இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்கள நாயகர்கள் லெப். கேணல் சேகர் .!

லெப். கேணல் சேகர் .!

சாவுக்குள் உழைத்த வீரம்.!

1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு மையத்தலத்தினுள் முன்னேறி எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தான் எதிரி.

எதிரிக்காக எடுத்த சாதியின் அடி எங்கள் முதுகளிலேயே விழுந்துவிடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக் கோடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்பநேருமா? தலைவன் இட்ட ஆணையை வீணேபோக விட்டு வெறுங்கையுடன் திரும்பப்போகிறோமா? இவை எதையும் ஏற்றுக்கொள்ள எங்கள் மனங்கள் மறுத்தன. ஆனாலும், யதார்த்தம் எங்கள் பிடரிமயிரைப் பிடித்துலுப்பியது. வழிதெரியாது, மனம் வெப்பியாரத்தில் உழன்றது. எல்லா அலைவரிசைகளையும் வேகமாய் நோட்டமிட்டபடி அங்குமிங்கும் ஏதோ ஒரு நம்பிகைச் செய்திக்காய் தவித்தபடியிருந்தோம்.

மூத்த தளபதிகள் நிலைமையை அவதானித்தவாறு தொலைத் தொடர்புக் கருவியின் ஒலிகளை தமது காதுகளுள் வாங்கிக்கொண்டிருந்தனர். எங்கும் அமைதி நிலவியது. ஓர் அலைவரிசையிற் கம்பீரமான கட்டளைக்குரல் நிதானமாய், நேர்த்தியாய், உற்சாகமாய் களத்தைத்தன் கையிற்குள் வைத்திருப்பதை உணர்த்துமாறு ஒலித்துக் கொண்டிருந்தது. எதிரியின் பலம் வாய்ந்த முன்னரண்களையெல்லாம் வீழ்த்தியபடி, முறியடிக்கவந்த எதிரிகளை சாவுக்குள் அனுப்பியபடி தனக்கு தரப்பட்ட பகுதிகளைக் கடந்தும் ஓர் அணி முன்னேறிக்கொண்டிருப்பதை அந்தக் கட்டளைகள் தெளிவாக உணர்த்தின. அந்தக் கட்டளைக்குரல் தந்த உற்சாகத்திலிருந்து விடுபட மனம் மறுத்தது.

“ஆர்….  அந்த இடத்தில நிக்கிறதெண்டு பாருங்கோ” என்று தளபதி ஒருவர் கூற, மூத்த தளபதியொருவர்.

“அந்த  ‘வரைபடத்தை’ (மப்) பை எடு, இடம் எதென்று பார்”

“அது சேகரின்ர இடம், சேகர் பிடிச்சுக்கொண்டு போறான். பயப்படத் தேவையில்லை. சேகர் விடமாட்டான்.”

அந்தச் சமரோடு சம்பந்தப்படாவிட்டலும் அந்தச் சமரை அவதானித்துக் கொண்டிருந்த தளபதிகள் நம்பிக்கையுடன் உற்சாகமடைந்தனர். சேகர் பிடித்த காவலரண் பகுதிகளை மீளக் கைப்பற்ற எதிரி கடுமையாக முயன்றான். ஏனைய பகுதிகளை நாம் இழந்துவிட்டபோதும் சேகர் தனக்குத் தரப்பட்ட பகுதிக்கு அப்பாலும் எதிரிப் பகுதிகளைக் கைப்பற்றியிருந்தான். கிளிநொச்சி நகரின் மத்திய பகுதிவரை கைப்பற்றப்பட்ட எதிரித்தளத்தைத் தக்கவைக்கவென அணிகளை நிலைப்படுத்தியபோது எதிரிக்கும் எமக்குமிடையிலான சண்டை வலுப்பெற்றது. எதிரியின் விடாப்பிடியான, தீர்மானமான சண்டையைப் போர்க்களம் கண்டது. ஒன்பது தடவை சேகரிடம் தோற்றுப்போன எதிரி, பத்தாம் முறையும் முன்னேறி மூக்குடைபட்டான். கிளிநொச்சியிலிருந்து பேருந்து விடச் சவால்விட்ட எதிரிக்கு, எங்கள் நிலத்தில் அவலத்தை விதைத்த எதிரிக்கு, தலைவரின் ஆணையை நிறைவேற்றி, நிலம் மீட்டு மரணப்படுக்கை விரித்தான் தளபதி சேகர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தன்னை நியமித்த தலைவர்கள் மெச்சும்படியாகத் தன் ஆளுமையை அவன் வெளிப்படுத்திய முதற்சமர் அதுதான்.

‘ஓயாத அலைகள் – 02’ நடவடிக்கையில், கடுமையானதெனக் கருதப்பட்ட பகுதிக்கான கட்டளைத் தளபதியாகத் தலைவரால் அவன் நியமிக்கப்படுவதற்கு இதுவே காரணமாகியது. அச்சமரில் எதிரியின் வலுமிக்க பேரணியை, தளத்தின் மையப்பகுதியின் திறவுகோலாக அமைந்த பகுதியிலேயே எதிர் கொண்டு எதிரியின் தீர்மானமான முறியடிப்பை மோதியுடைத்து வெற்றியை எமதாக்கியவன் சேகர். இப்பகுதியிற் போரிட்டுத் தோற்ற எதிரிப்படைக் கொமாண்டருக்கு எதிரியின் கட்டளைப்பீடம் வீரவிருது கொடுத்துக் கெளரவித்தமை சேகர் எதிர் கொண்ட சண்டையின் காத்திரத்தை அனைவருக்கும் புரியவைக்கும்.

என்றும் மரணத்துள் வாழ்ந்தவன், மரணத்திற்கு அஞ்சாதவன். ஆனால் மரணத்தை விரும்பாத அவனது மனம் எதையோ சாதிக்கத் துடித்ததை அவனை அறிந்தவரே அறிவர்.  அதை அறியாதவர்களால் இலகுவில் அந்தச் சாவைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான சர்ந்தப்ப்பங்கள் நீண்டிருந்தால், மாளும் பகையின் பின்னாலும் மீளும் எம் நிலங்களின் பின்னாலும் அவன் இருந்திருப்பான்.  தலைவன் சுட்டும் திசையெங்கும் அவன் புலிக்கொடி நாட்டிப் பெருமை சேர்த்திருப்பான்.

பத்து வருடத்தின்முன் மாங்குளம் முகாம் தகர்ப்பின்போது, அப்போதுதான் பயிற்சி முடிந்து வந்திருந்த மெல்லிய உருவங்கொண்ட, தலை சாய்த்து இழுத்திருந்த, கறுப்பை அண்டிய பொது நிறமான அந்தப் பதினைந்து வயதுப் பெடியன் அந்தப் போர்க்களத்தின் மத்தியில் நின்று காயப்பட்ட வீரர்களைச் சுமந்து சென்றுகொண்டிருந்தான். இதுதான் போராளி என்ற பெருமைமிக்க வாழ்வில் இந்த சின்னப்பெடியன் கண்ட முதற்களம்.

ஒன்பது வருடங்களின்பின், தென்முனையில் எதிரி மீண்டும் மாங்குளம்வரை ஆக்கிரமித்திருந்த பொது மாரிப்பிரவாகமென எழுந்தது ‘ஓயாத அலைகள் – 03’. அம்பகாமத்தில் உடைப்பெடுத்து ஒலுமடுத் தளத்தை வீழ்த்தி, கரிப்பட்டமுறிப்பை வெற்றி கொண்டு, கனகராயன்குளம் கட்டளைத் தலைமையகத்தைத் தோற்கடித்து மாங்குளத்தை எமது கைகளுக்கு மீட்டது. இந்தச்சமரில் இதைச் சாதிக்கக் களத்தில் தலைமை தாங்கிக்கொண்டிருந்தத தளபதி அன்று மாங்குளம் முகாம் தகர்ப்பிற் காயப்பட்ட போராளிகளைச் சுமந்துகொண்டிருந்த அதே சின்னப் பெடியன் சேகர்தான். இந்த உயர்பணியை ஆற்ற இந்த ஒன்பது வருடத்தில் அவன் எத்தனை களங்களைக் கண்டிருப்பான். ஓயாது உடல் வருத்தி அவன் எப்படி உழைத்திருப்பன்.

போர்க்களத்தில் ஆரம்ப காலங்களில் இவன் 50கலிபர் அணியின் தலைவனாக இருந்தான். பதுங்கித்தாக்குதல்களும் அதிரடித்தாக்குதல்களுமே நடந்த அன்றைய சண்டைக் காலத்தில் அச்சண்டைகளுக்கு 50கலிபர் அணி தேவையானதாக இருக்கவில்லை. எல்லோரும் சண்டைகாகப் புறப்படும்போது அவன் வாய்ப்பின்றி இருந்தான். ஆயினும், எவரும் சிந்திக்காத கோணத்திற் சிந்தித்துத் தளபதியிடம் தனது அபிப்பிராயத்தைச் சொல்லி அனுமதி கேட்டு, தானே வேவுபார்த்து, வாய்ப்பான இலக்குகளைத் தெரிவுசெய்து தன்னுடன் 50கலிபர் அணியை மட்டுமே வைத்து அன்று எதிரிகளுக்குத் தலைவலியாய் எழுந்தான். சொல்லக்கூடிய பல சண்டைகளை அவன் வெற்றிகரமாகச் செய்தான். இதுவே, தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘பசீலன்’ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு அவன் அனுப்பப்படுவதற்கான தகுதியை அவனுக்குக் கொடுத்தது.

பயிற்சி முடித்து வெளியேறியபின் சேகரின் தோள்கள் அதிக பாரத்தைச் சுமக்கத்தொடங்கின. இனத்தின் விடுதலைக்காக எதிரிகள் வாழ்ந்து உழைக்கத் தொடங்கினான். அவன் நேசித்த மக்களுக்காக அந்த வீரனின் இனிய இளமைக் காலங்களெல்லாம் எதிரியோடோ போராடுவதிலேயே கரைந்தன.

மண்டைதீவு, மூன்றாம் கட்ட ஈழப்ப்போர் மூண்டபோது, அந்த உப்புக்கடல் சூழ்ந்த பகை முகாமினுள் தலைவனின் திட்டப்படி எவருக்கும் தெரியாது ஏதோ செய்துகொண்டிருந்தார்கள் சேகரும் அவன் தோழர்களும். அந்த முகாமின் இறங்க்குதுறையிலிருந்து பிரதான் முகாம்வரியா கடினமான பகைபிரதேசத்தினுள் கடல்நீரிலும் நிலத்திலுமாக, சீரான உணவும் நித்திரையுமின்றி எத்தனை நாட்கள் உழன்றது சேகரின் வாழ்வு. அந்த வாழ்வின்மூலம் ஒரு தாக்குதல் திட்டத்திற்க்கான பெறுமதியான தகவல்களை அவன் பெற்றுத்தந்தான்.

சிறிய தவறுகள்கூட போராளிகள் பலரின் உயிர்களை அந்தக் கடல் நீரினுள்ளேயே கரைத்துவிடும். அப்படி எதுவும் நடந்துவிடுவதை விரும்பாத தலைவர், தளபதிகள் வகுத்த திட்டத்திற்கு மேலாக சில மாற்றுத்திட்டங்களைப் பரிந்துரைக்க, அதற்காக ஓர் உடனடி வேலை செய்துமுடிப்பதற்கு எல்லோரின் கண்களுள்ளும் நிழலாடியவன் நம்பிக்கைக்குரிய சேகர்தான்.

அவசர அவசரமாக அந்த வேவுப் பணிகளைச் செய்துமுடித்து, நம்பிக்கையான தகவல்களைத் திரட்டினான். தலைவரின் திட்டப்படி 15 பேர்கொண்ட அணிக்குத் தலைமையேற்று எதிரியுள் இரகசியமாக ஊடுருவி, அந்த இறங்குதுறையைத் தீடிர் தாக்குதல் மூலம் கைப்பற்றிப் பிரதான முகாமிற்கான தாக்குதல் அணிகளை உள்ளேடுக்கவேண்டிய முக்கியமான பனி சேகரிடந்தான் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த இருபது வயதேயான சேகரை நம்பிப் பெரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. எம் எத்தனை போராளிகளின் உயிர் இருப்பு அவன் கைகளில் இருந்தது. எல்லாவற்றையும் சிந்தித்துப் பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடியவனென எல்லோரும் அவனில் வைத்த நம்பிக்கையை அந்தச் சண்டையில் தனது செயலின்மூலம் மெய்ப்பித்தான்.

திட்டத்தின்படியே தனது அணியுடன் உள்நுழைந்து, தாக்குதலுக்காகக் காத்திருந்த அந்த சொற்ப நேரத்திற் பிறிதொரு பகுதிக்குரிய அணியொன்று பாதைமாறி வந்துவிட, எதிரியின் கண்களுக்குள் மண்ணைத்தூவி அவர்களை அத்தனை விரைவாய் உரிய இடத்திற் சேர்த்து விட்டு, எதிரி உசாரடைந்துவிடக்கூடாது என அந்தத் தடயங்களை அழித்தபடி தன் பணிக்கு வந்துசேர்ந்து, எத்தனை சாதுரியமாய் அந்தக் களத்தில் அவன் சுழன்று பனி முடித்தான். எதிரிக்கு அதிர்ச்சிகரமான அழிவைக்கொடுத்து, ஒரு நாளுக்குள்ளேயே வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்ட அந்தத் தாக்குதலில் நாம் பெரும் இழப்புக்களின்றியே சாதித்த வெற்றிக்குப் பின்னல் சேகரின் பலமாதக் கடும் உழைப்பு இருந்தது.

 

 

‘சூரியக்கதிர்’ எதிர்ச்சமர் நடவடிக்கை. அந்தக் காலத்தில் எம்மிடம் பீரங்க்களோ, ஆட்லறிகளோ இருக்கவில்லை. வெகு அணிகளோ எமது வலுமிக்க பீரங்கிகள் என்று சொல்ல வேண்டும். அந்தக் களத்திற் சின்னச்சிறு வேவு அணிகளுடன் எதிரிப் பிரதேசத்தின் உள்ளே அடிக்கடி போய்வரும் சேகர். எதிரியின் செயற்பாடுகளை அவதானித்து அவனது போர் ஏற்பாடுகளை அறிந்து, எமது எதிர் நடவடிக்கைக்கான தகவல்களை அனுப்பிக்கொண்டிருப்பான்.  அந்தக் களத்தில்  ‘உறங்காத கண்மணியாய்’ உலாவிக்கொண்டிருந்தான் சேகர்.

அந்த நாட்களில் ஒருநாள் பெண் போராளிகளின் பகுதியினூடாகத் தன் வேலைக்காகப் போய்க்கொண்டிருந்தவனிடம் “என்ன சேகர் நெடுகலும் குண்டோடையே திரியிறீர்” என்று அவர்களின் தளபதி கேட்பதற்கு “நான் ஒரு வேவுக்காரன் எனக்குக் குண்டுதான் எல்லாமே இதை வைத்தே எல்லாத்தையும் சமாளிப்பான்” என்று சொல்லிக்கொண்டிருந்தவன், தீடிரெனப் பாய்தோடி மதில் ஒன்றைக் கடக்கக் குண்டு ஒன்று வெடித்தது. எல்லோரும் திகைத்துப் போனார்கள். சில வினாடிகளில் நடந்ததைப் பார்த்து வியப்படைந்தனர். அந்த மதிலுக்குப் பின்னால் எதிரிகள் சில சேகர் அடித்த குண்டில் மாண்டுபோய்க் கிடந்தார்கள்.

எமது பிரதேசத்தின் உள்ளேயே சாதாரணமாக ஒரு போராளியுடன் உரையாடும்போதுகூட அவனது கண்கள் மட்டுமல்ல மனதும் எதிரியைச் சுற்றியே உலாவிக்கொண்டிருக்கும். அந்த அசாதாரண ஆற்றல் அவனுக்கே உரியது என்று சொல்வதைவிட வேறு எப்படிச் சொல்வது. அன்று அவ்விடத்தில் அவன் இல்லையென்றால் ஒருவேளை எதிரியின் திகைப்புத் தாக்குதலில் எங்கள் பெண் தளபதிகளையும் போராளிகளையும் நாம் இழந்திருக்கக்கூடும்.

 

புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து பினவாங்கியதனாற் பெரும் இராணுவ வெற்றி ஒன்றைக் கட்டாயமாக ஈட்டவேண்டிய நிலையிலிருந்துனர். அந்நிலையிலேதான் ஓயாத அலைகள் ஒன்று திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் வெற்றி எடுக்கப்படும் வேவுத்தரவுகளிலேயே பெரிதும் தங்கி நின்றது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வேவு நடவடிக்கையில் முக்கியமான ஒரு பகுதியின் வேவுப்பணிகள் சேகரிடம் கொடுக்கப்பட்டன. மீண்டும் சேகர் எதிரிகள் வாழத்தொடங்கினான். இறுதியில் எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு, சமருக்கான தாக்குதற் பணிகள் தலைவராற் பிரித்துக்கொடுக்கப்பட்டபோது, சேகரின் தோள்களில் விழுந்தது சாதாரண சுமையன்று, அது வெற்றிக்கான ‘சாவியை’க் காவிச்செல்லும் சுமை.

இரவு பகலாக நீந்தித் திரிந்து பெருங்கடலினுடாகத் தெரிந்தெடுத்த நகர்வுப் பாதையின் மூலம் தாக்குதல் அணிகளை உள்னகர்த்தி தளத்தின் கடற்கரைக் காவலரண்களைத் தகர்த்தெறியவேண்டும். இத்திட்டம் நிறைவுசெய்யப்பட்டபோது, கடற்கரையை அண்டியிருக்கும் எதிரியின் கட்டளைப்பீடம் எமது அச்சுறுத்தலால் நிலைதடுமாற அச்சமருக்கான எமது ஏனைய நடவடிக்கைகள் சுலபமாக்கப்பட்டுவிடும்; வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிடும். அதற்காக லெப். கேணல் தர்சனின் கடற்புலிகள் அணியை அழைத்துச் சென்றவன் அவன்தான்.

சிறிய தவறொன்று நடந்தாலும் பெருங்க்கடலாற் செல்லும் அணிகளுக்கு மீட்சியே கிடையாது. அத்தனை உயிர்களும் கடலோடு கரைந்துபோக வேண்டியதுதான். சேகர் திரட்டிய தகவல் மீதும் செகறது ஆற்றல்மீதும் கொண்ட நம்பிக்கையால் மட்டுமே தீட்டப்பட்ட இத்திட்டம் இறுதியில் வெற்றிகண்டது. தளம் எங்களின் கைகளில் வீழ்ந்தது.

அந்த வெற்றிக்காக உழைத்த எங்கள் சேகர், தோல்வியை மூடிமறைத்துவிட ஆனையிறவுத் தளத்திலிருந்து எதிரி எடுத்த ‘சத்ஜெய’ நடவடிக்கைக்கு எதிராக முன்னணி வேவு அணிகளுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தான். ‘சத்ஜெய’வின் இரண்டாம் கட்டத்தில் எம்மிடம் செம்மையாக வாங்கிக்கட்டிப் பல நூறு எதிரிகள் மாண்டுபோன அந்த வெற்றிகர முரியடிப்புச்சமரின் பின்னால் அதன் மூலவேர்களில் ஒன்றாக சேகரும் இருந்தான். தனது அணியை வைத்து எதிரிகுள்ளேயே எதிரியின் ‘ராங்கி’யை அழித்த சாதனை அந்தச் சமரில் அவனது பங்கைச் சொல்லும்.

அவனது கால்படாத களங்களே இல்லையெனும்படி போர்க்களக் கதாநாயகனாக அந்த எளிமையான போராளி உலாவந்தான். ‘ஐயசிக்குறுய்’ களம்தான் எங்கள் வீரனது உச்சளவு உழைப்பை உறிஞ்சியது. அவனை ஒரு தளபதியாகவும் உயர்த்தியது. அந்தக் களத்தில் எத்தனை சவால்களை எதிர்கொண்டபோதும் வெற்றிகொண்ட அவனது மன ஆற்றலின், தாங்கு சக்தியின் எல்லை எதுவென யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

கொடுக்கப்பட்ட சுமைகள் அனைத்தையும் சுமந்தான். இந்தத் தேசத்திற்காக இன்னும் இன்னும் பாரம் சுமந்தான். “சிறு அணிகளை வைத்துக்கொண்டு போர்க்களத்திற் பெரும் பணிகளை ஆற்றக்கூடிய வல்லமையை நான் அவனிடத்திற் கண்டேன். சில சமர்களில் அவனது இந்த ஆற்றல்தான் எமக்குப் பெருவெற்றிகளைத் தந்தது” என்று பெருமையுடன் மனம் நெகிழ்ந்து பாராட்டினார் அவனை வளர்த்த தளபதி கேணல் தீபன். ( பிரிகேடியர் தீபன் )

 

‘வெற்றி உறுதி’யென்று எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். ஆனால், அவன் பிடரியில் அடிகொடுக்கும் தலைவரின் போர்வியூகத்திற்காகத் தாண்டிக்குளம் ஊடறுப்பிற்குப் புலியணிகள் தயாராகிக்கொண்டிருந்தன. தளபதிகளும் போராளிகளும் அதற்காகச் சென்றபோது புளியங்குளம் பகுதியின் முன்னணிக் காவல்நிலைகளுக்குத் தற்காலிகப் பொறுப்பாளனாகச் சேகர் நியமிக்கப்பட்டான். தளபதி ஒருவருக்குரிய பணி தலைவறாற் சேகருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவனது ஆளுமைக்கு அத்தனை விரைவாகப் பரீட்சை வைத்தான் எதிரி. மட்டுப்படுத்தப்பட்ட அணிகளுடன் நின்ற சேகரின் மேல் எதிரியின் படைவெள்ளம் அணையுடைத்துப் பாய்ந்தது.

சமரை எதிர் கொண்டான் சேகர். தானே முன்னின்று தனது சிறிய அணிகளைத் களமிறக்கி சண்டையிட்டான். சமர் உக்கிரம் கண்டது. எவருமே எதிர்பார்த்திராத ஒரு சமரை அன்று அவன் நிகழ்த்தினான்.  மூன்று ராங்கிகள் அழிக்கப்பட்டுக் கொத்துக் கொத்தாய் எதிரி சாய்ந்து விழப் பகைவன் பனிக்க நிராவியுடனேயே முடங்கிப்போனான்.

புலிகளின் முன்னணிப் படைகளோ கட்டளைத் தளபதிகளோ இல்லாதிருந்துங்க்கூட அப்படியொரு மரண அடியை தாங்கள் பெற்றதை எதிரி நம்பவேமாட்டான். இதைச் சாதித்த சேகர் ஒரு தளபதி என்ற உயர்நிலையில் பெரும் பணிகளைச் சுமக்கத் தொடங்கினான். இக்காலத்தில் இயக்கம் இழந்த அனுபவமிக்க வீரத்தலபதியான லெப். கேணல் தனத்தினுடைய பொறுப்புக்கள், தனம் சுமந்தா சுமைகள் எல்லாவற்றையும் சேகரின் தோள்கள் சுமக்கத்தொடங்கின.

அப்போது புளியங்குளம் புலிக்குகையாக மாறியிருந்தது. அதற்குள் நுழைய நினைத்தால் அதற்குள்ளேயே மாளவேண்டியதுதான். எதிரி எவ்வளவோ முயன்றும் அந்தக் குகையை அசைக்க முடியவில்லை. அது தலைவர் போர்க்களத்தில் அறிமுகப்படுத்திய புதிய தந்திரமாகும்.  அதனை நிறைவேற்றத் தளபதி கேணல் தீபனுக்குத் துணையாக நின்றவன் தளபதி சேகர்.  எதிரி புளியங்குளத்தை நினைக்குந்தோறும் தந்து சாவையும் நினைக்கவேண்டிய களச் சூழலை உருவாக்கினான்.  அதற்காக அவன் சிந்திய வியர்வையும் கொண்டிருந்த ஓர்மத்தையும் போராளிகள் ஒவ்வொருவரையும் இராணுவத்தினர் பலருக்குச் சமனாக வளர்த்தெடுத்த திறனையும் எழுத்தில் வடிக்கக முடியாது. ஒவ்வொரு அரணிலும் சேகர் ஒருமுறை கதைத்து விட்டுச் சென்றால் அதுவே ஓர் இரும்புக்கோட்டையாக மாறிவிடும்.  இப்படித்தான் புளியங்குளம் புரட்சிக்குளமாக மாறி எதிரிக்குச் சாவை நோக்கிய பயணத்தைக் கொடுத்தது.

1998 மாசி மாதம், அந்தக் கிளிநொச்சி ஊடறுப்புச் சமர் சேகரின் போரியல் ஆற்றலுக்குச் சிகரம் வைத்த சமர்.

“நான் சாதித்துவிட்டு.  எனக்குத் தந்த பணிகளையெல்லாம் என் போராளிகள் செய்துவிட்டார்கள். எதிரிகளை ஓட ஓட இன்றைய களத்தில் நானும் எனது போராளிகளும் விரட்டினோம். ஆனால், நான் என் போராளிகள் பதின்மூன்று பேரை இழந்திருக்கின்றேன். அந்த உயிரிழப்பு என் மனத்தைக் குடைகிறது என்று அந்த சமர்பற்றி சேகர் நாட்குறிப்பில் எழுதியிருந்தான்.

சேகர் தன போராளிகளை நேசித்தான். அவர்களின் இழப்புக்கள் அவனை வாட்டின, போராளிகளின் துன்பத்தில் அவனும் பங்கெடுத்தான். ஒருநாள் கிளிநொச்சியில் நாம் இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய பகுதியிற் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போராளியோருவன் கண்ணிவெடியால் காலிழந்தான். “நான் படையணியைப் பொறுப்பெடுத்த இவ்வளவு காலத்துள் எனது பிழையாற் போராளி ஒருவனின் காலைப் பறிகொடுத்துவிட்டேன். 56 நாங்கள் பயன்படுத்திய பாதையில் இதுவரை வெடிக்காத கண்ணிவெடி இன்று வெடித்தது ஏன்?  எப்படியோ நான்தான் அதற்குக் காரணம், என்னுடைய கவனமின்மையால் எனது படையணியில் ஏற்ப்பட்ட முதல் இழப்பு இதுதான். நான் இப்படி மேலும் வேறு பிழைகள் விட்டு என்னருமைப் போராளிகளின் அனாவசிய இழப்புக்குக் காரணமாக இருத்திருக்கிறேனாவென யோசித்துபார்கிறேன். நான் அறியக் கூடியதாக இல்லை. இனி இப்படி ஒரு பிழையை விடமாட்டேன் என இந் நாளினில் உறுதியெடுத்துள்ளேன் (27.03.1998), என்று சேகர் தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தமை அவன் தன் போராளிகள் மீது வைத்திருந்த பற்றுக்குச் சான்றாகும்.

கிளிநொச்சியிற் தான் பிறந்த மண்ணில் தன் இனத்தைக் கொன்று குவித்துத் தாண்டாவமாடிய எதிரியை, மாசி மாதச் சண்டையில் வீரச்சாவடைந்த பெண் போராளிகளின் உடல்களைச் சீரழித்து இழிவுபடுத்தி வெறியாடிய எதிரியை 1998 ஆணி 4ம் நாள் சண்டையில் தன் படையணி மூலம் கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவித்தபோதுதான் அவன் மனம் அமைதியடைந்திருந்தது.

மன்னாரில் ‘ரணகோச’ என்ற பெயரிற் புறப்பட்டுவந்த எதிரி, எமது போராளிகள் பலரைக் கொன்றபோது துடித்துப்போனவன், ‘ரணகோச – 05’ என அதே எதிரிகள் புறப்பட்டு வந்தபோது நேரில் நின்று படைநடத்தி நூற்றுக்கணக்கில் எதிரிகளைக் கொன்று பதில் கொடுத்த பின்தான் நிம்மதியடைந்தான். எல்லாவற்றையும்விட அவன் பகுதிப் பொறுப்பாளராக இருந்தபோது இரண்டுமுறை அடுத்தடுத்து ‘வோட்ட ஷெற்’ என்று புறப்பட்டுவந்த எதிரிகள் எமது பெண் போராளிகள் பலரின் உயிர்களைப் பரித்துவிட்டபோது அவனது நெஞ்சில் நெருப்பேயெரியத் தொடங்கிற்று.

சில நாள்களுக்குள்ளேயே ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையில் கேணல் தீபனின் கட்டளையின்கீழ் பெண் போராளிகள் கொல்லப்பட்ட அதே பகுதியூடாகப் பெண் போராளிகளையும் வழிநடத்தி அம்பகாமம், ஒலுமடு கரிப்பட்டமுறிப்பு எனப் படைத்தளங்களை வீழ்த்திக் கனகராயன்குளத்தையும் வெற்றிகொண்டபோதுதான் ஆறுதலடைந்தான்.

ஆணியிறவிற்கான இறுதிச் சமர்களின்போது முகாவில் ஊடறுப்பு முயற்சியில் ஓர் அணிக்குத் தலைமையேற்றுப் போனவன், எதிரியிடம் அடிவாங்கித் தன தோழர்களை இழந்து வந்தபோது துயரமும் ஆவேசமும் மேலிட, மீண்டும் மிகக் கடுமையாக உழைத்து இறுதியில் ஆனையிறவை வீழ்த்துவதற்கான சண்டையில் ஒரு படைத்தொகுதிக்குத் தலைமைதாங்கி அல்லிப்பளை நீரேரிவரை படைனடத்திப் பெருமளவில் எதிரிகளை வீழ்த்தி வெற்றிகொண்டபோது தான் அவன் துயரத்திலிருந்து மீண்டான்.

தென்போர்முனையில் நின்றவனை இந்தக் களத்தின் கடுமை அவனது தேவையை உணர்ந்து அழைத்தது. குடாரப்புவில் தஹ்ரையிரங்கிய அணிகள் இத்தாவில் கண்டாய் வீதியில் 30,000 எதிரிகள் நடுவே போரிட்டுக் கொண்டிருந்தன. தாளையடுத் தளத்தை நாம் வெற்றிகொல்லாமல் அந்தப் போராளிகளுக்கான எந்த விநியோகங்களும் சாத்தியம் இல்லை என்ற நிலை இருந்தது. காயப்பட்டவர்களை எடுப்பதிலிருந்து உணவு, வெடிபொருள்வரை அனைத்துமே நெருக்கடிக்குள் இருந்தன.

53வது டிவிசனின் ‘கொமாண்டோ பிரிகேட்’ தளம். எதிரியின் நடவடிக்கை ஒன்றிற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில் நிலை கொண்டிருந்த பலமான கோட்டை அது. முன்னர் எம்மால் வீழ்த்தப்பட்ட கிளிநொச்சித் தளத்தின் பலத்திர்க்குக் குறையாத வலுமிக்க தளம் அது. குடாரப்புவில் இரவில் தரையிறங்கிய அணிகள், விடிந்தபோது தமது கடல் தொடர்பை இழந்து போயின. தாளையடித் தளத்திற்கான சமர் தொடங்கியது.  எதிரியைத் தோற்கடித்தவாறு மூர்க்கமாக, எல்லோருக்கும் நம்பிக்கை தரும்படி முன்னேரிகொண்டிருந்ததன் புலியணிகள். ஆனால், அன்று மாலைக்குள்ளேயே நாம் கைப்பற்றிய பகுதிகளிற் கணிசமானவற்றை எதிரி மீண்டும் கைப்பற்றிவிட்டான். இத்தாவிலில் தரையிறங்கி நிலைகொண்டிருந்த அணிகள் கேள்விகளோடு காத்திருந்தன.

மறுநாள் விடிவதற்குள் மாற்று ஏற்பாடுகள் செய்தேயாகவேண்டும். சேகரைக் களமிறக்க ஏற்பாடாகியது. அணித்தலைவர்களையெல்லாம் ஒன்றுகூட்டித் தளபதி தீபன் கதைத்தார். “இது எங்கட ஆயிரம் போராளிகளின் உயிர்ப் பிரச்சினை. நாங்கள் எல்லோரும் உயிரோடு இருந்துகொண்டு ஆனையிறவை வீழ்த்தாமல் அவர்களின் அழிவிற்குக் காரணம் சொல்லேலாது. நாங்கள் வென்றுதான் ஆகவேண்டும். இல்லையென்றால் நாங்கள் இதில் முயன்று அழிந்தால் எங்கட பக்கம் நியாயம் இருக்கும்.”

சேகர் போராளிகளையும் தனது பணியையும் எண்ணியவன், எழுட்சிகொண்டவனாக இரவிரவாய்த் தவண்டு புரண்டு தானே வேவுபார்த்தான். மறுநாள் போரின் ஒரு முனையை வழிநடத்திக் களம் குதித்தான். அந்தத் தளத்தை அடுத்துவந்த நாற்பது மணித்தியாலத்திற்குள் வெற்றிகொள்ளப்பன்னினான் எங்கள் தளபதி சேகர். அப்போது தலைவரின் ஆனையிறவிற்கான வியூகம் முழுமை பெற்றது.

1998ல் ‘ஓயாத அலைகள் – 02’ இன் வெற்றிச் சாதனையிற் சேகரின் பங்கை அறிந்த அவைவரிடமும் பாராட்டுப்பெற்று மகிழ்ட்சியில் திளைத்திருந்தவன், அடுத்துவந்த சில மாதங்களிற் படையணிச் சிறப்புத் தளபதி என்ற பொறுப்பிலிருந்து தளவராளி எடுக்கப்பட்டான்.  அதிரித் தளத்தில் எடுக்கப்பட்ட பொருட்களைத் தனது படையணித் படையணித் தேவைக்காக அனுமதி பெறாமல் வைத்திருந்தமைக்ககத் தண்டனை பெற்ற சேகர், ஓர் அணியின் தலைவனாக நியமனம் பெற்றுச் சிராட்டிக்குளம் காவலரண் பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. மெல்லிதயம் படைத்த சேகர் தான்விட்ட தவறுக்காக வருந்தினான். தலைவரால் தண்டிக்கப்ப்படும்படியான தவறிழைத்தேனே எனக்கலங்கினான். சிறந்த போராளியான அவன் மீண்டும் படிநிலை வளர்ச்சியடைந்து தலைவர் அவர்களின் நம்பிக்கைபெற்று, கேணல் தீபனுக்குத் துணையாக தளபதியாக உருவெடுத்து, 2000ம் ஆண்டு 6ம் மாதம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தலைவரால் மீண்டும் நியமிக்கப்பட்டான். அந்தப் புகழ்பூத்த படையணிக்கு மீண்டும் தலைமையேற்றவன் தலைவரின் எதிர்பார்ப்புக்களிற்கேற்பத் தன் படையணியைப் பெரும் தேவை ஒன்றிற்காகத் தயார்ப்படுத்தியிருந்தான்.

‘ஓயாத அலைகள் – 04’, மட்டுப்படுத்தப்பட்ட முதல்நாள் சண்டை ஓரளவு வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் ஒரு பணிக்காக சென்ற எமது அணியொன்று எதிரியின் சூற்றிவளைப்பிற்குள் அகப்பட்டிருந்தது. மீட்க எடுத்த முயற்சிகள் தோற்றுப்போயின. சேகர் உழலத் தொடங்கினான். சாப்பாடின்றி, நித்திரையின்றி மீண்டும் மீண்டும் முயன்று தோற்றும், விடாது முயன்று தன் வீரர்களை அதிகாலை மீட்டெடுத்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சியை எழுதி உணர்த்திவிட முடியாது. தன் போராளிகள் மீது அவன் கொண்ட அன்பு சாதாரணமானதன்று. அதனால்தான் அவனது பிரிவை மரணகளத்துள் வாழும் போராளிகளாற்கூடத் தாங்கமுடியவில்லை. மக்கள் தம் பிள்ளைகள், உறவுகளையெல்லாம் போராடவிட்டுவிட்டு, இந்த ஊர் உலகத்தில் உள்ள கோவில் குளமெல்லாம் ஏறித்திரிந்து, நெத்தி வைத்து, பசிகிடந்து, தவமிருந்து எங்காவது சண்டை மூண்டால் நித்திரை விழித்து எப்படியெல்லாம் பதைபதைப்பார்களோ அத்தனை அக்கறை தன் போராளிகள் மீது தளபதி சேகருக்கு இருந்தது.

 

“சேகரப்பா” என்று போராளிகள் தமக்குள்ள கதைக்கும் 25 வயதேயான ‘குழந்தை’த் தளபதி தன் நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தவை.

“தமிழீழம் கிடைத்தாப் பிறகு என்னோட நிண்டு சண்டை பிடிச்ச எல்லா பெடியள் வீட்டையும் போகவேணும். அவங்களின்ர அம்மா, அப்பா, சகோதரங்கள் எல்லோரோடையும் அவையின்ர கவலைதீரக் கதைக்கவேணும் என்பதே என் ஆசை. அணித் தெய்வத்தின் சிந்தனைப் படியே எல்லாம் நடக்கும். அது நடக்கும் என்றே நம்புகின்றேன்” (10.06.1998).

‘ஓயாத அலைகள் – 04’, மீண்டுமொரு பாய்ச்சலுக்கான ஆயத்தம். எதை இழந்தும் இதை பிடித்தே தீருவேன் எனத் தலைவரிடம் சொல்லிவிட்டு வந்ததை தனது அருகிலிருந்த போராளிகளிடம் சொல்லியிருந்தான் சேகர். ஒழுங்குபடுத்தல் எல்லாம் முடிந்தது. காலை விடிந்து விட்டால் சமர் வெடிக்கப் போகிறது.  தளபதி தீபனிடம் வந்தவன், ” அண்ணை எல்லாம் சரி.  எதுக்கும் ஒருக்கால் இண்டைக்கு இரவுக்குப்போய் பாதையெல்லாத்தையும் வடிவாய்ப் பார்த்துவிட்டு வந்தானண்ணை நிம்மதியாய் இருக்கும்” எனக்கேட்டு அனுமதிபெற்று வந்தான்.

வேவுக்காக வெளிக்கிட்டுப் போனவன் சற்று நேரத்திலேயே வெடிவிழுந்து உடல் சல்லடையாகக் காயத்தோடு தூக்கிவரப்பட்டான். எப்படியாவது காத்துவிடவேண்டுமென்ற துடிப்போடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். நான்கு நாட்களாக உயிருக்கு போராடிய அவன் இறுதியில் தன் தாய்நாட்டுக்காகத் தன்னை இழந்தான்.

நினைவுப்பகிர்வு:- அ.பார்த்திபன்.
வெளியீடு :நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டு (பக்கம் 160-168)

மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments