எந்நிலைவரிலும்
இலக்கை நோக்கியே எமது பதையில்
கால்கள் நடக்கும்
இன்னொரு முறை நான்
பிறக்கப் போவதுமில்லை.
‘இப்பிறப்பில் என் அன்னை மண்ணை மீட்கும் போரில்
என்றும் பின்வாங்கப் போவதுமில்லை’
என்ற இலட்சிய வேட்கையுடன்
வீர களமாடிய வேங்கை மாவீரர்களின் வரிசையில்
மேஜர் சிட்டுவும் ஒருவன்….!
இன்று இவனது பிறந்த நாள்
வாழ்த்துக் கூற இவன் இன்றெம் அருகிலில்லை
என்ற உணர்வு வலித்தாலும்
எங்களுடன் வாழும் கலைஞனாய் எங்களோடு சிட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
தாயக விடுதலைக்காய் போராடத் தன்னை அர்ப்பணிக்க
இவன் புறப்பட்ட நாளைத் தொடர்ந்து
1990,1991,ஆண்டுகளில்
அரசியல் பள்ளிகளில்
உன்னோடு பழகும் வாய்ப்பு
மட்டுவில்,இருபாலை
அரசியல் பள்ளிகளில் என்றும்
நமது பசுமையான நிகழ்வுகள் ……..
இங்கு தான் உனது அறிவு,திறன்,ஆற்றல்
புடம் போட்டு எடுக்கப்பட்டன.
தலைமைத்துவத்தின் அத்தனை பண்புகளும்
கலைஞனாக,கவிஞனாக,பாடகனாக
நடிகனாக,பேச்சாளனாக,அறிவிப்பாளனாக
பரப்புரையாளனாக சிறந்த
நிர்வாகியாக இனங்காணப்பட்டவன் நீ.
கலை பண்பாட்டு கழக
பொறுப்பாளனாக யாழ் மாவட்டத்திலும்
தமிழீழ தேசியதின்குரலாம்
புலிகளின்குரல் வானொலியின் நிர்வாகியாகவும்
அரசியல் பணியை செம்மையாய் செய்த போராளியாய்
எங்களோடு பயணித்தாய்……..
‘மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு
அவர்களது துன்பங்களைப் போக்குவதற்கு
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் பணி’ என்ற
தமிழீழ தேசியத்தலைவரின்
சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தாய்……
மக்கள் மனங்களில் மனம்நிறந்த போராளியாக இடம்பிடித்தாய்
1997ம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம்
வன்னிப்பெரு நிலப்பரப்பை துண்டாட தீவிரமாக
போர்தொடுத்துக் கொண்டிருந்தது எதிரிப்படை ………….
மாங்குளம் சந்தியைக் கைப்பற்றுவதற்காக
பல பகுதிகளால் புதிய போர்முனைகளைத்
திறந்து முன்னேற முயற்சித்தது பெரும்படை.
மறுபுறம் புலிகளின் அணியும்
புதிய முனைகளில் முன்னேறி
இராணுவத்தினர் மீது உக்கிரமான
மறிப்புத்தாக்குதலையும் முன்னெடுத்தது…
ஆனால் தினசரி வீரச்சாவும் காயப்பட்டு
வெளியேறியவர்களின் எண்ணிக்கையும்
அதிகரித்துச் சென்றதால் படையணிகளின்
எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து
கொண்டிருந்தது….
மீண்டும் மீண்டும் காயம் பட்டு காயம் ஆறி
முழுமையாக குணமடைவதற்கு முன்
களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர்
அதில் சிலர் வீரச்சாவடைந்தோரும் பலர்.
நிர்வாகத்திலிருந்தும் முடிந்ததளவுக்கு
ஆட் குறைப்புச்செய்து முன்னரங்க நிலைபோட்டு
மறிப்புச்சண்டை செய்வதற்கு ஆட்கள் அனுப்பப்பட்டனர்
இவ்வாறான காலகட்டத்தில் தான்
மேஜர் சிட்டுவும் களமுனைக்கு செல்கின்றான்
சென்ற காலப்பகுதியில் இருந்துதான் 01ஃ08ஃ1997ல்
வீரச்சாவடையும் ஓமந்தை ஊடறுப்பு சமர்க்களம் வரை
போராளிகளின் மத்தியில் மகிழ்ச்சிகரமான
சூழ்நிலையை மாற்றியமைத்தான்
ஆம்…
மக்களுக்காகவும் தேசத்திற்காகவும்
தன்னை அர்ப்பணித்தான் மேஜர் சிட்டுவாக
இன்றும் என்றும் மக்களின் மனங்களில் வாழ்கின்றான்.
‘வருக எங்கள் மக்களே
வெற்றி பெறுவதுதெங்கள் பக்கமே’
உனது கானம் இன்றும் எங்கள் உள்ளங்களில்……
வாழ்த்துக்கள் சிட்டு
வாழ்த்துவதற்கு நாங்கள் மட்டும் இருக்கிறோம்
வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ள நீயிங்கில்லை.
வெல்லுவோம் எங்கள் தேசத்தின் விடுதலையை
அன்று வீழ்ந்தோரின் கனவுகளும் நனவாக.
– போராளி தணிகைக்குயில் –
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”