இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home போராளிக் கலைஞர்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு…!

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு…!

இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை.

ஆயினும், ஒரு கோணத்துப் பார்வையில், துருத்தித் தெரியும் அவரது ஆளுமை அம்சத்தை புள்ளிகளிடுவதன் மூலம்ஒரு சித்திரம் தோன்றலாம். அதில் அந்தச்சிரித்த முகத்தோன் உயிர் பெற்றும் வரலாம்.

கல்லறைக்குப் போகுமுன் வணக்கம் செலுத்த வருபவர்களுக்காக காத்திருக்கிறது திருவுடல். அருகே ஐம்பது வயதைத் தாண்டிய அவரது மூத்த சகோதரன் யாரும் அறியா நேரங்களில் அவ்வப்போது அழுகிறார்.

நினைவுகள் எழுந்து இதயத்தில் எங்கோ இருக்கும் ஈரத்தை இழுத்து வந்து கண்களால் கொட்டி விடுகிறது. அவர் சொன்னார், “சின்ன வயதில் எங்களது அப்பா இறந்து விட்டார். அதனால் குடும்பத்தில் வறுமை நிலவிற்று. நானே உழைக்கத் தொடங்கி குடும்பப் பாரத்தை சுமந்து இளையவர்களைப் படிப்பித்தேன். அதிக கண்டிப்புடன் சகோதரர்களை வளர்த்து வந்தேன். ஆனால், செல்வன் எந்த விடயத்திற்கும் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், தண்டிப்பதற்காக தடியைத் தூக்கும்போதெல்லாம் தன் தவறுக்கு தக்க காரணங்களை கற்பிக்கத் தொடங்கிவிடுவான். அதைக் கேட்டுவிட்டால் தண்டிப்பதற்கான நியாயம் பறிபோய் விடும்” என்று.

இந்திய அமைதிப்படையுடன் நடந்த யுத்தத்தில் ஒரு நாள் தென்மராட்சிப் பொறுப்பாளரான இவரது மறைமுக இடத்தை இராணுவத்தினர் சுற்றிவளைக்க வந்தனர். வெடிக்க வைக்கத் தயாராக கையில் குண்டுடன், வீதியின் இரு புறமும் வந்துகொண்டிருக்கும் இராணுவத்தினரின் நடுவால் தமிழ்ச்செல்வன் சைக்கிளில் கடந்தார் ஒவ்வொரு இராணுவத்தினரையும் பார்த்துச் சிரித்து தலையாட்டியவாறு. புன்னகையை ஆயுதமாக்கி அன்று முற்றுகையை உடைத்துக்கொண்டார்.

இன்னொரு நாள் அமைதிப்படையின் அப்பிரதேசத் தளபதி சடுதியாக இவரது அணியை சந்திக்க நேர்ந்ததும் அந்த இடத்தில் மோதலைத் தவிர்க்குமாறும் உரையாட விரும்புவதாகவும் அழைத்தான். தினேசுடன் (இவரது பழைய பெயர்) கதைக்க விரும்பும் அழைப்பை ஏற்று முன்வந்த இவர் அமைதிப்படைத் தளபதிக்குச் சொன்னார், “தினேஸ் நூற்றுக் கணக்கான போராளிகளுடன் வேறு ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருக்கின்றார். உங்கள் செய்தியைச் சொல்லுங்கள் நான் அவரிடம் சொல்கிறேன்.” என்று. தினேஸ் பற்றி அவனுக்கிருந்த பிரமையை தானே மேலும் பன்மடங்காக்கித் திரும்பினார்.

அந்தக் ‘கோலியாத்’ தளபதி தங்களை வீழ்த்தி வரும் அணியின் தலைவன் இந்தத் ‘தாவீது’ தான் என்று நம்பத் தயாரானமனநிலையில் இருக்கவில்லை. அவ்வளவு இளவயதும், சிறுவுருவமுமுடையவராக இருந்தார் அப்போது தமிழ்ச்செல்வன்.

சமயோசித புத்தி, நெருக்கடிச் சூழலை கையாளும் திறன், தன் மீதான நம்பிக்கை இதுதான் இளவயதில் மிளிரும் இயல்புகளாய் இருந்தன. இவை குறிக்கும் ஆளுமை என்னவெனில் தமிழ்ச்n;செல்வ்வன் ஒரு தந்த்திரி. இதைத்தான் இயக்கத்தின் வளமாக தலைவர் வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.

இந்த ஆளுமைதான் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை தலைமைப் பாத்திரத்தை வகிக்க, அவருக்கு இயலுமையைத் தந்தது. புலிகள் இயக்கம் அரசியல் முதிர்ச்சி பெற்ற தொண்ணூறுகளின் (1993) ஆரம்பத்தில் இவர் அரசியற்துறையைப் பொறுப்பேற்றார். இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் ஒரு அரசியற் பொறுப்புக்கு முகம் கொடுப்பது இலகுவானதல்ல. அதிலும் அவர் எதிர் கொண்ட காலம், இந்த விடுதலைப்போர் அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்த காலம்.

சந்திரிகாவின் சமாதானப் பேச்சு, அடுத்து கடந்த நூற்றாண்டின் இறுதியில், இந்த உலகம் கண்ட மாபெரும் இடப்பெயர்வான யாழ்ப்பாண இடப்பெயர்வு – ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வை – அதுவும் கோரமாக நடந்த யுத்தத்தின் இடப்பெயர்வை – அவர் முகாமைத்துவம் செய்த ஆற்றல் அசாத்தியமானது. இப்படியான இடப்பெயர்வுகளில் பிணி, வறுமை என்பவற்றாலும், கட்டுப்படுத்த முடியாத தொற்றுநோய்ப் பரவலாலும், ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிந்துபோவதுதான் சுகாதார நிபுணர்கள் கண்ட உலக அனுபவமாக இருந்தது. ஆனால், அத்தகைய கணிப்புக்களை பொய்யாக்கிய முகாமைத்துவம் ஒருபுறமும், மக்களுக்கேற்பட்ட மகா அவலத்தால் மக்கள் போராட்டத்தில் சலிப்புறுவதற்குப் பதிலாக, மக்களை எழுச்சியடைய வைத்து போராட்டத்திற்கு இளைஞர்களை அணிதிரட்டிய ஆற்றல் மறுபுறமுமாக அவரது ஆளுமை புதுமை படைத்தது.

இக்காலகட்டத்தில் போராட்டத்தில் உள்வாங்கப்படுவோரை மட்டுப்படுத்த வேண்டியளவிற்கு அது அமைந்தது. இதன் விளைவாகத்தான் ஓயாத அலைகள் – 01 வெற்றியின் மூலம் முல்லைத்தீவு விடுவிக்கப்பட்டது. புலிகள் ஒரு தீர்ந்துபோகாத சக்தி என்று நிரூபிக்கப்பட்டது. சர்வதேச கடற்போக்குவரத்துக்கான புலிகளின் வாசலாக முல்லைத்தீவு திறவுண்டது. பின்னாளில் வன்னி மீதான எதிரியின் முற்றுகை உள்ளடக்கத்தில் அர்த்தமிழந்ததும் இதனால்தான்.

வன்னிச்சமர் என்றுமில்லாத புதிய நெருக்கடியை இந்தப் போராட்டத்திற்குத் தந்தது. தொடர்ச்சியாக வருடக்கணக்கில் நீண்ட ஒரு சமராக அது இருந்தது. வன்னிக்காட்டில் தனித்து விடப்பட்ட புலிகள் மீதான இறுதி யுத்தமாக உலகளவில் இது பார்க்கப்பட்டது. வன்னியின் நிரந்தரவாசிகளைவிட அப்போது இடம்பெயர்ந்தவர்களே இங்கு பெரும்பான்மையினராக இருந்தனர். யுத்தம், முற்றுகை, பொருளாதாரத் தடை, யுத்தப் பின்னடைவுகள், ஊரின் மூலைமுடுக்கெங்கும் வரும் யுத்தத்தில் வீழ்ந்த உடல்கள் இவை எல்லாம் சேர்ந்து வறுமையும், பிணியும், பயமும், அவலமும் கொண்ட வாழ்வாக வன்னி மக்களின் சூழலை மாற்றியிருந்தது. நிச்சயமற்ற வாழ்வுக்குள் நாளாந்தம் மக்கள் திணறிக் கொண்டு இருக்கக்கூடிய காலம். இச்சூழல் தந்திருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் போராட்டத்திற்கு நிச்சயமானதும் முடிவானதுமான தோல்வியைத்தான். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டம் மக்களிலேயே ஆதாரப்பட்டு நிற்கிறது.

முப்பது வருடப் போராட்டத்திற்கு எழுந்த இந்த நெருக்கடிச் சூழலை, தலைவருக்குத் தோள் கொடுத்து தமிழ்ச்செல்வன் என்ற ஆளுமை கையாண்ட விதம், எதிரியின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் எதிர்மறையாக புரட்டிப் போட்டது.

வந்த நெருக்கடியை நோக்கி அரசியற்துறையின் வல்லமை அனைத்தையும் திருப்பினார் தமிழ்ச்செல்வன். எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமாக்கும் தந்திரம் அவருக்கு வசப்பட்டது. செயல் ஒன்று புயலாகும் மையத்தில் நின்றார் அவர்.

மக்கள் தம் வாழ்வை ஏற்றுக்கொண்டு அதற்கு முகங்கொடுக்கத் தொடங்கினர். விடுதலைப் போரிலும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை இழந்தனரல்லர். எதிரியின் மீது கோபமும், எதிரியை எதிர்கொள்வதற்கான திடமும் கொள்ளத் தொடங்கினர். வாழ்வின் அவலமோ நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆவேசத்தை மக்களுக்குள் கொண்டுவந்தது. களத்தில் விழுகின்ற உடல்கள் நாளாந்தம் கல்லறைக்குப் போய்க்கொண்டேயிருந்தாலும் பாசறைக்குப் போகும் புதியவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடாமல் இருந்தது. இது, தான் ஏவிய யுத்தத்தில் தானே சிக்குண்டு எதிரியை காடுகளுக்குள் திணறவைத்தது. வன்னியின் ஊர்களின் ஓரத்து வெளிகளெங்கும் மக்கள் போர்ப்பயிற்சி பெறத்தொடங்கினர். தமிழ்ச்செல்வன் செய்த தவத்தின் பயனாய் எல்லா வன்னியர் கைகளிலும் வஜ்ஜிர ஆயுதம் முளைத்தது. மக்கள்படை திரண்டு புலிகளுக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. இறுதி யுத்தமென்று வந்தவர்கள் அதில் முழுதாய் தோற்றார்கள்.

வன்னி இயற்றிய இந்த இராணுவ அற்புதத்தால் உலகமே மூர்ச்சையாகிப் போனது. யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்து, ஆயுதங் கொடுத்து, ஆலோசனை கொடுத்து சிங்கள அரசின் அருகாய் இருந்த உலகம் அதைக் கைவிட்டு சமாதானத்திற்குத் திரும்புமாறு சந்திரிகா அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. மக்களுக்கு தீரா அவலத்தைச் சுமத்தி விடுதலைப்போரில் வெறுப்பும், சலிப்புமுறப் பண்ணி அடிபணிய வைக்கும் அரசாங்கத்தின் தந்திரத்தை தலைகீழாக மாற்றி அதன் அறுவடையை விடுதலைப் போராட்டத்திற்கு சம்பாதித்துத் தர தமிழ்ச்செல்வன் இயற்றிய தவமே மாதவம்.

“சமாதானம்” இது முன்பிருந்த சூழலுக்கு முற்றிலும் எதிர்மாறானது. எம்மை தோற்கடிக்கச் செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சியின் வியூகம் வேறு. அபிவிருத்தி என்ற மாயை மூலம் மக்களை யுத்த மனப்பாங்கில் இருந்து விடுபடச் செய்வதற்கான வியூகம் இது. சர்வதேச சமாதானக் கற்கைகள் கண்டு பிடித்த கோட்பாடு என்னவெனில், யுத்தத்திற்கெதிரான மனப்பாங்கை அபிவிருத்தி என்ற கருத்தாக்கத்தின் மூலம் உருவாக்க முடியும் என்பதே.

சமாதானம் என்ற வியூகத்தின் அங்கமாக, அரங்காக அபிவிருத்தி என்ற நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச சமாதானக் கற்கைகளின் இந்தக் கோட்பாடு புறந்தள்ளி விடக்கூடியதல்ல என்பது தெரியும். ஆயினும் அபிவிருத்தியை புறந்தள்ளி அல்லது தடுத்துவிடவும் முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது என்பதில் தமிழ்ச்செல்வன் உறுதியாக இருந்தார்.

உலகில் யாராலும், எங்கிருந்தாயினும் தமிழ்மக்களை நோக்கிக் கொண்டுவரப்படும் அபிவிருத்தியை வரவேற்று, உள்வாங்கி தொடர் யுத்தத்தால் மக்கள் பட்ட அவலத்திற்கு சிகிச்சையாக, புத்தூக்கமாக அதை மாற்றிப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. அதேநேரம் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விடக்கூடிய சூழ்ச்சியாக இது உருவெடுக்க விடாமல் அதனிடமிருந்து தற்காக்க வேண்டியுமிருந்தது. இந்த இரண்டிற்குமிடையில் ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்து அதனை நிர்வகிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அதை வெற்றிகரமாகக் கையாண்ட ஆளுமையே தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வன் இயல்பிலேயே ஒரு தந்திரி.

அவரது ராஜதந்திரப் பணியில் சில புள்ளிகளை இடுவது இங்கு முக்கியமானது. சந்திரிகாவின் தீர்வுப்பொதி வெளியிடப்பட்ட காலத்தில் வன்னிக்கு வந்த தெற்கு ஊடகவியலாளர் ஒருவர் இவரைச் செவ்வி கண்ட போது எழுப்பிய கேள்வி, “நீங்கள் இந்தத் தீர்வுப்பொதியை ஏற்காதது, நீங்கள் சமாதான அணுகுமுறையில் விருப்பமற்ற போர் நாட்டமுள்ளவர்களென்பது காரணமே தவிர, தீர்வுப்பொதி காரணமல்லவே” என்ற தொனியில் இருந்தது. அதற்கு இவர் அளித்த பதில் கொழும்பின் முகத்தையே கிழித்தது. “தமிழ்மக்களால் துரோகிகளாக வர்ணிக்கப்படும் குழுக்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. அவையே இதை ஏற்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே இந்த அரசாங்கத்தால் முன்வைக்க முடியாதபோது இந்தக் கேள்வியை நீங்கள் எங்களிடம் கேட்பது சரியல்ல.”

நடந்த கடைசிப் பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னான காலத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சர்வதேச செய்தி ஸ்தாபனத்தின் பிரபல நிருபர் ஒருவர், குதர்க்கமான கேள்வி ஒன்றைத் தொடுத்தார். அதன் தொனி புலிகள் சமாதானத்தை போலியாகத்தான் நடத்தினார்கள், என்று திரித்து அம்பலப்படுத்தும் முயற்சியாகவே இருந்தது. அதற்கு அவர் அளித்த பதில், நீ குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறாய் என்பதைச் சுட்டி, சபையில் நிருபரை அடக்கவைத்தது. கேள்வி இது தான் “காட்டில் வாழும் சிறுத்தை தம் புள்ளிகளை மாற்றிக்கொள்வதில்லை என்று பழமொழி இருக்கிறதே”. “நாங்கள் இங்கு மனிதர்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறோம். மிருகங்களைப் பற்றி கேள்வி எழுப்ப இது இடமல்ல” என்று வந்த பதிலில் அவர் தலைகுனிந்தார்.

ஜெனிவா – 2 இறுதியாக நடந்த பேச்சுவார்த்தை. அந்தப் பேச்சுவார்த்தையின் பின் எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே அடுத்த பேச்சுக்கான திகதி தருமாறு சர்வதேசத்தின் பிரதிநிதியான நோர்வேயால் நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. அதற்கு இசையாத தமிழ்ச்செல்வனை நோக்கி எரிக்சொல்கெய்ம். “திகதி குறிக்கப்படாதுவிடில் பேச்சு முறிவடைந்ததாக அர்த்தமாகிவிடும். எனவே திரும்பிப் போகும் உங்களின் பயணத்தின் பாதுகாப்பை எங்களால் உத்தரவாதப்படுத்த முடியாது” என்றார். தமிழ்ச்செல்வன் “உயிர் அச்சுறுத்தல்களைக் கொடுத்து புலிகளைப் பணியவைத்து விடமுடியாது” என்று பதிலளித்தார்.

இறுதியில் எரிக் சொல்கெய்ம் சொன்னார் “நீங்கள் பேச்சுத் திகதி குறிக்காமல் போவது நல்லதல்ல என அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ்புஷ் கருதுகிறார்” என்றார். இதற்கு தமிழ்ச்செல்வன் சொன்ன பதில் எரிக் சொல்கெய்மையும், அங்கிருந்த ராஜதந்திரிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. “நாங்கள் அமெரிக்க ஜனாதிபதிகளான, வோஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், வுட்ரோ வில்சன் ஆகியோரது கருத்துக்களில் தான் கரிசனையாக உள்ளோம். ஜோர்ஜ்புஷ் இன் கருத்திலல்ல”. (மேற்சொன்ன ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திரத்திற்காகவும், சிவில் உரிமைக்காகவும், தேசிய இனத்தவர்களின் சுயநிர்ணயத்திற்காகவும் போராடியவர்கள்)

ஜெனீவா – 2 பேச்சுவார்த்தைக்கு அரச தரப்புப் பேச்சுக்குழுவினர் மிகவும் புளகாங்கிதத்தோடு வருகை தந்திருந்தனர். காரணம், புலிகள் தரப்பில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இல்லை என்பதே. மேலும், பேச்சின் நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே தீர்மானிக்கப்படாமல் நடக்கப்போகும் ஒரு அசாதாரண சூழல் பேச்சுவார்த்தை இது. இதனால் தயார்படுத்திக் கொண்டுவர வாய்ப்பும் இல்லை. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் இதற்குத் தலைமை தாங்கினார். அந்தப் பேச்சு மேசையில் தமிழ்ச்செல்வன் கையாண்ட உத்திதான் நியாயத்தை எங்கள் பக்கம் திருப்பி அரச தரப்பு “மேதைகளை” தலைகுனிய வைத்தது.

முதல்நாள் பேச்சில் கர்வத்தோடு வந்த அரசதரப்பைக் கதைக்கத் தூண்டி அவர்கள் கையிருப்பில் இருந்த விவாதப் பொருளைக்கக்கவைத்து அதற்கு எதிர் விவாதம் செய்யாது அக்கருத்தில் அவர்களை நிலைபெற வைத்து, மறுநாள் அந்த விவாதத்திற்கு எதிர் வியூகம் அமைத்து அரச தரப்பை அம்பலப்பட வைத்தார். அரச தரப்பின் கருப்பொருள் அடிப்படை அரசியல் பிரச்சினை குறித்தே பேசவேண்டும் என்றிருந்தது. அதற்குச் சம்மதிக்காத புலிகள் போலியாகவே சமாதானப் பேச்சைக் கையாளுகின்றனர் என்று விவாதித்தனர். அன்றாடப் பிரச்சினையை விடுத்து அடிப்படைப் பிரச்சினை குறித்த அரசியல்தீர்வு பற்றியே பேசவேண்டும் என்றனர். அவர்களது நோக்கம், தனியரசு இலட்சியத்தில் இருக்கும் புலிகள் அரசியல்தீர்வு குறித்துப் பேச சம்மதிக்கமாட்டார்கள். எனவே புலிகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்திவிட முடியும் என்பதாகவே இருந்தது.

இதனைச் சரியாகக் கணிப்பிட்ட தமிழ்ச்செல்வன் மறுநாள் “நாங்கள் அதற்குச் சம்மதிக்கிறோம். நீங்கள் கொண்டுவந்த அரசியல்தீர்வு யோசனையை முன்வையுங்கள் பேசுவோம்” என்றார். அரச பேச்சுக்குழு சங்கடத்தில் மாட்டியது. தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்தது போலவே அப்படி எந்த ஒரு தீர்வு முன்மொழிவையும் அது கொண்டுவந்திருக்கவில்லை. மேலும் தமிழ்ச்செல்வன் அவர்கள் “எங்களது முன்மொழிவாக இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை முன் வைத்துள்ளோம் அரசியல்தீர்வு பற்றியே பேசவந்த உங்களது முன்மொழிவு எங்கே? தொடர்ந்து பேசுவோம” என்றார். விக்கித்துப்போன அரசகுழு “நாங்கள் இப்போதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். விரைவி;ல் தயாரித்து விடுவோம்” என்றனர். அதற்குத் தமிழ்ச்செல்வன் “தயாரித்ததும் வாருங்கள் பேச்சுக்குத் திகதி தருகிறோம்” என்றார். அரச குழுவை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்கள் விரித்த பொறியில் அவர்களையே சிக்கவைத்தார் தமிழ்ச்செல்வன். இன்றுவரை அவரெழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை.

மாறாக, தமிழ்ச்செல்வனைக் கொல்வதுதான் அரசின் பதிலாக இருந்தது. இப்படியொரு வல்லமை மிக்க ஆளுமையை வீழ்த்திவிட எதிரியென்று வரும் எவருக்குத்தான் பிரியமிருக்காது. இதில் தர்மம் என்ன? தார்மீகமென்ன? நவம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் வீடுகளெங்கும் முகாரி இசையில் மூழ்கியிருக்க, கோத்தபாய ராஜபக்ச பேட்டியளித்தார். “இன்றுதான் நான் வாழ்வில் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்” என்று.

நினைவுப்பகிர்வு:- கு.கவியழகன்.
வெளியீடு :விடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 2007) 

மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments