ஓ… யாரது
என் கல்லறைக்கு மலர் தூவி அஞ்சலிப்பது யார்..?
என் அம்மாவா..? இருக்க முடியாது.
நான் கதறியழ கயவர் கரங்களில் என் தெய்வம் அலங்கோலப்பட்டல்லவா
அடங்கிப் போனது.
என் அம்மா இல்லை இது..!
அப்போ.. யார்? யார் மலர் தூவி அஞ்சலிப்பது.
என் அப்பாவா? இருக்க முடியாது.
பயங்கரவாதி என்ற பட்டம் கொடுத்து என் பத்தாம் வயதிலேயே.
அவரைப் படுகொலை செய்து விட்டனரே
என் அப்பா இல்லை இது..! அப்போ.. யார்?
யார் மலர் தூவி அஞ்சலிப்பது.
கூடு கலைந்து ஓடி வந்த போது
என் கரம் நழுவி தொலைந்து விட்ட ஆசைத் தங்கச்சியா..
இல்லை.. அவளுக்கு என் முகம் தெரியாது..
அவள்.. எங்கே.. அதுவும் தெரியாது.
அப்போ.. யார்? யார் மலர் தூவி அஞ்சலிப்பது.
பக்கத்து கல்லறையில் படுத்திருந்தவன் சொன்னான்
ஏய்.. நண்பா எந்த மக்களுக்காக உன் உயிரை தந்தாயோ..
அந்த கரங்கள் தான் உன்னை அஞ்சலிக்கின்றது.
நாங்கள் அனாதைகளல்ல அமைதியாகத் தூங்கு.
ஓ… என் மக்களா..!
இறைவா இன்னுமொரு பிறவி தா
இந்த மக்களுக்காக போராடி விதையாக..!
கவியாக்கம் -காண்டீபன்.
நவம்பர் 2000 எரிமலை இதழ்
மாவீர் நாள் சிறப்பு பதிவு
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”