நாடுகடந்து ஓடிய வேர்கள்
நாடிய விடுதலை தேடிய பேர்கள்
சூரியத் தேவனின் நேரிய கதிர்கள்
பாரிஸ் நகரின் வீரியப் புலிகள்.
தாயகம் தாண்டிய வேகத்தின் தடங்கள்
தாய்மண் வணங்கிடும் காவியத் திடங்கள்
ஓவியமாகிப் பேசிடும் படங்கள்
தீவிரமான போராட்ட வடங்கள்.
பனியின் மழையிலும் பணிகள் தொடர்ந்தவர் – புலி
அணிகள் வென்றிட பணபலம் தந்தவர்
புலிகள் பெருமை போற்றிட நடந்தவர்
தமிழர் மனதில் பதிந்து படர்ந்தவர்.

எரிமலைக் குரலாய் மூசிய வீரர் – எம்
ஜீவகானம் இசைத்திட்ட குயில்கள் – எமக்காய்
ஜீவனைக் கொடுத்த நிதர்சனக் கவிகள்.
கிட்டண்ணா வழிதொடர்ந்த சிட்டுக் குருவிகள் – அவர்
தொட்ட திசைகளிற் பாய்ந்த அருவிகள்.
தட்டித் தட்டிப் புடம் போட்ட தங்கங்கள்
எட்டும் விடியலின் இலட்சிய நாயகர்கள்.
உலகத்தின் நோக்கைத் தமிழர்பாற் திருப்பியவர்
உரிமைப் போரினது நியாயத்தை விளக்கியவர்
தலைவரின் சொல்லுக்கு செயலாய் நின்றவர்
மலைபோன்ற துயரிலும் அசராமல் வென்றவர்.

நிசியிலும் பறந்து நேரங்கள் மறந்தவர்.
சதியினில் விழுந்து வீரச்சாவினை அணைத்தார் – அவர்
பதினெட்டாம் ஆண்டு நினைவிலே நடக்கிறோம்…
தேசம் நகர்ந்தும் தேசத்திற்காய் வாழும்
தேசப் புதல்வரை எம் தேசம் மறக்காது – தமிழத்
தேசம் மலர்கையில் தேசிய வீரரிவர்
தேசக் காவலராய் தேசத்தை ஒளிரச்செய்வர்.
கவியாக்கம்:- கலைமகள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”