இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

செல்லக்கிளி அம்மான்.!

இயக்கத்தில் முதலில் அம்மான் என்று அழைக்கப்பட்டவர் செல்லக்கிளி அம்மான் ஆகும்.அது ஒரு காரணப்பெயரோ என்பதும், யார் அந்த பெயர் சொல்லி அவரை அழைத்தது என்றும் தெரியாது ஆனாலும் அந்த பெயரே அவரது பெயராக ஆகிப்போனது.

இப்போது அவரை பற்றி எழுதும் போது படிப்பவர்கள் இலகுவாக புரிந்து கொள்ள வேணுமென்பதற்காக செல்லக்கிளி என்ற பெயரையும் சேர்த்து செல்லக்கிளிஅம்மான் என்று எழுதினாலும் அவர் வீரச்சாவு அடையும் வரை அம்மான்’ என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருத்தரே.
அம்மான் வீரச்சாவடைந்த பின்னர் வந்த பெரு வளர்ச்சியடைந்த காலங்களில்கூட சென்னை சாந்தோம், இந்திராநகர்களில் இயக்கஅலுவலகம் இருந்தபொழுதுகளில் தலைவர் கட்டி இருந்த கடிகாரம் அம்மான் இறுதியாக கட்டி இருந்த கடிகாரம்.
அம்மான் தன்னுடனேயே எந்தநேரமும் இருப்பதுபோல தலைவருக்கு ஒரு உணர்வு அந்த கடிகாரம் கையில் இருக்கும் போதெல்லாம்.
மிக நெருக்கடியான நேரங்களில் அம்மானின் ஆலோசனைகள் தலைவருக்கு சில கதவுகளை திறந்து வைத்தது என்பதை பல நேரங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
நான் பார்த்தவரையில் அந்த நேரங்களில் தலைவரை ஒருமையில் ” நீ “என்று அழைத்து கதைப்பவர்கள் இரண்டுபேர்தான். ஒன்று செல்லக்கிளிஅம்மான். அடுத்தது குமரப்பா (1983க்கு முன்னான குமரப்பா).
தலைவருக்கும் செல்லக்கிளிஅம்ம
ானுக்குமானது, இரண்டு ஆழமான நண்பர்களுக்கு உரிய தோழமை போலவும், அதே நேரம் ஒரு அமைப்பின் தலைவருக்கும் போராளிக்குமான தொடர்பு போலவுமான உறவுமுறையை கொண்டது.
செல்லக்கிளிஅம்மானை பொறுத்தவரையில் ஆரம்பகாலங்களில் காடு பற்றிய ஒரு அனுபவஅறிவு அதிகமாக கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்.

அந்த நேரத்தில் எமது அமைப்பு ஒரு நகர்ப்புற கெரில்லா அமைப்பாகவே அதிகமாக இயங்கிவந்தது. நகரின் சுறுசுறுப்பான ஓட்டத்துள் தன்னை மறைத்தபடி வாழ்ந்து கொண்டே போராடும் அற்புத ஆற்றலும் அம்மானிடம் இருந்தது.
அதே நேரம் காடு பற்றி ஒரு முழுமையான என்சைக்கிளோபீடியா கலைக்களஞ்சியம் அவர்.
காடுகளில் இரவுகளில் கடிக்கும் உண்ணிகளுக்கு மருந்து என்ன என்பது தொடக்கம் ஒரு சிறு சுள்ளியையோ சருகையோ மிதிக்காமல் எப்படி நடந்துபோய் காட்டுக்கோழியை சுடலாம் என்பதுவரை எல்லாமே அவருக்கு தெரியும்.

அமைப்பின் முதலாவது பயிற்சியின்போது அதற்கான இடத்தை தேர்தெடுப்பது தொடங்கி அதற்கான கொட்டிலுக்கான கிடுகுகளை கொண்டு சென்று போடுவது வரை அவரே செய்து அதன்பிறகு தானும் அதில் போராளியாக பயிற்சி எடுக்கும் பக்குவம் செல்லக்கிளி அம்மானிடம் நிறையவே.

இரவுகளில் காடு என்பது அளவிட முடியாத சத்தங்களின் தொகுப்பாக இருக்கும்… பயிற்சி கொட்டிலுக்குள் இரவுகளில் சிரித்து கதைத்தபடி எல்லோரும் இருந்தாலும் எல்லோராலும் உணர முடியாத வித்தியாசமான ஏதாவது ஒரு சத்தம் செல்லக்கிளிஅம்மானை உசாராக்கிவிடும்.
கைகளால் மெதுவாக சத்தத்தை நிறுத்தும்படி சைகை காட்டிவிட்டு தூரத்து சத்தத்தை அளவெடுத்து அது அல்லது அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் ஆற்றல் அம்மானுடையது.
ஒருமுறை தூரத்து சத்தம் ஒன்று ஆத்துமா கரடியுடையது என்று சொல்லுமளவுக்கு மிருகங்களின் நடத்தை விதிகளும் அவருக்கு புரிந்த ஒன்று.

செல்லக்கிளி அம்மான் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது செயற்பாட்டில் பங்கெடுக்கது விட்டிருந்தாலும்கூட அதற்கு அடுத்தாக நடந்த புத்தூர் நடவடிக்கை முதல் அனைத்திலும் பங்கெடுத்து கொண்டவர்.

அவருடைய இலக்கு தவறாத குறிச்சூடு மிகப்பிரபலம். அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பை அடுத்த கட்ட பெரும் பாய்ச்சல் ஒன்றுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பதை பகிரங்கமாக உரிமை கோரியதற்கும் காரணமான சிறீலங்கா காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை மீதான தாக்குதலில் செல்லக்கிளிஅம்மான் காட்டிய அதிஉச்ச வீரம், நுணுக்கமான நேரத்தேர்வு என்பன வரலாறு உள்ளவரை வாழும்.

 

07.04.1978 அன்று முருங்கன்-மடு வீதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் ஒரு பயிற்சிமுகாமுக்கு சிறீலங்கா காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான குழுவொன்று திடீரென சுற்றிவளைத்து உள்ளே நுழைகிறது.மிக துல்லியமாக கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறை வந்திருக்கிறது என்பதை அங்கிருந்த போராளிகள் உணர்ந்து கொள்கிறார்கள். (அந்த நேரம் அமைப்பின் உறுப்பினரான கணேஸ்வாத்தி என்பவரின் கைதின் பின்னர் அந்த இடம் பற்றிய தகவல் அவரை சித்திரவதைசெய்து பஸ்தி பெறுகிறார்.)இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை அந்த நேரத்தில் சித்திரவதைகளுக்கு மிக பெயர் பெற்றவர்.அவருடன் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் சார்ஜண்டு, வாகன சாரதியும் ஆயுதங்களுடன் வந்திருந்தனர். அதிலும் பஸ்தியின் கையில் உப இயந்திர துப்பாக்கி. அவர்கள் கையில் தலைவரின் கபொத பரீட்சைக்காக எடுத்த அடையாளஅட்டை படம் இருக்கிறது.
கொட்டிலுக்குள் பஸ்தியாம்பிள்ளை இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்ததும் அதில் இருந்த ஏழு போராளிகளுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.அதிகாலை வேளை வேறு.

செல்லக்கிளி அண்ணா தனக்கே உரிய பாமரத்தனத்துடன் பஸ்தியுடன் உரையாடி தேநீர்குடிக்க சொல்லுகிறார். மிக முக்கியமாக தாங்கள் தீவிரவாதிகள் இல்லையென்றும் விவசாயம் செய்ய வந்து இருப்பதாகவும் செல்லக்கிளி சொன்ன கதைகளை நம்பியவாறு நடித்தபடியே பஸ்தியும் சுற்றுப்புறத்தை அவதானிக்கிறார்.
பஸ்தியாம்பிள்ளையின் நோக்கம் அவர்களை பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரிப்பதுதான் ஆனால் அவர் தேடி வந்த அந்த மூவரும் இவர்களில் இல்லை. எனவே கதைத்தபடி காத்திருக்க எண்ணுகிறார்.

 

அதற்கு முந்திய காலத்தில் ஒரு பொழுதுகூட இயந்திரதுப்பாக்
கியை எமது போராளிகள் இயக்கியது கிடையாது. இயந்திரதுப்பாக்கி அமைப்பிடம் அப்போது இருந்திருக்கவில்லை.
பஸ்தியாம்பிள்ளையுடன் கதைத்தபடியே போராளிகள் கண்ணால் பேசிக் கொள்கிறார்கள். செல்லக்கிளிஅம்மானே ஒருங்கிணைக்கிறார். திடீரென பஸ்தியாம்பிள்ளையின் இயந்திரதுப்பாக்கியை ஒரு போராளி எடுத்து விடுகிறார்.பஸ்தியை இன்னொரு போராளி பிடித்து கொள்கிறார்.
ஆனாலும் பஸ்தியாம்பிள்ளை சுதாகரித்து கட்டிப்புரண்டு சண்டை இடுகிறார். இயந்திரதுப்பாக்கியை எடுத்த போராளிக்கு இயக்க தெரியவில்லை. அப்போது செல்லக்கிளி அதனை பறித்து இயக்கி பஸ்தியை சுடுகிறார்.

சிங்களதேசத்தின் நம்பிக்கைக்குரிய காவல்அதிகாரி ஒருவர் பஸ்தியாம்பிள்ளை. தமிழர்கள் அவர் பெயரை சொன்னாலே அச்சப்படும் அளவுக்கு அப்போது அவரின் அதிகாரங்களும் விசாரணைகளும் இருந்தன. அப்படியான ஒருவரை இயந்திரதுப்பாக்கி மூலம் சுட்டு விட்டு செல்லக்கிளிஅம்மான் ‘ வாழ்க தமிழீழம் என்று காடு அதிர சத்தமிட்டதாக அப்போது அங்கு நின்ற போராளிகள் சொன்னார்கள்.

எதிர்பாரத ஒரு தருணத்தில் எதிரிகளால் நிகழ்த்தப்படும் ஒரு சுற்றிவளைப்பை என்னவிதமாக தலைகீழாக மாற்றி எதிரிகளையே சுற்றி வளைத்து தாக்கும் போரியல்முறை அதற்கு பிறகு பல தடவைகள் தமிழீழவிடுதலைப்
போராட்டத்தில் தீரத்துடன் நிகழ்த்ப்பட்டு இருந்தாலும் முன்முதலில் இதனை வெற்றிகரமாக செயற்படுத்தியவர் செல்லக்கிளிஅம்மான்தான்.
செல்லக்கிளிஅம்மானை இதுதான் அவரது எல்லை என்று எதிலும் வரையறை செய்துவிடமுடியாது.

 

அவருக்குள் எல்லாவிதமான ஆற்றல்களும் முழமையாக இருந்தன.அவசரமான ஒரு பொழுதில் வாகனம் ஓட்வேணுமா அதற்கும் அவர்தான். சுற்றிவர நிற்கும் படையினர் மத்தியில் சென்று திரும்பவேணுமா அதற்கும் அவர்தான்.புதிய முறையில் விவசாயம் செய்ய வேணுமா அதற்கும் அவர்தான். .. சிக்கலான அரசியல் பிரச்சனைகளை இலகுவாக விளக்க வேணுமா அதற்கும் அம்மான்தான்.
செல்லக்கிளிஅம்மானின் அத்தனை செயல்களிலும் ஒரு பூரணத்துவம் தெரியும்.பயமே அறியாத வீரன்.
அத்தகைய வீரன் 23.07.1983 அன்று திண்ணைவேலி தாக்குதலில் வீரச்சாவை தழுவி கொள்கிறான்.
மிக பொருத்தமாக அதற்கு பின்னர் 1985ல் அமைப்பால் வெளியிடப்பட்ட “விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு 1975-1984” என்ற புத்தகத்துக்கு அட்டைப்படமாக செல்லக்கிளிஅம்மான் மரம் ஒன்றில் ஏறி நிற்கும் படத்தையே தலைவர் தேர்வு செய்கிறார்.உண்மைதான்!! தமிழர்களின் போராட்டத்தின் முக்கிய குறியீடு செல்லக்கிளிஅம்மான்.

நினைவுப்பகிர்வு:- ச.ச.முத்து

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments