இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்களங்கள் கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.!

கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.!

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்

விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00 – 11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொது இடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை போன்று வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. முதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

வீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்தபோது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு நேர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்டடங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.

இவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கிவருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.

இத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத்தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.

சாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்களின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது. வருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய நாட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.

மூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ !

அமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.

அத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அத்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.

அதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.

இவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

இரண்டாவது வளையத்தில் போரினை தொடர்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.

அதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,

* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.

* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.

* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.

மூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர் நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நான்காவது வளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்

போது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.

ஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்படுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்தி மூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.

இப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”

 

 

 

 

 

 

 

 

நான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு நாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.

வான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

சிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

பெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.

எழுத்துருவாக்கம்:- சி.புலித்தேவன்.

விடுதலைப்புலிகள் இதழ் 2007  (பங்குனி, சித்திரை)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா

வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும்,...

கரும்புலி மேஜர் சிற்றம்பலம் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் சிற்றம்பலம், கரும்புலி கப்டன் விஜயரூபன், கரும்புலி கப்டன் நிவேதன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் தமிழீழத்தின் தலைநகர் திருமலை சீனன்குடா விமானத்தளத்தில் ஊடுருவி 06.03.1997 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலில்...

லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா வீரவணக்க நாள்

லெப். கேணல் பாலேந்திரா, லெப். கேணல் மதனா உட்பட ஏனைய மாவீரகளின் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் 06.03.1997 அன்று சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்...

கரும்புலி மேஜர் சிற்றம்பலம்.!

என்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதேபோல இயங்கிக்கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுக்கச் செய்து முடிக்கப்போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அவைகள் முன் எழுந்த...

Recent Comments