இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home வழித்தடங்கள் நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்.!

நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்.!

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை.

அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது, அற்புதமானது… போர்க்களம், நிர்வாகப்பணி, அரசியல்பணி, இராஜதந்திரப்பணி என ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளோடு அணுகப்பட வேண்டிய சிக்கல் நிறைந்த நாளாந்தத்தில் தமிழ்ச்செல்வண்ணை சுழன்றுகொண்டிருப்பார். அதனை விடவும், வெளியே அவர் அறியப்பட்டதற்கு அப்பாலும், எமது தேசியத் தலைவரின் பிரத்தியேகமான, வெளிச்சொல்ல முடியாத பாரிய பணிகள் நாளாந்தம் அவரது தோள்களிலிருக்கும்.

நள்ளிரவு தாண்டிய ஒரு நேரத்திலிருந்து அதிகாலை வரையான மிகச்சிறிய மணித்தியாலங்களே அவரது நித்திரைக்கான நேரமாக இருக்கும். இத்தனைக்கும் மத்தியில் ஒரு கருணைத் தாயாக, கண்டிப்பான தந்தையாக, சகோதரனாக, பொறுப்பாளனாக தன் அருகிருக்கும் போராளிகளை அரவணைக்க அவர் தவறுவதே இல்லை. தமிழ்ச்செல்வண்ணையின் அத்தனை இயல்புகளும் அவரின் அருகிருக்கும் போராளிகளை இயல்பாகப் பற்றிக்கொள்ளும். அவர்கள் தேசியத் தலைவருக்குப் படிப்படியாக அறிமுகமாகிப் பெருவிருட்சங்களாகிவிடுவர்.

 

அலெக்ஸ்… ஒரு மருத்துவப் போராளியாக தமிழ்ச்செல்வண்ணையின் அருகில் வந்துசேர்ந்தது ஒரு அற்புதமான இணைவு. 1990களின் ஆரம்பத்தில் தமிழ்ச்செல்வண்ணை விழுப்புண்ணடைந்ததன் பின் அந்த அற்புத இணைவு நடந்தது. அன்றிலிருந்து வீரச்சாவடையும் இறுதிக்கணம் வரையும் அவர்களது வாழ்வு ஒன்றித்தே இருந்தது. போர்க்களத்திலிருந்து இராஜதந்திரப் பயணங்கள் வரை எல்லாவற்றிலும் அவர்கள் இணைந்தே இருந்தார்கள்.

அது 1993ஆம் ஆண்டு. பூநகரிச் சமர்முனையில் ஒரு நாள். களத்தில் ஒரு எதிர்பாராத விமானத்தாக்குதல். மூத்த தளபதி சொர்ணம் அவர்களும் தமிழ்ச்செல்வண்ணையும் தாக்குதலுக்குள்ளாகினர். அந்தக் கணப்பொழுதில் தமிழ்ச்செல்வண்ணையைக் கீழே விழுத்திவிட்டு அவரின் மேலே தோழர்கள்… கப்டன் வைத்தி வீரச்சாவைத் தழுவிக்கொள்ள தமிழ்ச்செல்வண்ணை மோசமான காயங்களுக்குள்ளானார். அவரோடு காயமடைந்தவர்களுள் மேஜர் துளசியுடன் அலெக்ஸ் உம் ஒருவன்.

ஒரு தனிப்பட்ட மருத்துவனாக, மெய்ப்பாதுகாவலனாக, பணி உதவியாளனாக எனப் பல்வேறுபாத்திரங்கள் ஏற்றுப் பின்னர் தமிழ்ச்செல்வண்ணையின் பாரிய சுமைத்தாங்கியாக அலெக்ஸ் விளங்கினான். குறிபார்த்துச் சுடுவதிலும், படைத்துறைசார் அறிவியலிலும், பன்னாட்டுத் தொடர்புகளிலும் அலெக்ஸ் இயல்பாகவே கொண்டிருந்த அபாரத் திறமை தேசியத் தலைவரின்பால் அவனை ஈர்க்கச் செய்தது. அதன்பின்னர் அவன் ஆற்றிய பணிகள் அளப்பெரியன.

 

மிகுதன்… பிந்திய நாட்களிலேயே தமிழ்ச்செல்வண்ணையுடன் நெருக்கமாக இணைந்து கொண்டவன். அவரது பணிகளுக்கான உதவியாளனாக சுமைகள் தாங்கியவன். 1998ஆம் ஆண்டில் அமைப்பில் இணைந்த அவன் குறிப்பிட்ட காலங்கள் துறைசார் கற்கைகளில் ஈடுபட்டான். அவற்றிலெல்லாம் அனைவரையும் கவரும் முதல்வனாக அவனே திகழ்ந்தான். பின்னர் ஆனையிறவு மீட்புச் சமரிலும் அதன்பின்னரான சமர்கள் சிலவற்றிலும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் பீரங்கி அணியொன்றில் பாராட்டும் படியான சேவையாற்றினான். எதிலும் தனது சுயமான முயற்சியைச் செலுத்தி அதனைத் தன்வசப்படுத்துவதில் மிகுதன் திறமையானவன். குறிப்பாக கணினித்துறையில் அவன் தனது பொறுப்பாளர் அளித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சுயமாகவே முன்னேறினான். வன்னியில் பதிப்புத்துறையில் கணினிகள் பயன்படுத்தப்படத் தொடங்கியபோது அதன் தொடக்கத்தில் மிகுதனின் பங்கு அளப்பெரியது. எமது அமைப்பின் உத்தியோகபூர்வ ஏடான ‘விடுதலைப்புலிகள்’ உட்பட ஏனையவற்றினது வடிவமைப்பிலும் அவன் பெரும் பங்காற்றினான். இங்கு வெளிவந்த பாராட்டுப்பெற்ற சுவரொட்டிகள், நூல்கள் பலவற்றிலும் மிகுதனின் உழைப்பு இருந்தது. உண்மையில் இந்தத் துறையில் அவன் ஒரு வல்லுனன

மிகுதன் எங்களது குடும்பத்தின் கலகலப்பான வாழ்விற்குப் பெரிதும் காரணமாக இருந்த ஒரு தோழன். அவனிடம் ‘அறுவை’ வேண்டாத யாருமே எங்களில் இல்லை. மிகுதனுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் ஒரு தனியான பிரியம். இதனை நன்கு அறிந்து வைத்திருந்த தமிழ்ச்செல்வண்ணை எங்காவது அப்படியான சாப்பாடு கிடைக்கும் நிகழ்வுகளுக்குச் செல்வதென்றால் அவனையும் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வதற்கு என்றுமே தவறுவதில்லை.

 

சுமைகூடிய எங்களது குடும்பத்தின் நிர்வாக வேலைகள் நேதாஜியின் பொறுப்பில் இருக்கும். அதனைவிடவும் தமிழ்ச்செல்வண்ணையின் பிரத்தியேகமான வேலைகளும் அவனுக்கு உண்டு. புத்தகங்கள் என்றால் தமிழ்ச்செல்வன் அண்ணைக்கு உயிர். அந்த உயிரை நேதாஜியிடம் கொடுத்தே தனது நூலகத்தில் பத்திரப்படுத்திக்கொள்வார். அவற்றைச் சலிப்பின்றித் தனக்குக்கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நேதாஜி படித்துக்கொண்டே இருப்பான். படுக்கையிலும் அவனது தலைமாட்டில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். அமைதியான சுபாவம் கொண்ட அவனிடமிருந்த நிறைந்த அறிவை அவனை மிக நெருங்கியவர்கள் அறிவார்கள்.

நேதாஜியின் பொறுப்புணர்வும், அமைதியும், நேர்த்தியும் தமிழ்ச்செல்வண்ணையால் விரும்பப்பட்டவை. முகாமிலுள்ள போராளிகளுக்கு எப்போதும் நல்ல உணவு கொடுக்கவேண்டும் என்ற தமிழ்ச்செல்வண்ணையின் விருப்பத்திற்கு மட்டும் அவனால் எல்லா வேளைகளிலும் ஈடுகொடுக்க முடிவதில்லை. அப்போதெல்லாம் ஒரு குழந்தையைப்போல அவருடன் சண்டை பிடித்துக்கொள்வான்.

தமிழ்ச்செல்வண்ணை வாகனத்தில் கழித்த காலங்களும் கணிசமானவை. ஒரே நாளில் அவரது வாகனம் எங்கெங்கோ எல்லாம் சுற்றிச்சுழன்று திரியும். அச்சுறுத்தல் நிறைந்த எல்லைக் கிராமங்களில் இருந்து உயிர்ப்பலியெடுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் போர்க்களங்கள்வரை களத்திலும் தளத்திலும் தமிழ்ச்செல்வண்ணையின் பயணம் நீண்டது. அவரது நம்பிக்கைக்குரிய சாரதியாக செல்வம் இருந்தான்.

சிறுவயது முதல் தனது வாழ்வைப் போராட்டத்தில் ஒன்றித்திருந்தவன் செல்வம். களங்களில் நின்றான். சிறப்புப் பயிற்சிகள் பெற்றான். என்றாலும் செல்வம் என்றால் அவனது சாரதித்துவ ஆற்றல் மட்டுமே எல்லோரது கண்களுக்குள்ளும் வந்து நிற்கும். உண்மையில் அதில் அவன் ஒரு கலைஞன். களமுனையில் தமிழ்ச்செல்வன் அண்ணையைச் செல்வம் அழைத்துச் செல்லும்போது அருகிருந்தால் நெஞ்சு படபடக்கும். பாதுகாப்புக் கருதி அத்தனை சிக்கல் நிறைந்த பாதைகளை தமிழ்ச்செல்வண்ணை தயக்கமின்றித் தெரிவுசெய்வார்.

அப்போதெல்லாம் செல்வத்தின் ஆற்றல் மீது அவர் வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கை புலப்படும். நீண்ட சந்திப்புக்கள் நடத்தி, பயணங்கள் செய்து களைத்துப் போயிருக்கும் தமிழ்ச்செல்வண்ணை எப்போதாவது சோர்வடையும் சந்தர்ப்பங்களில் கூட வாகனத்தில் ஏறிக் கதவைச் சாத்திக்கொள்ளும் வரை தனது சோர்வை வெளிப்படுத்தமாட்டார். அப்படியான சந்தர்ப்பங்களில் வாகனம் அவரது குட்டிப் படுக்கையறையாகிவிடும். நம்பிக்கையான சாரதி இருந்தால் மட்டுமே அவர் அப்படி இருந்துகொள்வதைக் கண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைக்குரியவர்களுள் செல்வம் முதன்மையானவன்.

 

ஆட்சிவேலும், மாவைக்குமரனும் மிகப் பிந்திய நாட்களில் எமது குடும்பத்தில் இணைந்து கொண்டவர்கள். நற்பண்புகளும் உறுதியும் நிறைந்த அவர்களை வளர்த்தெடுக்கும் விருப்பம் தமிழ்ச்செல்வண்ணைக்கு இருந்தது. கடினமான பாதுகாப்புப் பயிற்சிகளைப் பெற்று வந்திருந்த அவர்கள் பாதுகாப்பு ரீதியாக எப்போதும் சிக்கல் நிறைந்த பகுதிகளிலேயே பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வண்ணையின் பாதுகாப்பு அணியில் அயராது உழைப்பார்கள். ஆட்சிவேல் அமைதியானவன், எவருடனும் எந்தச் சோலிக்கும் போகமாட்டான், தானும் தன்பாடுமாய் இருந்துகொள்வான்.

மாவைக்குமரன் துடியாட்டமானவன், எப்போதாவது எதையாவது செய்துகொண்டே இருப்பான். கரும்புலிகள் அணியில் இணைந்துகொள்ளும் உணர்வோடு அவன் கடைசிவரை இருந்தான்.

 

போராளிகள் எப்போதும் தமது உயிரை அர்ப்பணிக்கும் மனநிலையோடு இருக்கவேண்டும் என்பதைத் தமிழ்ச்செல்வன் அண்ணை வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அவரும் அவ்வாறே இருந்தார். ஒரு அரசியல்துறைப் பொறுப்பாளராக, சிவில் உடையில் அவர் வெளியே தோற்றமளித்தாலும் அவரது மனம் எப்போதும் போர்க்களத்திலேயே சுழன்று கொண்டிருக்கும். மக்களுக்காகக் களத்தில் தன்னை அர்ப்பணித்து உழைப்பதையே அவர்களுக்கான தனது அதியுயர் அற்பணமாக அவர் உணர்ந்தார். “மாவீரர்களும், போரில் கடுமையான விழுப்புண்களைத் தாங்கிய போராளிகளும்தான் உண்மையில் தேசத்திற்கான தமது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியவர்கள். நான்கூட அதனை இன்னமும் செய்யவில்லை. அதற்கு நான் ஒன்றில் எனது இலட்சியத்தை அடையவேண்டும். அல்லது அதற்காக எனது உயிரை அர்ப்பணிக்க வேண்டும்” என அண்ணை அடிக்கடி கூறுவதாக எங்களுக்குக் குறிப்பிடுவார்.

 

சாவிற்கு அருகாமையிலேயே எப்போதும் தமிழ்ச்செல்வண்ணையின் வாழ்விருந்தது. அவரோடு அருகிருக்கும் போராளிகளது வாழ்வும் அப்படித்தான். அவர் இராஜதந்திரத் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் காலங்களிலெல்லாம் உடனே தலைவரிடம் செல்வார். தலைவருடனான தனது உரையாடல்கள் முடிந்ததும் எப்போதும் எங்களுக்குப் பாரியவேலை இருக்கும். மாபெரும் அபாயங்கள் நிறைந்த எல்லைக் கிராமங்களில் மக்களின் குடிசை வாசல்களில் தமிழ்ச்செல்வண்ணை நிற்பார். நேற்றுத்தான் வெளிநாடுகளில் நிற்பதாக அறிந்த அவரைத் திடீரெனத் தமது வீட்டு வாசலில் கண்ட அதிர்ச்சி மக்கள் முகங்களில் தெரியும். அவரது மிகுதிநேர வாழ்வுபோர்க்களத்தில் இருக்கும். தான் நேசித்த மக்களுக்காகத் தான் தழுவிக்கொள்ளும் சாவு போர்க்களத்தில் அமையவேண்டும் என்பது தமிழ்ச்செல்வன் அண்ணையினது ஆத்மாவில் ஆழ்ந்த படிமமாக இருந்ததை அவரோடு பழகிய அனைவரும் அறிவார்கள். அவரோடு கூடவே சென்றுவிட்ட தோழர்களும் அப்படித்தான். ஆனால்…

அழுகிறோம்… தேம்பித்தேம்பி அழுகிறோம்… உங்கள் சாவுக்காக அல்ல. நீங்கள் விரும்பாத வடிவத்தில் அது நேர்ந்துவிட்டதே என்பதற்காக. களத்தில் நீங்கள் வீழ்ந்திருந்தால் உங்களது ஆத்மா திருப்தி அடைந்திருக்கும். அதனால் நாங்களும் ஆறுதல் உற்றிருப்போம். ஆனால்…

தமிழ்ச்செல்வண்ணை நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் “ஒருத்தன் தன்ர வாழ்கையில எப்ப திருப்தி அடையிறானோ அன்றோடு அவனது கதை முடிஞ்சிடும்” என்று. அதனை இப்போது நினைக்கின்றோம். உங்களது பயணம் தொடரும். எங்களின் அருகில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள்.

நினைவுப்பகிர்வு:- அ.பார்த்தீபன்
வெளியீடு :விடுதலைப்புலிகள் (குரல் :138 ,ஐப்பசி, கார்த்திகை 2007)

மீள் வெளியீடு : வேர்கள்இணையம்  .!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments