இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.!

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.!

தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு.

ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதை விட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மா சாந்தியாய் இருக்கும் அம்மா….. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்….”

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை… தன்தாயை நேசித்தது போலவே… தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்…..

தாய்:- ‘என்ரபிள்ளை… என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது… இப்ப…. இப்ப… அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்… என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு…

மகன்:- ‘அம்மா……. என்னை எங்கையும் தேடவேண்டாம்… நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்………’

குரல்:- அவன் தன்னுடையதும்…தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டு கண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.

அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்…அவன் மென்மையாய்… புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது… தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட……. தேசியத்தலைவரையும்……… போராளிகளையும்…….. மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ……… தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்…

‘தேசத்தைச் செதுக்கியவர்களே……..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச்
செதுக்குகின்றோம்.
செதுக்கப்படாமலும் இன்னும் சிலர்
வெளித் தெரியாமலும்…எங்கள் மனதில் மட்டும்.

உண்ணாமல் பசிகிடந்து… உறங்காமல் விழித்திருந்து
கால்வலிக்க காடுதாண்டி
கைகள் வலிக்க கடல் தாண்டி
ஈழம் வேண்டிடப்போனீர்… நாம்…
இதயம் விம்மிட நிற்கின்றோம்…
என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்….

தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்து கொண்ட அறிவுக்குமரன் தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை கௌரவமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்.

அவன் முதலில் கந்தகப்பொதி சுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனை பண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில் 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.

அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறான போது இவன் மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.

1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்… ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க…. அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவது போல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்… அறிவுறுத்தலோடும்… ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.

அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்து தான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத் தளத்தையும்…. எதிரியின் M.I.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும் தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.

மீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொரு களமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறது எதிரி கடுமையான எதிர்ப்புக் காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம் மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.

கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.

அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டு வந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை.

எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர் பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்க முடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.

இப்போது தாக்குதலுக்கு தலைமை தாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். “நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ” அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப் பார்க்கிறான். “நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்ல வேணும். அது இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்”

சிறிது நேரத்தில் அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே. அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு, எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியே வந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்.

இளமையை இதமான உணர்வுகளை
இனிய சுகங்களை ஒதுக்கியவர்களே….
தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக் கல்லில் உங்கள்
பெயரைச் செதுக்குகின்றோம்…
செதுக்கப்படாமலும்… இன்னும்சிலர்
வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’

அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்று ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்…. வேவுப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது… கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்… காயம் மாறமுன்பு… மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்…

10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்ல வேண்டும்… அங்கும் அவனது கடமைகள் இருந்தன… அன்று – முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க… கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.

திருமலையில்… அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன…. இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும் , கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்… அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு… அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது… அவனுக்குள் ஆனந்தம்… மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்… அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்… அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்.

11.04.2000 அன்று…. கடலிலே படகு அறிவுக்குமரனையும் துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக் கொண்டு விரைகிறது… அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன.

கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்… அறிவுக்குமரனோடு… துணைப்படைவீரன் ஜோன்சனும் அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்… அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்…. கவிதைகளை, பாடல்களை, சம்பவங்களை புலிகளின்குரல் நேயர்களுக்காக எழுதினான்… தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும், சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின.

அறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன.

நினைவுப்பகிர்வு:- சி.கண்ணம்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments