
நாட்டின் தேவைக்காய்
காலமறிந்து காக்கும் கடமை
கைகளில் இருப்பதால்
தேடாதே தேகம் இருக்காது
துயரப் பாடல்களை மனப்பாடம் செய்து
மெளன ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்
உன் கண்கள் என்னை மட்டுமே
சேமித்து வைத்திருக்கும்.
இலட்சதீபங்கள் ஒன்றாகி
ஒளி வீசும் சூரியனாய் -என் முகம்
உன்னுள்ளே எல்லாமாகி நிற்பதும் புரிவேன்.
இந்த செய்தி ஒரு மாதமோஓராண்டோ
அன்றி ஓரிரு ஆண்டோ
என்றோ ஒரு நாள் எப்படியோ
உன் கையில் கிடைக்கும் – அன்று
என் ஆன்ம துடிப்புக்களை அறிவாய் .
உனக்கு அன்றைய நாள் எப்படியிருக்கமென்று
என்னால் சரியாக கூறமுடியாது
இதன் மூலம் என்னை நீ புரிவாய்
இதயத்தின் இறுதி மடலது
தேடாதே தேகம் இருக்காது.
எம்தேசத்தில் சாதல் பட்டியல்
எமக்கு கூடிய போது
என்னால் மட்டும் எப்படிஇருக்க முடியும்
கண்களைக் கூட இழக்கலாமா?
உனக்கென ஓர் அண்ணன்
மறுபடி வரலாம
நான் நெருப்புத்தான் ஆனால்
பஞ்சில் பத்தும் நெருப்பல்ல
இரும்பை எரிக்கும் தீ
இதயத்தில் எரிவது தீ-அந்த
இதயம் எரியப் போவதும் தீயில்
இயலாமை என்றைககும இலலை
ஈரப் பசை இல்லாதவன் – என்று
இயம்புவாய் புலம்புவாய் எதுவானாலும்
என்னை இயக்குபவருக்கும்
எனக்கும் மட்டுமே தெரியும்
எனது பயணப் பாதை
எங்கள் மக்கள்
கரும்பாய் சரிந்த போதெல்லாம்
இரும்பாய் இதயம் இறுகியது
சிறைக் கூடங்களில்
சாறாய் பிழியப்பட்டபோதெல்லாம்
இதயம் நாராய் கிழிந்தது -இனித்
தேடாதே தேகம் இருக்காது
இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில்
எத்தனையோ மனிதர்களிடம்
புத்தனின் மனிதம் இருப்பதை கண்டேன்.
இந்த மனிதர்களிடம் இருந்து வந்த
அந்த மனிதர்கள் தானே – எம்
பிஞ்சுகளை சிதைத்தனர்கள்.
எங்கள் கைக்குள்
ஆயுதத்தை திணிைத்தார்கள் – மனங்களில்
தீராத வடுக்களை விதைத்தார்கள் .
அன்பான உன்னிடமே முழுமையான
என் முகவரியை மறைக்கவும்
கருமை என்ற உறுதியை கைப்பிடிக்கவும்
அவர்கள் தானே கற்றுத் தந்தார்கள்.
சாதிப்பதற்காய் சென்று சென்று
தோல்வியுடன் திரும்பும் – ஒவ்வொரு
தடவையும் என் நெஞ்சையறியாத நீ
சிரிக்கச் சிரிக்கப் பேசி
புன்னகை பூக்களால் உள்ளத்திற்கு
ஒத்தடமிட்டுக் கொண்டிருப்பாய்
எல்லாம் மறந்து உன்
இல்லத்தில் களித்திருப்பேன்
இதற்காய் ஒரு போதும் வரிகளில்
நன்றி சொல்லப் போவதில்லை.
நாளைய வாழ்விற்காய்
எமது இறுதி நோக்கு
எட்டினால் போதும்
தேடாதே இப்போ தேகம் இருக்காது .
கவியாக்கம் : காந்தா (போராளி)
வெளியீடு :எரிமலை இதழ்
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு©:வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”