இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தாயக கவிதைகள் பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .!

பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .!

இங்கும் வந்திறங்கிவிட்டனர்
விடுதலையை விற்றுவாங்கும் வேடதாரிகள்.
ஆழவேரோடிய எங்களின் நீளமறியாது
பொய்யான சோடிப்புகளுடன்
குதித்துள்ளனர் எமது கொல்லைக்குள்ளும்.
விடுதலைப்பூ எங்கெங்கு இதழ்விரிக்குமோ
அங்கெல்லாம் இறங்கி
வாசம் நுகர்வதாய் வளைத்து மடக்கி
பூக்களைக் கிள்ளியெறிந்து போவதில்
அவர்கள் கில்லாடிகள்.

வந்திறங்கும்போது இருக்கும் பவ்வியமும்,
வாரித்தருவோமெனும் பாவனையும்,
முகத்தில் ஒட்டியிருக்கும் முறுவலும்,
உங்களுக்காகவே வந்தோமெனும் கரிசனையும்
சிலிர்க்கச் செய்யும் முதலில்
சிக்குப்பட வைத்துவிடும் இறுதியில்.
விடுதலை அவாவுறும் எந்த வெளிச்சத்தையும்
இருண்டவானம் ஏற்றுக்கொள்வதில்லை.
நிமிர்ந்தெழும் எந்த மக்களையும்
அடக்குமுறையாளர் அங்கீகரிப்பதில்லை.
தாங்கள் விரும்பும்,
தங்களை விரும்பும்
பொம்மைகளையே அவர்களுக்குப் பிடிக்கிறது.
அதுவும் பேசும் பொம்மைகளெனில்
அவற்றின்மீதே அவர்களுக்குப் பிரியமதிகம்.
இங்கும் இரண்டு பொம்மைகள் இருக்கின்றன
ஒன்று ரணிலெனும் பொம்மை
மற்றது மகிந்தவெனும் பாவைப்பிள்ளை.
இந்தப் பொம்மைகள் சிரிக்கும்,
சாவிகொடுத்தாற் சாப்பிடும்
இயக்குபவரின் விருப்பத்திற்கிசைவாய்
இவை தொழிற்படும்.
பிரபாகரனையும் பொம்மைகளில் ஒன்றாக்க
பலத்த பிரயத்தனமெடுத்தனர் பலர்.
காராம்பசுவையும்,
கற்பகவிருட்சத்தையும் காலடி வைத்தனர்.
அலங்கார நாற்காலிகளாலும்,
வெள்ளிச் சரிகைபின்னிய விரிப்புகளாலும்
விழுங்கிச் செரிக்கலாமென நம்பினர்.
நம்பிக்கையில் இடிவிழுந்ததும்
தோற்றோமெனும் வெப்பிசாரத்திற்தான்
தடைகள்மூலம் சாதிக்கமுயல்கின்றனர்.
வாசலெங்கும் தடைபரவி முள்ளேற்றுகின்றனர்.
வலிக்கும்போதாயினும் வருவர்தானேயென
முள்ளுமிதியடிகளை அணியத்தருகின்றனர்.
வார்த்தைச் சாட்டை எடுத்து
முதுகை வகிர்ந்தெடுக்கின்றனர்.
இப்போ உலகமே ஒன்றாகி நின்று
பொதுமைச் சொல்லொன்றில் பேசுகிறது
அது சமாதானம்.
சமாதானமென்பது மிக அழகான சொல்
வெகு இயல்பானதும்கூட.
உரித்து உரித்து உள்ளே போனால்
இறுதியில் ஒன்றுமில்லாத வெங்காயமே அது.
அந்தச் சொல்லுக்குள் உண்மைவடிவை மறைத்து
ஒளிந்திருக்கமுடியும்.
விடுதலைப் பொறிகளைத் தணிக்கவும்,
அடக்குமுறை வேர்களை வளர்க்கவும்
அந்த ஒற்றைச்சொல்லே அதிகம் வசதியானது.
போரில்லா உலகென்ற போர்வைக்குள்ளேதான்
கணிசமான களவாணிகள் கண்துயில்கின்றனர்.

பரீட்சித்த இடமெல்லாம் வென்றவர்
இங்கேதான் தோற்றுப்போயினர்.
அந்தக்கோபமே
தடையென்ற வடிகாலில் வழிகிறது.
இருண்ட கண்டத்திற் கொலம்பஸ் இறங்கியது
அந்தச் சமாதானமென்ற வார்த்தையுடன்தான்
என்ன நடந்தது பின்னர்?
பூனைக்கண்ணன் இலங்கை புகுந்தபோதும்
சமாதானம் சொல்லியே தரைதட்டினான்
என்ன நடந்தது இறுதியில்?
அமைதிப்படை ஆடவந்தபோதும்
அழகிய அந்தச் சொல்லையே உச்சரித்தது
பின்னர்தான் புரிந்தது நமக்கு.
மீண்டும் மீண்டும் சமாதானப் பாடலுடன்தான்
விடுதலைத் திசைகளை எரியூட்டுகின்றனர்.
விரியும் சிறகுகளை வெட்டிவீழ்த்துகின்றனர்.
பாவப்பட்ட சமாதானமென்ற சொல்மீதே
கோபம் வருகிறது நமக்கிப்போ.
வாழ்வுக்காய் நாம்தரித்த ஆடைகலைத்து,
வழியெங்கும் வளர்த்த பூமரங்கள் எரித்து,
மனிதரென எமக்கிருந்த உரிமை மறுத்து
துடைத்தழித்த பாவம் சூழ்ந்தது இன்று.
எத்தனை சாதுவாக,
எத்தனை பிள்ளைப்பூச்சியாக
திருப்பியடிக்க வலுவற்ற தேகத்திற்தானே
மீண்டும் மீண்டும் அடித்தார்கள்.
ஈழத்தமிழர் இழிவுற்றவரெனக் கருதி
எத்தனை காலமாய் இடித்தார்கள்.
அந்த வலியிருந்து உற்பவித்த வல்லமைதானே
பிரபாகரன் என்ற பெருநெருப்பு.
அழுதவரின் கடைசிக் கண்ணீர்த் துளியிருந்தே
இத்தனை பேரெழுச்சியும் பிரசவமானது.
தருவதைத் தாருங்கள் வாங்கிக்கொள்கிறோமென
கைநீட்டியபோதில் கணக்கிலெடுக்காதவர்கள்
இப்போ கதவுதிறந்து காத்திருக்கிறார்களாம்
சமாதானத்துக்காக.
யாருக்குப் பூச்சுற்றப் பார்க்கின்றனர் காதில்?
அடிவிழும்போதே ஞானம் பிறக்குமெனில்
அடியே நியாயத்தின் திறவுகோல்.
கொடி சரியும்போதே
கோத்தபாய குழுமத்துக்குப் புரியுமெனில்
கரும்புலிகளுக்கும் தெரியும் இந்தச் சமன்பாடு.
உப்புச்சப்பற்ற விருந்துக்கழைக்கும் உலகமே!
முதலில் எம்மை உணர்ந்துகொள்.
ஏனைய முன்னுதாரணங்களைக் கையிலெடுத்து
எம்மீதும் பிரயோகிக்க எத்தனிக்குமெனில்
குறித்துக்கொள்ளுங்கள் குறிப்பேட்டில்
தமிழீழம் அழியுமெனினும் தலைகுனியமாட்டாது.
எங்கள் பிறப்பும்,


எங்கள் வளர்ப்பும் வித்தியாசமானது.
இது வியாசனெழுதும் வெறும் வரிகளல்ல
நாளைய காலத்துக்கு நாமெழுதும் தீர்ப்பு.
பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது
வல்லவன் நிமிரும்போது வளைக்கமுயலும்
வளைக்க முடியாதெனில் அணைத்துக்கொள்ளும்.
விடுதலைக்கான சாளரங்களைத் திறக்கும்போது
காற்று முதலிற் சண்டைக்கே வரும்
சண்டையிற் தோற்கும்போதில்
சரணாகதி அடைந்துவிடும்
அடக்குமுறையாளரின் அகராதியில்
இதற்கு இராஜதந்திரம் என்றிருக்கும்.
நாங்கள் முன்னேறுவோம்
தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டேயிருப்போம்
சத்தியம் சாவதில்லையே எப்போதும்.

-வியாசன் 

வெளியீடு:விடுதலை புலிகள் இதழ் 

மீள் வெளியீடு:வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments