இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home போராளிக் கலைஞர்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் வீரவிருட்சத்தின் வித்துக்கள்.!

வீரவிருட்சத்தின் வித்துக்கள்.!

கார்த்திகை மாதத்து ஊதல் காற்றுசில்லிடச் செய்து கடந்து சென்றது.
இரண்டாம் கட்ட ஈழப்போர் உக்கிரகட்டத்தைஅடைந்திருந்தது.பலாலி இராணுவத்தளத்தை
விரிவுபடுத்தி யாழ் நகரை கைப்பற்றி விடஎதிரி முனைந்து கொண்டிருந்தான்.
 
24.11.1992, பத்தமேனிப்பகுதியில் எதிரி புதிதாக அமைந்திருந்தமுன்னணிக்கு காவலரண்களை
ஊடுருவித்தாக்கி அழித்து விடும் நோக்கில்எமது அணிகள் நகர்ந்து கொண்டு இருந்தன.
மரபு ரீதியில் முன்னேறிவந்து நிலையமைத்துள்ள
இராணுவத்தை தாக்கி அழிப்பதற்கு மோட்டார்பீரங்கிகளின் ஆதரவுகூட எம்மிடம் இல்லாத காலமது.
சாதாரண தானியங்கித் துப்பாக்கிகளையும், இலகு
இயந்திர துப்பாக்கிகளையும் கொண்டு எதிரியைத்தாக்கி
அழிக்க வேண்டி இருந்தது எனினும் அன்றைய போர்ச்சுழல்
அவ்வாறானதொரு சண்டையைச் செய்ய எம்மை நிர்ப்பந்தித்தது.
 
நேரம் நள்ளிரவைத்த தாண்டி
இருந்தது. அந்த மழைக்காலத்து
இருளில் ஊடு சில உருவங்கள் குனிந்தவாறும்,
தாழ்ந்தவாறும் எதிரியின் முன்னனி காவல்
அரண்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர்.
பல அணிகள் பங்கெடுத்த அந்த சண்டையில் ஒரு
குறிப்பிட்ட பகுதியைத் தாக்கிக்கைப்பற்றும்
பொறுப்பு பெண்கள் படையணிப் போராளிகளிடம்
கொடுக்கப்பட்டுள்ளது.
 
அவர்கள் எதிரியின் முன்னணித்
தடையை நெருங்கியிருந்தனர்.
தேடொளி விளக்குகள் உமிழ்ந்த
வெளிச்சம் நிலத்துடன் நிலமாக தடைகளின்
அருகில் கிடந்தவர்கள் தலைகளின் மேலால்
ஒளிபாய்ச்சிச் சென்றது. இடைக்கிடை எதிரி
தன்னிடமுள்ள கனகர ஆயுதங்களினால் தனக்கு
முன்னால் உள்ள தடைப் பிரதேசத்தினுள்
எழுந்தமானமாக சுட்டுக்கொண்டிருந்தான்.
அவன் ஏவிய ஏவுகளைகளும் ஆங்காங்கே
விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன.
 
முட்கம்பிவேலித் தடைகளை வெட்டியவாறு அந்த அணியினர்
ஒருவர் பின் ஒருவராக கைகளில்
இறுக்கப்பற்றிய துப்பாக்கிகளுடன் எதிரி
முதலாவதாக ஏற்படுத்தி வைத்திருந்த
தடையை தாண்டினார். “டோப் பிட்டோ”
குண்டுடன் அவர்களின் முன் சென்ற போராளி
அடுத்திருந்த தடையை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தான்.
இடைக்கிடை எதிரி ஏவும் எறிகணைகள்
வீழ்ந்து வெடிக்கும் சத்தத்தைத் தவிர
எல்லாம் அமைதியாக இருந்தது.
சண்டை தொடங்குவதற்கு இன்னும்
சில நிமிடங்களே இருந்தன. எதிரியைத்
தாக்கி உள் நுழைவதற்கான பாதை
ஏற்படுவதற்காய் அணியினர் காத்திருந்தனர்.
 
எழுந்தமானமாக எதிரி ஏவிய எறிகணையொன்று வெடித்து
ஓய்ந்த போது அணியில் ஒருவனாக அங்கே
நிலையெடுத்திருந்த 2ம் லெப். ஜெமிலாவின்
கால்கள் இரண்டையும் சிதைத்திருந்தது.
 
எல்லோருடைய விழிகளும் தவிப்புடன்
அவளை நோக்கித் திரும்பின. அவளது
வேதனையின் முனகலால் அடுத்து
நடக்கவிருக்கும் விபரீதத்தை எண்ணி
எல்லோர் முகங்களிலும் அச்சத்தின் சாயல்
படர்ந்தது. முதலுதவி செய்வதற்காய்
ஜெமிலாவின் அருகிலிருந்த போராளி
அவளை நெருங்கிய போது அவளுடைய முகம்
உணர்ச்சியற்று கல்லாக இறுகியிருந்தது.
ஆனால் அந்த விழியில் மட்டும் எதோ ஒரு
ஆத்ம ஒளி பரவியிருந்தது.
 
மெல்ல அசைந்த அவள் உதடுகளில்
இருந்து அந்த வார்த்தைகள்
வெளிவந்தபோது யாருமே அதை
எதிர்பார்க்கவில்லை.
“என்னை விட்டுட்டு நீங்கள் முன்னேறுங்கோ,
நான் சத்தம் போட மாட்டன்” இறுதியாக
அவள் கூறியது போலவே அந்த சண்டை
தொடங்கும் வரை, ஏன் அவள் மருத்துவ
விடுதியை அடையும் வரை அவளுடைய
நாவு வேதனையில் ஒலியெழுப்பவேயில்லை.
 
எதிரியின் காவலரண் தொடரின்
மிக அருகில் சிறு முனகல் சத்தம் கூட
அங்கே நிலவிய நிசப்தத்தைக் குலைத்து
எதிரியை உசாரடையச் செய்துவிடும்
வேளையில், இன்னும் எதிரியைத் தாக்க
சில நிமிடங்களே உள்ள இறுதிக் கணத்திலே
தனது அணி எதிரியால் அவதானிக்கப்படக்கூடாது,
தன்னால் அன்றைய சண்டை குழம்பிவிடக்கூடாது,
என்பதற்காய் தன் அத்தனை வேதனை உணர்வுகளையும்
அவள் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள்.
 
ஒரு போராளி என்ற வகையில்
தனது வேதனையின் வெளிப்பாடுகளை
தனக்குள்ளே அடக்கி, உயரிய மன
உறுதியை, தியாகத்தை வெளிப்படுத்துவது
என்பதற்கும் அப்பால் எவ்வாறு அந்தப் பெண்ணால்
தன்னிலை மறந்து வேதனையில் மயக்கமடையும்
போதுகூட, தன் வேதனை உணர்வுகளை தனக்குள்ளேயே
அடக்கி அமைதிகாக்க முடிந்தது..? சாதாரண மனித
உயிர்களினால் செய்ய சாத்தியமற்ற அந்த செயல்
எவ்வாறு அவளிற்கு சாமத்தியமாயிற்று…?
 
எதிரியை திகைப்பிலாழ்த்திய அந்தச்
சமரின் வெற்றியை சாத்தியமாக்கியது,
வெற்றிக்காய் வேதனைகளை தாங்கியவாறு
பின்னர் மௌனித்து விட்ட அவளின் நெஞ்சுறுதியே.
மணலாற்று மண்ணில் எதிரி ஏற்படுத்தியிருந்த
ஆக்கிரமிப்பு வடிவங்களிற்கு அரணமைத்து நின்றது,
கொக்குத்தொடுவாய் இராணுவத்தளம். எங்கள்
மக்கள் வாழ்ந்த நிலத்தில் இருந்து அவர்களை
இடம்பெயர வைத்துவிட்டு, அத்த்துமீறிக்
குடியேறியவர்கள் ஆக்கிரமிப்பின் சாட்சியமாய்
இறுமாந்திருந்தது அந்த முகாம்.
28.07.1995 நள்ளிரவு நேரம் எதிரியின் அந்த முகாமை
நோக்கி இருளில் கரைந்தவாறு அணியணியாகப்
போராளிகள் நகர்ந்துகொண்டிருந்தனர். உயர்ந்த
மரங்களின் ஊடு ‘ஊ’ என்ற இரைச்சலிட்டு வீசிய காற்று
அச்சப்பட வைத்தவாறு அவர்களைக் கடந்து சென்றது.
 
அது ஒரு தாக்குதலிற்கான நகர்வு.
அடைந்த காடுகளின் ஊடு முன்னேறிக்கொண்டிருந்தவர்கள்
எதிரியின் முகாமை நெருங்கியிருந்தனர். எதிரியின்
முகாமைச் சுற்றி பல முனைகளில்
நெருங்கிக்கொண்டிருந்த அணிகளில் ஒரு அணியாகத்தான்
பெண்கள் படையணியின் அந்தக் குறிப்பிட்ட
அணியையும் ஒரு வேவுப்புலி வழிகாட்டி நகர்த்திக்
கொண்டிருந்தான்.
 
தாக்குதல் ஆரம்பமாவதற்குரிய
நேரம் நெருங்கியிருந்தது. அவர்கள்
தமது தலைப்பிரதேசத்தில் இருந்து
கணிசமானளவு தூரம் முன்னேறியிருந்தனர்.
எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் கூட
அவனது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு
வெற்றிகரமாக நகர்ந்து அவனது தடைவரை
அண்மித்திருந்தனர்.எதிரி தனது முகாமைச்சுற்றி
மின் விளக்குகளை பொருத்தியிருந்தான்.
இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்த அந்த மின்
விளக்குகளின் ஊடு அவர்கள் தொடர்ந்தும்
முன்னேறவேண்டியிருந்தது. அதனால் இப்போது
எதிரியால் தெளிவான அவதானிக்கப் படக்கூடிய
நிலையிலிருந்தனர்
 
முகாமைச் சுற்றி உள்ள தடைகளை
அகற்றி முகாமினுள் நுழைவதற்குத்
தேவையான பாதையை ஏற்படுத்துவதற்காய்
போராளிகள் சிலர் முட்கம்பிச் சுருள்களின் ஊடு,
“டோப்பிட்டோ” குண்டைப் பொருத்தி விட்டு
சண்டை நெருங்கும் இறுதி நேரம்வரை காத்திருந்தனர்.
சண்டை தொடங்கிவிட்டது. முதலாவது தடையை
தகர்த்துவிட்டு லெப். மேனகாவின் அணி இரண்டாவது
தடையைத் தாக்க முயன்றது. அவர்கள் வைத்த
“டோப்பிட்டோ” குண்டு வெடிக்காமல் அவர்களை
ஏமாற்றிவிட தொடர்ந்தும் முன்னேற முடியாதவாறு
சண்டையிட்டுக்கொண்டிருந்த அணி மீது எதிரி
தாக்குதலைத் தீவிரப்படுத்தினான்.
 
எதிரியை வீழ்த்தியவாறு முன்னேற
வேண்டியவர்கள் எதிரியின் சூட்டிற்கு
ஒவ்வொருவராய் தம்மை இழந்து கொண்டிருந்தார்கள்.
மாற்று வழிகள் ஏதும் உடனடியாகச்
செயற்படுத்த முடியாத அளவிற்கு எதிரி
அவர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தான்.
நிலைமை அங்கே மோசமாகிக்கொண்டிருந்தது.
சொற்ப நேரம் எதிரிக்கு கிடைக்கும் சாதக
நிலமைகூட அங்கே எமது மேலாண்மையை
தகர்க்கப்போதுமாய் அமைந்துவிடும் என்பதை
உணர்ந்திருந்த லெப்.மேனகா தனியொருத்தியாய்
நிலையை மாற்றியமைக்கத் துணிந்தாள்.
 
எதிரி வானில் ஏவிய பராவெளிச்சக்குண்டுகள்
ஒளிவீசிக்கொண்டிருந்தன. இன்னும் தகர்க்கப்படலாம்
அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாய் நிற்கும்
முட்கம்பிச்சுருள் பராவெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.
ஒரு விடுதலைப் போராளி சமர்களங்களில் தன்
அதீத வீரத்தை வெளிப்படுத்துவது இயல்வு.
ஆனால் அவள் தன் முயட்சிக்காய் உயிரையும்
பொருட்படுத்தாது, உடலில் ஒவ்வொரு உயிர்
அணுக்களும் அடையப்போகும் வேதனையை
அறிந்திருந்தும் அசாத்தியமான அந்தச் செயலைச்
செய்தாள்.
 
அந்தப் பகுதியில் இருந்த எதிரியின்
துப்பாக்கிகள் எல்லாம் அவர்களின்
மீதே மையம் கொண்டிருந்தது.
சடசடக்கும் எதிரியின் துப்பாக்கி
ரவைகளின் ஊடு உடலில் இருந்து குருதி
கொப்பளிக்க ஓடிச்சென்ற முட்கம்பிச்சுருள்
மீது பாய்ந்தாள்.இதுவரையும் அவர்களின்
முன்னேற்றத்தைத் தடுத்து தடையாக நின்ற
கம்பிச்சுருள் நிலத்தோடு நிலமாய்
நசுங்கிப்போயிற்று. அவளின் உடலின்
மேலால் அணிக்கு ஒரு பாதை பிறந்தது.
நசுங்கிக்கிடந்த கம்பிகளின்மேலால் அவள்
தன் உயிர் கொண்டு உருவாக்கிய பாதையின்
ஊடாக அவளை கடந்து அவளது தோழிகள்
முகாமினுள் பாய்ந்தனர்.
-நவம்பர் 2000 எரிமலை இதழ் 
முதல் இணைய தட்டச்சு உரிமை:-வேர்கள்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments