
சிறீலங்காவில் இது ஒன்றும் புதிதான காரியமில்லைத்தான். இருப்பினும் அண்மையில் நடந்தேறிய இரு கொடுரப் படுகொலைகள் அனைவரது நெஞ்சங்களையும் உசுப்பிவிடக்கூடியதே.

விடயம் தெரிந்தும் 5 நாட்களாக வாயே திறக்காத தமிழ்க் குழுக்களும், கட்சிப் பிரமுகர்களும் பின் வழமைபோல ஜானதிபதிக்கு கடிதம் எழுத, அங்கும் பதிலுக்கு விசாரணைக்குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு இதே ஓகஸ்டில், இதே சித்தாண்டி முருகன் கோவிலடியில் 45 அப்பாவித் தமிழர்களைப் பிடித்துச் சென்ற சிங்களப் படை அவர்களை இரகசியமாகக் கொன்று புதைத்தது. இது தொடர்பாக விசாரணை செய்யவென ஜனாதிபதி அவர்களால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இதுவரை எந்தப் பதிலுமே தராத நிலையில், இன்னொரு விசாரணைக் குழு அமைத்திருப்பது கேலிக்குரியதே. அவ்வளவு ஏன்….. .? 600 தமிழர்களுக்கு மேல் கொன்று புதைக்கப்பட்ட செம்மணி வகாரததறகு விசாரணைக்குழு அமைத்த அரசு பெரிதாக எதனைச் சாதித்தது சிங்கள அரசின் அகராதிப்படி விசாரணைக் குழு என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே. இச்சம்பவம் வெளி உலகிற்குத் தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஆனால் இது போன்ற பல கொடுரங்கள் தமிழ் மண்ணில் அன்றாடம் அரங்கேறி வருவது வெளி உலகிற்கு தெரியாமலேயே போய்விடுகின்றது.
கடந்த வருடம் ஓயாத அலைகள் இரண்டு மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட கிளிநொச்சி இராணுவ முகாமில் வெறிபிடித்த படைவீரன் ஒருவனது ‘அல்பத்தில் இருந்து, ஒருகணம் இதயத்துடிப்பையே நிறுத்தி விடக்கூடிய ஒரு புகைப்படம் (போட்டோ)கண்டெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் தான் கஸ்ரப்பட்டுக்கட்டிய வீட்டைப் பார்க்க வந்த சமயம் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவித் தமிழர் ஒருவரது தலையைத் துண்டித்து அதைக் கைகளில் தூக்கியபடி “போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதனை அல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறது சிங்களப் படை. இது ஒன்று போதாதா சிறீலங்காப் படைகளினதும், அதன் ஆட்சியாளர்களினதும் முகதததிரையைக் கிழித்தெறிவதற்கு……… இன்றும்கூட கிளிநொச்சிப் பகுதியில் ஒன்று, இரண்டு என தமிழர்களது எலும்புக்கூடுகள் மீட்கப் படுவது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. இது வரை இப்பகுதியில் 57ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மலசலக் குழிகளிலிருந்தும், கிணறுகளிலிருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவைகைகள் கட்டப்பட்டுள்ள நிலையிலேயே மீட்கப்படுகின்றன கிளிநொச்சிப் பகுதியில் வீடுபார்க்கவெனச் சென்று காணாமல் போனோர் தொகை 184 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் மட்டுமல்ல, மட்டக்களப்பில் மட்டுமல்ல, சிறீலங்காவில் எங்கெல்லாம் இராணுவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கெல்லாம் இத்தகைய அட்டுழியங்கள் நடைபெறுவது சாதாரண விடயமாகவே இருக்கின்றது.
சிறீலங்காவின் பாதுகாப்புத் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு ஒருபுறம் தமிழர்களை அழிப்பத்தில் குறியாக இருக்கும் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் அவர்கள், இன்னொருபுறம் தன்னை சமாதானத்தின் தேவதையாக வெளியுலகிற்கு காட்டி வருவது, இன்னும் எத்தனை காலம்தான் நீடிக்கப்போகின்றது
விடுதலைப் புலிகளிடம் அனைத்தையும் படிப்படியாக இழந்து வரும் அரசு, தனது சக்திக்கும் மீறி பாரிய ஆயுத தளபாடக் கொள்வனவுடன் மீண்டும் தமிழர்களை அழிக்கவெனப் பூதாகாரமெடுக்கின்றது. சந்திரிகா அரசின் மெத்தப்பெருத்த பூதமெல்லாம் தமிழ் மண்ணில் அடிவாங்கி அழியுண்ட வரலாற்றை மறந்து, மீண்டும் மீண்டும் தப்புக் கணக்குப் போடுகின்றது அரசு . இதன் பலாபலனையும், பரிசையும் புலிகளிடம் மிகவிரைவிலேயே சிங்கள அரசு பெறவேண்டியிருக்கின்றது என்பதும் தலைவிதி எனின், அதை யாரால் மாற முடியும் ?

– ஆக்கம்:மொரிஸ் தர்மபாலன்
வெளியீடு :எரிமலை இதழ் (ஓகஸ்ட் 2000)
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் (ஓகஸ்ட் 2018)
முதல் இணைய தட்டச்சு :வேர்கள் இணையம்