இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மாவீரர் நாள் உரை தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1997

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1997

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1997.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்று மாவீரர் நாள்.

எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர்த் தியாகிகளை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள்.

மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.

மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.

சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.

தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.

மாவீரர்களின் நினைவாக, ஒரு வீர வழிபாடு மரபு. எமது மண்ணில் உருவாகியிருக்கிறதையென்பதை நான் பெருமிதத்துடன் சொல்வேன்.

மாவீரர்களை வணக்கத்துக்குரியபவர்களாகத் கௌரவிக்கும் எமது வீர மரபு. தமிழரின் எதிரியான சிங்கள இனவாத அரசுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது . சிங்கள தேசம் யாரைப் பயங்கரவாதிகளாக இழிவுபடுத்தி வந்ததோ அவர்களைத் தமிழர் தேசம் புனிதர்களைப் பூசிப்பதை பேரினவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தோடு மாவீரரின் வீர வழிபாட்டு மரபானது தமிழினத்தின் விடுதலை எழுச்சிக்கு உந்து சக்தியாக இருந்துவருவதாகவும் சிங்கள ஆட்சியாளர்கள் கருதினர். இத்தகைய இனத் துவேசப் பகையுணர்வால் உந்தப்பட்ட சிங்களப் பேரினவாதம் தமிழினத்தால் என்றுமே மன்னிக்க முடியாத ஒரு படுபாதகச் செயலில் இறங்கியது.

யாழ்ப்பாணக் குடாநாடு எதிர்ப் படைகளின் பிடியில் வீழ்ந்தபோது இந்த வேதனைக்குரிய சம்பவம் நிகழ்ந்தது. தமிழீழத் தாயின் மடியில் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த எம்மினிய மாவீரர்களின் ஆன்ம அமைதி எதிரியால் குலைக்கப்பட்டது. அவர்களது கல்லறைகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அவர்களது துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன. அவர்களது நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டன.

புனிதர்களாக, சரித்திர நாயகர்களாக, தேசிய வீரர்களாகத் தமிழர்களாற் போற்றிப் பூசிக்கப்படும் மாவீரர்களின் புதைகுழிகளை மாசுபடுத்தி, அவர்களது புனிதத் தலங்களான துயிலும் இல்லங்களைச் சிதைத்தழித்த இச்செயலை மிகவும் அநாகரிகமான, கீழ்த்தரமான இழிசெயலென்றே நான் கூறுவேன். ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித் தனமென இச் செயலைச் சிறுமைப்படுத்திவிட முடியாது. இது மிகவும் பாரதூரமான பயங்கரவாதச் செயல். தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச் செயலுக்குச் சிங்களப் பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பண்பற்ற செயல் ஓர் உண்மையைப் பகர்கிறது. அதாவது, சிங்கள தேசத்தை ஆண்டுவரும் இனவாத ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப் போவதில்லை. இறந்து போனோரின் அமைதியையே கெடுப்பவர்கள் இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை.

எனது அன்பார்ந்த மக்களே.

இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் சிங்களப் பெருபான்மை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகார பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன?

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதா?

தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டதா?

ஒன்றுமே நடக்கவில்லை.

மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப்பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது.

தமிழரின் நிலத்தை அபகரித்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை அழித்து, தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றொழித்துத் தமிழினத்தை இனவாரியாக ஒழித்துக் கட்டுவதில்தான் சிங்கள அரசுகள் முனைப்புடன் செயற்பட்டன. இதுதான் வரலாற்று உண்மை.

சிங்களத்தின் ஒடுக்குமுறை வரலாற்றில் சந்திரிகாவின் ஆட்சிக் காலம்தான் தமிழினத்திற்குச் சாபக்கேடாக அமைந்தது. இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகாத தமிழர்களே இல்லையெனலாம். சந்திரிகாவின் ஆட்சியில்தான் போர் விரிவடைந்து, பெரும் தீயாகப் பரவி தமிழர் தேசத்தைச் சுட்டெரித்தது. இதனாற் சன சமுத்திரமாக மக்கள் இடம்பெயர்ந்து இருப்பிடமின்றி அவலப்பட்டனர். தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க பாரம்பரிய நிலங்கள் இராணுவ அடக்குமுறையாட்சிக்கு உட்பட்டன. மாறி, மாறி நிகழ்ந்த படையெடுப்புக்களோடு, உணவு மருந்துத் தடைகளையும் அரசு இறுக்கி வந்ததால், பசியும் பட்டினியும் நோயும் சாவுமாக தமிழ் மக்கள் சந்தித்த இன்னல்களைச் சொல்லி விபரிப்பது கடினம்.

ஐம்பது ஆண்டு காலமாக, முடிவின்றி நீண்டுசெல்லும் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையானது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில்தான் மிகவும் தீவிரமான கடும்போக்கை எடுத்தது எனலாம். தமிழரின் தேசிய சுதந்திர இயக்கமாகிய விடுதலைப் புலிகளை நசுக்கி, தமிழினத்தைச் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் அரசின் அடிப்படையான நோக்கம். இந்த இராணுவத் தீர்வை நடைமுறைப்படுத்துவதில்தான் முழு முனைப்போடு செயற்பட்டு வருகிறது சந்திரிகா அரசு.

தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாக தமிழருக்கு ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், சந்திரிகா அரசானது தீர்வுப் பொதி என்ற நாடகத்தை அரங்கேற்றியது. இந்த அரசியல் நாடகத்தின் சூட்சுமத்தை உலக நாடுகள் புரிந்துகொள்ளவில்லை. சந்திரிகாவின் தீர்வுப் பொதியானது, இராணுவத் தீர்வுத் திட்டத்தின் மறுமுகம் என்பதை உலகம் கண்டுகொள்ளவில்லை. மாறாக, சிங்கள அரசின் சாணக்கியமான பிரச்சார மாயையில் மயங்கி உலக நாடுகள் சந்திரிகாவின் தீர்வுப் பொதிக்குக் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கின. சிங்கள பௌத்த பேரினவாதனத்தின் தமிழ் துவேசப் போக்கினால் தமிழர் முகம் கொடுத்த கசப்பான வரலாற்று அனுபவத்தை கருத்தில் கொள்ளாது, அவசரப்பட்டு உலக நாடுகள் எடுத்த இம்முடிவு எமக்கு ஒருபுறம் வியப்பையும், மறுபுறம் ஏமாற்றத்தையும் கொடுத்தது. சர்வதேச உலகம் சந்திரிக்காவின் சார்பாகத் திரும்பியதால், துன்பம் தோய்ந்த தமிழரின் அவலக்குரல் உலகத்தின் மனச்சாட்சியை உறுத்தவில்லை.

சந்திரிக்காவின் தீர்வுப்பொதி, தமிழரின் அடிப்படையான தேசிய அபிலாசைகள் எதையும் தொட்டுநிற்கவில்லை. காலத்திற்கு காலம், தேய்ந்து தேய்ந்து உள்ளடக்கம் உருக்குலைந்துவரும் இத் தீர்வுத்திட்டம் இரண்டரை வருடங்களாக இழுபட்டும் இன்னும் முழுமைபெறவில்லை. எனினும் இத் திட்டத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. தமிழரின் தேசியத் தனித்துவத்தையும், தாயகத்தையும் மறுதலித்து, தமிழர் தேசத்தைச் சிங்கள இறையாட்சியின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதுதான் இதன் குறிக்கோள். இராணுவத் தீர்வின் நோக்கமும் இதுதான். எனவே, சந்திரிக்காவின் அரசியற் பொதியும் இராணுவத் திட்டமும் ஒரே நாணயத்தின் இரு முகங்களாகவே எமக்குத் தெரிகின்றன.

தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை நீதியான முறையில், சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதியும் சந்திரிகா அரசிடமில்லை. தமிழரின் தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஓர் உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவும் சந்திரிகாவிடம் துணிவில்லை. இந்த இயலாமையை நியாயப்படுத்தத் தீவிரப் பேரினவாத சக்திகள் மீது பழியைச் சுமத்த முனைகிறது அரசு. உண்மையில் சந்திரிகாவின் அரசும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு நவீன வடிவம்தான். சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டியெழுப்பி, அதனைப் பூதாகரமாக வளர்த்துவிட்ட சந்திரிகாவின் அரசியற்கட்சி, இப்பொழுது அந்தத் தீவிரவாத சக்திகள் மீது குறைகூறுவது அபத்தமானது.

விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதான வழியில் அரசியல் தீர்வை விரும்பவில்லையெனச் சந்திரிகா அரசு கூறுவதிலும் உண்மையில்லை. நாம் சமாதான வழியில் அரசியல் தீர்வை விரும்பியதால்தான் திம்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரை பல பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். இப் பேச்சுக்களின் போது நாம் தமிழினத்தின் நலனில் உறுதியாக நின்றோம். சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மறுத்தன. இதனால் பேச்சுக்கள் வெற்றிபெறவில்லை. இதற்கு எம்மீது குறைகூறிப் பயனில்லை. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத போக்கே இந் நிலைமைக்குக் காரணம்.

தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து, அவற்றின் அடிப்படையில் ஓர் அரசியற் தீர்வுத் திட்டம் வகுக்கப்பட வேண்டுமென நாம் திம்புக் காலத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். இதுவே இன்றும் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

எந்தவோர் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் இன்றைய சிங்கள அரசியல்வாதிகள் திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தமிழர்களுக்கு வழங்குவார்களா என்பது கேள்விக்குரியது. தென்னிலங்கை அரசியலுலகத்திற் சிங்கள – பௌத்த பேரினவாதச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தும்வரை இது சாத்தியமாகப் போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழ மக்கள் தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்து தனியரசு அமைக்க முடிவெடுத்தனர். தமிழ் மக்களின் இத் தேசிய அபிலாசையை இலட்சியமாக வரித்தே, கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகஎமது விடுதலை இயக்கம் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டப் போராடி வருகிறது.

தமிழர்களின் உரிமைகளையும் பறித்து, தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு வழங்கவும் மறுத்து, தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதையும் எதிர்த்து, எல்லா வழிகளிலும் சமாதானப் பாதைக்கு இடையூறாக நிற்பது சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாம் அல்ல.

கடந்த ஐம்பது ஆண்டு காலமாக, அடக்குமுறை என்ற ஒரே வழியில்தான் சிங்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் குருட்டுத் தனமான அணுகுமுறையால்தான் இலங்கையில் அமைதி குலைந்து போரும் வன்முறையும் தலைதூக்கி நிற்கின்றன. இந்த அணுகுமுறையைச் சிங்கள தேசம் மாற்றிக்கொள்ளாவிடின், முடிவில்லா யுத்தத்தையும் பேரழிவையுமே அது சந்திக்க வேண்டிவரும். இந்த அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்து நிற்பது, சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாமல்ல.

இராணுவ அடக்குமுறைக் கொள்கையால் சிங்கள தேசம் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறதே தவிர தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது. இந்த உண்மையைச் சிங்களப் பேரினவாதம் என்றோ ஒரு நாள் உணர்ந்தே தீரும். ஆயினும், இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம், தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. அந்த எதிர்பார்ப்புடன் நாம் எமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தேச விடுதலை என்பது எதிரியால் வழங்கப்படும் சலுகையல்ல. அது, இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, போராடிப் பெற வேண்டிய புனித உரிமை.

எனவே, நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம்.

இத்தனை காலமும் நாம் சிந்திய இரத்தமும், நாம் செய்த உயிர்த் தியாகங்களும் வீண்போகாதென்ற திடமான நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து போராவோம்.

எமது புனித மண்ணைத் தமது ஆக்கிரமிப்புப் பாதங்களால் அசிங்கப்படுத்தி நிற்கும் எதிரிப் படைகளை எமது மண்ணில் இருந்து விரட்டியடிப்போமென்ற திடசங்கற்பத்துடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.

உறுதியுடன் போராடும் தேசமே இறுதியில் வெற்றி பெறுமென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி, நாம் செயலுறுதியுடன் போராடுவோம்.

மனவலிமையின் நெருப்பாக எரிந்து எமது மண்ணின் விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாம் இலட்சிய உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Recent Comments