இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home வீரத்தளபதிகள் கிட்டண்ணா .!

கிட்டண்ணா .!

கிட்டண்ணா பன்முகப்பட்ட ஆளுமையின் கூட்டு வடிவம்.!

கிட்டண்ணா வெளிநாட்டில் இருந்தாலும் அவரது மனம் ,எண்ணங்கள்,சிந்தனைகள் எல்லாமே தமிழீழத்தை பற்றியதாகவே அமைந்தது. தமிழீழத்திலுள்ள வளங்கள்,கலை பண்பாடுகள்,அரசியல் செயற்பாடுகள்,சமூகப்பணிகள்,இராணுவ கட்டமைப்புக்கள்,பயிற்சிமுறைகள்,புகைப்படக்கலை போன்ற பல துறைகளைப்பற்றிய தனது எண்ணங்களை,அநுபவரீதியாக தான் பெற்றுக்கொண்டவற்றை,அறிபூர்வமாக தான் அறிந்தவற்றை விளக்கமாக ,சிறு சிறு குறிப்புகளாகப் பல மடல்களை எழுதினார்.தலைவரைப்பற்றி அவர் பூரணமாகத்தெரிந்த வைத்துக் கொண்டிருந்தார்.”

 

ஒரு முறை லண்டனிலிருந்து வெளியாகும் ‘களத்தில்’ பத்திரிகையினைத் தலைவருக்குக் காட்டியபோது, ‘இது கிட்டு தான் செய்யிறான் போல கிடக்கு: இல்லாட்டி இப்படி வராது, வேணுமெண்டால் விசாரிச்சுப்பார்” என்று கூறினார். ஏனென்றால் அது அவ்வளவு தரமாக இருந்தது. அதனது ஒவ்வொரு பக்கமும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டுப் படங்கள், கட்டுரைகள், கவிதைகள் போன்றன உரிய இடங்களில் போடப்பட்டு, மெருகூட்டப்பட்டு இருந்தது. நிச்சயமாகக் கிட்டண்ணைதான் இதற்குப் பின்னாலிருக்கிறார் என்று தெரிந்தாலும், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
சிகிச்சைக்காகக் கிட்டண்ணா இந்தியாவிற்குச் சென்றபோதுகூட அவரால் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு இருக்க முடியவில்லை. இந்திய இராணுவம் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை நூல் வடிவில் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நூல்கள் அச்சடிப்பது தொடர்பான வேலைகளை, ஒரு போராளியிடம் ஒப்படைந்திருந்தார். ஒவ்வொரு நாளும் அந்தப் போராளியிடம் நூல்கள் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கவனமாகக் கேட்டறிவார். அத்துடன் அச்சடித்த பக்கங்களைப் பார்த்து அதிலுள்ள பிழை திருத்தங்களைக் கூறுவார். ஒருமுறை நான் கிட்டண்ணாவின் இடத்திற்குப் போனபோது அந்தப் போராளிக்குக் கடும் பேச்சு விழுந்துகொண்டிருந்தது. ‘தெரியாமல் இதுக்குள்ளே போய் மாட்டுப்பட்டு விட்டன்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ‘இவன் பிறசைப் பற்றி எனக்குச் சொல்லுகிறான்” என்றார் என்னைப் பார்த்தபடியே. கிட்டண்ணா நூல் ஒன்றைக் குறிப்பிட்ட திகதிக்குள் அச்சடித்து முடிக்க வேண்டும் என்று அந்தப் போராளியிடம் கூறியிருந்தார். குறிப்பிட்ட திகதிக்கு அச்சடிக்க முடியாமல் போனதால் ஏதோ வியாக்கியானங்களை அந்தப் போராளி கிட்டண்ணாவிற்குச் சொல்லிக் கொண்டிருந்தான். கிட்டண்ணாவிற்கு அச்சடிக்கும் தொழில் மாத்திரமல்ல, எந்தவொரு விடயத்திலும் பிழையான காரணம் கூறித் தப்ப முடியாது என்று எனக்கு நன்கு தெரிந்திருந்தது. ஷவிசயம் விளங்காமல் கதைக்கிறான் மடையன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போராளியை அழைத்து, அவன் சொன்ன வியாக்கியானங்களுக்குச் சரியான விளக்கங்களைக் கூறிவிட்டு, ‘நாளைக்கிடையிலே அடிச்சுக்கொண்டு வாறாய்” என்று அவனை அனுப்பினார்.

 

‘நீ கடைசியாக வந்த இந்தியா ருடே யினைப் பார்த்தனியோ என்று என்னைக் கேட்டார். எதனை மனதில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்று தெரியவில்லை. பிடிபடப்போகிறேனே என நினைத்துக் கொண்டே ‘ஓம்” என்றேன். குறிப்பிட்ட விளம்பரம் ஒன்றின் பெயரைக்கூறி ‘அதைப்பார்த்தியா?” என்று கேட்டார். எனது விழி பிதுங்கலாயிற்று. அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘இங்கே வா” என்ற தனது மேசைக்கு அழைத்துச் சென்றார். அவரது மேசையிலிருந்த ‘இந்தியா ருடே’, ‘இலஸ்ரேட்டற் வீக்லி ஒவ் இந்தியா’ போன்ற பல சஞ்சிகைகளில் உள்ள விளம்பரங்களைக் காட்டினார். ‘இதை ஏன் உனக்குக் காட்டுறன் தெரியுமோ?” என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ‘நான் புத்தகங்கள் எடுத்தால் முதல் பார்க்கிறது விளம்பரம்தான்” என்றார். ‘அதிலதான்ராப்பா விசயமிருக்கு” என்று கூறி முடித்தார். பின்பு எனது பதிலை எதிர்பாராமலே விளம்பரங்கள் எப்படி மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய வண்ணம் தயாரிக்கப்படுகின்றன என்றும், விளம்பரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு அதன் நோக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன என்றும் அதில் போடப்படும் படங்கள், வர்ண ;அமைப்புக்கள், நிறங்களின் பொருத்தமான தன்மை, அந்தப் பொருளை வாங்குவதற்குக் கவரக்கூடிய அமைப்பு என்பன பற்றி நீண்ட நேரமாக விளங்கப்படுத்தினார். விளம்பரங்கள் தயாரிப்பதற்கு என்றும் Layout செய்வதற்கு என்றும் விசேடமாகப் படித்த தொழில் வல்லுனர்கள் உள்ளனர் என்றும், இதற்காகத் தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும் அதனைப்பற்றி விளக்கமளித்தார்.
‘இதை ஏன் உனக்குச் சொல்லுறன் தெரியுமோ?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். உண்மையாக எனக்கு அப்போது ஒன்றும் விளங்கியிருக்கவில்லை. ‘எங்கட வெளியீடுகளையும் நாங்கள் செய்யேக்குள்ளே இதேபோலக் கஸ்ரப்பட்டு செய்யவேணும். அதைப் பாக்கிறவர்களுக்கு வாசிக்கத் தூண்டோணுமடாப்பா” என்றார் கிட்டண்ணை. இப்போது தான் எனக்கு விளங்கியது. அப்போது கிட்டண்ணா இந்நிய இராணுவத்தினது அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான பிரசுரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவை எல்லாவற்றையும் இந்தியாவிலும் வெளிநாட்டிலுமுள்ள தூதராலயங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியமானவர்கள் என எல்லோருக்கும் தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருந்தோம். இவர்களில் எத்தனை பேர் எங்களுடைய பிரசுரங்களைப் பார்த்திருப்பார்கள்? இவர்கள் எல்லோரும் பார்க்கத் தூண்டும் வகையில் எமது பிரசுரங்களைத் தயாரிக்க வேண்டும். கிட்டண்ணா இதனை மனதில் வைத்துத்தான் செயற்பட்டார். இரவு பகலாக யோசித்தார். பலரை அழைத்து அபிப்பிராயம், ஆலோசனை கேட்டார். அவரது கடினமான உழைப்பின் பயனாகத் தமிழீழம்,பவான் பேப்பர்ஸ் You too India|, தியாகி திலீபன், கப்டன் லாலா ரஞ்சன் போன்ற பிரசுரங்கள் வெளிவந்தன. இவற்றில் தமிழீழம் 7 வெளியீடுகளும், பவான் பேப்பர்ஸ் 20 வெளியீடுகளும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வெளியீடுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஜனநாயகம், அகிம்சை என்ற இந்தியாவின் போலி முகத்திரைகளை இந்த நூல்கள் கிழித்தெறிந்தன: இந்தியாவின் சுயரூபத்தை அம்பலமாக்கின.நன்றி verkal.net

கிட்டண்ணை வரைந்த ஓவியம்

 

கிட்டண்ணா விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்பு வெளிநாடுகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. லண்டனிலிருந்து மாதமிருமுறை களத்தில் எனும் பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. பிரான்சிலிருந்து இதுவரை காலமும் நிழற்படப் பிரதியில் வெளிவந்த எரிமலை எனும் மாதாந்த சஞ்சிகை அச்சுக்கூடத்தில் ஏறிப் பல வர்ணங்களுடன், புது மெருகுடன் கலை பண்பாட்டு சமூக அரசியல் ஏடாக உலா வரத் தொடங்கியது.
நோர்வேயில் இருந்து வருடத்திற்கு மும்முறை வெளிவரும் சுதந்திரதாகம் எனும் சஞ்சிகையும் கிட்டண்ணா பொறுப்பெடுத்த பின்பு புதுப்பொலிவுடன் வெளிவரத் தொடங்கின.
உலக நாடுகளின் கவனத்தை எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பக்கம் ஈர்ப்பதற்காகப் பல முயற்சிகளை கிட்டண்ணா முன்னெடுத்தார். எமது விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, தமிழீழ மக்களின் மீது இந்திய, சிறீலங்கா அரசுகள் கட்டவிழ்த்துவிட்ட அராஜகம், தமிழீழ மக்களது துன்பதுயர நிலைகள் மாத்திரமன்றித் தமிழீழத்தின் வளங்கள், இயற்கைக் காட்சிகள், எமது மக்களின் கலை, பண்பாடுகள், பொருளாதார வாழ்வு போன்ற இன்னோரன்னவற்றை ஓவியங்களாகவும், புகைப்படங்களாகவும் கொண்டு பல்வேறு நாடுகளில் ஓவியக்கண்காட்சி,
புகைப்படக் கண்காட்சி போன்றவற்றை நடாத்தினார். ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தீன், நோர்வேஜியன், டெனிஸ் ஆகிய சர்வதேச மொழிகளில் விடுதலைப் போராட்டம் பற்றியும் கள நிகழ்வுகள் பற்றியும் துண்டுப் பிரசுரங்களாகவும், சிறு சிறு கைநூல்களாகவும் ஏராளமாக வெளியிட்டார். பிரஞ்சு மொழியில் தமிழ் (Tamule) என்ற சிறு ஏட்டையும், டொச்சில் வணக்கம் என்ற சஞ்சிகையையும், நோர்வேஜிய மொழியில் தமிழ் ஈழம் எனும் ஏட்டையும் தொடர்ந்து வெளிவரச் செய்தார்.
‘பேப்பர் விற்கப் போனால் சனங்களொண்டும் பேப்பர் வேண்டுவதில்லை, ஆனால் அவையளின்ர வீடுகளில் போர்ய்ப் பார்த்தால் ரீ.வி.யென்ன, டெக் என்ன சாமான்கள் எண்டால் குவிஞ்சுபோய்க் கிடக்கும்” என்று வெளிநாட்டுக் கிளையொன்றில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் கிட்டண்ணாவிடம் குறை சொல்வது போல் கூறினார். கிட்டணாவிற்கு கோபம் வந்துவிட்டது. ‘இவ்வளவு சாமான்களையும் எங்கட சனங்கள் வைத்து அனுபவிக்கினம் என்று தான் நாங்கள் சந்தோசப்படவேண்டும்” என்று கோபமாகக் கூறியவர், ‘ஒரு நாளும் எங்கட சனங்களைப் பேசக் கூடாது. நீ உன்ர திறமையைக் காட்டி பேப்பரை விற்கப்பார். சனங்களை மட்டும் குறை சொல்லாதே” என்றார். இச்சம்பவம் நடந்தது வெளிநாடு ஒன்றில்.

கிட்டண்ணை வரைந்த ஓவியம்

இப்படித்தான் ஒருமுறை மடு அகதி முகாமில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை பற்றி விமர்சித்து இங்கு வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதனைப் பார்த்த கிட்டண்ணாவிற்குப் பொறுக்கவில்லை. உடனடியாக அக்கட்டுரையினை விமர்சனம் செய்து பின்வருமாறு எழுதினார்.
‘அக்கட்டுரை படித்தவுடன் என் நெஞ்சு பொறுக்கவில்லை. இதே சனத்திற்காகவும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும் தான் நாம் போராடுகிறோம். அவர்களும் எம்முடைய சனங்கள், தலைவர் பார்த்தால் பொறுத்திருக்கமாட்டார்.
‘ஒவ்வொரு அகதியின் வாழ்விலும் எத்தனையோ சொல்லொணாத் துன்பங்களும் துயரங்களும் அடங்கியிருக்கிறது. அத்துயரங்கள் எமக்குப் புரியமாட்டாது. நானும் மத்தியதரக் குடும்பத்தைச் சார்ந்தவன். எனக்கு அறிவும் அனுபவமும் ஏற்பட்டதை வைத்துப் பார்த்தால் இ;க்கட்டுரை எழுதப்பட்டவிதம் மிகவும் பிழையானது. அச்சீர்கேடுகளை மாற்ற வேண்டியது நாமே தான். அப்பிழைகளும் எம்முடையதே.
‘பிரபாகரனின் கொள்கைக்கு முரணானது. பிரபாகரன் என்ற சொல் இன்று ஒரு தனிமனிதனின் பெயரல்ல. அப்பெயருக்குப் பல பொருள் உண்டு. பல அர்த்தங்கள் உண்டு.
‘நாம் அதே மனிதரோடு சமகாலத்தில் வாழ்வதால் இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விடலாம்.
‘பிரபாகரன் என்றால் symbol of freedom என்றும் சிலர் கூறுகிறார்கள்.
‘இன்னும் எளிமை, மனித நேயம், அன்பு, ஆளுமை, தலைமை, முக்கியமாக மக்களை நேசித்தல், எப்போதும் ஏழைகளையும் எளியவர்களையும் நேசிப்பது, அவர்களுக்காகவே சிந்திப்பது, இவைதான் பிரபாகரன் என்றால் அர்த்தமாகிறது. இவை ஒரு தத்துவம்: எமக்கு வழிகாட்டும் சத்திய போதனை. இவற்றைத் தான் எமது இயக்கமும் விடுதலைப் போராட்டமும் இலட்சியமாகக் கொண்டுள்ளன.
‘நானும் பதினெட்டு வயதில் பள்ளிக்கூடப்படிப்பை இடையிலே கைவிட்டு பின் இன்றுவரை இவ்வழி நடத்தலிலே, இப்போதனைகளையும் தத்துவங்களையும் படித்துத்தான் வளர்ந்தேன். இதை வைத்துத்தான் சிந்திக்கவும் பழகினோம். இப்படியான காலகட்டத்தில் மேலெழுந்த விதமாகச் சனங்களைப்பற்றி இப்படி எழுதுவது சரியல்ல.”
எவ்வளவு ஆழமான கருத்துக்கள், எமது தலைவரைப் பற்றிம் மக்களைப் பற்றியும் கிட்டண்ணா எவ்வளவு தெளிவாகத் தீர்க்கமாகக் கூறியிருக்கிறார்.
கிட்டண்ணா வெளிநாட்டுக்குப் போனபின்பு அங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இதுவரை காலமும் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருந்த புத்திஜீவிகள், மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள், அகதிகள் எனப் பலதரப்பட்டவர்களை ;அவர் அரவணைத்துக் கொண்டார். ஒவ்வொரு தமிழனுக்கும் தாயகத்தின் விடுதலைக்கான கடமையினை, பங்களிப்பினை அவரது அன்பாலும் ஆளுமையாலும், உணரச்செய்தார். விடுதலைப்புலிகளது வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அவுஸ்திரேலியா, சுவிற்சலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பை ஆரம்பித்து வைத்தார். இவை மாத்திரமல்ல விடுதலைப் புலிகளின் எல்லாக் கிளை அமைப்புக்களையும் அந்தந்த நாடுகளில் பதிவு செய்து, அந்தந்த நாட்டின் சட்ட ஒழுங்கிற்கு மதிப்புக் கொடுத்து, அதற்கமையவே வேலைத்திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்.
விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம், ஷவிடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு, ஷதமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் போன்ற பல உப அமைப்புகளையும் பல்வேறு நாடுகளில் நிறுவினார். கலை பண்பாட்டுக் கழகம் வெளிநாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடாத்தியள்ளது. வெளிநாட்டுத் தமிழர்களிடம் மாத்திரமல்லாமல் வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை இந்நிகழ்ச்சிகள் பெற்றுள்ளன. அண்மையில் சுவிஸ் நாட்டில் கலைபண்பாட்டுக் கழகம் தயாரித்து மேடையேற்றிய நாடகம் ஒன்று, ஐரோப்பாவில் நடந்த நாடகப் போட்டிகளில் (பல்வேறு மொழிகளில்) முதலாம் பரிசைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே எமது பண்பாடுகளை விடாப்பிடியாகப் பேணுவதற்கும், வெளிநாட்டவர் மத்தியில் எமது பண்பாட்டின் விழுமியங்களை உணர்த்துவதற்கும் கலைபண்பாட்டுக் கழகம் பாடுபட்டு வருகிறது. இதே போலவே விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பும் சிறுவர்களுக்கான தமிழ்பபாடசாலைகள் ஆரம்பித்தல், தமிழ் இளைஞர் மத்தியில் மெய்வல்லுநர்ப் போட்டிகளும் உதைபந்தாட்டப் போட்டிகளுமாக நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. பொருண்மிய மேம்பாட்டுக் கழக வெளிநாட்டுக் கிளையினரும் தமிழீழ வளங்கள் குறித்தான பல ஆய்வுகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் மூலபலமாக நின்றவர் கிட்டண்ணா என்றால் அது மிகையாகாது.
சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழநாதம் எனும் உள்@ர் வானொலிச் சேவையினையும், கனடாவில் மொன்றியேல், டொரொன்ரோ ஆகிய நகரங்களிலும் உள்@ர் வானொலிச் சேவையினையும் ஆரம்பித்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வைப் பரப்பினார். வளர்ந்து வரும் நவீன உலகில் சிறந்த பிரச்சார உத்தியாக ஒளிப்பதிவு நடா திகழ்வதை அவதானித்த கிட்டண்ணா, இதனை நன்கு பயன்படுத்தினார். தமிழீழத்தில் நிதர்சனம் என்ற புலிகளின் தொலைக்காட்சிச் சேவையினை ஆரம்பித்தது போன்று வெளிநாட்டுத் தமிழர்களுக்காக தரிசனம் என்ற வீடியோ சஞ்சிகையினை மாதந்தோறும் பிரான்சிலிருந்து வெளிவரச் செய்தார்.
கிட்டண்ணா வெளிநாட்டில் இருந்தாலும் அவரது மனம், எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே தமிழீழத்தைப் பற்றியதாகவே அமைந்தது. தமிழீழத்தில் உள்ள வளங்கள், கலை-பண்பாடுகள், அரசியற் செயற்பாடுகள், சமூகப் பணிகள், இராணுவக் கட்டமைப்புகள், பயிற்சிமுறைகள், புகைப்படக்கலை போன்ற பல துறைகளைப் பற்றிய தனது எண்ணங்களை: அனுபவரீதியாகத் தான் பெற்றுக் கொண்டவற்றை: அறிவு பூர்வமாகத் தான் அறிந்தவற்றை விளக்கமாகச் சிறு சிறு குறிப்புகளாகப் பல மடல்களை எழுதினார். தலைவரைப் பற்றி அவர் பூரணமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார். ஓரிடத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘வெளிநாடுகளில் வாழும் மக்கள் எமது தலைவரின் மீது அதிகமான நம்பிக்கையையும் உறுதியையும் கொண்டுள்ளனர். சில இடங்களில் இயக்கத்தை நம்பாவிட்டாலும் தலைவரை நம்புகின்றனர். இப்படியாக எமது தலைவர் தனிப்பெரும் தலைவர் என்றுதான் மக்களால் கணிக்கப்படுகிறார்.”
மக்களின் மீது அவர் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார். இராணுவக்கெடுபிடிகள், பொருளாதாரத்தடை, போக்குவரத்துத் தடை போன்ற அழுத்தங்கள் தமிழீழ மக்கள் மீது திணிக்கப்படும் போதெல்லாம் அவர் வேதனைப்பட்டார். ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின் போதும் இடம் பெயரும் மக்களின் நிலை குறித்துக் கவலை கொண்டார். இளவாலை, மாதகல் பகுதிகளில் சிறீலங்கா இராணுவம் முன்னேறி வந்தபோது கீழே குறிப்பிட்டவாறு அவரது சிந்தனை வெளிப்பட்டது.
‘இடம் பெயர்ந்து அகதிகளாகும் சனங்களைப் பொறுத்தவரையில் மிக முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும். எமது அமைப்பின் மாணவர், மகளிர், அரசியல், கலை, கலாச்சார இப்படியான எல்லாப் பிரிவினரும் இராணுவப் பிரச்சனையால் இடம் பெயரும் சனங்களின் விடயத்தில் உடனடியாகவும் அதிகமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
‘போராட்ட உச்சக்கட்ட வேளையில் கூடப் பொதுமக்களை அதன் தாக்கம் பாதிக்காத வகையில் நாம் பல விடயங்களைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் சனங்கள் சந்தோசமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குதல், விழாக்கள், திருவிழாக்கள் போன்று பல விடயங்களை நாமே ஊக்குவிக்கலாம். அதேவேளை சனங்களைப் போராட்டத்துடன் ஒன்று திரட்டுவதற்கான திட்டங்களையும் போடவேண்டும்.”
வெளிநாட்டிலிருந்து அவர் நிம்மதியாக வேலை செய்ய இந்திய அரசு விடவில்லை. அவர் எழுதிய மடல் ஒன்றிலிருந்து இது வெளிப்படுகின்றது.
‘நான் நலம், நாடு நாடாக ஓடிக்கொண்டிருக்கிறேன். பாரத மாதாவின் புண்ணியத்தால் பல நாடுகளுக்கு விரட்டப்படுகிறேன். இருந்தும் நலம்”
மேற்குலக நாடுகளில் கூட இந்தியாவின் அழுத்தங்கள் எவ்வளவு தூரம் பாய்ந்துள்ளன என்பதை இந்த வரிகள் விபரிக்கின்றன.
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மேற்குநாடுகளில் கூட வெளிப்படையாக உலாவ முடியாத நிலையிலும் அவர் பல மேற்கு நாடுகளுடனும், மனித உரிமை அமைப்புகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். பல விடுதலை அமைப்புகளுடனும், பல அரசியற் கட்சிகளுடனும் உறவுகளை வளர்த்துக் கொண்டார். சிறீலங்கா அரசின் கெடுபிடியான இராணுவ நடவடிக்கைகளுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும், போக்குவரத்துத்தடை போன்ற இறுக்கங்களுக்கும் தமிழீழ மக்கள் முகம் கொடுப்பதை நன்குணர்ந்து கொண்டார். மக்களின் இன்னல்களையும் துன்பதுயரங்களையும் நன்கு புரிந்து கொண்டதால் மேற்குலக நாடுகளுடனும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடனும் கலந்துரையாடி, விவாதித்துச் சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார். இதனை எடுத்துக் கொண்டு தாய் நாட்டின் மீது காலடி எடுத்து வைக்கவேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். அவரது துடிப்பு இவ்வாறு வெளிப்பட்டது.

கிட்டண்ணை வரைந்த ஓவியம்

‘எப்போது எமது மண்ணிலே கால் வைப்பேன் என்று ஒவ்வொரு கணமும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எனது தாயத்திலே எங்கேயாவது ஒரு மூலையிலேனும் என்ன வேலையாவது செய்து கொண்டிருந்தாலே அது மனதுக்கு முழு அமைதியைக் கொடுக்கக் கூடியது.
‘இங்கு இவ்வளவு காலமும் தமது முகவரிகளைத் தொலைத்துவிட்ட எமது மக்களின் மத்தியிலும் இப்போது நாடிருந்தும் நாடோடியாக ஓடுகிறேன். தனக்கென்று ஒரு சுதந்திர நாடு அமையும் போதுதான் ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து வாழமுடியும். என்னால் வெளிநாடுகளில் வாழமுடியவில்லை: எனது சுபாவம் அப்படி. இப்போதுதான் புரிகிறது. நாம் எமது மக்களையும் மண்ணையும் எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பது. இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுத்தாலும் எனது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்யும் பேறு எனக்குக் கிடைக்கவேண்டும். நாம் எமது மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் போரிட்டவர்கள். ஒவ்வொரு வீட்டையும் பிடிப்பதற்காகப் போரிட்டவர்கள்: எப்படி இம் மண்ணைப் பிரிந்து வாழ முடியும்…?”
நிச்சயமாக இந்த மக்களையம் மண்ணையும் பிரிந்து வாழக் கிட்டண்ணாவினால் முடியாது. இதனால் தான் சமாதானத்திட்டத்துடன் புறப்பட்டு வந்தார். அந்தச் சமாதானப் புறாவை இந்திய ஆதிக்கக் கரங்கள் மரணப் பொறிக்குள் வீழ்த்தின.
எமது விடுதலைப் போராட்டத்திலுள்ள தர்மமும் உண்மையும் நிச்சயமாக இதற்குப் பதில் சொல்லும்…!

நினைவுப்பகிர்வு :

மணிவண்ணன்(காஸ்ரோ)
(அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்.)

களத்தில்  இதழிலிருந்து

மீள்வெளியீடு :  வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments