2003 ஆம் ஆண்டு நான் தமிழீழத்தில் முதன்முதலாகக் கால்பதித்த ஆண்டு. எம் தமிழினத்தின் தமிழீழ மண்ணில் கால்பதிக்கிறோம் என்ற வீறுணர்வுடன் நான் அங்கு எம்மோடு மலேசியாவிலிருந்து வந்த பதின்மருடன் சென்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக வீற்றிருந்த பொறுப்பாளர் எம் செந்தமிழ் உறவு மணிவண்ணன் அவர்களே எங்களை வரவேற்றார். அவர் இன்றில்லை. அவரின் நம்பிக்கைக்குரிய போராளியாகக் கடமையாற்றியவர்தான் கலையழகன். தொடக்கத்தில் நான் கலையழகனை அறிந்திருக்கவில்லை.
2003 ஆம் ஆண்டு எம் பணி முழுக்க செஞ்சோலைப் பிள்ளைகளுக்காக உளவளத்துணையாளராகப் பணியாற்றவே நான் சென்றிருந்தேன். அதுவும் அங்குச் சென்ற பிறகுதான் என் பணித்திறனை அறிந்த செஞ்சோலைப் பொறுப்பாளர் சனனி ( சுடர்மகள்) அவர்கள் என்னிடம் பிள்ளைகளுக்காக உளவளப் பயிற்சியினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். 5 அகவை குழந்தைகளிலிருந்து 21 அகவை பிள்ளைகள் வரை என் பயிற்சியில் கலந்து கொண்டனர். பிள்ளைகளைப் பாதுகாக்கும் அம்மாமார்கள், ஆசிரியர்கள் முதலானோர்க்கும் என் பயிற்சி விரிந்தது.
அத்தகு சூழலில்தான் ஒரு நாள் இரவு எட்டு மணியளவில் நான் சென்ற மூடுந்து இடையில் மறிக்கப்பட்டு நான் மட்டும் இறக்கப்பட்டேன். சனனி அக்கா நீங்கள் வேறொரு நிமித்தமாய் இன்னொரு பொறுப்பாளருடன் செல்லுங்கள் நாளை சந்திக்கிறேன் எனக் கூறிவிட்டு புறப்பட்டு விட்டார். நான் உந்துருளியில் வந்த போராளியுடன் ஏறிக்கொண்டு குறிப்பிட ஓர் இடத்திற்குச் சென்றேன்.
நான் சென்ற இடம் ஓர் ஒன்று கூடும் சிறிய அரங்கமாக இருந்தது. மின்விளக்கு ஒளியுடன் அது தெளிவாகவே இருந்தது. நான் அந்த அரங்கிற்குள் நுழைய வரவேற்கப்பட்டேன். ஆனால் அங்கு நுழையும் முன்… “அண்ணே சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். இது எங்களின் வழமையான செயற்பாடு. தங்களிடம் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒப்படைத்துவிடுங்கள்” என இளைஞன் ஒருவன் என்னிடம் சிரித்த முகத்துடன் பணிவான உணர்வோடு பேசினான். அந்த நேரத்தில் அவன் யார் என்று எனக்குத் தெரியாது. பின்னர் அரங்கினுள் முகாமையானவருடன் சந்திப்பு முடிந்து வெளியே வந்தவுடன் .. என்னிடம் பெற்ற அனைத்துப் பொருள்களையும் மிக நேர்த்தியாக அடுக்கி “ இது உங்கள் பொருள்கள் அண்ணா .. எடுத்துக் கொள்ளுங்கள் என்று அதே இளைஞன் என்னிடமிருந்து பெற்றவற்றை ஒப்படைத்தான். அப்பொழுதுதான் அவன் முகத்தை முழுமையாகப் பார்த்தேன்.. கலையொழுகும் சிவந்த முகம்.. என்னேரமும் புன்னகைத்த தோற்றம்.. பார்த்தவரை ஈர்க்கும் முகப்பொலிவு… அவன்தான் கலையழகன் என்று அவன் என்னோடு நெருங்கிப் பழகிய பிறகு அறிந்து கொண்டேன்…
நீண்ட நாள்கள் கழிந்து 2005 ஆம் ஆண்டு மலேசியாவில் என் இல்லம் தேடி நான் ஈழத்தில் பார்த்த அதே இளைஞன் வந்தான். நான் அன்று பார்த்த அதே முகம்.. அதே பொலிவு… கலையழகன் என்ற தூயதமிழ்ப்பெயர் அவ்விளைஞனுக்கு மிகப் பொருத்தமே..
என் இல்லத்தில் உணவருந்தி.. நீண்ட நேரம் என்னோடு கலையழகன் உரையாடினான்.. என் பணியையும் கொள்கை நிலைப்பாட்டையும் அறிந்து என் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொள்ளலானான்.
நம்மிடமிருந்து கருத்து முரண் கொண்டவராயினும் சிற்சில ஒற்றுமைகளைக் கண்டு நாம் அவரோடு அன்புபாராட்டி நம்மை நம்கோட்பாடுகளை மதிக்கும்படி செய்ய நாம் முயல வேண்டும்… நாம் அகன்றிருக்கும் வரை நம்மை எவரும் அறிய முடியாது.. நாம் நெருங்கினால் நம்மையும் அவர்கள் உணரத் தொடங்குவார்கள் என என்னிடம் கலையழகன் கூறியது இன்றளவும் என்னால் மறக்க முடியாதது . இது தொடர்பியல் துறையில் ஒருவகை நுட்பத்திறன்.. நீண்ட நேரம் என்னுடன் உரையாடி பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆட்களையும் பார்த்து கலையழகன் கலையான முகத்தோடே விடைபெற்றுச் சென்றான்…அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் மிக முகாமைப் பொறுப்பாளன் என்பதை நான் பின்னரே அறியலானேன்..
ஒருநாள் எனக்கு வந்த செய்தி அறிந்து நான் அதிர்ந்து போனேன்.. கலையழகன் .. சிங்களக் காடையரின் வானூர்தி குண்டு வீச்சில் வீரச்சாவடைந்தான்…எனும் செய்தியே என்னை அதிரச்செய்தது.. என்னை அழவும் வைத்தது.. அன்பில், தோய்ந்த கலையழகன் என் நெஞ்சில் நிலைப்பெற்ற தீரனாய் இன்றும் வாழ்கிறான்….
-வேர்கள் இணையத்திற்காக இரா திருமாவளவன்( மலேசியத் தமிழ் நெறிக் கழகம் )
வெளியீடு :வேர்கள் தமிழ்த் தேசிய ஆவணக்காப்பகம்