இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்கள நாயகர்கள் “வசந்த் வாத்தி ”

“வசந்த் வாத்தி ”

“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை பயிற்சியாளர் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலையே முதன்முதலாக கனரக ஆயுதங்களுடனான (PK, RPG, AKLMG)அணிநடை பயிற்சியை அறிமுகப்படுத்திய இராணுவ ஆசிரியர் என்ற பெரும் பெயரையும் தன்னகத்தே கொண்ட வேங்கையே கேணல் வசந்த் அல்லது குமரிநாடான்.

விடுதலை புலிகளின் ஒரு தொடக்கப்பள்ளியானது படைத்துறைப்பள்ளி என்று பெயர் கொண்டது. இதை அறியாதவர்கள் யாரும் இல்லை. இங்கு தான் அவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அணி தயாராகி கொண்டிருந்தது. அதற்கு பிரதம ஆசிரியர் வசந்த். அணிநடையில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்பித்த வசந்த் படைத்துறை பள்ளி போராளிகள் அணிக்கு தாயாக தந்தையாக நண்பனாக ஆசானாக என்று அத்தனை நிலைகளிலும் அவர்களுக்கு எல்லாமாகி நின்றார்.

படையணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளிலும் தனது படைத்துறை பள்ளி சார்ந்த போராளிகளை கொண்டு போட்டிகளை வெற்றி பெறத் தவறியது இல்லை. அதுவும் அணிநடையில் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது படைத்துறைப்பள்ளி அணி. இதற்கு அடித்தளம் இட்டது வேறு யாரும் அல்ல “கேணல் வசந்த்” என்று அவரது நினைவு பகிர்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறார். படைத்துறை பள்ளியின் முதலாவது அணி போராளியாக இருந்து பின் நாட்களில் கணணிப்பிரிவின் முது நிலை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த போராளி ஒருவர்.

குறித்த சில வருட படைத்துறைப்பள்ளி பயிற்சிகளின் பின் போராளிகள் வேறு வேறு படையணிகளுக்கு சென்ற போது குறித்த சில போராளிகளை தன்னுடனே தனது ஆசிரியர் பணிக்காக வைத்திருந்த வசந்த் தனது நேரடி நெறிப்படுத்தல்களில் அவர்களை வலு மிக்க ஆசிரியப் போராளிகளாக மாற்றுவதில் வெற்றி கண்டார். இது நியமாக போனது 1999 காலப்பகுதியில் நடைபெற்ற கராத்தே போட்டி ஒன்றில். இவரது அணியும் பொதுமக்களில் இருந்து பல வீரர்களும், விடுதலைப்புலிகளின் ஏனைய படையணியை சேர்ந்த கராத்தே அணியினரும் பங்கு பற்றி இருந்தார்கள்.

ஆனால் இவரது அணியை சேர்ந்தவர்களது சண்டையிடும் ஆற்றலானது அங்கு போட்டிக்கு வந்திருந்தவர்களை ஒரு கணம் திகைக்க வைத்திருந்ததை மறுக்க முடியாது. டேய் “வசந்தன் வாத்திண்ட பெடியள் வந்திருக்கிறாங்கள் அவங்களோட சண்டை போடா எங்களால முடியாது ” வெளியில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் அணிகள் இவர்களுடன் சண்டையிட பயந்து நின்றன. ஏனைய படையணி போராளிகளும் கூட இவர்களை கண்டு கொஞ்சம் தயக்கத்துடனே போட்டியில் பங்கு பற்றினர். அவ்வாறாக வசந்த் அவர்களை வளர்த்திருந்தார். விடுதலை புலிகளின் படையணிகளில் வசந்த் ஒரு முக்கிய பயிற்சியாளராக தனது போராளிகளை வளர்த்திருந்தார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கைக்குரிய போராளியாக உயர்ந்திருந்த வசந்த் தொடர்பாக மூத்த போராளி ஒருவரிடம் வினவினேன். அப்போது ” தம்பி முதலில் வசந்தன் என்ற பெயரை உச்சரிக்காதீர்கள். அவருக்கு வசந்தன் அல்ல பெயர். “வசந்த்” என்பதுவே அவரது இயக்க பெயர். “வசந்தண்ண” என்று போராளிகள் அழைப்பதன் மூலமாக மருவிய பெயரே வசந்தன். ஆனால் அவனது உண்மை பெயர் வசந்த். வசந்தன் என்பது அவருக்கு விருப்பம் இல்லாத பெயர் அதனால் அதை பயன்படுத்தாதீர்கள். மன்னிக்கனும் அண்ண இந்த தகவல் நான் அறியாதது. அனைவரையும் போலவே நானும் வசந்தன் என்றே நினைத்திருந்தேன். என் அறியாமையை நினைத்து கொண்டு மன்னிப்பு கேட்டு தொடர்கிறேன் அவரை பற்றி சொல்லுங்க.

கேணல் வசந்த் நீண்ட காலமாக போராளிகளை வளர்த்தெடுக்கும் ஆசானாகவே தனது போராட்ட பணியில் இருந்தார் ஆனால் அவர் அந்த காலங்களிலும் களமுனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுத்து ஒவ்வொரு கலச்சூழலையும் போராளிகளுக்கு தெளிவு படுத்துவார். அதற்காக களமுனைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக ஆய்வு செய்து கொண்டே இருப்பார். அவர் என்றும் களமுனைகளை துறந்தது இல்லை. களமுனைகளுக்காக காத்திருந்ததும் இல்லை.

எங்கெல்லாம் களமுனைகள் விரிந்து கிடந்தனவோ அங்கெல்லாம் களத்தினை தேடி செல்லும் துணிச்சல் மிக்க போராளி தான் வளர்த்த ஒவ்வொரு போராளிகளின் மனதிலும் தேசியத்தலைவரையும் மக்களையும் எங்கள் மண்ணையும் நேசிப்பதற்கான அடித்தளங்களை அவர் பலமாகவே இட்டிருந்தார்.

தமிழீழ மகளிர் படையணிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கான தற்காப்பு பயிற்சியாளராக வசந்த் செயற்பட்ட காலங்களில் சாதாரண ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை சிறப்பாக இயக்கம் வல்லமை தாங்கிய மகளிர் படையணிகளாக அவர்களை வளர்ப்பது மட்டுமல்லாது. தமது தற்காப்பு பயிற்சிகளிலும் முன்னிலை வகித்தார்கள் என்றால் அது வசந்த் என்ற ஆசிரியரின் முழு முயற்சிகள் என்றால் மிகையில்லை. “கராத்தே” மட்டுமல்லாது எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, சிலம்பு, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, கத்திச்சண்டை, யோகாசனம் எதிரியை நினைவிழக்க செய்யும் முறைகள் போன்றவற்றோடு ஜப்பானிய சீன கலைகள் உள்ளடக்கிய தற்காப்பு பயிற்சிகளை மகளிர் படையணிகளுக்கு விதைத்தார் கேணல் வசந்த்.

“உண்மை தான் அண்ண வசந்த் மாஸ்டர பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிய போதே நான் சேகரித்த தகவல்களில் முதன்மையானவையாக இருந்தது அவரது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் நடையணி பயிற்சி தான். இவற்றை விட வேறு என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

அண்ண சண்டைகள் பற்றிய திட்டமிடல்களின் போது அருகில் வைத்திருக்கும் ஒரு போராளிகளுள் ஒருவராக இவர் இருந்தவர் என்பது யாவரும் அறிந்த விடையம் தான். ஆனாலும் வசந்த் என்ற இந்த போராளி மீது எங்கள் தலைவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுகளே அங்கு இடம்பெறும் சண்டைக்கான திட்டமிடலில் கருத்துக்களை கூறும் ஒரு முது நிலை போராளியாகவும் கள நிலவரங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க கூடிய செயற்பாட்டாளனாகவும் வசந்த் தோன்றினார். அதனால் தான் பல வெற்றி சண்டைகளுக்கான திட்டங்களை வசந்த் தலைவருக்கு கொடுத்திருந்தான்.

2005 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் முற்றுமுழுதாக ஆசிரியர் என்ற நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு தலமைசெயலக ஆயுத படைக்கலங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதும் தலைமைசெயலக சிறப்புத் தாக்குதல் அணியான “மணாளன் சிறப்பு தாக்குதல் அணியின் ” பயிற்சியாளராகவும் களமுனை ஆலோசகராகவும் செயற்பட்டார். இங்கு மீண்டும் நான் அவரை பற்றி குறிப்பிட நினைப்பது கேணல் வசந்த் களமுனைகளை விட்டு பிரிந்திருந்ததில்லை. என்பதாகும்.

அவர் தனது நினைவு பகிர்வை முடித்திருந்த போதும் வசந்த் அவர்களின் களமுனை செயற்பாடுகளை விட முக்கிய செயற்பாடுகளாக பல விரிந்து கிடந்ததை நான் வேறு பலரிடம் திரட்டிய தகவல்களில் கண்டுகொண்டேன்.

கேணல் வசந்த் படைக்கல பிரிவுக்கான பொறுப்பாளராக இருந்த போது எங்கோ ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஸ்கோப்” என்று சொல்லப்படுகிற ஆயுத இலக்கு குறிகாட்டி ஒன்றினை தமிழீழ மண்ணில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். 600 அமெரிக்க டொலர் குடுத்து வாங்க வேண்டிய அந்த குறிகாட்டியை நான் உருவாக்குகிறேன் என்று தலைவரிடம் அனுமதி பெற்று கிட்டத்தட்ட ஆறு முறைகள் முயற்சியில் தோல்வியடைந்து, ஏழாவது முறை தனது கண்டுபிடிப்பை தலைவரிடத்திலே வெற்றியாக சேர்த்திருந்தார்.

வெறும் 1200 இலங்கை ரூபாக்களின் பெறுமதியில் உருவாக்கப்பட்ட அந்த குறிகாட்டி வெளிநாடுகளில் இருந்து வாங்கிய குறிகாட்டிகளின் தரத்தில் இருந்து எந்த குறைவும் இல்லாமல் இருப்பதை கண்டு தலைவர் வியந்தார் என்பது வரலாறு. உடனடியாக இவற்றை விடுதலைப்புலிகளின் படைக்கல உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய பணிக்கப்பட்டாலும், நெருங்கி வந்து கொண்டிருந்த இராணுவ முற்றுகையும், சண்டைக்களங்களும் அதற்கு நேரத்தை தராது போனது இந்த வெற்றியில் இருந்து ஒரு பாடத்தை அவர் எம்மிடையே விட்டு சென்றார். தோல்வி என்பது எமக்கு படிக்கல், எத்தனை முறை தோற்றாலும் அத்தனை முறையும் ஒருவன் எழுவான் எனில் அவன் தோற்றதாக வரலாறு இல்லை குறைந்த வளப்பரப்புக்குள் இருந்த எம்மால் இப்படியான குறிகாட்டிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது எனில் அதற்கு வசந்த் வாத்தியோட விடா முயற்சியும் கிடைத்த வளங்களை பயன்படுத்த தெரிந்த நுண்ணறிவும் என்றால் அது பொய்யில்லை. இத்தகைய ஒரு பெரு வீரன் தேசத்தில் எரிந்த எறிகணைகளின் துண்டுகளால் வீழ்ந்து தீப்பிழம்புகளின் வேகம் தாங்காது மண்ணுக்காக மடிந்து விட்டார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் தான் நேசித்த ஆசிரியத்துவத்தின் புனிதத்தை தொலைத்து உயிர்வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து சென்ற வேங்கை அவர். இதை அவரது இறுதி வார்த்தைகள் நிரூபணம் செய்கின்றன. இந்த வீர ஆசான் தனது இறுதி கணங்களுக்காக காத்திருக்கிறேன் என்பது தெரியாது தனது பொறுப்பின் கீழ் உள்ள படைக்கலங்களை ஒழுங்கு படுத்தல்களில் முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி மாலை கடந்து இரவு ஆகிகொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அவருடன் இருந்த சில போராளிகளுடன் இறுதிச் சண்டைக்கான ஆயுத வினியோகத்துக்கான தயார்படுத்தல்களில் சுத்திகரிப்பு, சீர்திருத்தம், களஞ்சியம், விநியோகம் என பல முனைப்புக்களில் இருந்த நேரம்.

பல் முனை தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவலங்கள் நிறைந்த பாதைகளில் உயிர் காக்க ஓடி கொண்டிருக்கிறார்கள். போராளிகள் தங்கள் தயார்படுத்தல்களில் மும்முரமாகி இருக்கிறார்கள். அப்போதும் அங்கே ஒரு இனத்துரோகம் அரங்கேறுகிறது. என்பது நடந்த சம்பவங்களின் துல்லியம் எமக்கு எடுத்துரைத்து நின்றது. அன்று இரவு சூழ்ந்த அந்த நேரத்தில் எங்கிருந்தோ எமது பாதுகாப்பரனை விட்டு வெளிவந்து வீதியில் ஏறிய இராணுவ அணி ஒன்று சரியாக இலக்கு வைத்து வசந்த் வாத்தியுடைய படைக்கல களஞ்சியத்தை நோக்கி தாக்குதலை தொடுக்கிறது. உடனடியாக தாக்குதலை முடித்து அந்த இடம் விட்டு போகிறது.

பகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் காலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த்தும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை

அடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த கட்டளை இடுகிறார். ஓடு, ஓடு வெளீல எல்லாரும் ஓடுங்கடா அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப் பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார்.

மாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியையே விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது.

இந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா? “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது…? அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன்.

போராளிகள் தடுக்க முடியாது அவரது வீர போராளிக்கான குணத்தை கண்டு விக்கித்து போய் நிற்கிறார்கள். எத்தனையோ சமர்க்களங்களில் தீய்க்கு தீயாக எரிந்த நாயகர் வரிசையில் தானும் சேர்வது தெரியாது கைத்துப்பாக்கியை பாதுகாக்க தீயின் நாக்குகளுக்கு போக்குக்காட்டி உள்ளே நுழைகிறார் எரிபொருள் மூண்டு எரிகிறது, வெடிபொருட்கள் வெடிக்கின்றன. சிந்தி கொழுந்து விட்டு எரிகிறது. வாகனங்கள் தீயின் நாக்குகளால் பொசுங்குகின்றன. உள்ளே ஓடிய புலியை பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது புலியணி. ஆனால் போனவர் மீண்டும் வரவில்லை… காத்திருப்பு அதிகாலை வரை தொடர்கிறது. ஆனால் தீயின் நாக்குகள் அடங்கவில்லை.

நடு இரவு கடந்து விடியலுக்கு நேரம் வரும் போது தீ அடங்கத் தொடங்கி எல்லாம் ஓய்வுக்கு வந்த போது அனைவரும் வசந்த் மாஸ்டரை தேடுகிறார்கள். வோக்கிகள் அனைத்தும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பெயரை உச்சரிக்கிறது. புலிகளின் அணிகள் தாம் தங்களது வசந்த் மாஸ்டரை இழந்து விட்டோம் என்பது தெரியாது தேடிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் கிடைக்காத அவரது தொடர்பு இவர்களை அந்த களஞ்சியத்தின் உட்பகுதிக்குள் தேட வைக்கிறது. தேடல் தொடர்ந்து உள்ளே சென்ற போது களஞ்சியத்தின் உள் பகுதியில் அவரது உடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. காலிலிருந்து இருந்து அரைவாசி வயிற்றுப் பகுதி வரை எரிந்து கிடந்தது புலியாசானின் வீர உடலம். தான் நேசித்த கைத்துப்பாக்கியை இறுக்க பற்றி கிடக்கிறது அவரது கரம். தான் நேசித்த விடுதலை போராட்டத்திற்காக தடையுடைக்கும் முது நிலை போராளியாக வாழ்ந்த வசந்த் நெருப்பின் நாக்குகளுள்ளுள் எரிந்து கிடக்கிறார். ஆனாலும் உடலத்தை துளைத்து கிடந்த எறிகணை துண்டுகள் அவரது வீரவுடல் தீயால் வீழவில்லை என்பதை எமக்கு காட்டி நின்றது.

அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றது நெருப்பு.

 

என்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை தலைவரிடம் குடுங்கள் என்று தன் கதை முடித்த சீலன் தடம் பதித்து நிமிர்ந்தவர்களில் ஒருவனாக எங்கள் வசந்த் மாஸ்டரும் தான் நேசித்த கைத்துப்பாக்கிகாக மூச்சை நிறுத்தி கொண்டார். தேச தலைவனின் தம்பியாக நேசத்துக்குரியவனாக வாழ்ந்து தேச விடுதலைக்காகவே தன்னை எதிரியின் எறிகணைக்குள் ஆகுதியாக்கி கேணல் குமரிநாடான் அல்லது வசந்த் என்று நிலையெடுத்து எங்கள் மனங்களை வென்று பதிந்து போய் கிடக்கிறார்

நினைவுப்பகிர்வு:- கவிமகன்.இ

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments