தும் துப்பாக்கிகளில் தனது துப்பாக்கியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று வந்தவர்களுக்கு, ஆதிக்கம் அடிபணியவைக்கும் ஒப்பந்தத்தைத் திணித்தது’ கண்டு குமுறினாள். எரிமலைகளுக்கு முன்னால் இந்த ஓப்பந்தம் எத்தனை நாளைக்கு நின்றுபிடிக்கும்? சில மாதங்களின் பின்னால். எமது அனுமதியின்றி இந்த மண்ணில் எந்த அந்நியனும் நுழைய முடியாது. அப்படி நுழையமுடியுமென்றால் அது எமது பிணங்களுக்கு மேலாற்றான்” என்று எமது பொறுப்பாளர் கூறி “இதற்கு நீங்கள் தயார் என்றால் எம்முடன் வாருங்கள்” என்றபோது அஜித்தா சொல்லாமல் கொள்ளாமலே வாகனத்தில் ஏறிவிட்டாள்.
சண்டை ஆரம்பித்துவிட்டது. யாழ். மருத்துவபீடத்தில் இறக்கப்பட்ட இந்திய இராணுவம் அனைத்தும் சடலங்களாகச் சமைந்து போயின. இதில் பெண் போராளிக்குழுக்கள் பெரும் பங்கினை வகித்தனர். அங்கே சடசடத்த துப்பாக்கிகளில் அஜித்தாவின் துப்பாக்கியும் ஒன்று. வீழ்த்தப்பட்ட எதிரிகளின் எண்ணிக்கையில் அவளுக்கும் பங்குண்டு. பலத்த எதிர்ப்புகளுக்கும், இழப்புக்களுக்கும் மத்தியில் எமது மக்களின் உடல்களை ஏறி மிதித்தபடி அங்குல அங்குலமாக முன்னேறியது இந்திய இராணுவம். புற்றீசல் போல் புறப்பட்டவர்களைப் புலிப்படை பொசுக்கியது. ஆனைக்கோட்டை, தாவடி, தெல்லிப்பளை என்ன இராணுவத்தை அஜித்தா எதிர்கொண்டாள். தெல்லிப்பளையில் இவளுக்கு மோசமான வயிற்றுளைவு: எழுந்து நடக்கவே முடியாது. திரும்பும் இடமெங்கும் ஆக்கிரமிப்பாளர்களின் துப்பாக்கிகள் குறி பார்த்தபடி. ஆனால் அவளின் உள்ளம் சோர்வடையவில்லை. விடுதலைக்கு மட்டும் தான் அங்கே இடம் கிடைத்தது.
அஜித்தாவைப் பொறுத்த வரையில் வித்தியாசமான கஸ்டங்கள் நிறைந்த ஆனால் மகிழ்ச்சியான ஓரு புது வாழ்வை எதிர்கொண்டாள். அதுதான் அந்தக் காட்டுவாழ்க்கை. அங்கே எங்களுக்கு எல்லாமே நாங்கள்தான். எமதுதேவைகள் எல்லாவற்றையும் நாமேதான் பூர்த்தி செய்யவேண்டும். உடுப்புத் தைப்பதிலிருந்து வெடிபொருட்கள், கண்ணிகள் உற்பத்தி செய்வது வரைக்கும் அஜித்தாவின் கை படிந்திருக்கும். அங்கிருந்த அனைத்துப்பெண் போராளிகளும் அணிந்திருந்தது அஜித்தா – தைத்த உடுப்புத்தான். இரவு, பகல் என்று எந்த வித்தியாசமும் அவளுக்கில்லை. அவ்வளவிற்கு வேலை இல்லை. அந்தளவிற்கு அவளின் கடமை உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.
அவளின் அண்ணன், பக்கத்தில் உள்ள முகாமுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தான். அவள் அதிகமாகக் கூறுவாள் அறியாமல் கூட .நான் தவறு செய்யக்கூடாது. அப்படி தவறு செய்து விட்டால், நான் தண்டனை பெறும்போது அண்ணாவுக்கு அவமானம்* என்று. எந்தப்பிள்ளையையும் அன்பாகத்தான் அணைப்பாள். ஆனால் கூடவேகண்டிப்பும், தவறுகளுக்கான தண்டனைகளை வழங்கிவிட்டு பின் கூப்பிட்டு ஆறுதலாக அந்தத்தவறுகள் இனிமேல் விடக்கூடாது என்றும், அதற்காகத்தான் தண்டனைகளைத் தந்தேன் என்றும் மிக நீண்ட விரிவுரை. ஆம்! அவள் மகளீர் படைப்பிரிவைப் பொறுத்த வரையில் ஒரு பேராசிரியர்தான். அன்று எல்லாம் வழமை யாகத்தான் இருந்தது. ஆனால் அஜித்தா மட்டும் விம்முகின்றாள், ஆற்றமுடியாத அழுகை, எவராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோருமே அப்படி அப்படியே உறைந்து போனார்கள். முகாமிலுள்ள அத்தனை பேரும் ஒன்று கூடிய ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் பின் மெல்ல எல்லோரும் அதிர்ந்தவர்களாய்… அஜித்தாவின் அண்ணாவிற்கு இயக்கக்கட்டுப் பாட்டு விதிகளை மீறியமைக்காய்… அதி உயர் தண்டனை. எந்த அண்ணனுக்காகதான் அறியாத தவறு ஒன்றுக்காகக் கூட தண்டனை பெறக்கூடாது என்று இருந்தாளோ, அந்த அண்ணன் தெரிந்து விட்ட குற்றத்திற்காகத் தண்டனை! அவள்
அழுததெல்லாம் அண்ணன் இயக்கத்தின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்து விட்டான் என்ற ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் தான். அந்தத் தண்டனையை தான் வழங்கப்போவதாகக் கேட்கிறாள். (வேர்கள் இணையம்)ஆனால் இயக்கம் மறுத்து விட்டது. அவளின் விசுவாசத்திற்கு முன்னால் நாங்கள் விக்கித்துப்போனோம்
அதற்குப் பின்னால் இந்தத் துரோகத்தினால் உள்ளுக்குள்வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் எதுவுமே நடக்காததுபோல் அமைதியாகிவிட்டாள். தொடர்ந்து தனது குழுவும் தன் வேலைகளுமாக முன்னையைவிட இன்னும் தூய்மையைப் பேணுபவளாக இருந்தாள்.எமது மகளீர் படைப்பிரிவு புதிய போராளிகளை உருவாக்கி விரிவடைகின்றபோது ஓரு படையணி
கப்டன் அஜித்தா காட்டிற்குள் இருந்து நாட்டிற்குவர அதற்கு அஜித்தாவும் ஒரு குழுத் தலைவியாக வந்தாள்.
மூன்று வருடங்களுக்குப் பின்னால் பெற்றோரை இவள் சந்தித்தபோது இந்த நிகழ்வினை அவள் எப்படிச் சொன்னாள் என்பதெல்லாம் எமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. தாய்ப் பாசத்துக்கு முன்னால் அண்ணனின் நிலையினையைத் தங்கை சொல்லும்போது அவள் உள்ளம் பலவிதமான உணர்வுகளைச் சந்தித்திருக்கும் என்பதுதான்.
காட்டிற்குள் இருந்து நாட்டிற்கு வந்த கொஞ்சக்காலத்திற்குள்ளேயே வரலாற்று எதிரியுடன் மீண்டும் யுத்தத்தை நடத்தினோம். பலம் வாய்ந்த எதிரியும் பலம் வாய்ந்த கோட்டைமதில்களைச் சுற்றியும் முற்றுகை யுத்தம் நடாத்தினதில் ஒரு அணிக்கு அஜித்தாவின் தலைமை பொறுப்பேற்கின்றது.
அப்போதெல்லாம் அவ்ரோ”
விமானமும், பொம்மர் விமானங்களும் குண்டுகளை வீச இன்னொரு விமானம் உணவுகளைப்போடும். இவற்றிற்கு மத்தியில் வீரசிங்கம் மண்டபத்தில் 5 ஆவது மாடியில் அஜித்தா எல்.எம்.ஜி உடன் நிற்பாள். கோட்டைக்குள்ளே சில பார்சல்கள் விழ அதை எடுக்க ஓடி வரும் இராணுவத்தினர் அந்த இடத்திலேயே விறைத்து விடுவார்கள். கோட்டை முகாமைத்தாக்கி அழிக்கும் முயற்சி ஒன்றிலும் அவள் தலைமை ஏற்று குழுவுடன் சென்றாள். முற்றுகைப் போருக்கு முகம் கொடுக்க முடியாத இராணுவம் பின்பக்கத்தால் ஓடியது. கோட்டையில் இன்று புலிக்கொடி பறக்கிறது. ஓய்விற்கு அவளுக்கு அவகாசம் இல்லை. பலாலி இராணுவம் வெளியேறியபோது குப்பிளான் கட்டுவன் பகுதிகளில் அவள் துப்பாக்கி முழங்கிறது. கட்டுவனில் எதிரியை மறித்து நிலைகளை அமைத்துக் காவல் கடமையைத் தொடர்ந்தாள்.
25 அல்லது 30 யார் தூரத்தில் இருக்கும் இராணுவ நிலைகளை அறிய வேண்டும். அவர்களின் நடமாட்டங்களை அறிய வேண்டும். முகாம் பலப்படுத்தும் அல்லது விஸ்தரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வேலைகளின் போது அவள்முன்னால் சென்ற பின்பே பிள்ளைகள் பின்னால் செல்ல வேண்டும். எமது நிலைகளுக்கு முன்னால் சென்று சின் நிலைகளுக்குக் கிட்ட நின்று அவள்துப்பாக்கி சத்தமிடும். எந்தப்போராளியும் அவளுக்குத் தெரியாமல் முன்னால் போக முடியாது, அவளுக்குத் தெரிந்து அவள் நிற்கையில்தான் முன்னால் போக வேண்டும்.இது அவளின் இறுக்கமான கட்டளை. அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம். அவளின் நடத்தையில் அன்பும் கண்டிப்பும் நிறைந்திருக்கும். நாங்கள் ஓரு விடுதலை அமைப்பு. அதிலும் மிக மோசமான சமூக அழுத்தங்களில் இருந்து புறப்பட்டவர்களின் அடுத்த பரம்பரை எம்மைப்பார்த்து எமக்கு பின்னால் வரவேண்டும். ஆனபடியால் நாங்கள் ஓழுக்க சீலர்களாக, பண்பாடுள்ளவர்களாக, வீரமுள்ளவர்களாக, மொத்தத்தில் தனித்துவமுள்ளவர்களாக வளர வேண்டும்” என்பன அவள் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வசனங்கள்.
22-12-90 அன்று கட்டுவன் பகுதியில்
இருந்த இவளது பக்கமாக இராணுவம் முன்னேறுகிறது.ஓரு குழுவுடன் நின்ற இவளுக்குத் தகவல்
வருகிறது. மறுபக்கமாக எதிரி வெளியேறுகின்றான் என்று. ஓடி வந்து கட்டளைகளைப் பிறப்பித்து நிலை எடுத்து ஓவ்வொருவராகக் குறிபார்த்துச் சுடுகின்றாள். “இந்தா ஒருத்தன்…ம் அடுத்தவன்…” எண்ணி எண்ணி அவதானமாகத்தான்… “எந்த நிலையிலும் பதற்றப்படாது, பரபரப்படையாது நிலைமையை விளங்கி ரவைகள் வீண் போகாது அடிக்கவேண்டும் “என்றவளின் துப்பாக்கி நிதானத்தை விட்டு மெல்லச் சரிகிறது. வீரத்தின் சாட்சியாய் நெஞ்சிலே குண்டுனை ஏந்தியபடி குருதி கொப்பளிக்க அவள் சாய்கிறாள். ஆம்! எங்கோ இருந்து ஒரு கொடியவனின் குண்டு அவள் உடலில். அந்த சண்டையில் பெண் போராளிகள் பல ஆயுதங்களை எடுத்தார்கள். அவள் அடிக்கடி சொல்வாள் சண்டையில் நாங்கள் ஆயுதங்கள் எடுக்கவேண்டும் அப்பிடி நல்லா அடிபட வேண்டும்  என்று. அப்படியே சண்டை பிடித்தார்கள். ஆயுதங்கள் எடுத்தார்கள். ஆனால் அந்த உணர்வினை ஊட்டியவள் அங்கே இல்லை. ஓரு உன்னதமான போராளியை நாம்இழந்தோம். ஒரு பேராசிரியரை மகளீர்படைப்பிரிவு இழந்தது.
ஆனால் அவள் வளர்த்த பிள்ளைகள் அவளின் உணர்வைச்சுமந்து இன்று பல களங்களில்….
அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழிந்தது போதும் எழுவாய்.

விடுதலை தேடும் புலிகளின் பாசறை

வீடுகள் தேடி வருவாய்.

சொந்தங்களை வீட்டு விலகுகின்றோம்

– எங்கள சொந்த தேசம் எமை வீட்டு விலகிப் போகாமல் இருப்பதற்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments