இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள் லெப். கேணல் சாள்ஸ்

லெப். கேணல் சாள்ஸ்

ஓயாத அலைகளில் எழுதிய காவியம்

அன்றொரு காலம்; சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது; நிற்கமுடியாது.

சண்டைகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கும்இ அவற்றில் பொருத்தப்பட்டிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்கஇ எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால்; தூரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்து விட வேண்டும்; வேறு வழியில்லை. எங்கள் படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன் – கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுது போக்காகவும் இருந்தது.

ஆனால் இன்று, அந்தநிலை மாறி நேர்மாறாக மெல்ல மெல்ல மாறிவந்துவிட்டது.

தரையைப் போல கடலிலும் சிங்களப் படையைத் துரத்தித் தாக்கி அழிக்கலாம் எனச் சொல்லித்தந்தவனும்இ முதன் முதலாக மட்டுமல்ல, தொடராகவும் அதனைச் செய்து காட்டியவன் தான் சாள்ஸ்.

1991 இன் இறுதியில் அது ஆரம்பித்தது.

நயினாதீவிலிருந்து ஊர்காவற்துறைக்கு கடல்ரோந்து புரிகின்ற நேவிப் படகுகளை வழிமறித்துத் தாக்க சாள்ஸ் முடிவெடுத்தான்.

தளபதி கங்கை அமரனின் துணையோடு றெக்கி பார்த்து, தாக்குதல் திட்டம் வகுத்து, தாக்குதல் குழுக்களை ஒழுங்குபடுத்தி, ஆயுதங்களோடு படகுகளைத் தயார் செய்து, தானே கொமாண்டராகி வியூகம் அமைத்து நின்று அந்தக் கடற்சண்டையை வழிநடாத்தினான் சாள்ஸ்.

கனன் பீரங்கிகள், பிப்ரிகலிபருக்கும் மிகையான கனரகத் துப்பாக்கிகளுடன், அதிவேக ஓட்டம் கொண்ட நேவியின் சண்டைப் படகுகளை பிப்ரி, ஜி.பி.எம் ஜியுடன், சாதாரண ரைபிள்களை மட்டுமே கொண்ட எங்களது மீன்பிடிப் படகுகள் துரத்தித் தாக்கின.

சிங்களக் கடற்படையை புலிகளின் படகுகள் கலைத்து விரட்டிய முதல் வரலாறு அது.

எதிரியின் போர்ப்படகொன்று மூழ்கடிக்கப்பட்டதுடன், எல்.எம்.ஜி. ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் – இழப்போதுமில்லை எங்களுக்கு.

இதற்கு முன்னர், நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானிற்கும் இடையிலுள்ள கடலில் சாள்ஸ் நடத்திய ஒரு கண்ணிவெடித் தாக்குதல் குறிப்பிடத்தக்கது.

இரவு முழுவதும் ஆழ்கடலுக்குள் இறங்கி நின்று, அலைகளின் நடுவில் அவன் கண்ணிவெடியை விதைத்துவிட்டுவர மறுநாள் காலை அதில் சிக்கிய எதிரியின் படகொன்றை அலைகள் விழுங்கிக் கொண்டன என்பதுடன், சிங்களக் கடற்படையின் பிராந்தியத் தளபதி கொமடோர் அமரவீர படுகாயமடைந்தார் என்பதும் 7 படையினர் கொல்லப்பட்டதும் முக்கியமானது. உடைந்த படகையும், ஆயுதங்களையும் கடலுக்கடியில் இருந்து மீட்ட பின்னர் தான், சாள்ஸ் அடுத்த வேலைக்குப் போனான்.

1992 இன் துவக்கத்தில் தாளையடிக் கடலில், எதிரியின் ‘சவட்டன்’ விசைப்படகு மீது தானே கொமாண்டராக நின்று ஒரு பகற்பொழுதுத் தாக்குதலை நடாத்தினான் சாள்ஸ். எங்களது நான்கு வீரர்களை நாம் இழந்ததுடன் அவனுக்கும் காலில் காயம் ஏற்பட்ட அந்தச் சண்டை.

ஆனையிறவுக் கடல்நீரேரியில் எதிரியின் நீரூந்து விசைப்படகொள்றை மூழ்கடித்து பிப்ரி உட்பட ஆயதங்களையும் கைப்பற்றிய கடற்கண்ணித் தாக்குதல் –

அதே நீரேரியில் எதிரியின் ரோந்துப் படகுத் தொடரைத் தாக்கி, பல ஆயுதங்களைக் கைப்பற்றிய இன்னொரு சண்டை.

மாதகல் கடற்பிரதேசத்தில் விசைப்படகொன்றை மூழ்கடித்த மற்றொரு கண்ணிவெடித்தாக்குதல் –

பூநகரி கல்முனைக்கருகே உள்ள மான்தீவில், சிங்களப் படையின் கரையோரக் காவலரணைத் தகர்த்து, றைபிள்களோடு எதிரியின் சடலங்களையும் எடுத்துவந்த அதிரடித் தாக்குதல் –

இவ்வாறாக கடற்புலிகளின் கடற்சண்டைத் திறன் வளர்ந்த ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னாலும் இருந்த உந்து விசை அவன்.

அவனிடம் ஒப்படைக்கப்படுவது என்ன வேலையாகத்தான் இருந்தாலும், அந்த வேலையோடு தன்னையே கலந்து செய்து முடிக்கும் தன்மை அவனுடையது. களைப்பில்லாத, சலிப்பில்லாத, ஊக்கம் நிறைந்த, உற்சாகமான மனது அவனுடையது.

வெற்றிகரமான கடற்சண்டைகளின் முன்னோடித் தளபதி மட்டுமல்ல, அவனொரு சிறந்த தொழில்நுட்பவியலாளனுமாவான். வேலையில்லாத வேளையில்லாதவன் அவன். ஓய்வுக்கு ஓய்வு கொடுத்திருந்த அந்த உழைப்பாளிஇ ஓய்வு நேரங்களில் மூளைக்கு வேலை கொடுத்து எதையாவது ஆய்வு செய்துகொண்டிருப்பான்.

கைவசம் உள்ள வளங்களைக் கொண்டு புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்றோ, அல்லது கஸ்டப்பட்டு சிரமத்துடன் நாம் செய்கின்ற வேலைகளை இலகுவாகவும் வேகமாகவும் செய்து முடிக்கக்கூடிய வழிகளைப் பற்றியோ, அல்லது இப்படியான ஏதோ ஒரு விடயத்தைப் பற்றியோதான், அவனது ‘ரெக்னிக்கல் மூளை’ எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

“முயற்சி செய்து பார்த்துவிட்டோ அல்லது முயற்சி செய்து பாராமலேயோ ஏதோ ஒரு சாட்டுச் சொல்லிக் கொண்டுஇ ‘இது சாத்தியப்படாது’ என்று நாங்கள் ஒதுக்கி வைத்துவிடுகின்ற வேலைகளை தானாகவே பொறுப்பெடுத்து, வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவான் அந்தப் பொறியியலாளன்” என்றான். ஒரு கடற்புலித் தோழன்.

கடற்புலிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாள்சின் அறிவாற்றலும் ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. வோக்கி கதைக்க ‘குறொஸ்’ செய்ய வேண்டுமென்றாலும் சரி, ‘கொம்யூனிக்கேசன் செற்’றுக்கு தேவையான உதிரிப்பாகம் என்றாலும் சரி, என்னவாகத்தான் இருந்தாலும் ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று எதிர்பார்க்காமல், உள்ளூரில் கிடைக்கக் கூடியவற்றைக் கொண்டே செய்து முடித்து விடுவது தான்இ மற்றைய தொழில்நுட்பவியலாளளருக்கும் அவனுக்கும் இடையிலான வேறுபாடு.

கடற்புலி வீரர்களுக்கான படகுப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தான், அந்தச் சிறந்த படகோட்டுனன். புயலுக்கும் சூறாவளிக்கும் இடையில், ஆர்ப்பரித்தெழும் கடல் அலைகளுக்கு நடுவில் படகை மிக நீண்ட தூரத்திற்குச் செலுத்தக் கூடியதான பயிற்சியை அளித்து, பெண்புலிகள் உட்பட திறமையான ஓட்டிகளை சாள்ஸ் உருவாக்கித் தந்தான். இப்போது அவன் இல்லை; ஆனால், அந்தப் பட்டறை இனி எப்போதும் புதியவர்களைத் தயார் செய்து கொண்டே இருக்கும் அவனது நினைவோடு.

சண்டை முனைகளில் நிகழும் போர்ச் சூழ்நிலைகளினால் தடங்கள்கள் ஏற்பட்டு, எமக்கு உணவு வராமல் விட்டுவிடுவது அடிக்கடி நடக்கும் ஒரு விடயம். ஆனால், சாள்சுடன் நின்று களங்களில் சமரிட்ட தோழர்கள் சாப்பாட்டுக்காக காவல் இருந்த நாட்கள் குறைவு. உடனடியாகவே அடுப்பில் சட்டியையோ வாளியையோ வைத்துஇ எட்டியவற்றைக் கொண்டு சுவையாகக் கறி சமைத்துத் தோழர்களுக்கக் கொடுத்துவிடுவான்; அந்த அட்டகாசமான சமையல்காரன். அவன் தயாரிக்கும் கோழி சூப் இயக்கத்தில் பிரபலமானது. தலைவரிடமே பாராட்டுப் பெற்றது. சாள்ஸின் சூப் பருகவென்று நண்பர்கள் தேடிவந்த நாட்கள் கூட உண்டு. எம்மைப் பிரிவதற்கு சில நாட்களுக்கு முன் கூட மூர்த்தி மாஸ்டர் வீட்டில் கோழி சூப் விருந்து படைத்துவிட்டுத்தான் அவன் போனான். அவன் ஆக்கித் தந்த சுவைகள் அவனது நினைவைத் தந்துகொண்டே இருக்கின்றன.

தோழர்களில் அவன் கொண்டிருந்த அன்பும் பாசமும் அலாதியானது. மற்றெல்லோரையும் விட வித்தியாசமான விதத்தில் பழகுகின்ற இவன்; எல்லாப் போராளிகளாலும் கவரப்பட்டு அவர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிலைத்துவிட்ட ஓர் உற்ற நண்பன்.

கிளாலியிலிருந்து வேலையாக வந்து எங்காவது நிற்கும் போது கோவில் திருவிழா பார்க்க நண்பன் அழைத்தால், “பொடியளை விட்டிட்டு வந்திட்டன்; நான் வரேல்லை” என்று போக மறுக்கும் சாள்ஸ், என்ன நிகழ்ச்சி பார்ப்பதற்கென்றாலும் அது சரியோ தவறோ தன்னோடு நிற்கும் போராளிகள் எல்லோரையும் அழைத்துச் செல்லாமல் ஒரு நாள் கூட போயிருக்காத உயிர்த்தோழன்.

“எந்த மாவட்டத்திற்குப் போனாலும், அங்கு நிற்கும் யாராவது ஒரு போராளி வந்து, ‘சாள்ஸ் அண்னையிட்ட சுகம் கேட்டதென்று சொல்லுங்கோ’ என்பான்” என்று கொன்னார் பிருந்தன். அந்தளவுக்கு வியாபித்திருந்தது அவன் நட்பு.

தவறிழைக்கும் போராளிகளைத் தண்டிக்கும் போது அரவணைத்து, அன்பாகப் பேசி பிழைகளைத் தெளிவுபடுத்தும் விதம், அவனில் வேறுபட்ட ஒன்றாகவே கண்டோம்.

வகுப்பு எடுக்கும் போழுது பகடியாகவும் செல்லமாகவும் கதைத்து தான் சொல்வதை அவர்கள் மனவிருப்போடு கேட்டுப் படிக்கக் கூடியதாக விளங்கப்படுத்திக் கற்பிப்பது, அவனுடைய பாணி. தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விடும் தன்மை அவனுடையது. கடலிலும், தரையிலும் தான் பெற்ற அனுபவங்கள், பட்ட துயரங்கள், திறமையான செயற்பாடுகள் என எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பான். “புத்தகத்தில படித்த அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அனுபவம் மூலம் படிக்க நிறைய இருக்கு. அனுபவம் பலதரப்பட்ட பாடங்களையும் எங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரு வழிகாட்டி” என்று சொல்லிஇ தான் வளர்ந்ததைப் போலவே பட்டறிவு மூலம் போராளிகளை வளர்க்கும் வழிமுறை அவனுடையது.

ஒவ்வொரு கடற்சண்டையின் முடிவிலும், அந்தக் களநிகழ்ச்சிகளின் போக்குகளை ஆழமாக நோக்கி, சரி பிழைகளை ஆராய்ந்து, அந்தப் பட்டறிவுகளின் அடிப்படையில் அடுத்த சண்டையை நெறிப்படுத்துகின்ற அவன், ஓர் அனுபவசாலியான படைத் தளபதி. எப்போதும் தானே நேரடியாகக் கடலில் இறங்கி, சண்டைகளை வழிநடாத்தி வீரர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது அவனுடைய பாணி. சிரிப்பூட்டும் பகடிகளாலும், பம்பல்களாலும் எங்களை இன்பத்திலாழ்த்தும் அவனுடைய கதைகள், ஒரு தனித்துவமான கலாரசனை. எப்போதும் கலகலப்பாக, மகிழ்ச்சியாக பொழுதுகள் அவனோடு கழியும்.

போராட்டத்தைப் பற்றியும்இ இயக்கத்தைப் பற்றியும், தலைவரைப்பற்றியும் சொல்லிச் சொல்லி எப்போதும் எங்களை உற்சாகத்தோடு வைத்திருப்பான் சாள்ஸ்.

என்றுமே மறக்கமுடியாத பசுமையான நினைவுகள் அவனுடையவை. இன்று எங்களோடு அவன் இல்லை. ஆனால், எல்லோருக்குள்ளும் அவன் நிறைந்திருக்கின்றான்;.

சமர் முனைகளில் சண்டைகளை வழிநடாத்திக் கொண்டிருக்கும் அந்தத் தளபதி, மக்களை எங்களோடு இணைப்பதற்கு ஆற்ற வேண்டிய பணிகளைப்பற்றியும் சிந்திப்பான். ஒவ்வொரு தாக்குதலையும் தனியே இராணுவ வெற்றியாக மட்டும் வைத்துக் கொண்டிராமல் மக்களைத் தாயகப் பணிக்குள் உள்வாங்கும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும் அவ்வெற்றிகளைப் பயன்படுத்தினான். ஆனையிறவு கடல்நீரேரியில் கண்ணிவெடியில் உடைந்து பயனற்ற விதத்தில் கடலுக்குள் மூழ்கிய நீரூந்து விசைப்படகைக்கூட இரவிரவாகச் சுழியோடி கட்டி இழுத்து வந்து, வடமராட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்ததும் ஊர்காவற்துறைக் கடலில் சேதப்பட்ட நேவிப்படகையும், எடுத்த எல்.எம்.ஜியையும் யாழ்ப்பாணக் கரையில் சனத்துக்குக் காட்டியதும்  அவனது அரசியல் சிந்தனைக்குச் சான்றுகள். புலிகளின் வெற்றிக்களிப்புக்களை மக்களோடு பகிர்ந்து கொண்டான் அந்தக் கடற்தளபதி.

ஆனையிறவுக் கடல்நீரேரியில் சாள்ஸ் நடத்திய ஒரு தாக்குதல், மேனி சிலிர்க்க வைக்கும் கதை.

மதியத்திற்குப் பிந்திய பகற்பொழுது அது. ஏட்டு விசைப்படகுகளில் கடல் ரோந்து வந்துகொண்டிருந்த சிங்களக் கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்று ஏற்கெனவே சாள்ஸ் வைத்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்த கண்ணிவெடியில் சிதறி மூழ்கியது. திகைத்துப் போன நேவியின் ஏழு படகுகளும் அவ்விடத்தைச் சூழ்ந்துவிட படகையும், ஆயுதங்களையும் தங்கள் ஆட்களையும் மீட்க அவர்கள் முயன்று கொண்டிருந்தனர். பூநகரிப் பக்கமிருந்து அவசரமாக வந்த ‘ஹெலி’ வட்டமிட்டபடி பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது. சாள்சுக்கு ஏமாற்றம். படகையும் ஆயுதங்களையும் மீட்க முன்னர், அவர்களைத் தாக்கி விரட்டத் தயாரானான் அவன். கைவசமிருந்தது ஒரே ஒரு படகு; அதிலிருநத்தும் ஒரே ஒரு கனரகத் துப்பாக்கி தான். அவர்களோ ஏழு சண்டைப் படகுகளில்; ஹெலி வேறு மேலே. சமாளிக்க முடியுமா என கூடிநின்றவர்கள் சிந்திக்க இன்னும் சில புலிகளுடன் படகைக் கடலில் இறக்கினான் அந்த வீரன்.

கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பிருந்தன் சொன்னார்.

“ஜி.பி.எம்.ஜி ரவைகளைப் பொழிய மின்னலெனத் தங்களை நெருங்கிய தனித்த ஒரு படகைக் கண்ட நேவி அதிர்ந்து போனான். அவிழ்த்துவிட்ட பட்டி மாடுகள் வரிசையாக ஓடுவது போல, நேவிப்படகுகள் ஏழும் ஓட்டமெடுக்க, மேலே நின்று சுட்டுக்கொண்டிருந்த ஹெலியாலும் சாள்சைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.” அன்று கடலுக்குள்ளிருந்த ஆயுதங்களையும் படகையும் மீட்டுத்தந்தான், சாள்ஸ் வடமராட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்தான்.

திருகோணமலையின் கடற்கரையோரமுள்ளது திருக்கடலூர் அந்த வீரனைப் பெற்றுத் தந்த பெருமை அதற்குத்தான் சேரும். 1960 இன் கடைசி மாதத்தின் 15 ஆம் நாள், ஒரு அழுகுரலுடன் அது நடந்தது.

அப்பா ஆனந்தராசாவுக்கும், அம்மா விஜயதேவிக்கும் மகனாக, 2 அக்காமாருக்கும், 4 தம்பிமாருக்கும் இடையில் பிறந்தவனுக்கு அவர்கள் ஆசையோடு லைத்த பெயர் தவராஜன்.

கடற்றொழில் அந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, அந்தக் கிராமத்திற்கும் சொந்தமானது.

புனித ஜோசேப் கல்லூரியில் 10 ஆம் வகுப்புவரை படித்து விட்டு, அப்பாவோடு தொழிலுக்குப் போனவன், சின்ன வயதிலேயே திறமைமிக்க படகோட்டியாகத் தேர்ச்சி பெற்றான். மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் அவன் பாடத்திட்டம் ஒன்றைப் பூர்த்தி செய்வதற்கு, இயற்கையாகவே அவனிடமிருந்த ‘ரெக்னிக்கல் மூளை’ துணையாக இருந்தது. தடங்களின்றி சிங்களத்தில் உரையாடுவதோடு ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலையும் சாள்ஸ் கொண்டிருந்தான்.

சிங்கள இனவாதப்புயல் எங்கள் தாய் நிலத்தில் கோரமாக வீசிய போது, எல்லோரையும் போலவே இந்தக் குடும்பத்தின் அமைதியான வாழ்வும் குலைந்தது. பச்சைப் பேய்களின் பவனி; இராணுவ வண்டிகளின் வலம்; சிங்களக் கடையர்களின் அட்டூழியம்; திருகோணமலை எரிந்தது; தமிழர்கள் பிணங்களாய் குவிந்தார்கள்; எங்கள் கடலில் அவர்கள்; விடிகாலையில் கரையொதுங்கும் பிணங்கள் அந்த எரிமலை தனக்குள் குமுறும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அன்புத் தம்பி ஜெயராஜனை சிங்களத் துப்பாக்கிகள் குரூரமாகக் கொன்ற போது, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாயகத்துக்குச் செய்ய வேண்டிய பணி; சொந்த வாழ்வையும் தாக்கிய பேரினவாதம்; அவன் இயக்கத்திற்குப் போக முடிவெடுத்தான்.

புலிகள் இயக்கத்தின் தொடர்பு தேடி சந்து பொந்தெல்லாம் அலைந்து திரிந்தவனுக்கு, நீண்ட காலத்தின் பின் 1985 இன் நடுப்பகுதியில் அது கிடைத்தது. சந்தோசம் மாஸ்ரரைத் தேடிப் பிடித்து இயக்கத்தில் சேர்ந்தவன். திருமலையில் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுக்கும் போதே புலேந்தி அம்மாவின் கவனத்தை ஈர்க்குமளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்தி, திறம்படச் செயற்பட்டான்.

திருமலைக்கான கடல்மார்க்க விநியோகங்களைச் செய்வதே அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை. ஆனால், மிகச் சிரமமான அந்தப் பணியில் வண்டி ஓடிவிட்டுக் களைப்போடு வந்தாலும், ஆமிக்குச் சக்கை அடிக்க சுரேந்திரன் வெளிக்கிட்டால் தானும் சேர்ந்து போவான். இப்படிப் போகத் தொடங்கியவன்தான், பின்பு கண்ணிவெடி வைக்கப் போகின்றவர்கள் ஆலோசனை பெற்றுச் செல்லும் அளவுக்குச் ‘சக்கையில் எக்ஸ்பேட்’ ஆகினான்.

திருக்கோணமலையில் சிங்களப்படை தனது முற்றுகையை இறுக்கிய ஒரு காலகட்டத்தை நினைவுகூர்ந்தார் பதுமன்.

அது இக்கட்டான சூழ்நிலை; உணவுக்கே பஞ்சமான நெருக்கடி. விநியோக வழிகள் எல்லாமே தடைப்பட்டுவிட்ட அந்த நாட்களில் புலிகளின் உணவுக் கால்வாயாக இருந்தவன் சாள்ஸ் தான். நிலமெல்லாம் ஆமி, கடலெல்லாம் நேவி. சாள்ஸ் படகெடுத்துப் போவான். அடிக்கடி கடலில் நேவி கலைப்பான். ஆனாலும் உணவோடு வந்து சாள்ஸின் வண்டி கரையைத் தொடும். “இன்று வண்டி ஓட முடியாது; கடலில் நேவி கூடுதலாக நிற்கிறான்” என்று வோக்கி அறிவிக்கும். அப்போதும் தோழர்களுக்கு உணவு தர வண்டியோடு கடலில் இறங்குவான், இந்த உயிர்த் தோழன்.

ஒருநாள் சிங்களப்படையின் முற்றுகையொன்று; காயப்பட்ட புலிவீரர்களைக் காவிக் கொண்டு அவனது படகு புறப்படும் போது அமைதியாக இருந்த குறும்புறுப்பிட்டிக் கடல், திடீரென வழமைக்கு மாறாய் மாறியது. கொந்தளித்த கடல் வண்டியைக் கவிழ்க்க அலைகளுள் தவித்து, புண்ணுக்குள் பட்ட உப்புத் தண்ணீரால் துடித்த தோழர்களைப் பாதுகாப்பாக அவன் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது, கண்ணுக்குள் நிற்கிறது.

1986 இன் இறுதி. சுற்றிவளைப்பொன்றில் காயமடைந்து யாழ்ப்பாணம் வந்தபின், தமிழகத்திற்கு வண்டி ஓட்டுவது அவனுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலை. அந்தப் பணியின்போது அவன் நேவியிடம் கலைபடுவது மூன்றுநேர உணவைப்போல நிகழும் சம்பவம். அப்படியான ஒரு நாளில்; முன்னிரவு நேரம், பொருட்களோடும் போராளிகளோடும் வந்துகொண்டிருந்தது சாள்ஸின் படகு. திடீரென எதிர்ப்பட்ட நேவிப்படகு கலைத்துக் கலைத்துத் தாக்க, இயலுமானவரை வேகத்தைக் கூட்டி சாள்ஸ் ஓட முயல பீரங்கிக் குண்டு பட்டு வெடித்துச்சிதற படகிலிருந்து அவன் தூக்கி வீசப்பட்டான். முகம்மது மாத்திரம் கண்ணுக்குத் தெரிந்தான் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார்கள். மைல்கணக்கான தூரம். நேரம் செல்லச் செல்ல களைத்துப்போய் பின்தங்கிய முகமது, கண்ணுக்கு முன்னாலேயே அலைகளுக்கள் காணாமல் போயிவிட்டான். எல்லாம் போய்விட்டது; தோழர்களை இழந்த துயர்; நடுச்சமுத்திரம்; உள்ளிளுக்கும் கடல்; தனித்த ஒருவன்; தளராத உறுதி. 17 மணிநேரம் நீந்தி, மறுநாள் மாலை வடமராட்சிக் கரையில் ஒதுங்கும் வரை, மயக்கம் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்காதிருந்தான் அந்த வேங்கை என்பதை, மற்றவர்கள் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அதுஅவனது வைராக்கியத்துக்குச் சான்று.

அந்த நினைவுகளெல்லாம் ‘நாங்களும் ஒருநாளைக்கு நேவிப்படகுகளைக் கலைத்து அடிக்க வேண்டும்’ என்ற வேட்கையை, அந்த வீரனுக்குள் வளர்த்துக்கொண்டிருக்கும்.

இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக் காலம். இப்போது அவனது பணி, மணலாற்றில் தலைவரின் நிழலில் போர் மையம் கொண்டிருந்த முனையில் மிகமிக இன்றியமையாத கடல்வழி விநியோகம் தான் இங்கும் அவனது வேலை. வண்டி ஓடிவிட்டு வந்து நிற்கும் போது, களைப்போடு எங்காவது படுத்திருப்பான் என்று தேடினால், போராளிகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருப்பான் அல்லது ‘கொம்யூனிக்கேசன் செற்’றில் ஏதாவது செய்து கொண்டிருப்பான். எதுவுமே இல்லாவிட்டால் சமையற்கட்டில் கறிக்கு உப்புப்புளி சரிபார்த்துக்கொண்டாவது இருப்பான்.

இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட பின் சசிக்குமாரோடும், பிருந்தனோடும் யாழ்ப்பாணத்திலிருந்த பயிற்சி முகாம்களில் புதிய போராளிகளுக்கு துறை சார்ந்த வகுப்புக்கள் எடுத்துக் கொண்டு இருந்த சாள்ஸ் சிங்களப் படையுடன் மீண்டும் போர் தொடங்கிய பின், கடற்புலிகள் பிரிவோடு இணைக்கப்பட்டான்.

 

சாள்சின் எல்லாத் திறமைகளும் அனைத்து அம்சங்களும் முழுமையாக வெளிப்பட்ட காலம் அது.

‘விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்’ புதிய பரிமாணம் பெற்றபோது, தளபதி சூசையின் உற்ற தோழனாக நின்று கடற்புலிகளின் வளர்ச்சிக்காக ஓய்வில்லாமல் அவன் உழைத்தான்.

சாள்ஸ் ஒரு கடற்காவியம்!

“விடுதலைப் புலிகளின் வரலாற்றில் கடற்புலிகள் முக்கியமான ஓர் அத்தியாயம்” என்று தலைவர் அவர்கள் சொல்கின்றார். “கடற்புலிகளின் வளர்ச்சியில் சாள்ஸ் ஒரு பிரதான உந்து விசை” என்கிறார் தளபதி சூசை.

சாள்ஸ்!

ஒரு சிறந்த மனிதனாக, தேசப்பற்றும் உறுதியும் மிக்க போராளியாக, நட்புக் கொள்கிறவர்களுக்கு இனிய நண்பனாக, எதிரி அதிர சண்டைகளை வழிநடத்தும் தளபதியாக, புதியனவற்றைப் படைக்க முயலும் ஒரு தொழில்நுட்ப நிபுணனாக, போராளிகளுக்கு அறிவூட்ட விழையும் ஆசானாக, அலைகளைத் தோற்கடிக்கும் படகோட்டியாக, அட்டகாசமான சமையல்காரனாக, மக்களுக்குப் பணி செய்து நிற்கும் சமூகப் பற்றாளனாக…… இன்னும்…… இன்னும்…… எல்லாவற்றக்கும் பொருத்தமானவன் அந்த விடுதலைப்புலி.

சின்னக்குழந்தையாகத் தவழும் கடற்புலிகளை, பெரும் படை அமைப்பாகக் கட்டி எழுப்பும் கனவுகளோடு வாழ்ந்தானே அந்த வீரன்! தன்னையே உருக்கி அதன் அடி வேரில் பாய்ச்சியல்லவா அதனை நெடிதுயரச் செய்துகொண்டிருந்தான். ஏன் திடீரென எங்களை விட்டுப் போனான்?

கண்ணுக்குள் சுழல்கிறது அந்த நிலவு முகம். இறுதி நாட்களில் கிளாலிக் கடலில், எதிரிக்கு முன்னால் அது செஞ்சூரியனாய்ச் சுட்டெரித்தது.

11.06.1993. அன்றிரவு…

20 மைல் நீளப் பெருங்கடல். படகோட்டம் தொடங்கிவிட்டது. ஏக்க விழிகளோடு படகுகளில் மக்கள். தமிழரின் பிணந்தின்னக் காத்திருக்கும் சிங்களச் சுறாக்கள். மக்களைக் காக்கும் பணியில் அவர்களின் குழந்தைகள். அவர்களை வழி நடாத்தியபடி களத்தில் சாள்ஸ்.

ரவைகளைப் பொழிந்த படி விரைந்து வருகின்றன எதிரியின் படகுகள். நேருக்குநேர் எதிர் கொள்கின்றன புலிகளின் படகுகள். பிப்ரியும், எல்.எம்.ஜியும் தணல் கக்கிய ஒரு படகில் சாள்ஸ். இருள் வானைக் கிழித்தன ஒளிக்கோடுகள். அதிர்ந்து போனான் எதிரி!

எதிர்பாராத கணம்! திடீரென எல்.எம்.ஜி இயங்க மறுத்தது. அது கைவிட்டுவிட்டது. சாள்சின் கையிலிருந்து முழங்கிய பிப்ரியை மட்டும் நம்பி எதிரியை ‘நெத்தி முட்ட’ நெருங்கியது படகு! இடைவெளி நன்றாக குறுகிவிட்ட நிலையில் இன்னொரு எதிர்பாராத கணம். பிப்ரியும் இயங்க மறுத்து விட்டது. சாள்ஸ் திரும்பத் திரும்பக் கோக் பண்ணி கோக் பண்ணி அடிக்கவும் அது பிசகிக் கொண்டேயிருந்தது. எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் படகைப் பக்கவாட்டாகத் திருப்பி எடுக்க முயல, நேவியோடு போராடப் பிப்ரியோடு போராடிக்கொண்டிருந்த சாள்சின் உடலைத் துளைத்துச் சென்றன ரவைகள்! உடனடியாகக் கரையை நோக்கித் திருப்பப்பட்டது படகு.

இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. நீளக் கடல். ஓட ஓடக் கடலும் நீண்டுகொண்டேயிருக்க, இரத்தப்போக்கு அதிகமாகிக் கொண்டே போனது. சண்டையின் துவக்கத்திலேயே நாங்கள் மகானை இழந்து விட்டோம். படகு கரையைத் தொடும் போது எங்கள் சாள்சும் எங்களை விட்டுப் போயிவிட்டான்.

மக்களின் படகுகள் பாதுகாப்பாக மறுகரையை அடைந்து கொண்டிருந்தன.

ஓ…… சாள்ஸ்! எங்களின் கடற் போர்த் தளபதியே! உனது நினைவுகளையும் கனவுகளையும் எங்களோடு விட்டுச் சென்று விட்டாய். நீ சுமந்த இலட்சியத்தை நாங்களும் சுமக்கின்றோம். அதை அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம்; உன்னைப் போலவும் – கடலின் அலையைப் போலவும்!

 விடுதலைப்புலிகள் குரல்: 104

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments