கொங்கோ நாட்டு கவிதை
ஏன்னுடைய மண்ணிைலிருந்துதான்
நீ வந்திருக்க வேண்டும்
உன் புருவங்களைச் சூழத்
துடித்துக் கொண்டிருக்கும்
உன் ஆன்மாவில்
அதனைக் காண்கிறேன்
அதையும்விட
துக்கமாயிருக்கும்.வேளைகளில்
நீ நடனமாடுகிறாய்
என்னுடைய மண்ணிலிருந்து தான்
நீ வந்திருக்க வேண்டும்.
நடந்து கொண்டேயிரு
காலம் எம்மை அணைக்கக்
காத்திருக்கிறது
உன்
விளக்கில் எரியும் எண்ணை
உண்மையில்
குமுறிக் கொண்டிருக்கும்
என் குருதிதான் என்பதையும்
அது பொங்கி வழிந்தால்
நீ
விளக்கை ஏற்றக் கூடாது
என்பதையும்
இதிலிருந்து தெரிந்து கொள்.
எம் புராதன வழிபாட்டுக்கென
இருண்ட மூலையொன்று
எமக்கு வேண்டும்
ஒரே தொப்புள் கொடியிருந்துதான்
எல்லோருமே வந்தோம்
கோலம் கெட்ட எம் தலைகளை
எங்கே பெற்றோம் என்பது
யாருக்குத் தெரியும்?
அயடின் வீச்சம் கொண்ட
இந்த மெளனங்கள்
அனேகமான வேளைகளிலே
துன்மார்க்கமான முடிவுகளால்
எம்மைப் பாழ்படுத்துகின்றன.
ஏனென்றால்
தாடி இல்லாத
என் மணச் சாட்சியோ
எங்களை மட்டுமே
பாழ்படுத்துகிறது
எழுதியவர்: ச்சாயா யூ ராம்ஸி
நாடு: கொங்கோ
தமிழில்: வின்சென்ற் புளோறன்ஸ்
வெளியீடு :எரிமலை இதழ் (யூலை 2003)
மீள் வெளியீடு:வேர்கள் இணையம் (பெப்ரவரி 2018)