இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு  பதிவு சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …!

சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …!

கார்த்திகைமாதம் வேர்த்தறியாக்காலம்.
மேகமுந்தானை விலக்கி
வானத்தாய் பூமிக்குப் பால்கொடுப்பாள்.
வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும்.
நீரும் நிலமும் கலந்திளகி
பூமிப்பெண் புத்தாடை புனைவாள்.
ஆயிரம் காணவேண்டும் அதைக்காண.
ஊரின் ஒழுங்கையெங்கும்
வாரடித்தோடும் வெள்ளம் வரைகின்ற
நீரரித்த கோடுகளில் பாதம்பதிக்க
உச்சிகுளிர்ந்து உருகும்.
மருதாணி போட்ட அழகான விரலாய்
மண்கிழித்தெழும் காளான்மடை
பூனைமேனிப் புசுபுசுப்பாய்
சின்னக்குடை விரித்துச் சிரிக்கும்.
கூரைவழியும் நீர்த்தாரை மீது
திண்ணை மீதிருந்து திளைப்பதில்
என்ன ஆனந்தம்.
மனசில் பூபரவிப் போகும் இந்த மாதம்.
வீரத்தைக் கொண்டே விரல்மடிப்பதெனில்
கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்த மாதம்.
ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும்,
ஈழத்தமிழரையே கூறிய வேல்துளைத்ததும்
இந்த மாதத்திற்தான்.
தமிழரை மீண்டும் தமிழறேன்றாக்க
முதல்நாள் பிள்ளையொன்று விழிதிறந்தது
தமிழரின் நெஞ்சில் இடிசொருகிவிட்டு
மறுநாள் பிள்ளையொன்று விழிமூடியது.
ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின
இது தற்செயலான சம்பவமல்ல
ஒரு சரித்திரமான அதிசயம்.
கார்த்திகை 27 மாவீரர் நாள்.
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள்.
ஈழத்தமிழர் இழந்திருக்க மாட்டோமென
ஆளும் கதிரைகளுக்கு அறிவித்த நாள்.
கூண்டிருக்க இனிவிரும்போமென
நீண்ட காலத்தின் பின் நிறுவிய நாள்.
சிறகெடுத்துப் பறந்த சிட்டுக்குருவிகளின்
தீபத்திருநாள்.
ஊனக் கனவேதுமற்ற ஞானத்துறவிகளின்
உயிர்தநாள்.
தேசத்தை மட்டும் ஆராதிக்கத் தெரிந்தவரின்
வாதம் பரவும் அந்த வாசல்.
மெழுகாய் விழியுருக
மெய் விதிர்க்க
அழுவோராயும், தொழுவோராயும்
பூக்கொண்டு போவோம் அப்புனிதரிடம்.
நெஞ்சுருக, நெஞ்சுருக நெய்விளக்கேற்றிக்
கலரை முன்னின்று கரைவோம்.
ஒருதரமேனும் விழிமலருங்களென்று  உருகுவோம்.
பூச்சொரிந்து அவர் பாதம் பூசிப்போம்.
வல்லமை தாருங்களென வரம் கேட்போம்.
வில்லாண்ட  வீரத்தின் ஒருதுகளை
வெளியே எறியுங்களென வேண்டுவோம்.
நதியாக் குதித்தோடிய நாட்களும்,
பூவாய்ச் சிரித்திருந்த பொழுதுகளும்
நினைவிருக்கா? எனக் கெஞ்சுவோம்.
உள்ளே வேர்பிடித்திருக்குமா உங்களுக்கென
காதோடுரசிக் கேட்போம்.
கல்லறைக்குள்ளே கண்மலரும்.
மேனி அசையும்.
மெல்லச் சிரிக்குமொலி உள்ளே கேட்கும்.
கல்லறைக் கதவுகள் விரியப்
பிள்ளை முகம் காண்பாள் பெற்றவள்.
“அம்மா” என்றோர் அசரீரி
அவளுக்கு மட்டும் கேட்கும்.
“அப்பா” என்றோர் குரல்
அவருக்கு மட்டும்தான் கேட்கும்.
தோழனே ! என்ற குரல் மட்டும்
துயிலுமில்லமெங்கும் கேட்கும்.
தோழியே ! என்ற குரல் மட்டும்
திசையெங்கும் எதிரொலிக்கும்.
குரல் கேட்டதும்
அந்தக்குளிரிலும் வேர்த்துக்குளிப்போம்
சில்லிட்டுப் போகும்மெம் ஜீவன்.
புதைக்கவில்லை விதைத்தோமேன்ற
பொருளுணர்ந்து பெருகுமெம் விழிகள்.
உள்ளே கொதிப்புறும் குருதி.
சுடரும் விளக்கொளியில் மேனிசூடேறும்.
ஒவென்றிரையும் ஊதற்காற்று.
வானம் இருள்விலத்தி வழிவிடத்
தூரத்தில் தெரியும் விடிவெள்ளி.
பிரிய மனமின்றிப் பிரிவோம்.
மாவீரரே!
நடுக்கல்லாகிவிட்ட நந்தா விளக்குகளே !
விடுதாளிக்கு நீர் தந்த விலையதிகம்.
உரிமைக்கான போரில் உயிர்கொடுத்தலே
பெரியபேறு.
கவிதை எழுதுதல் கால்தூசு.
கண்ணீர் விடுவதாலும் கையளவே.
மண்ணுக்காக மரணிப்பதே மாதவம்.
ஒன்றுமட்டும் உறுதி,
இனியுமெம் தேசம் படுக்காது.
குனிந்தெவருவருக்கும் குற்றேவல் செய்யாது.
தேவநிலை வந்தெய்தினும்
தாயகக் காதல் மட்டும் தணியாது.
சாவரினும் தளரோம் இதுசத்தியம்
யார்வரினும் பணியோம் இதுசத்தியம்
போரெடுத்தோம் வெல்வோம் இதுசத்தியம்
வெந்துதணியாது இந்த வீரநிலம்.
பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை
தகையழிந்து போகுமோ சந்தனக்காடுகள்?
வேரறுந்து வீழுமோ விடுதலை?
ஊரெரிந்தும், உயிர்பிரிந்தும் போகலாம்
பிரியும் நொடியிலும் உம்மையே பேசுமெம்வாய்.
விரியும் மலரிலும் தெரியுமும் முகம்.
உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஒர்குழி.
உறவுகள் வந்து விளக்கேற்ற
உள்ளேயிருந்து நாமும் சிரிப்போம் ஓர்நாள்.
அதுவரை ஓயாதேம் அலைகள்.
எத்தனை புயல்களும் எழுந்து வீசட்டும்.
சித்தம் கலங்கிக் சிதறோம்.
எத்தனை துயரெனினும் அழுத்தட்டும்
அத்தனை வரிப்புகளையும் ஆனந்தமாக்குவோம்.
விடுதலை எங்களின் பேச்சு.
விடுதலை எங்களின் மூச்சு.
விடுதலை நெஞ்சிற் பதியம்போட்ட நாற்று.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.

– வியாசன்.!

எரிமலை(2000  நவம்பர் ) இதழிலிருந்து.!

மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ஒளிரும் ஓவியம் கடற்கரும்புலி மேஜர் சிறி.!

அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற,...

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...

நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.!

அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா...

Recent Comments