இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப் கேணல் செங்கோ அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம் .!

லெப் கேணல் செங்கோ அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம் .!

முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் 12-05-2009அன்று சிறிலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட நட்பின் உறைவிடமாகவிளங்கிய எனது ஆருயிர்ப்போராளி லெப் கேணல் செங்கோ அவர்களின் 10-வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 12-05-2019.

கடந்த 2016-ம்ஆண்டு காந்தள்மலருக்காக அவர்தொடர்பான நினைவுப்பகிர்வை எழுதியிருந்தேன். அவரது 10-வது ஆண்டு நினைவுநாளாகிய இன்று அந்த நினைவுப்பகிர்வை இங்கு மீள்பதிவிடுகின்றேன்.

நட்பின் உறைவிடம் லெப் கேணல் செங்கோ.

நிலையுடன் பெயர்: லெப் கேணல் செங்கோ.
இயற்பெயர்: மாசிலாமணி றிசிக்கேசன்.
நிலையான மாவட்டம்: யாழ்ப்பாணம்.
பிறப்பு: 24-03-1986.
வீரச்சாவு: 12-05-2009.
வீரச்சாவுச்சம்பவம்: முள்ளிவாய்க்கால்ப்பகுதியில் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில்.

எனது போராட்டகாலவாழ்க்கையில் என்னோடு நட்புக்கொண்டிருந்த போராளிகள் பலர் மாவீரர் பட்டியிலில் இடம்பெற்றுவிட்டார்கள். அதிலும் செங்கோவிற்கும் எனக்குமிடையிலான நட்பு என்பது தனிமனித பாசங்களிற்கு அப்பாற்பட்டது. அடக்கமான குணவியல்பு அமைதியான சுபாவம் போராளிக்கேயுரித்தான மிடுக்கான தோற்றம் எல்லாவற்றிற்கும்மேலாக மற்றவர்களைக்கவரும் செந்தளிப்பான முகம். இதுவே செங்கோவை அடையாளப்படுத்தும் சிறப்பம்சங்களாகும்.

யாழ்மாவட்டம்- காங்கேசன்துறைதான் செங்கோவின் பூர்வீக இடம். 1986-ம்ஆண்டு மார்ச்மாதம் 24-ம்நாளன்று திரு திருமதி மாசிலாமணி குடும்பத்தில் ஆறாவது பிள்ளையாக பிறந்த ஆண்பிள்ளைக்கு அப்பா மாசிலாமணி “றிசிக்கேசன்” என்று பெயரிட்டார். குடும்பத்தில் கடைக்குட்டி என்பதால் அம்மா அப்பா அக்காமார் அண்ணாமார் எல்லோருக்கும் றிசி செல்லப்பிளன்ளைதான். இவரின் மூத்தசகோதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து ஏ. கே. ரவி என்று அன்றையநாட்களில் போராளிகள் மத்தியில் அறியப்பட்டவர் 1990-ம்ஆண்டு வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். அந்தக்காலகட்டத்தில்த்தான் இவர்களது பூர்வீகஇடமான காங்கேசன்துறையும் அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட மக்களோடு மக்களாக இவர்களும் இடம்பெயர்ந்து மல்லாகத்தை வதிவிடமாகக்கொண்டு வாழ்ந்தார்கள். இந்த இரண்டு சம்பவங்களும் நடக்கும்போது றிசிக்கேசன் என்ற செங்கோவிற்கு வயது நான்கு ஆகும்.

இதன்பிற்பாடு றிசிக்கேசன் தனது பாடசாலைக்கல்விகளை யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற பாடசாலைகளில் கற்றிருந்தார். அவர் தான் எந்தெந்தப்பாடசாலைகளில் கல்வி கற்றிருந்தேன் என்பதை எனக்கு கூறியிருந்தார் ஆனாலும் அவை தற்போது எனக்கு நினைவில் இல்லை. அத்தோடு தான் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் முதன்மை வகித்திருந்ததை பெருமையோடு கூறியது நினைவிலுள்ளது.

அடுத்து செங்கோவின் பதிவை அவரது போராட்டவாழ்க்கைக்கு கொண்டுவருகின்றேன். 2002-ம்ஆண்டில் நோர்வே அரசின் அனுசரணையில் இலங்கைஅரசிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர்நிறுத்தம் அமுல்ப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த கலப்பகுதி. ஒப்பந்தத்திற்கு அமைவாக தமிழீழத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகள் அரசியல்ப்பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தனர். 2004-ம்ஆண்டின் முற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் கல்விப்பொதுத்தராதரப்பத்திர உயர்தரவகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த றிசிக்கேசன் அங்கு அரசியல்ப்பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அரசியல்ப்போராளிகளின் கருத்துக்களை உள்வாங்கியதோடு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் காலத்தின் தேவையையும் உணர்ந்த றிசிக்கேசன் தன்னை முழுமையாக விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ளும் முடிவை எடுத்தார். தேசிய அடையாள அட்டை கைவசம் இருந்ததால் அரசியல்ப்போராளிகளின் ஆதரவுடன் முகமாலை தடைமுகாம் கடந்து வன்னிக்கு வந்து தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்.

ஏற்கனவே 2001-ம்ஆண்டின் இறுதிப்பகுதியில் கடற்புலிகளுக்கான லெப் கேணல் இரும்பொறை ஆரம்ப இராணுவப்பயிற்சிக்கல்லூரிக்கான முதலாவது அணிக்கான பயில்சிகள் செம்மலைப்பகுதியில் நடைபெற்றுமுடிந்திருந்தன. அதையடுத்து இரண்டு ஆண்டுகள் கடந்தநிலையில் 2004-ம்ஆண்டின் முற்பகுதியில் இரும்பொறை பயிற்சிப்பாசறையின் இரண்டாவது அணிக்கான பயிற்சிகள் முல்லைத்தீவு-சிலாவத்தைப்பகுதியில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சிக்காக புதியபோராளிகள் அந்தப்பாசறைக்கு உள்வாங்கப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த புதியபோராளிகள் அணியில் றிசிக்கேசனும் இடம்பெற்றிருந்தார். அந்தப்பாசறைக்கு வந்ததும் தனது உறுப்பினர் பெயராக “செங்கோ” என்ற பெயரை தனதாக்கிக்கொண்டார். சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தப்பயிற்சிப்பாசறையில் ஒருபோராளி பெற்றிருக்கவேண்டிய அடிப்படை இராணுவஅறிவியல் தந்திரோபாயப்பயிற்சி மற்றும் சூட்டுப்பயிற்சி முதலான அனைத்து அடிப்படைப்பயிற்சிகளையும் மிகநேர்த்தியாக நிறைவுசெய்திருந்தார் செங்கோ.

இரும்பொறை பயிற்சிப்பாசறையின் இரண்டாவது பயிற்சி அணிக்கான பயிற்சிகள் நிறைவடைந்ததும் அந்த அணியிலிருந்து குறிப்பிட்ட ஒருதொகுதி போராளிகள் கடற்புலிகளின் சுலோஜன் நீரடிநீச்சல் பிரிவிற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். (பின்நாளில் 2008-ம்ஆண்டு இது கங்கையமரன் நீரடிநீச்சல் பிரிவாக பரிணாமம் பெற்றிருந்தது) அவ்வாறு உள்வாங்கப்பட்ட அணியில் செங்கோவும் இடம்பெற்றிருந்தார். குறிப்பிட்டகாலமாக மட்டுப்படுத்தப்பட்டளவில் செயற்பட்டுக்கொண்டிருந்த சுலோஜன் நீரடிநீச்சல்ப்பிரிவு குறித்த போராளிகளின் வருகையோடு புதுஉத்வேகம்பெற்றது. இவர்களுக்கு நீரடிநீச்சல்ப்பயிற்சி படகு செலுத்தும் பயிற்சி கனரக ஆயுதப்பயிற்சி மற்றும் வெளியிணைப்பு இயந்திரப்பொறியியல்க்கல்வி தொலைத்தொடர்புக்கல்வி என அனைத்து பயிற்சிகளும் இவர்களுக்கு நேர்த்தியாக வழங்கப்பட்டன. இவை அனைத்திலும் செங்கோ சிறந்தமுறையில் தேர்ச்சிபெற்றிருந்தார்.

2005-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதம் 22-ம்திகதி இவர்களது குறித்தமுகாமிற்கு நான் மருத்துவப்போராளியாக பொறுப்பேற்றுச்சென்றிருந்தேன். நான் கடமைக்குச்சென்ற அன்றையதினமே செங்கோவை சந்தித்திருந்தேன். அவரது அடக்கமான குணவியல்பும் சகபோராளிகளை மதித்துநடந்துகொள்ளும் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே அவர்மீது நான் அளவுகடந்த அன்பும் மதிப்பும் வைப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அந்த முகாமிலுள்ள போராளிகளும் பொறுப்பாளர்களும் செங்கோவில் நன்மதிப்பு வைத்திருந்தார்கள். விடுதலைப்புலிகள்அமைப்பில் விசேட அணிகளுக்கென விசேடஉணவுபட்ஜற் வழங்கப்படுவது வழக்கம். எனவே சுலோஜன் நிரடிநீச்சல்பிரிவிற்கும் விசேடஉணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. செங்கோவிற்கு மேலதிகபணியாக அந்தமுகாமின் ஸ்ரோர்பொறுப்பும் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு ஒவ்வொருநாளும் நீச்சல்ப்பயிற்சி படகு செலுத்தும்பயிற்சி கடற்சூட்டுப்பயிற்சி மற்றும் தரைச்சூட்டுப்பயிற்சி என்பனவும் ஏனையவகுப்புக்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சிமுடிந்து களைப்புடன் வரும் போராளிகளுக்கு சோடா கோடியல்யூஸ் மற்றும் கன்டோஸ் என்பவற்றை பகிர்ந்து வழங்குவதில் அந்தமுகாமில் செங்கோவிற்கு நிகர் வேறுயாருமில்லை என்றால் அது மிகையாகாது. ஏனையபோராளிகள் செங்கோவுடன் முகம் சுழித்ததை நான் என்றைக்கும் பார்த்ததில்லை. அந்தவிடயங்களில் செங்கோ என்னையும் கவனிக்கத்தவறியதில்லை. எனது மருத்துவஅறையில் எந்தநாளும் எனக்கு பிடித்தமான நெக்ரோசோடாவிற்குக்குறைவில்லை.

நான்காம்கட்ட ஈழப்போரின்போது சுலோஜன் நீரடி நீச்சல்ப்பிரிவு கடற்புலிகளின் முதன்மையான கடல் நடவடிக்கைகளிலும் கடற்சமர்களிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிதாக உள்வாங்கப்பட்ட போராளிகளைக்கொண்ட இந்த அணியின் முதலாவது கன்னித்தாக்குதலாக 23-12-2005அன்று மன்னார்-பள்ளிமுனைக்கடற்பரப்பில் ரோந்துசென்ற சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலேயாகும். இதில் மூன்று கடற்படையினர் பலியாகியதுடன் அவர்களது சடலங்களும் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டன. கடற்புலிகள் தரப்பில் எதுவிதமான சேதமுமின்றி இந்த கன்னித்தாக்குதல் வெற்றித்தாக்குதலாக பதிவாகியது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் செங்கோ பங்கெடுத்தாரா என்பது எனக்கு நினைவில்லை. ஆனால் அதற்கு அடுத்துவந்த கணிசமான அனைத்து நடவடிக்கைகளிலும் செங்கோ பங்கெடுத்திருந்தார்.

2006-ம்ஆண்டு பெப்ரவரிமாதத்தில் சுலோஜன் நீரடி நீச்சல்ப்பிரிவிற்கு மற்றுமொரு முதன்மையானபணி சிறப்புத்தளபதி சூசைஅவர்களால் வழங்கப்பட்டது. அதாவது வன்னிக்கும் கிழக்கு மாகாணத்திற்குமான கடல்வழி போக்குவரத்து நடவடிக்கையாகும். அன்றையநாட்களில் இதுமிகவும் சவால் நிறைந்தவையாக அமைந்திருந்தது. பலசந்தர்ப்பங்களில் சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்ச்சமர்புரிந்துதான் இந்தநடவடிக்கையை மேற்கொள்ளவேண்டியிருந்தது. இந்தநடவடிக்கைகளிலும் செங்கோ குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார். மேலும் இதேகாலப்பகுதியில் இந்த அணியினருக்கு சூடைப்படகுத்தொகுதி வழங்கப்பட்டிருந்தது. இதில் ஒருபடகின் தொலைத்தொடர்பாளராக செங்கோ கடமையாற்றியிருந்தார். குறிப்பாக 11-05-2006அன்று வெற்றிலைக்கேணிக்கடற்பரப்பில் இடம்பெற்ற இரண்டு டோறா மூழ்கடிப்புத்தாக்குதலிலும் 16-06-2006அன்று மன்னார்-பேசாலைக்கடற்பரப்பில் ரோந்துசென்ற சிறிலங்கா கடற்படையினரை வழிமறித்து புளுஸ்ரார்வகைப்படகுகளில் சென்ற கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் கடற்படையினரின் மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன் பத்தொன்பது கடற்படையினர் பலியாகினர். இந்த வெற்றித்தாக்குதலிலும் செங்கோ முதன்மையான பங்கு வகித்திருந்தார்.

2006-ம்ஆண்டின் பிற்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வளமும் பலமும் சேர்க்கும் முதன்மைப்பணியான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைப்பணி சுலோஜன் நீரடிநீச்சற்பிரிவான குறித்த இந்த விசேடஅணிக்கு வழங்கப்படுகிறது. அன்றையநாட்களில் இந்தப்பணி மன்னார்-கொக்கப்படையான் என்ற இடத்தை தளமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்தப்பணியை பொறுப்பேற்று குறித்த அணி மன்னாருக்கு நகர்ந்ததும் நானும் கடமைமாற்றம்பெற்று புதுக்குடியிருப்பை தளமாகக்கொண்டு சிறப்புத்தளபதி சூசைஅவர்களின் பிரத்தியேகபணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தேன். ஆழ்கடல் விநியோக நடவடிக்கையென்பது மூன்றுவிதமான சவால்களுக்கு முகம்கொடுத்துத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அதாவது இலங்கைக்கடற்படைக்கு சவால்கட்டவேண்டும். இந்தியக்கடற்படைக்கு சவால்கட்டவேண்டும். அடுத்து இயற்கைக்கு சவால்கட்டவேண்டும். இயற்கையென்பது காற்று கடல்நீரோட்டம் கடற்கொந்தளிப்பு என்பனவாகும். இந்த மூன்று விடயங்களும் எமக்கு சாதகமாக அமையும்போதுதான் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும். ஒருவிடயம் பிசகினாலும் நடவடிக்கை மேற்கொள்ளமுடியாது. இத்தகைய பல சவால்நிறைந்த கடல் நடவடிக்கைகளிலும் செங்கோ நேரடியாகப்பங்கெடுத்திருந்தார். 2006-ம்ஆண்டு டிசெம்பர்மாதத்தில் இந்த நடவடிக்கையொன்றின்போது செங்கோ விழுப்புண்ணடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகீச்சைகள்பெற்று குணமடைந்ததும் புதிதாகப்பயிற்சி முடித்த போராளிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் லெப் கேணல் சேரமான் விசேட அணிக்கு செங்கோ நிர்வாகப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு மாதங்களாக அந்தப்பொறுப்பை மிகவும் பொறுப்புணர்வுடன் செயலாற்றிய செங்கோ 2007-ம்ஆண்டு மார்ச்மாதத்தில் சிறப்புத்தளபதி சூசைஅவர்களின் பணிப்பிற்கமைவாக கனரக ஆயுதப்பயிற்சி பெறுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் கனரக ஆயுதப்பயிற்சிக்கல்லூரிப்பொறுப்பாளர் வீரப்பன்மாஸ்ரரிடம் சென்றார். விடுதலைப்புலிகள் அமைப்பின் விசேட பயிற்சிக்கல்லூரியான பசுமைக்குச்சென்ற செங்கோ அங்கு பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சிகள் அனைத்திலும் மிகவும் திறமையானமுறையில் தேர்ச்சிபெற்று வீரப்பன்மாஸ்ரரின் நன்மதிப்பைப்பெற்றார்.

முதற்கட்டப்பயிற்சிகள் நிறைவடைந்தும் 02-06-2007அன்று செங்கோ உள்ளிட்ட அந்தப்பயிற்சி அணிப்போராளிகளுக்கு ஒருவார விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. விடுமுறையைக்கழிப்பதற்காக செங்கோ புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த எனது முகாமிற்கே வந்தார். தனக்கு வழங்கப்பட்டிருந்த ஒருவார விடுமுறையை என்னுடனேயே கழித்தார். இந்தக்காலப்பகுதியில் அவர் சிறப்புத்தளபதி சூசைஅவர்களை சந்திக்கவிரும்பினார். நான் திரு சூசைஅவர்களிடம் செங்கோ விடுமுறையில் வந்து எனது முகாமில் நிற்பதையும் அவர் தங்களை சந்திக்க விரும்புவதாகவும் சிறப்புத்தளபதியிடம் கூறியிருந்தேன். அதற்கமைவாக சந்திப்பிற்கு நேரம் குறிக்கப்பட்டு அதன்படி செங்கோ சிறப்புத்தளபதி அவர்களை சந்தித்து அவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி சந்திப்பு முடித்து மிகவும் மகிழ்ச்சியுடன் வந்தார். குறித்த ஒருவார விடுமுறையும் நிறைவடைய கடமையும் தேவையும் செங்கோவை மீண்டும் பசுமை முகாமிற்கு அழைத்தது. 11-06-2007அன்று மீண்டும் பசுமைக்குச்சென்ற செங்கோ மேலதிக கனரக ஆயுதப்பயிற்சி போர்ப்பயிற்சி மற்றும் தந்திரோபாயப்பயிற்சி என பல மாதங்களாக தொடர்ந்த பயிற்சிகள் அனைத்திலுமே செங்கோ சிறப்பாக தேர்ச்சிபெற்றிருந்தார். இவரது திறமைகள ஆளுமைகள் அனைத்தையுமே இனம்கண்டுகொண்ட வீரப்பன்மாஸ்ரர் இவரை ஒரு பயிற்சிஆசிரியர் நிலைக்கு வளர்த்துவிடுகின்றார்.

2008-ம்ஆண்டு முற்பகுதிகளில் கடற்புலிகளின் வளர்ச்சியில் மற்றுமோர் பரிணாமவளர்ச்சியாக லெப் கேணல் சேரன் ஈரூடகத்தாக்குதலணி தோற்றம்பெற்றது. இந்த அணிக்கான விசேடபயிற்சிகள் முழங்காவில்ப்பகுதியில் வைத்து வீரப்பன்மாஸ்ரரால் அனுப்பிவைக்கப்பட்ட பயிற்சிஆசிரியர்களால் வழங்கப்பட்டது. அதையடுத்து குறித்த அணி கடற்பயிற்சிகளுக்காக வெற்றிலைக்கேணிப்பகுதிக்கு நகர்த்தப்பட்டது. கடற்பயிற்சிகளை வழங்குவதற்காக வீரப்பன்மாஸ்ரர் செங்கோவை அனுப்பிவைத்திருந்தார். குறித்த ஈரூடகஅணியில் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் உள்ளடங்கியிருந்தனர். அனைவருக்குமே செங்கோ பயிற்சசி வழங்கும்போது மிகவும் கண்ணியமானமுறையில் பயிற்சிகளை வழங்கினார். அந்த அணிப்போராளிகளுக்கான கடற்பயிற்சிகளை மிகவும் சிறந்தமுறையில் வழங்கி போராளிகளின் நன்மதிப்பைப்பெற்றார். இந்தக்காலப்பகுதிகளில் எனது பணியும் செங்கோவின் பணியும் இருவேறு தளங்களில் அமைந்திருந்ததால் நாமிருவரும் நேரில் சந்தித்துக்கொள்வது மிகவும் அரிதாகவேயிருந்தது. இரண்டு அல்லது மூன்று சந்தர்ப்பங்களில் பணிநிமிர்த்தமாக புதுக்குடியிருப்புக்கு வந்த செங்கோ ஒரு சிறிய இடைவெளியாவது எடுத்து எனது முகாமிற்கு வந்து என்னை சந்தித்துச்செல்வதற்கு தவறியதில்லை. அத்தோடு சிலதடவைகள் கடிதப்பரிமாற்றங்களை வேறு போராளிகளுக்கு ஊடாக மேற்கொண்டிருந்தோம்.

2008-ம்ஆண்டு மே மற்றும் யூன்மாதங்களில் யாழ்-சிறுத்தீவு மற்றும் மன்னார்-எருக்கலம்பிட்டி படைமுகாம்கள்மீதான வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்த சேரன் ஈரூடகத்தாக்குதலணி தேவிபுரத்திற்கு நகர்த்தப்பட்டு அங்கு ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த கடற்புலிகளின் முகாம் ஒன்றை தளமாகக்கொண்டு செயற்படலானார்கள். இதையடுத்து இவர்களுக்கான மேலதிகமான பயிற்சிகளை வழங்குவதற்காக முன்னர் பயிற்சி கொடுத்த ஆசிரியர்களும் இங்கு வந்திருந்தனர். இந்த ஆசிரியர்அணியில் செங்கோ மீண்டும் ஈரூடகஅணிக்கு வந்திருந்தார். இந்தக்காலப்பகுதியில் எனது முகாம் கைவேலிப்பகுதியில் அமைந்திருந்தது. புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் வீதியால் வருகின்றபோது முதல்வருவது கைவேலி. அடுத்துவருவது தேவிபுரம். பணிநிமிர்த்தமாகவும் தனிப்பட்டமுறையில் செங்கோவை சந்திப்பதற்காகவும் நான் அவர்களது முகாமிற்கு அடிக்கடி சென்றுவருவது வழக்கம். செங்கோவும் எனது முகாமிற்கு நேரம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் வந்துசெல்வார். எங்களிருவரின் நட்புப்பிணைப்பு என்பது மிகவும் ஆழமானது. அதை வார்த்தைகளில் வடிப்பது என்பது கடினம். 2008-ம்ஆண்டின் இறுதிப்பகுதிகளில் வன்னியில் யுத்தம் தீவிரம்பெற்று பலமுனைகளிலும் களமுனைகள் திறக்கப்பட்டதால் செங்கோவை களமுனைகள் அழைத்தன. கிளிநொச்சி-குஞ்சுப்பரந்தன் களமுனை மற்றும் முல்லைத்தீவு-அளம்பில் களமுனை ஆகியவற்றில் செங்கோவின் பங்கு காத்திரமானது.

2009-ம்ஆண்டு ஜனவரிமாதத்தில் யாழ்மாவட்டத்தையும் முல்லைமாவட்டத்தையும் கரையோரமாகப்பிரிக்கும் சுண்டிக்குளம்-நல்லதண்ணீர்த்தொடுவாய்வரைக்கும் அரசபடையினர் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே நல்லதண்ணீர்த்தொடுவாயை அடுத்துவரும் பேப்பாரைப்பிட்டி என்னும் பகுதியில் விடுதலைப்புலிகள் பலமான முன்னணிக்காவல்நிலை அமைத்திருந்தார்கள். இந்தக்காவல்நிலைக்கு பகுதிப்பொறுப்பாளர்களாக கடற்புலிகளின் கட்டளைத்தளபதிகளான குகன் (காதர்) விநாயகம் பகலவன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னணிப்படையணிகளின் தளபதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்போது இந்த அணியில்த்தான் செங்கோவும் இடம்பெற்றிருந்தார். 04-02-2009அன்று நல்லதண்ணீர்த்தொடுவாய்ப்பகுதியில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் யுத்தடாங்கிகள் பல்குழல்எறிகணைகள் சகிதம் பேப்பாரைப்பிட்டியை நோக்கி பாரிய முன்னேற்றநடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் படையணிகள் கடும் எதிர்ச்சமர் புரிந்தனர். இந்த எதிர்ச்சமர் நடவடிக்கையின்போது கடற்புலிகளின் கட்டளைத்தளபதிகளான கேணல் குகன் (காதர்) லெப் கேணல் விநாயகம் லெப் கேணல் பகலவன் ஆகியோருடன் இன்னும்பலபோராளிகள் வீரச்சாவடைந்தனர். மேலும்பல போராளிகள் விழுப்புண்ணடைந்தனர். இதையடுத்து அரசபடையினர் பேப்பாரைப்பிட்டியையும் ஆக்கிரமித்து சாலைத்தொடுவாய்வரையிலும் முன்னேறியிருந்தனர். இந்தச்சம்பவத்தில் செங்கோவும் உடலில் கடுமையான விழுப்புண்ணடைந்தார். அவரது வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தாடைப்பகுதியும் நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நுரையீரல்ப்பகுதியும் பாதிக்கப்பட்டிருந்தது. விழுப்புண்ணடைந்திருந்த செங்கோ புதுக்குடியிருப்பு-பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசகீச்சைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் வேறு உபமருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு அங்கும் விசேடமான மருத்துவக்கண்காணிப்பிலிருந்து பின்னர் குறிப்பிட்டநாட்கள் முழுமையான ஓய்வு வழங்கப்பட்டது. அதன்பின்னர் 2009-ம்ஆண்டு ஏப்ரல்மாதமளவில் அவர் ஓரளவிற்கு கடமைகள் செய்யக்கூடியநிலைக்கு தேறியிருந்தார். இந்தநிலையில் சிறப்புத்தளபதி சூசைஅவர்கள் செங்கோவை தனது பாதுகாப்புஅணியில் உள்வாங்கியிருந்தார். இதையடுத்து செங்கோ சிறப்புத்தளபதிஅவர்களின் பிரத்தியேகப்பணிகள் மற்றும் அவரது பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

2009-ம்ஆண்டு மேமாதத்தின் முற்பகுதி. வன்னியில் அனைத்துப்பிரதேசங்களுமே அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் என்ற அந்தச்சிறிய நிலப்பரப்பிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பும் மூன்றுலட்சத்திற்கும்மேற்பட்ட பொதுமக்களும் முடக்கப்பட்டிருந்தோம். இந்தநாட்களில் அனேகமான பொழுதுகளை செங்கோவும் நானும் ஒன்றாகவே கழித்தோம். படையினரின் எறிகணைவீச்சுக்கள் சரமாரியாக மேற்கொள்ளப்படுகின்றபோது பலசந்தர்ப்பங்களில் என்னை பாதுகாத்தார். 12-05-2009அன்று காலையிலேயே படையினர் எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். அன்றையதினம் காலை9.00மணியளவில் நான் காயமடைந்து இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு பிரதான மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தேன். அன்யைதினம் இரவுதான் மருத்துவமனையிலிருந்த எனக்கு அந்த இடிவிழுந்த செயதி கிடைத்தது. “செங்கோ வீரச்சாவாம்.” நம்புவதற்கு மனம் மறுத்தது. ஆனால் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட தகவல். நம்பித்தான் ஆகவேண்டும். மறுநாள் சிறியகாயக்காரரை மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதித்திருந்தார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளாம்முள்ளிவாய்க்கால்ப்பகுதியில் குறித்த ஓரிடத்தில் விழுப்புண்ணடைந்த எமது பிரிவுப்போராளிகள் பலர் மருத்துவப்போராளி ஒருவரின் கண்காணிப்பில் இருந்தார்கள். அங்குதான் சிறப்புத்தளபதி சூசைஅவர்களின் பாதுகாப்புஅணியில் கடமையாற்றிய மற்றுமோர் போராளியான சுடர்மன்னனை சந்தித்தேன். அவரிடம்தான் நடந்த விடயத்தைக்கேட்டேன். “படையினரின் சரமாரியான எறிகணைத்தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிறப்புத்தளபதி சூசைஅவர்களை பாதுகாப்புக்கருதி வேறு இடத்திற்கு கூட்டிச்சென்றபோது அந்தச்சந்தர்ப்பத்தில் படையினரால் ஏவப்பட்ட எறிகணையின் சிதறல்த்துண்டு செங்கோவின் மார்புப்பகுதியைத்துளைத்ததால் அந்த இடத்திலேயே செங்கோ வீரச்சாவடைந்துவிட்டார்.” என்று விளக்கமாகக்கூறிய சுடர்மன்னன் “அவரது வித்துடலும் அன்றையதினம் வீரச்சாவடைந்த ஏனையபோராளிகளின் வித்துடல்களும் வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கப்பல்வீதிக்கு அண்மையில் அமைந்திருந்த தற்காலிக மாவீரர் துயிலுமில்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.” என்றும் கூறினார். குறித்த அந்த இடங்களையெல்லாம் 12-05-2009அன்றையதினம் இரவு படையினர் ஆக்கிரமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனது வாழ்க்கையில் செங்கோவின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பாகத்தான் எனக்கு அமைந்திருந்தது. நட்பின் உறைவிடமான எனது பாசத்திற்குரிய செங்கோ உள்ளிட்ட தாயகவிடுதலை வேள்வியில் விதையாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் ஆத்மாக்கள் சத்தியத்தின் சாட்சியாகநின்று வழிகாட்ட காலம் இட்ட கட்டளைப்படி வரலாறுவிட்டவழியில் எமது தமிழீழ தேசிய விடுதலைப்பயணத்தை தொடர்வோமாக…..
நன்றி.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”
நினைவுப்பகிர்வு:
“கொற்றவன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments