கிழக்கு வெளுக்கிறது! தமிழுக்கு பொற்காலம் பூக்கிறது.!
அன்றைய தமிழன் காதலையும் வீரத்தையுமே தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்தவன் என்பது வரலாறு. காலப்போக்கில் அவன் ஊட்டி வளர்த்த வீர வரலாறு தேய்பிறையாகி, அவை காலப்போக்கில் வெறும் இலக்கியச் செய்திகளாக மட்டுமே இலக்கியங்களில் காணும் நிலை உருவானது.
அவன் வீரமும் விவேகமும் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்ததே தவிர, மாய்ந்துவிடவில்லை – மறைந்துவிடவில்லை என்பது ஈழத்தமிழர்களால் செயல் பூர்வமாக உணர்த்தப்பட்டு வருவது வெளிப்படையான பேருண்மை. அதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிக்கொண்டிருக்கும் உன்னதத் தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவ்வீரத் திருமகன் பொன்விழா அகவையை அடைந்து வீரப்பிழம்பாக, விவேகப் பேரொளியாகத் திகழ்ந்து வீரவரலாறு படைத்து வருவதை – அவர் மூலம் வீரத் தமிழனின் பழம்பெரும் வரலாறு மீள்வதைக்கண்டு உலகத் தமிழ் இனமே உளமார வாழ்த்துகிறது. தமிழ் உள்ளங்கள் மீண்டும் புத்தெழுச்சி கொள்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.
இதன் வாயிலாக தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் ஒரு புதிய ஒளி – புத்தெழுச்சி உருவாவதைக் கண்டுணர முடிகிறது. அதிலும் குறிப்பாக, தமிழனின் முகமும் முகவரியுமாக அமைந்துள்ள ‘தமிழ்வளர்ச்சி’ என்றும் காணா அளவில் பேரெழுச்சி பெற்று வருகிறது என்பது மறுக்கமுடியாத பேருண்மை. தமிழின் எதிர்காலம்பற்றி மனத்திரையில் நாளும் உருக்கொண்டெழும் தமிழ் எழுச்சிக்கான உந்துதலை, உத்வேகத்தை அப் பெருமகனிடமிருந்து பெறுகிறோம் எனக் கூறுவதில் தவறேதும் இருக்க முடியாது. இன்றைய தமிழ் பெறவேண்டிய எழுச்சியை- மறுமலர்ச்சியை உணர்ந்து தெளிய முதற்கண் வரலாற்றுத் தடயத்தை – பதிவை அறிந்துணரவேண்டும்.

காலத்தின் போக்கையும் தேவையையும் அனுபவித்துத் தன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிக் கொள்ளும் மொழியே வாழும் வெற்றியைப் பெற முடியும். மேலும் நடைமுறைச் சிந்தனைக்கேற்ப, அறிவியல் தமிழாக வளர்ந்து வளம்பெற வேண்டிய கட்டாயநிலை தமிழுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இச் சூழலை உணரமுடியாத தமிழர்கள், வெறும் வாய் வீச்சில் சிக்கித் தமிழ் சீரழிந்துவிடுமோ என எண்ணி மறுகும் என் போன்றோர் தமிழின் ஆற்றலை முழுவீச்சில் வெளிப்படுத்தி, ‘தமிழ் ஓர் உன்னதமான அறிவியல் மொழி’ என்பதை எண்பிக்கும் முயற்சிக்கு, எல்லா வகையிலும் ஆக்கம் தேடும் வகையில் ‘பொங்கு தமிழ்’ மாநாடு நடத்தி ஆக்கச் சிந்தனை மூலம் இன்றைய சூழலில் தமிழ் வளர்ச்சியை விண்ணுக்கு உயர்த்த முயற்சி மேற்கொண்ட அச்செயல் வீரனை தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல – தமிழின் விடிவெள்ளி என்றே கூறவேண்டும்.
வெறும் உணர்ச்சிக்கு இரை போடாது, அறிவார்ந்த செயல் திட்டங்கள் மூலம் தமிழுக்குப் பொற்காலம் அமைக்க முயலும் – முனைப்புக் காட்டும் முயற்சி என் போன்றோர்க்கு பேருவகை ஊட்டுவதாயுள்ளது. தமிழ் ஓர் அறிவியல் மொழி – அறிவியலைச் சொல்லுவதற் கென்றே உருவாக்கப்பட்ட மொழி என்பதை நிறுவும் வகையில் இதுவரை சுமார் ஆறரை இலட்சம் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவக்கலைச் சொற்களை உருவாக்கி 6,500 பக்கங்களில் எட்டுத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளேன் என்றால், அது என் திறமையோ அல்லது என்னோடு இணைந்து உழைக்கும் என் நண்பர்களின் திறமையோ அன்று. இதெல்லாம் தமிழின் ஆற்றலையே வெளிப்படுத்துகிறது.

வாழ்க பல்லாண்டு! பல்லாண்டு!! பல்லாயிரத்தாண்டு!!!
– ஆக்கம்:மணவை முஸ்தபா (முன்னாள் இதழாசிரியர்யுனெஸ்கோ கூரியர்(தமிழ்), தமிழ் ஆய்வாளர்,தமிழகம்.)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”