இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home வழித்தடங்கள் கேணல் கிட்டு.!

கேணல் கிட்டு.!

எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு

“என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை.

“மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது அன்புத்தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனை சொற்களால் வார்த்து விடமுடியாது.”

“நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாலானது. ஒரே இலடசியப் பற்றுணர்வில் ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம்பகிர்ந்து கொண்ட அனுபவத்தில், ஒருவரை ஒருவர் ஆழமாக இனம் கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த நேயமிது.”

“அவனில் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான் போராடினான். அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க் களத்தில் வீரனாகவும் பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும், அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது.”

“கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிழந்தது. அதன் அதிர்வலையால் எமது தேசமே விழித்துக்கொண்டது. கிட்டு நீசாகவில்லை. புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.”

என்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், கேணல் கிட்டு மறைந்த போது விடுத்த இரங்கல் செய்தி, எமது இதயத்தை அப்படியே ஆட்கொண்டுள்ளது. தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக விளங்கிய ஒவ்வொரு தளபதிகளின் மறைவை ஒட்டியும் அவர் கூறிய கூற்றுக்கள் எம் உள்ளத்தைத் தொடுபவையாகும்.

கிட்டு அவர்கள் 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி தோன்றினார். அவர் மறைந்தது 1993 ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி. எனவே அவர் இவ்வுலகில் வாழ்ந்தது மிகக் குறுகிய காலமென்பதை நினைவு கொள்ள வேண்டும். தேன்கலந்த வாசகம் தந்த வான்கலந்த மாணிக்கவாசகரின் வாழ்வு முப்பத்தி இரண்டுதான். தன்னை தமிழ் ஞானசம்பந்தரென்று ஐம்பது இடங்களில் கூறி நாளும் தமிழ் பரப்பிய தமிழ் ஞானசம்பந்தரின் வாழ்வு பதினாறுதான். ஆர்மூண்டு பதினெட்டில் நம்பியாரூரன் வாழ்வு முற்றுப் பெற்றது. இரக்கத்தில் உருவான யேசுகிறிஸ்து வாழ்ந்தது 33 ஆண்டுகள் தான். அவரின் முதல் 30 ஆண்டுகள் எவ்விதம் அமைந்திருந்ததென்பது உலகம் அறியாது. ஆனால் இறுதி 3 ஆண்டுகள் உலக வரலாற்றை மாற்றியது. அத்வைத வேதாந்தத்தை தந்த சங்கராச்சாரியார் வாழ்வு 33 ஐத் தாண்டவில்லை. மாவீரர் அலெக்சாண்டரின் வாழ்வு 33 ஆண்டுகளுடன் முடிவுற்றது. இப்படி குறுகிய காலம் வாழ்ந்தும் உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் உண்டு. அந்த வரிசையில் 33 ஆண்டுவாழ்ந்த கிட்டுவின் வாழ்வும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தனியிடம் பெறுகிறது. நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல முக்கியம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். வாழ்வகத்தைக் காத்து வண்டதமிழை வாழ்வித் வன்னியசிங்கம் அவர்களின் வாழ்வு 48ஐத் தாண்ட மறுத்து முற்றுப்பெற்றது. ஆனால் அவர் மறைந்து ஆண்டுகள் பல உருண்டு ஓடிய நிலையிலும் அவர் நம் நெஞ்சை விட்டு அகலமறுக்கிறார். தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதற்கமைய மறைந்த வன்னியரையும் மறைந்த தளபதி கேணல் கிட்டுவையும் நினைவு கொள்கிறோம்.

தலைவரைப் போற்றும் தளபதி

தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்து கிட்டுக்கு மதிப்பு வழங்ககினாரோ அவ்வளவு தூரம் தலைவர் பிராபகரன் பெருமையை உணர்ந்தவர் கேணல் கிட்டு அவர்கள். இதோ தலைவர் பற்றி அவர் மொழிந்தவை. “எமது தலைவர் பிரபாகரன் விடுதலைப்வ்புலிகளின் இயகத்தின் தலைவர் மட்டுமல்ல அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் தலைவர். இன்று விடுதலைக்காக தம்மை தியாகம் செய்யத்தயாராக நிற்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் எமது ஆதரவாளர்களுக்கு மட்டும் தலைவரல்ல. எம்மீது அதிருப்த்தி கொண்டவர்களுக்கு எம்மை எதிர்ப்பவர்களுக்கும் அவர் தலைவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தப்புச் செய்தவன் செய்யாதவன் என அனைவருக்கும் அவர்தான் தந்தை. பாதிக்கப்பட்டவனும் படோடாபமாக வாழ்பவனுக்கும் அவர்தான் தந்தை. போராட்டப்பணி குறித்து அவரது அபிப்பிராயம் அவரது முழுமையான அர்பணிப்புக்கு வெளிச்சமிடுகிறது. போராளிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பணி பெரிது. சுமையும் பெரிதுதான். ஆனால் நாம் அதை விருப்பத்துடன் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

எதிரிக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நாட்டை நிர்வகிக்கும் பணிகளும் எம்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. இதுமிகப்பெரும் சுமைதான் ஆனால் இதை விருப்பத்துடன் சுமக்கிறோம்” என்று போராட்டம் பற்றி ஏற்றமுடன் எடுத்துரைத்த கிட்டு அவர்கள் போராட்டம் வெற்றிபெற அறிவாளிகளையும் புத்தி ஜீவிகளையும் எவ்விதம் உள்வாங்க வேண்டுமென்பதை அவர் கூறும் கூற்றுக்கள் அவரின் பரந்த உள்ளத்திற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

அறிவாளிகளை உள்வாங்க விரும்பியவர் கிட்டுஇதோ அவர் மொழிந்தவை. “புத்தி ஜீவிகளை ஒன்று சேர்த்து சிந்தனைத் தடாகமொன்றை உருவாக்க வேண்டும். போராட்டத்தில் அரசியல் ராஜதந்திர நகர்வுகள் போன்ற விடயங்களில் நல்ல கருத்துகள் தேவையாக உள்ளது. இக்கருத்துக்கள் சரியான தகைமையும் கல்வியும் உள்ளவரிடமிருந்து வழங்கப்பட வேண்டும். தேவை படும் நேரத்தில் மாத்திரம் அவர்களை அணுகும் போது அவர்கள் எமது நிலைமைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். எனவே எமது போராட்டப் பாதையில் அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் மூலமே புத்தி ஜீவிகளை சரியான பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.”

சுருங்க கூறின் போராடுகின்ற போது துணிவை பெரிதும் போற்றிய கிட்டு அவர்கள் போராட்டத்தில் நாம் வெற்றிபெற அறிஞர்களின் அறிவுரைகளை அவர் என்றும் புறக்கணித்ததில்லை. பின் புலத்தில் அவர்களின் துணையை அவர் நாடி நின்றார். இயக்கம் செய்யும் ஒவ்வொரு விடயமும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். திறந்த மனத்துடன் அமைந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே சிறந்த திட்டங்களைப் பெற முடியும் என்று கூறியவர் கிட்டு அவர்கள். புகைப்படத்துறையிலும் அவர் புகழ்பெற்று விளங்கியவர். புகைப்படங்கள் ஊடாக எங்கள் போராட்டத்தை ஆவணப்படுத்த வேண்டுமென அவருக்கிருந்த ஆர்வத்தை எளிதில் எடுத்தியம்பிட முடியாது.

நரசிம்மராவின் நயவஞ்சகம்

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திரா காந்தியின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக விளங்கியவர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள். நான் இந்திரா காந்தியைச் சந்தித்ததையடுத்து நரசிம்மராவைச் சந்தித்த போது (1983 ஓகஸ்ட் 19) அவர் கூறியவை என் நினைவலையில் இன்றும் மோதுகிறது. “ இந்திய விடுதலை வரலாற்றில் காந்தி அடிகளின் பங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாய் பட்ராய், பகவத்சிங், வ.உ.சிதம்பரம்பிள்ளை, போன்றோர் ஆயுதம்தாங்கி போரிட்டதை நாம் மறுக்கவில்லை. இந்தியவிடுதலை வரலாற்றில் அவர்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரிது. அதுபோன்றே உங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளை பெரிதும் மதிக்கிறேன் எனக் கூறியவர்தான் நரசிம்மராவ். ஆனால் நரசிம்மராவ் இந்திய துணைக்கண்டத்தில் தலைமையமைச்சராக பதவியேற்ற காலகட்டத்தில்தான் 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி இந்திய நீரலையிலோ அல்லது இலங்கை நீரலையிலோ நிற்காது அனைத்துலக நீரலையில் கிட்டுவின் கப்பல் நின்ற போது இந்தக்கப்பலை இந்தியத் துணைக்கணடத்துக்கு இழுத்துச் செல்ல இந்திய அரசு முனைந்த போது கேண்ல் கிட்டுவும் அவரது தோழர்கள் மேஜர் வேலையன் (சந்திரலிங்கம் சந்திரவேல்), கப்டன் குணசீலன், கப்டன் ரோசன்(ரட்ணசிங்கம் அருணராசா), கப்டன் நாயகம் (சிவலிங்கம் கேசவன்), கப்டன் ஜீவா( நடராஜா ஜீவராஜ்), லெப்டினன் நல்லவன் (சிவஞானசுந்தரம் ரமேஷ்) லெப்டினன் அமுதன் ( அலோஷன்; ஜோன்சன்) தூயவன் (மாகாலிங்கம் ஜெயலிங்கம்) ஆகியோரும் கிட்டுவுடன் சேரந்து எம் இயக்கத்தின் இரகசியங்களை இந்திய உளவுப்படைக்கு வெளியிட விரும்பாத நிலையில் தம்மை மாய்த்துக்கொண்டனர்.

அவர்கள் செய்தது தற்கொலையல்ல. அது தற்கொடையாகும். இது கிட்டுவின் தியாகத்தைமட்டுமல்ல அவரின் தோழர்களின் தியாகத்தையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்திராகாந்தியின் ஆட்சியில் போராளிகளை போற்றிய நரசிம்மராவ் தலைமை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இப்போராளிகளின் சாவுக்கு காரணமாக அமைந்தார். இது இந்தியாவின் வஞ்சனைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. நமது போராளிகள் அனைத்துலக நீரலையில்தான் இருந்தார்கள் என்று காலம் தாழ்த்திய நிலையில் விசாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மறைந்தும் மறையாத எம் கிட்டுவையும் தோழர்களையும் நாம் நினைவு கொள்வோமாக. இவர்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டிய தியாகிகள். தமிழ்நாட்டில் தளபதி கிட்டு அவர்களுக்கும் எமக்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் ராஜதந்திர நோக்குடன் இங்கு பரிமாறவில்லை. பின்பு அவை தேவையொட்டி கூறப்படும்.

ஆக்கம்:- மா.க.ஈழவேந்தன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments