இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

வைரவரிகள்.!

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார்.
 
எவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன் எங்கள் உள்ளங்கள் தான் மலர்ந்து மகிழ்ந்து கொண்டன. ஆம் குமுதன் அண்ணாவின் தலைமையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டோம். அதில் செங்கதிரும் ஒருத்தியாய்……..
 

வழமைபோல் பயிற்சிகள் ஆரம்பமாகின, பெருங்கடலில், சிறுங்கடலில், சேற்று நிலத்தில், மணல்பிரதேசத்தில், காட்டில், வெட்டைவெளியில், கட்டடத்தில், தடைகளில் என பாரம் தூக்கியபடியான பயிற்சிகள் இரவு பகலாய் ஓய்வு உறக்கமின்றி உண்பதற்கே நேரம் இன்றி கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய் எம் உருவங்கள் இருந்தன. செம்பகத்தின் கண்கள் போல் எம் கண்கள் சிவந்து கிடந்தன, எனினும் பயிற்சி தொடர்ந்தது. இப்படித்தான் எதிரியின் இலக்கு மீது சாக வேண்டும் என்பதற்காய் இவர்கள் பயிற்சியில் கூட தம்மைச் சாகடித்துக் கொண்டிருந்தார்கள்.

எமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும், நீர்க்காப்பிடப்பட்டுத் தயார்படுத்தல்களோடு எஞ்சி நின்ற தோழிகளிடமும், பயிற்சி ஆசிரியர்கள், அங்கிருந்த முகாம் போராளிகளிடமும் விடைபெற்றோம்.

எமக்கான நகர்வுப் பாதைகளையும் தாக்குதல் வியூகத்தினையும் தாக்குதலுக்கான முடிவுகளையும் தளபதி தெளிவு படுத்தினார். இரவு உணவை மாலையே உண்டு, படங்கள் எடுத்து அவர்கள் விழிகசிந்து நிற்க நாம் கையசைத்து மீண்டும் விடை பெற்றோம். சிலருக்கு அதுவே இறுதி விடைபெறலாகவும் இருந்தது.

30.01.1998 மாலை 6.45க்கு பற்றைகள், அருவிகள் கடந்து, வெளிகள் வெட்டைகள் தாண்டி, நீரேரிக்கரையை அடைந்தோம். இராணுவ முன்னணிக் காவல் நிலையில் ‘ரீப்’ லைற்றின் ஒளிச் சிதறல்கள் மெல்லிய நீரலையில் பட்டுத் தெறித்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வர்ணஜாலமாய் அது காட்சியளித்தது. ஆனால் அதுவே மனதுக்குள் ஒரு ஆவேசக் கனலையும் மூட்டிக் கொண்டிருந்தது.

எம்மக்கள் தங்க இடமின்றி அகதியாய் தெருவெங்கும் குப்பி விளக்கே இன்றி அலைந்து திரிகையில் இவனோ எமது மண்ணில் திருவிழா நடைபெறும் கோயில்கள் போலல்லவா? இருக்கின்றான். நீரேரியால் நகர்ந்தோம். பாரப்பைகளை அணைத்தபடி சில இடங்களில் மார்பளவு நீரும், சில இடங்களில் கால் அளவு நீருமாகவே இருந்தது. இவற்றுக்கு ஏற்றால்போல் எம்மை எமது உருவை மறைத்தபடி நகரவேண்டி இருந்தது. எமது அணிக்கு முன்பாக ஆசா அக்காவின் அணி இயக்கச்சிப் பகுதியில் இருந்த ஆட்லறிகளை தகர்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தது.

முன்னணிக் காவல் நிலையின் கம்பி றோல்த் தடையைத்தாண்டி, காப்பரனையும் மறைப்பு வேலியையும் தாண்டி மீண்டும் இராணுவ வலயத்தின் உள்ளேயே கடல் நீரேரியால் நடந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தரையில் நீர் வடியும் வரையும் நின்றோம். அப்போது மங்கை அக்கா என்னிடம் அறிவுக் குமரண்ண்ண நாங்கள் வரேக்க “பொயின்ற்றில்” இருந்து டோச் அடித்துப் பார்த்தாதானே அதாலே ஏதும் பிரச்ச்சினை வராதோ எனக்கேட்டார்.

 

சாதாரண போராளியான என்னிடம் அவர் கேட்டதற்கு நான் வேவுக்காரர் சொன்னபடியே அவன் இப்படித்தான் நெடுகவும் அடிப்பான். ஆனால் பயத்தில ஒண்டுமே செய்யமாட்டான் என்று சொன்னதையே சொன்னேன். பின் வெளிகள் ஊடாகவும் மணற்பாங்கான தரைத்தோற்றத்தின் ஊடாகவும் தடயம் இன்றி நகர்ந்து வீதி ஒன்றைக் கடந்து ஓரிடத்தில் தங்கி, உடனே எமது நீர்க்காப்பிடப்பட்ட ஆயுத வெடிபொருட்களை வெளியில் எடுத்து எம்மை தயார் செய்து கொண்டோம். பின் தடயப் பொருட்களையும், நனைந்த உடைகளையும் மறைத்துக் கொண்டு இரவு 12.40 க்கு தூங்கினோம். பின் அதிகாலை 4.10க்கு எழுந்து அதிக முட்பற்றைகள் நிறைந்த இறுசல் காட்டுக்குள் நுழைந்து முக்கோண நிலை எடுத்துத் தங்கினோம்.

கரும்புலி கப்டன் குமரேஸ் எப்போதும் பம்பல் அடித்தபடி எல்லோருடைய பழ ரின்னையும் வெட்டி வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். கரும்புலி கப்டன் செங்கதிர் ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டதால் அவளின் கண்கள் தவளையின் கண்போல வீங்கிக்கிடந்தது. அன்று தான் எல்லோருக்குமே நல்ல ஓய்வு கிடைத்தது. ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டாச்சு இனிச் செத்தாலும் பரவாயில்லை என்று சொன்னபோது அவளின் மெல்லிய உதடுகள் உதிர்த்த அந்த புன்சிரிப்பை எப்படித்தான் மறக்க முடியும். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா அடிக்கடி அருகில் இருந்த மரத்தில் ஏறி எமது இலக்கு அமைந்திருக்கும் அந்த ஆனையிறவுத் தளத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கரும்புலி கப்டன் செங்கதிர் நாம் கேட்காமலே (குமுதன், குமரேஸ், நான்) சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒன்பது வயதில என்ற ஆசை அண்ணாவைக் கண்டாப்பிறகு காணவே இல்லை என்றபோது அவளின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. இயக்கத்துக்கு வந்தாப்பிறகு “அம்மா அப்பாவைக் கூடக் காணேல்ல” அது தான் எனக்குக் கவலை. மற்றும்படி இந்த மண்ணுக்காக என்னைத் தியாகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வுதான். இதை நாங்களும் பெரும் வேதனையோடுதான் கேட்டுக் கொண்டிருந்தோம்.

இருவர் நீர் எடுக்கச் சென்ற போது இராணுவத்தினர் வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்தார்களாம். நல்லவேளை அவன் இவர்களைக் காணவில்லை. ஆசா அக்காவின் ரீம் எம்மில் இருந்து 75 மீற்றரில் தான் தங்கி இருந்தது. மதிய உணவை எல்லோரும் உண்டோம். தடயப் பொருட்களை பாரப் பையினுள் திணித்து நானும் சுபேசன் அண்ணாவும் குமரேசும், இன்னும் ஓர் போராளியும் முற் பற்றைகளின் ஊடாக இழுத்துச் சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த வெடிச்சத்தம் எங்களை தங்கியிருந்த இடத்துக்கு வேகமாக ஓடவைத்தது – ஓடினோம். அங்கு போய்ப் பார்த்தபோது போராளி ஒருவரின் “ஜக்கட்” தவறுதலாக வெடித்து இருந்தது. முற்பற்றைகளும் மரக்கிளைகளும் துகழாகிக் கிடந்தது.

நல்ல வேளையாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. வெடிக்கும் போது நேரம் 4.40 இருக்கும். பின்னர் உடனேயே எமது நிலைகளை மாற்றி நகர ஆரம்பித்தோம். அது மிகவும் இறுசலான முட்பற்றைகள் நிறைந்த காடானபடியால் நகருவது மிகவும் கடினமானதாகவே இருந்தது. நகரும் திசை மாறி அதைத் தவறவிட்டபடியால் சங்கத்தார் வயலின் அருகில் இருந்த முகாமை அடைந்துவிட்டோம். அங்கிருந்து மெயின் முகாமுக் ‘ரெலிபோன்’ லைன் செல்லும் பாதையினைத் தொடர்ந்து நகர்ந்து ஓரிடத்தில் நீர் குடித்துக்கொண்டிருந்தபோது. கரும்புலி மேஜர் ஆசா அக்காவின் குழுவும் அவ்விடத்துக்கே வந்து சேர்ந்தது. எல்லோரும் எல்லோரிடமும் விடைபெற முன்னர். கரும்புலி கப்டன் உமையாள் என்னிடம் அண்ணா மில்லர் அண்ணாட்ட என்னத்தில போறிங்கள் எனக் கேட்டதற்கு நானோ கிபிரில தான் போக வேண்டும் என்று சொன்னேன் ஆனால் அவளோ அதைவிடவும் வேகமாய் போயேவிட்டாள். எல்லோருமே கட்டாயம் திரும்பி வாங்கோ, காயப்பட்டால் எல்லாம் ‘சாச்’ இழுத்துப் போடா தேயுங்கோ – என அதியுயர் பாசத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கரும்புலி மேஜர் மங்கையக்கா இலக்கை அழிச்சா கட்டாயம் திரும்பி வருவேன் என்று சொல்லிப் போட்டுப் போனவ தான். பின்னர் அவா வரவில்லையே என அறிந்தபோது இலக்கு அழிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். இப்படித்தான் எல்லோருமே எல்லோரிடமும் மனமின்றி விடைபெற்றோம்.

31.01.1998 இரவு 7.50 தங்கித்தங்கி, மெல்ல மெல்ல அவதானித்தபடி L.P காரனின் கண்ணில் படாமல் நகர்ந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தங்கி பழ ரின் சாப்பிட்டபோது குமுதன் அண்ணா ஏசியபடியால் குமரேஸ் வேண்டாம் என்றே இருந்தான் பின்னர் மெதுவாக எனக்கு வயிறு ஏலாமக் கிடக்கு ஆமிக்காம்ப்பில சோடா குடிச்சாத்தான் சரிவரும் என்று சொல்லி முடித்தான்.

கண்டிவீதியை கடப்பதற்காய் அதில் இருக்கும் காவல் நிலையில் எதிரியின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காய் வீதியில் இருந்து 30 மீற்றரில் தங்கியிருந்தோம். எம்மால் அதில் இருக்க முடியவில்லை. எதிரியின் மலநாற்றம் மூக்கைத்துளையிட உமிழ் நீர் வாயை முட்டியிருந்தது. துப்பினால் எதிரிக்கு கேட்டுவிடும் என்பதால் துப்பாமலே இருக்க வேண்டியிருந்தது. பின் கண்டி வீதியை எதிரியின் காவல் அரணுக்கு அருகினாலேயே பரவல் வரிசையில் நகர்ந்து கடந்து முற்பற்றைகள், வெளிகள் நீர் நிலைகள், சேற்று நிலங்கள் தாண்டி எதிரியின் “சாச்சர் லைற்றின்” பார்வையில் எம்மை அடிக்கடி மறைத்தும் நகர்ந்து புகையிரத வீதியையும் கடந்து நகர்ந்து கொண்டிருந்தோம். காவல் அரண்கள், அடுத்துள்ள பயிற்சி மைதானம், மண் அணை, வெட்டை வெளிகள் தாண்டி இறுதியாய் தங்குமிடத்தில் 12.30 மணிவரை தங்கினோம்.

கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோருக்கும் குளுக்கோஸ் தந்தார். கரும்புலி லெப் . கேணல் சுபேசன் அண்ணா தான் குடித்த மீதி நீரை எனக்கு இறுதியாய் தந்தார். தண்ணீர்க் கான்களை அதிலேயே போட்டு விட்டு நகர்ந்தோம். அது பால்போன்ற நிலவு வெட்டை. எந்த இருட்டிலும் வானவிளிம்பு தெரியும் . அதைவிட கிளாலிப் பக்கமும் , வாடியடிப்பக்கமும், உல்லாச விடுதிப்பக்கமும் என எப்பக்கமும் எரிந்து கொண்டிருக்கும் ரீப் லைற்றினதும் “போக்கஸ்” லைற்றினதும் ஒளிகள் பாம்பு ஊர்ந்தாலே காட்டிக் கொடுத்துவிடும். அப்படியான உப்பள வெட்டை அது, மெல்லென அதனூடாக ஊர்ந்து ஊர்ந்தும் இருந்தபடியும் நகர்ந்து சுமார் 450 மீற்றர் தூரம் நகர்ந்திருந்திருப்போம். நாம் உள் நுழையும் காவல் நிலைக்கு முன்னால் நேர் எதிரே 65 மீற்றரில் நிலை எடுத்து எம்மையும், வெடிமருந்துகளையும், இறுதியாய் தயார் செய்து கொண்டோம்.

ஓர் போராளியும் நானும் காப்புச் சூட்டுக்கு தயாராகும் போது லெப் .கேணல் சுபேசன் அண்ணாவும் கண்ணாளனும் கம்பிறோல்த் தடையைத் தகர்ப்பதற்காய் டோபிடோவுடன் போனபோதுதான். வானவேடிக்கையையும் மிஞ்சியதாய் ஆசா அக்காக்கள் சென்ற முகாமின் பக்கம் வெடியதிர்வுகள் கேட்ட வண்ணமே இருந்தது. அதில் மேஜர் ஜெயராணி, கப்டன் உமையாள், கப்டன் தனா, கப்டன் நளா, கப்டன் இந்து, மேஜர் மங்கை, மேஜர் ஆசா ஆகியோர் உடல் கரைத்து தேச விடிவுக்காய் தம் தேகத்தை உப்பளக்காற்றோடு கரைந்தனர்.

டோபிடோவின் ஒளிச்சிதறலோடு சேர்ந்து கம்பிறோலும் மேலே எழுந்து கொண்டது. உடனே நாம் எல்லோரும் முதலாவது தடையினூடாகச் சென்று இரண்டாவது தடையை கட்டரினால் வெட்டும் போது, இடது பக்க காவல் நிலையில் இருந்து வந்த எதிரியின் சூடுகள் எம்மைக் காயப்படுத்திக்கொண்டே இருந்தது .எனது பக்கக் காவலரண் என்றபடியால் எனது RPK LMG அச்சூட்டை முற்றாக இல்லாது செய்துவிட.

கரும்புலி மேஜர் குமுதன் அண்ணாவுக்கு வலது கை முற்றாக முறிந்தே இருந்தது. அவரின் தொலைத்தொடர்பு சாதனம் நொறுங்கி விட்டது. கரும்புலி கப்டன் குமரேசிற்கு வலது கால் முற்றாக உடைந்த நிலையில் தடையுக்குள்ளேயே கிடந்தான். கரும்புலி கப்டன் செங்கதிருக்கு இடது கையிலும் வலது பாதத்திலும் காயம். மேலும் ஐந்து பேருக்கு சிறிய காயங்கள். எனக்கு வலது கால் மூட்டிலும் இடது காலின் முன்பகுதியிலும் ரவைகள் துளைத்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. “எல்லோரும் இதால வாங்கோ” என்ற குமுதன் அண்ணாவின் குரலோடு அவரோடு எல்லோருமே மிக வேகமாய் உள் நுழைந்து கொண்டிருந்தோம். காயத்தின் வேதனைகள் ஒன்றுமே எமக்குத் தெரியவே இல்லை.

ஆட்லறி நிலைப்படுத்தும் பகுதி வெறுமையாய் கிடந்தது. எங்கள் உள்ளத்திலும் ஒரு வித வெறுமை குடிகொள்ள லெப் .கேணல் சுபேசன் அண்ணாவின் 40mm செல்லும் எனது கவசத்துளைப்பு ரவையும் இடது புறத்தால் மாடிக்கட்டடத்தையும் தகரக் கொட்டகையையும் கிளியர் பண்ணிக் கொண்டிருக்கும் போது வலது புறமாய் இருந்து வந்த சூட்டினை நோக்கி சுட்டுக்கொண்டே போன சுபேசன் அண்ணரின் தொடர்பு மட்டுமல்ல அவரின் சுவாசமும் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நின்றே போனது. அதுவரையும் குண்டு அடி ரவையடி அங்கால அடி இஞ்சால அடி என்று கட்டளையாய் வந்த அவரின் குரல் கணீர் என்று நின்றே போனது .

 

[quote font=”arial” font_style=”italic” bgcolor=”#112ed6″]சுபேசன் அண்ணாவே!
கடைசியில் கூட அருகில் நின்று
கட்டளை பிறப்பித்து – உங்கள்
கட்டுடலை இறைப்பித்து போனவரே
பொறுமையின் பெறுமதியாய்
எமக்கு என்றும் வழிகாட்டி
நிற்பீர் – கடைசியாய்
நீர் தந்த தண்ணீர்
எமக்கு என்றும் கண்ணீராய்………[/quote]

 

திடீர் என பெரிய கட்டடம் ஒன்றில் இருந்து வந்த சரமாரியான சூட்டில் எனது இடது மேல்புறக்கையில் காயமடைந்த நிலையிலும் அக்கட்டடத்தின் சூட்டினை எனது RPK LMGயிலும் கைக்குண்டுகளாலும் நிறுத்தும் போது, (இதில் ஏழு கைக்குண்டுகளைப் பாவித்தேன்)

இரு நண்பர்கள் உடனே அவ்விடத்துக்கு வந்தே விட்டார்கள். எதிரி தனது முகாமுக்குள்ளேயே கத்திக் கத்தி ஓடிக்கொண்டே இருந்தான். இப்போது எந்த எதிர்ப்புமே வரவில்லை. எல்லோரும் சத்தம் வரும் திசைகளை நோக்கிச் சுட்டுக் கொண்டே நின்றார்கள். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோரையும் “விக்ரோ” பண்ணும்படி கூறியதாக யாரோ சொன்ன போது பெரிய ஒரு வேதனையோடும், நெஞ்சு கனக்கும் வேதனையோடும், தொலைத்தொடர்பு பரிவர்த்தனையையும், கட்டளைத் தலைமையையும் குழப்பி திகிலடைய வைத்த அரைகுறை திருப்தியோடு எல்லோரும் பின்வாங்கினார்கள்.

நான் குமுதன் அண்ணரிடம் வந்தேன் அவர் அதிக குருதி வெளியேறியதாலும் மார்பிலும் காயமடைந்ததாலும் அதிகமாக மயக்கமடைந்திருந்தார். அந்த நிலையிலும் “அநியாயமாய்ச் சாகக்கூடாது எல்லோரும் போவோம்” என்று தன்னையும் கொண்டு போகும்படி சொல்ல, அவரை அணைத்தபடி எனது காயத்தின் ரண வேதனையோடு கூட்டி வந்தேன். கொஞ்சத் தூரத்துக்கு நண்பி ஒருவர் உதவி செய்தார். பின் வெடிமருந்துப் பையோடு அவாவும் போய்விட முன்னே மண் அணை அரைகுறையாய் வெட்டப்பட்ட கம்பித்தடையையும் தாண்டி வரும்போது.

கரும்புலி கப்டன் குமரேஸ் “அறிவுக்குமரண்ண என்னையும் கொண்டு போங்கோ காலில்லாட்டியும் இடியனையாவது கொண்டுபோய் இடிப்பன்” என்று அந்த முடியாத வேளையில் கூட சொன்னான். தான் தன்னை இழக்கின்ற போது எதிரியையும் இலக்கையும் அழிக்க வேண்டும் என்ற தவிப்பைப் பாருங்கள். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தவித்திருக்க அவன் எதுவுமே சொல்லவில்லை “சாச்சை” மட்டும் ஓன் (ON) பண்ணினான் . அதனோடு குமரேசின் இறுதியான வார்த்தையையும், அவனின் சிரித்தபடி இருக்கும் இளைய முகத்தையும், ஏன் அவனின் அந்தக் கட்டு உடலைக் கூட எங்களால் இனிக் காணவே முடியாது என்பதை நினைத்த போது நெஞ்சில் ஒரு பெரும் வேதனையும் உறைந்து போனது.

 

**குமரேஸ்!
தம்பி
நீ விடைபெற்றுப் போய்
வெகு நாள் ஆகவில்லை – எனினும்
உடைபட்டுப் போனது – எங்கள்
உள்ளம்தான் – கால் உடைபட்டு
நீ கிடந்த காட்சியை
வெடியோடு நீ கரைந்த பொழுதினை
நினைக்கும் போது
வறண்டு போவது
தேகம் மட்டுமல்ல
கண்களும் தான் **

குமுதன் அண்ணாவைக் கொண்டு வந்து கொண்டே இருந்தேன். அவர் அடிக்கடி பிடியிலிருந்து நழுவி நழுவி தலையைக் குத்திக் குத்தி விழுந்து கொண்டே இருந்தார். அந்த ஆனையிறவின் கட்டளை மையத்தில் இருந்து 180 மீற்றரில் தன்னால் முழுமையாகவே இயலாது போக மயக்கமடைந்த நிலையிலும் நிதானமாய். தனது “சாச்சை” கழற்றி தனது நெஞ்சில் வைக்கும்படி கூறவே எப்படியோ மனதைத் திடப்படுத்தி அதைக் கழற்றி ON செய்யும் போது அதில் இருந்த இயங்கு நிலைத் தடையைக் கூறி அது இயங்காது எனக்கூறியபோது அவர் “என்னால இனி வரேலாது உங்கட சாச்சைக் கழற்றி வையுங்கோ” இதைக் கேட்டதும் நான் உறைந்தே போனேன், என்னோடு இருந்தவருக்கு எனது சாச்சையே வைப்பதா? என்னால் அதைப்பற்றி நினைக்கக் கூட முடியாமல் இருந்தது. அப்படி எண்டால் இரண்டு பேருமே ஒண்டாக் கிடந்து “சாச்” இழுப்பம் என்று வேதனையோடு கூறி முடிக்கும் முன் “அநியாயமாய் நாங்கள் சாகக்கூடாது. கெலிச்சண்டையைப் போல நிறையச் செய்திட்டுத்தான் வீரச்சாவடைய வேண்டும். இஞ்ச நடந்த பிரச்சனையை ஒண்டும் விடாமல் கட்டாயம் போய்ச்சொல்லுங்கோ” என இடைவிடாது சொல்லிச் சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் அதே போதனையும், அதே கட்டளையும் தான் என்ன செய்வது பெரும் வேதனையோடு எனது உடலோடு இருந்த ‘சாச்சை’ கழற்றி அவர் சொன்னபடியே நெஞ்சில் வைத்து ஒரு பொத்தானை ON பண்ணியபடி எஞ்சியிருந்த அவரின் இடது கையில் மற்றப் பொத்தானைக் கொடுத்த போது. மீண்டும் முன்னர் சொன்ன அதே போதனையும், கட்டளையும் அதனோடு இறுதியாய் தம்பி விமலநாதனிடம் சுகமாக இருக்கச் சொல்லுங்கோ கெதியாய் போங்கோ கெதியாய் போங்கோ….. இது தான் அவர் என்னிடம் மட்டுமல்ல அவர் உதடுகள் சொன்ன இறுதி வார்தையும்.

வோக்கி மட்டுமல்ல என் உள்ளமும் சிதைந்து போன நிலையில் அவரின் வோக்கியையும்”சாச்சின்” பொறித் தொகுதியையும் எடுத்துக் கொண்டு எனது பாதங்கள் தான் நகர்ந்தன. நான் நகரவே இல்லை. இப்போதும் அங்கு தான் என் உயிரே. 05 மீற்றர் தூரம் சென்றிருப்பேன். எதிரி அந்த நீண்ட இடைவெளியில் தன்னை மீண்டும் தயார்படுத்தித் தாக்க தொடங்கினான்.

அப்போது திரும்பிப்பார்த்தபடி போய்க் கொண்டிருக்க எனது சாச்சின் வெடியதிர்வோடு அதன் ஒளிச்சிதறல்களோடு குமுதன் அண்ணாவின் உடலும் செந்துகழாகியது. அம்மாவை விட பாசமாய் எம்மை அரவணைத்த அந்த உயிர் நண்பனை மூன்று களத்திலும் எமக்கு தலைமை தாங்கிய அந்த வீரனை, எனது வாழ்நாளிலே என் மனதைக் கவர்ந்த மாமனிதரை நாம் இழந்து போனோம்.

05 நிமிட நேரக்கணிப்பில் இருந்த குமரேசின் வெடிமருந்துத் தொகுதியோடும் கிளியர் செய்ய முன்னுக்கு வந்த எதிரிகளோடும் சேர்ந்து குமரேசின் உடலும் பெரும் வெளிச்சத்தோடு உப்புக் காற்றில் கரைந்து கலந்து என் மூச்சுக் காற்றோடு கலந்தது.

**குமுதன் அண்ணாவே!
என் அம்மாவில் கூட காணாத
உங்கள் அரவணைப்பை
நினைக்க விழிகள் கலங்குதே
மூன்று களத்திலும் நீங்களே
தலைமை ஏற்றீர் -இன்று
எம் மூச்சில் கூட சுவாலை ஏற்றிச்
சென்றீரே**

 

இந்த இரண்டு தோழர்களினதும் உடல்கள் சிதறியதைப் பார்த்த என் உள்ளமும் சிதறியதுதான். எனினும் எனது அப்போதைய நிலையை எனது அப்போதைய உணர்வை எப்போதுமே என்னால் எழுத்தில் வடிக்க முடியாது. ஏனெனில். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி ஒன்றாய்ப் பயிற்சி எடுத்து. ஒன்றாய் பல தாக்குதல்களுக்குச் சென்று, ஒன்றாய் எந்த இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு கொண்டு ஒரு கூட்டுப் பறவைகளாய் இருந்த அந்தப் பாச உறவுகள், எம் உயிர்ச் சொந்தங்கள். என் கண்முன்னே எனது ‘சாச்’ சாலும் தங்கள் ‘சாச்’ சோடும் வெடித்து இருளோடு இருளாகிப் போனார்கள் அந்த இரும்பு மனிதரின் உள்ள உணர்வை அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை, எந்தக் கரும்புலிகளினால் கூட வார்த்தைக்குள் அடக்க முடியாது. கரும்புலிகளின் தியாகமே அப்படியானது தான். அவர்களின் நினைவைச் சுமந்தபடி என் உள்ளத்தில் ஒருவித புதிய உத்வேகம் உந்தித்தள்ள அந்த ஆனையிறவின் மையத்தால் நகர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய பற்றைக்குள் முனகல்ச் சத்தம் கேட்கவே அங்கு போய்ப்பார்த்தேன். திகைத்தே போனேன். கரும்புலி கப்டன் செங்கதிர். அண்ணா அவையள் முன்னுக்குப் போய்க் கொண்டிருக்க்கினம் அவள் சொல்லி முடிப்பதற்குள், இதுவரையும் இருவரையுமே காப்பாற்ற முடியாமல் போன வேதனை மேலிட இவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு துடிப்பு. ஒரு புதிய ஆவேசம் என்னில் எழ அவளைத் தூக்கி அவளின் ஒரு கையை என் தோளைப் பிடித்திருக்க எனது வலது கையால் அவளை அணைத்தபடி எனது காயத்தின் வேதனையோடும் அதை வெளிக்காட்டாமல் தாண்டித் தாண்டி அவளைக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். எதிரி முதலாவது ‘பரா’ வெளிச்சம் மறையும் முன்னர் மற்றப் பராவையும் அடித்துக் கொண்டிருந்தான். ஆனையிறவே அந்த நடு இரவில் பட்டப் பகலாய்க்கிடக்க கவர் எடுப்பதற்கு எந்த தடயமுமே இல்லாத அந்த வெட்டை வெளியால் நகர்ந்து கொண்டிருந்தோம். மோப்ப நாய்களும் துப்பாக்கி ரவையும், 40mm எறிகணையும் எம்மைத் துரத்திக்கொண்டேயிருந்தது. நாம் சென்றுகொண்டேயிருந்தோம்.

ஒரு இருசல் பற்றைக்கு அருகில் முன்னர் வந்தவர்களைக் கண்டு, பின் அவர்களோடு சேர்ந்து சென்றுகொண்டிருந்தோம். எதிரி துரத்திக்கொண்டேயிருந்தான். காயப்பட்டு அதிக குருதி வெளியேறியதால், செங்கதிர் தண்ணீர் தண்ணீர் என்று கத்திய வண்ணமே வர ஒரு உப்பு நீர் ஓடையில் நீரைக் குடித்ததும் உப்புத் தன்மை எமது காயங்களை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. செங்கதிர் மயக்கம் வரும்போது இருந்துவிடுவாள், பின்னர் படுத்தபடி ‘கொஞ்சநேரம் இருந்துட்டுப்போவம்’ என்பாள். புகையிரத வீதியைக் கடந்து வந்துவிட்டோம். செங்கதிர் படுத்தால் எழும்பவே மாட்டாள், எழுந்து நடக்கும்போது எனது பிடியிலிருந்து நழுவி அடிக்கடி மயங்கி மயங்கி இருந்துவிடுவாள்.

மற்றவர்கள் விடிவதற்கிடையில் கண்டிவீதியைக் கடக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க… எங்களுக்காக நீங்கள் எல்லோரும் நின்று வீணாய்ச் சாகக்கூடாது நீங்கள் போங்கோ, விடிஞ்சாப்பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சிடும் வாறம் என்று சொல்லி எனது ROK LMG யைக் கொடுத்துவிட அவர்களும் ஒரு றைபிளை வைத்துவிட்டுச் சென்றார்கள். மலேரியாக் குளிசை குடித்த மாதிரியான மயக்கம் ஏற்படவே வாயில் குப்பியும், கையில் குண்டுடனும், காயத்தின் வேதனையால் அனுங்கிக்கொண்டு கிடந்தோம்.

01.02.1998 காலை 6.00மணி இருக்கும் செங்கதிர் படுத்திருந்த பூவரச மரத்தடியில் எனது கோல்சரில் கிடந்த கைக் குண்டுகளில் ஒன்றினைச் செங்கதிருக்குக் கொடுத்துவிட்டு மிகுதி நான்கு குண்டுகளையும் இடுப்பில் செருகிவிட்டிருந்தோம். அது வெட்டை வெளி உருமறைப்புச் செய்யமுடியாத ஈச்சம் பற்றைகள் நாம் இருந்த இடத்திலிருந்து கண்டி ரோட் 300m றில் இருந்தது. அதன் இரு மருங்கும் 200m இடைவெளியில் காவல் அரண்கள் தெரிந்தன. பகலிலே வீதியைக் கடக்க முடியவே முடியாது. இருண்டபின் தான் அந்த வீதியைக் கடக்க வேண்டும். அதுவரையும் வேதனையைத் தாங்கியபடி சாப்பாடும், நீரும் இன்றி இருக்கவேண்டும். அதைப் பற்றி நினைக்கவே முடியாமல் இருந்தது.

செங்கதிரின் கால்காயத்திற்கு என்னிடமிருந்த ஒரேயொரு குருதித் தடுப்புப் பஞ்சணையைக் கட்டிவிட்டு அவளின் அருகிலே அடிக்கடி ஏற்படும் அரைகுறை மயக்கத்தில் கிடந்தோம்.

கரும்புலி கப்டன் செங்கதிர் குமுதன் அண்ணையாக்கள் பாவம் என அடிக்கடி சொல்லிச் சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவதிலும், கவலைப்படுவதிலும் அவர்களுக்குத்தான் எவ்வளவு திருப்தி பாருங்கள்.

தண்ணீர்த் தாகம் அவளை வாட்டி எடுத்திருக்க வேண்டும். அடிக்கடி தாகத்தால் கத்திக் கொண்டிருந்தாள். மிகுதியாய் கிடந்த குளுக்கோசை அவளின் வாயில் கொட்டும்போது, அண்ணா இதை உமிஞ்சு சாப்பிடக் கூட உமிழ் நீர் இல்லை என அவள் கண்ணீரோடு சொன்ன வார்த்தை என் நெஞ்சை இப்போதும் உறைய வைத்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்.

நேரம் 7.40 மணி எமக்கு வலப்புறமாகக் கேட்ட நாயின் குரையல் சத்தத்தில் தலையை உயர்த்திப் பார்த்த போது எம்மை நோக்கி இராணுவத்தினர் வந்து கொண்டிருக்க, எல்லாமே வெட்டை வெளி ஆனபடியால் குரோலில் கண்டி ரோட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, செங்கத்திர் இதாலையும் வாறாங்கள் எனச் சொல்ல, திரும்பிப்பார்க்க, அதாலையும் வந்துகொண்டிருந்தான். எதுவுமே செய்யமுடியாது. மீண்டும் தங்கியிருந்த பூவரசம் மரத்தடியைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

எதிரி எம்மை நெருங்கி விட்டான். சுட்டுக்கொண்டே இருக்கின்றான். எங்களின் முன்னால் மண்ணைக் கிளறுகின்றது. அப்போது எங்கள் கைக்குண்டுகள் “சேப்றி” இழுத்துத் தயார் நிலையில் கையில் இருக்க செங்கதிர் வயிற்றுக்குள் குண்டை வைத்துவிட்டாள். நானும் அப்படித்தான். செங்கதிர் எதுவுமே கதைக்கவில்லை. ஆனால், அவளின் கண்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.

எதிரியின் சூடு அவளின் உடலில் துளையிட்ட மாத்திரத்தில் குண்டின் வெடியதிர்வு அவளின் உடலை அப்படியே மல்லாக்காகப் புரட்டிவிட செங்கத்திர் என்னைவிட்டு கண்முன்னாடியே போய்விட்டாள். அதை என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. பின்னர் எதிரியின் சூட்டைக் காணவில்லை செங்கதிர் வெடித்ததைப் பார்த்து பயந்திருப்பான் போலத்தான் இருந்தது.

**தங்கை செங்கதிரே!
எங்கு தான் உன்னைக் காண்பதினி ?
வெடித்துச் சிதறிட்ட வேளையில்
உங்கள் ஈகத்தையும்,;,;,
தண்ணீர்த் தாகத்தில்
நீ தவித்த பொழுதினையும்
எண்ணி அழுகின்றேன் – நெஞ்சுக்குள்
விம்மி அழுகின்றேன் மீண்டும்
சந்திப்பேன் மிக விரைவில்………..
உங்கள் ஆசைகளை நிறைவேற்றியபடி**

 

ஏதோ ஒரு உணர்வு என்னை மேலும் உந்தித் தள்ள சேப்ரி அகற்றப்பட்ட அந்தக் கைக்குண்டோடு தாண்டித் தாண்டிச் சென்றுகொண்டிருந்தேன். எதிரியின் ரவைகளும் 40 mm செல்லும் எனக்கு முன்னால் வெடித்துக் கொண்டிருக்க ஆங்கிலத் திரைப்படக் கதாநாயகனைப் போல எந்தக் காயமும் இன்றிப் போய்க் கொண்டிருந்தேன். அதனை இப்போது என்னால் நினைத்தாலும் என்னால் நம்பமுடிவதில்லை.

200m தூரத்தில் ஒரு சிறிய நீர் நிலை தெரிய அங்கு போய் ஆசை தீருமட்டும் தண்ணீரைக் குடித்தேன். என்னால் குடிக்கமுடியவில்லை, செங்கதிர் தாகத்துடன் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தை வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. என் உடல் பலவீனத்தால் சோர்ந்துபோக அந்த “சேப்ரி” அகற்றிய கைக்குண்டை வெடிக்காத மாதிரி சேற்றில் புதைத்துவிட்டு நீரோடு நீராகி பாசியோடு பாசியாக நீந்திச் சென்று எதிரிவரும் திசையின் பக்கமாய் இருந்த சம்புப் புல்லுக்குள் கிடந்தேன். அவ்விடத்திற்கும் ஆமி வந்திட்டான். குளத்தின் உள்ளும் குளத்தினைக் கடந்தும் எதிரியின் சூடுகள் சென்று கொண்டிருக்கின்றது. MI -24 கெலியும் தேடுதல் நடத்துகின்றது. ஆனால் என்னைக் கண்டுபிடிக்க அவைகளால் முடியவில்லை.

எனது இரண்டு கால் காயத்தையும் கைக் காயத்தையும் மீன்கள் குடைந்து குடைந்து பிய்த்துப் பிய்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தது. நான் உடல் ரீதியாய்ச் செத்துக் கொண்டே சொல்ல முடியாத அந்த ரண வேதனையோடு விறைத்துப் போய்க் கிடந்தேன். ஏதோ ஏதோ எல்லாம் செய்தது. ஆனால் அவற்றையும் விட எம் தோழர்ககளும் செங்கதிரும் வெடித்த நினைவும் இறுதியாய்ச் சொன்னவையுமே நினைவை நிறைத்துக் கொண்டிருந்தது. அப்போது வேதனை எல்லாம் எனக்கு வேதனையாய்த் தெரியவில்லை. ஆனால் இப்போது அதை நினைத்தால் அதுவே பெரும் வேதனையாய் என்னைக் கொல்லும். இப்படியாகத் தண்ணீருக்குள்ளே மீனோடும், வெளியே மூச்சு விடவும் அமிழ்ந்து அமிழ்ந்து போராடிக் கொண்டேயிருந்தேன். நண்பகல் 12.00 மணிக்கு பிறகுதான் இயக்கிச்சி முகாமிலிருந்து ஆட்லறிகள் ஏவப்பட்டன. சிறீலங்காவின் CTB பஸ்கள் காயப்பட்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேதனைகளோடும் மயக்க நிலையோடும் இருட்டும் வரை விறைத்தபடி தண்ணீருக்குள்ளே ஊறியபடி கிடப்பது என்பதை சாதராண நேரங்களில் நினைத்தால் கூட வேதனையாய்த்தான் இருக்கின்றது.

எனது கண்கள் மட்டுமல்ல அன்றைய வானும் இருண்டு கொண்டிருக்க மெல்ல மெல்ல எழுந்து குப்பியை வாயிலும், குண்டினைக் கையிலும் கொண்டு காலை இழுத்து இழுத்து செங்கதிர் வெடித்த அதே இடத்துக்குப் போனேன். அங்கு செங்கதிரின் கழுத்துத் தகடு மட்டுமே கிடந்தது. அவளின் உடலை எதிரி இழுத்துப் போன தடையம் புற்களில் தெரிந்தன. அதை எடுத்து எனது “பொக்கற்” க்குள் வைத்து விட்டு கண்டி றோட்டை நோக்கி நகர்ந்தேன். என்னில் இருந்து 75m தூரத்தில் 7,8 ஆமிக்காரன் அவதானிப்புக்காய் சென்று கொண்டிருப்பதை கண்டு, உடனே திரும்பி மீண்டும் செங்கதிர் வீரச்சாவடைந்த இடத்தில் தங்கினேன். வானத்திலே நிலவு. என் மனதிலோ இருளோடும் அவளின் நினைவோடும் அதிலே நிலவு மறையும் வரை கிடந்தேன்.

 

தனிமை என்பதையே உணரமுடியாத தனிமை அது. அவளின் அந்தத் தியாகத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இறுதியாய் சொன்னதைக் கட்டாயம் சொல்ல வேண்டும். இதுவே எனக்குள் இருந்த வெறியாகும். இரவு 10.00 மணியிருக்கும் நிலவு மறைய மீண்டும் வானத்துச் சூரியனாய் பரா செல்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க எனது காலை இழுத்து இழுத்து ஒருவாறு கண்டி றோட்டையும் கடந்து கோயில் வயல்பகுதிக் காட்டுக்குள் வந்து விட்டேன், திசை மட்டுமல்ல எந்தப் பாதையும் இல்லாத முற்பற்றைகள் நிறைந்த காடு அது. எந்த வெட்டையையும் காணவில்லை. அங்கொன்று இங்கொன்றாய்த் தெரியும் பனைகளைப் பார்த்து நகர்ந்தால் அதன் அருகிலும் இருசல்காடுகளே, முட்கள் என் பாதங்களை மட்டுமல்ல என் காயங்களையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு உடல்ரீதியாய் சோர்வு ஏற்பட ஓரிடத்தில் படுத்தே விட்டேன்.

02.02.1998 காலை பழைய வயதானவர்களைப் போல தடியை ஊண்டியபடிதான் என்னால் நகர முடிந்தது. பகலில் கூட பற்றைகளின் ஊடாக நகர்வது கடினமாகவே இருந்தது. நகர்ந்து கொண்டு தான் இருந்தேன். சங்கத்தார் வயல்பகுதியில் இருந்த இராணுவ மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். இப்போது நான் வந்த பக்கமாக காட்டினைக் கிளியர் செய்ய ஆமிக்காறர் சென்ற தடயம் மட்டும் கண்ணில் தெரிய, நல்ல காலம் என்னை அவனுக்கு தெரியாமல் போன நிம்மதியோடு கிழக்குப் பக்கமாய் முகாமுக்கு சமாந்தரமாய் நகர்ந்து கொண்டிருந்தேன். இடைக்கிடை சப்பாத்துத் தடயங்கள். ஒருவாறு முன்னர் வந்து பாதை தெரியாமல் சென்ற அதே “ரெலிபோன்” வயர் வரும் பாதையை தொடர்ந்து நடந்து முன்னர் முக்கோண நிலை எடுத்த அதே இடத்தில் கிடந்தேன். அன்று புதைத்து வைத்து விட்டுப் போன மீதிச் சாப்பாட்டையும் பன்றி கிழறி, ஏதுமற்று எனது வயிற்றைப் போல் சாப்பாட்டுப்பையும் வெறுமையாய் கிடந்தது, தண்ணீர் விடாய் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்க முசுறு எறும்புகள் என் தசைகளில் புகுந்து கடித்துக்கொண்டிருந்தது. அதனைத் தடுக்கக் கூட சக்தியற்றுக் கிடந்தேன். குமுதன் அண்ணா, சுபேசன் அண்ணா, குமரேஸ், செங்கதிர் ஆகியோரோடு இறுதியாய் உண்டு அவர்க்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அதே இடத்தில் அந்த நினைவுகளோடு தனிமையில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.

மாலையாகும் போது மெல்ல மெல்லச் சென்று அன்று சுபேசன் அண்ணாவோடு பாரப்பைகள் மறைத்து வைத்த இடத்தில் மீதிச் சாப்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன். அங்கு அவற்றைக் காணமுடியவில்லை. இருட்டு வந்ததும் விக்னா வீதியையும் கடந்து மீண்டும் வெளிகள், பற்றைகள், வெட்டைகள் ஊடாக நகர்ந்து மின்சாரம் வழங்கும் மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். அங்கிருந்து நட்சத்திரங்களை வைத்து தெற்கு நோக்கி நகர்ந்தேன்.

கடல் நீர் ஏரிக்குள் இறங்கி விட்டேன் 200m சென்றிருப்பேன். கரையில வந்து எங்களின் 120mm எறிகணைகள் வந்து வெடிக்கின்றன.

நீரேரிக்குள் இருந்த பாசிகள் காயத்தை உரசிக்கொண்டிருந்தது, அவற்றுக்குக்கூட என் தசைகளும் குருதியும் தான் தேவைப்பட்டன போலும். நிலவு மறையும் வரை முன்னணி காவல் நிலைகளை அவதானித்தபடி நீருக்குள் கிடந்தேன். முதல் நாள் இரவு தாக்குதல் நடத்தி எமது அணிகள் வெளியேறியபடியால் எதிரி எல்லா நிலையிலும் ரோச் அடித்தபடியே இருந்தான். ஒரு மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை ஒரு இயந்திரப் படகு அவற்றை ‘அலேட்’பண்ணிக் கொண்டிருந்தது. எப்படியாவது அவற்றைக் கடந்து வரத்தான் வேண்டும். நிலவு மறையவும் மெல்ல மெல்ல சென்று அந்தப் படகு சென்று மறைந்த பின் காவல் நிலையிலிருந்து 15m வேலியைப் பிரித்து முதலாவது “ரீப் லைட்” லைனையும் கம்பி றோலை கையால் அழுத்தியபடியும் கடந்து இரண்டாவதையும் அப்படியே செய்து (கம்பி றோல் கறல் பிடித்து இருந்தபடியால் அழுத்தும்போது அது இலுகுவாய் அழுத்தப்பட்டது.) மீண்டும் கடல் நீரேரியால் கொம்படிப் பக்கமாய் நீருக்குள் தெரிந்த நிலப்பகுதிக்கு அண்மையில் சென்றபோது “பிறிஸ்ரல்”மணம் மூக்குள் நுழைய அது இராணுவப் பிரதேசம் என்பதை உணர்ந்து மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து உடல் நீரில் கிடந்தபடியால் மேலும் இயலாமற்போக மயக்க நிலையில் மணல் திட்டியில் படுத்துவிட்டேன்.

03.02.1998 காலையில் எதிரியின் காவல் நிலையில் ரீப்லைட் அணையமுன் மூன்றாவது நாளாகவும் வேதனைகளோடும், உள்ளத்திலிருந்த அந்த உறுதியோடும் உப்பு நீர் நிறைந்த வயிற்றோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். இரணைமடுவின் மேலதிக நீர் வெளியேற்றும் அந்த ஆற்றுப்படுக்கையை இரண்டு தடவை வெவ்வேறு இடங்களால் கடந்து நடந்து கொண்டேயிருக்கின்றேன், இப்போது எனது காயங்களை மணி இலையானும்,அந்த வெளியின் புற்களுமே சுவைத்துக்கொண்டிருக்க சூரிய வெப்பம் என் மேனியில் பட மேலும் தலைச்சுற்றாகவே இருந்தது. கரம்பைக் காய்களைச் சாப்பிட்டுக்கொண்ருக்கும் போதே, அவை உடனுக்குடன் வாந்தியாய் வெளியில் வந்து கொண்டேயிருக்கும்.

03.02.1998 அன்று முற்பகல் 11.40 மணிக்கு கண்டாவளைக் கிராமத்துக்குள் மெல்ல மெல்ல நுழைந்து கொண்டிருந்தேன். என்னைக் கண்டவுடன் தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டார்கள். இருவர் மட்டுமே அசையாமல் நின்று பார்த்துக் கொண்டே நின்றார்கள். வேதனையிலும் சிரித்தபடி அவர்களிடம் விபரத்தைக் கேட்டபோது ஓடியவர்கள் ஆமிக்காரர் என நினைத்து ஓடுவதாயும், ஆமிக்காரார் என்றால் தடியூண் டியபடி வரமாட்டான் என்பதால் தாங்கள் ஓடவில்லை என்றும் சொல்லிக் கொண்டார்கள். பனையோலை வாளி யில் நீர் குடிக்கத் தந்தார்கள். எனது காயத்துக்கு பொழுத்தீனால் இலையான் மொய்க்காமல் கட்டிவிட்டு, தங்களின் மாட்டு வண்டிலைக் கொண்டு வந்து, அதில் என் காயங்கள் தாக்காத மாதிரி வைக்கோல் நிரப்பிய சாக்கில் என்னைத் தூக்கி ஏற்றிக் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஆழமாக நேசிக்கும் மக்களின் அந்த பங்கும் பணியும் இன்னும் தொடர வேண்டும். இடையில் வேவுப்புலி கப்டன் விடுதலையும் மற்றும் ஓர் போராளியும் என்னை உழவு இயந்திரத்தில் மாற்றி ஏற்றி வந்தார்கள்.

04.02.1998 அன்று சுய நினைவு பெற்று எழுந்தபோது நான் அபையன் மருத்துவ மனையில் மட்டுமல்ல ஈழநாதம் பத்திரிகையில், ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் வீரகாவியமான பதினான்கு கரும்புலிகளில் ஒருவனாய் இருந்தேன். மீண்டும் புதிய போரியல் அனுபவங்களின் ஊடே எதிரியின் இலக்கை நோக்கி என் பாதங்கள்……

நினைவுகளுடன்:- கருவேங்கை
விடுதலைப்புலிகள்  இதழ் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments