இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழக் கலைஞர்கள் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர்...

போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை.!

போராட்டத்தில் பங்கேற்று
புரட்சிப் பாடல்களை எழுதி
இளைஞர்களை எழுச்சிகொள்ள
செய்தவர்.
“இழந்து போனவனுக்கு
வாழ்க்கை துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே
மதுரம்”
“துயரம் அழுவதற்காக அல்ல…
எழுவதற்காக
இத்தகைய மகத்தான சொற்களை
கவிதையாக எழுதியவர் அவர்,
ஆதலால், ஆற்றுப்படுத்திய
மனத்துடன் கவிஞருக்கு பதிவை…
“அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக்
கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து
கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம்
அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்
கொள்”
வாழ்க்கையின் மீதான அதி
உன்னதமான நம்பிக்கைகளையும்,
அழகியலையும் தரும் இத்தகைய
உக்கிரமான கவிதைகளை
எழுதிய கவிஞர் புதுவை
இரத்தினதுரை, தனது
பதினான்காவது வயதில் கவிதை
எழுத தொடங்கி,
முப்பத்தேழாவது வயதில் (1935)
விடுதலைப் பாதையில் தன்னை
இணைத்துக் கொண்டு
செயல்பட்டவர், ஒரு சிற்பக்
கலைஞரும் கூட.
“எமது மக்களுடைய நுகத்தடிகளை
உடைத்தெறிவதில் நானும்
போராட வேண்டும் என்று
நினைத்தேனே தவிர,
தொடர்ந்தும் கவிதை எழுதிக்
கொண்டிருப்பேன் என்ற
நினைப்பில் நான் வரவில்லை.
ஆனால், அமைப்புக்கு வருவதற்கு
முன்பே எனது துறை கலையாக
இருந்தபடியால், அமைப்புக்குள்
நுழைந்த பின்பும் இயக்கத்தில்
கலைப் பண்பாட்டுத் துறையை
கவனிக்க வேண்டியதே
எனக்கிடப்பட்ட பணி ஆகியது.
இந்தப்பணியை நான் செவ்வனே
நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறேன்” என
உறுதியுடன் கூறிவந்த
புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம்
எங்கு வதைபடுகிறதோ,
அங்கெல்லாம் அவர்களுடைய
மொழியில் எனது கவிதை
பேசும்” என்கிறார்.
கவிஞர் புதுவை
இரத்தினதுரையின் கவிதைகளை
படித்தும், கவிதைப் பாடல்களை
கேட்டும் பலநூறு இளைஞர்களும்,
இளைஞிகளும் விடுதலைப்
படையினில் வந்து சேர்ந்து “மண்
மீட்புக்காக” களமாடிக்
கொண்டிருப்பதை சென்னையில்
என் அண்டை வீட்டில் வாழும் ஈழத்
தமிழ் நண்பர் யொனி, சொல்ல
கேட்கும் பொழுது – கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே
உயர் கருவியாக மதிக்கப்பட்டு –
மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஈழமண்ணில் தோன்றிய
மிகச்சிறந்த ஆய்வாளர்களும்
ஒருவரான பேராசிரியர்
கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை
இரத்தினதுரை கவிதைகள் பற்றி
குறிப்பிடும்பொழுது,
“…இந்த மண் எங்களின் சொந்த மண்
இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள்
குனிந்து
நின்றது போதும் தமிழா – உந்தன்
கலைகள் அழிந்து கவலை
மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலை
சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா…”
என நெருப்பாக தொடங்கி நீளும்
ஒரு பாட புதுவை
இரத்தினதுரை எழுதியுள்ளார்.
அந்த பாடல் வரிகள் எத்தகைய
தாக்கத்தை மக்கள் மனத்தில்
ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு
உதாரணத்தை சொல்கிறேன் –
ஈழத்திலுள்ள திருநல்வேலி
சந்தியில் 1993இல் ஒரு நாள்
அதிகாலை 4 மணியளவில் ஒருவர்
தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு
பற்ற வைத்துக்கொண்டு
குளிருக்காக தலையையும்
காதையும் மறைத்து தான்
போட்டிருந்த போர்வையுடன்
மிதிவண்டியில் ஏறிய நேரத்தில்
இந்தப் பாடலும், “வெள்ளிநிலா
விளக்கேற்றும் நேரம்” பாடலும்
ஒலிபரப்பாக மிதிவண்டியில்
அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு
சென்றார். புதுவை
இரத்தினதுரையின் புரட்சிக்
கருத்துக்களையும்
நெகிழ்ச்சியான
அனுபவங்கலையும் பாடலில்
கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத்
தமிழனின் செயலை கண்டு மனம்
நெகிழ்ந்தேன்” என்று
பூரிப்போடு கா.சிவதம்பி
எழுதியுள்ளார்.
விரும்பி இடம்பெயர்வது வேறு –
விரும்பாமல் வன்முறை செய்து
இடம்பெற வைப்பதென்பது வேறு.
புலம் பெயர வைப்பவன் –
இறுதியில் எத்தனை முறை
மன்னிப்பு கேட்டாலும் அவனை
மன்னிக்கவே கூடாது என மனம்
பதற வைக்கிறது புதுவை
இரத்தினதுரையின் சில
படைப்புகள்.
“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய், இருமல்
மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு
மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த
மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத துயரெது?
ஊரிழந்து போதல் தான்.”
இந்த நிலை – அரை
நூற்றாண்டாக… ஈழமண்ணில்
தொடர்கிறது. இது நாளையும்
தொடரும் என்கிற போது…
சொல்லி புலம்ப சொற்களில்லை.
இயலாமையால் மனம்
மௌனமாகிறது.
“தம்பி பெஞ்சாதியின் தமையன்
வீட்டில்
இரவில் பாய்விரிக்க எங்கு
இடமிருந்தாலும்
அங்கு உடல் சரிப்பு.
வீட்டுக்காரரின் தூக்கம்
கலையுமென
இருமலைக் கூட உள்ளே
புதைப்பு
களவுக்கு வந்தவன் போல
மனைவியுடன் கதைப்பு
கிணற்று வாளி தட்டுப்பட்டாலே
படபடப்பு
ஒண்டுக்கிருத்தல்,
குண்டி கழுவுதல்
ஒவ்வொன்றையும் பயந்தபடி
ஒப்பேற்றல்.”
இப்படி காலம் காலமாக
சிதைந்தும் – மனம் சிதையாமல்
இருப்பதெப்படி?. நம்பிக்கை.
உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள்
வைத்திருக்கும் பெரு நம்பிக்கை.
இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல –
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு
தமிழனின் விடுதலைப்
போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக
இருக்கும் என்றே தோன்றுகிறது.
“இன்று நடை தளர்ந்தும்
நரை விழுந்தும் தள்ளாடும்
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய
இளைஞர்களே!
வெள்ளைத் தோல் சீமான்கள்
வீடு திரும்ப மூட்டை
கட்டியபோது
நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”
என்று ஒரு ஞாயமான வினாவை
தனது கவிதை மூலம் புதுவை
இரத்தினதுரை எழுப்புகிறார்.
செய்யவேண்டிய வேலையை,
செய்ய வேண்டிய நேரத்தில்
செய்து விட்டால் தலைமுறைகள்
ஏன் தத்தளித்தாடுகிறது என்று
கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம்
தலைமுறையினருக்கும்
சுருக்கென சூடு வைக்க
தயங்கவில்லை,
“உடல்கீறி விதை போட்டால்
உரமின்றி மரமாகும்
கடல் மீது
வலை போட்டால்
கரையெங்கும் மீனாகும்.
இவளின் சேலையைப் பற்றி
இந்தா ஒருவன்
தெருவில் இழுக்கின்றான்
பார்த்துவிட்டுப்
படுத்துறங்குபவனே!
நீட்டிப்படு.
உனக்கும் நெருப்பூட்டிக்
கொளுத்த
அவனுக்கு வசதியாக
இருக்கட்டும்.
‘ரோஷ’ நரம்பை
யாருக்கு விற்று விட்டுப்
பேசாமற் கிடக்கின்றாய்?”
இத்தகைய அற்புத படைப்பின்
மூலம் – ஈழத் தமிழ்மக்களை
போராட்ட களத்திற்கு செல்ல
வழியமைத்தவர் புதுவை
இரத்தினதுரை.
“……சும்மா காற்றில் பற்றியா
இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை
காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக
வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப்
பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண் தின்னிகள் மரணிக்கும்.”
மீண்டும் ஊரில் நுழைய –
தெருவில் நடக்க – தன் வீட்டு
நிழலில் களைப்பாற துடிக்கும்
என் உறவு ஈழத்தமிழினத்திற்கு
எப்போது விடிவுகாலம்
பொறக்கும் என்று
எண்ணும்படியாக துக்கம்
தொண்டையை அடைக்க என்னை
நிலைதடுமாற செய்தது
புதுவை இரத்தினதுரையின்
கவிதைகள். அவரின் படைப்பை
மொத்தமாக ( நூல்:
பூவரசம்வேலியும் புலுனிக்
குஞ்சுகளும்; ஆசிரியர்:
புதுவை இரத்தினதுரை;
வெளியீடு: விடியல் பதிப்பகம்,
பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து
முடித்தபோது மண்ணைப்
பற்றியும், மண்ணுக்கும்
மனிதனுக்குமான பாசம்
பற்றியும், வாழ்க்கையைப்
பற்றியும், உறவுகளைப் பற்றியும்,
உறவுப் பிரிவின் துயரங்களைப்
பற்றியும், வாழ்க்கையின்
உன்னதங்கள், அழகியலைப்
பற்றியும், புரட்சியைப் பற்றியும்,
அறுந்துபோகாத உறுதியான
நம்பிக்கைகள் எனக்குள்ளே
கூடியிருப்பதை உணர்கிறேன்.
உண்மையான ஒவ்வொரு
தமிழனிடமும் கவிதை மூலமாக
புலம்பினார் புதுவை
இரத்தினதுரை. மனித நேயமுள்ள
உலகத்து மனிதர்களிடம்
புலம்பினார். நெஞ்சு வெடித்து
இனத்துக்காகக் கதறிய இந்த
கவிஞனுக்கு என்ன சொல்ல
போகிறது இந்த உலகம். பதறி
துடிக்கும்போது கவனிக்காமல்
போய் வழக்கம் போல் எழவுக்கு
துக்கம் விசாரிப்பது போலவே
இந்த பதிவையும் வருத்தத்தோடு
எழுதுகிறேன்.
குறைந்த அளவு
இரக்கத்தையாவது உலகம்
காட்டியிருக்கக் கூடாதா
ஈழமக்களுக்கு..? என் வாழ்நாள்
முழுவதும் நினைத்து
வெட்கப்படுவேன்.

“புதுவை இரத்தினதுரையின்
படைப்பிலக்கியம், தமிழீழ
விடுதலைப் போராடடத்திற்கு
ஒரு உந்துசக்தியாக
இருக்கிறது. கவிதை உலகில்
போர்க்கால இலக்கியத்திற்கு
இலக்கணம் வகுத்துக் கொடுத்த
பெருமை அவரைச் சாரும் .”

– தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments