ஹாய்…… பாட்டி!
நீயென்ன செய்கிறாய் இங்கே?
முன்னேறிப் பாய்ந்தோரின்
மூர்க்கம் தாங்காமல்
எல்லோரும்
‘மூட்டையைக்’ கட்டிய பிறகும்,
வீட்டோடேயே வீற்றிருக்கிறாயே
சங்கதி என்ன?
போர் நீளும் பூமியிதில்
தள்ளாடும் வயதுனக்கு
என்னம்மா அலுவல்?
ரத்தம் தெறிக்கின்ற
யுத்த நிலத்தில்
சத்தமில்லாமல் குடிசைக்குள்
என்ன செய்து கொண்டு…. அட!
அதென்னம்மா கையில்!
தேநீரா…..!? அட்டகாசம்!
கொண்டு வா தாயே.
எதிர்ப் பாய்ச்சலாகப்
புலிப் பாய்ச்சல் செய்த
களைப்போடிருக்கிறோம்
கொண்டுவா!
குண்டு மழை நடுவிலும்
குழந்தைகளுக்குத் துணையாய்
அடுப்பெரித்தவளே!
நீ கஞ்சியூற்றினாலும்
அது பலம்!
கழனித் தண்ணீரூற்றினாலும்
அது விசை!
துளிருக்குச் சத்தேற்றும்
வேரே…! நம்பு –
துளிர்கள் விண்ணோக்கியே
நிமிரும்:
மண் நோக்கியல்ல!
–போராளி த.இனியவன்
1995 ஆவணி விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து வேர்கள் .
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”