“ லை ” காம்போ…“ லை ” காம்போ..
இயல்பாகவே விளையாட்டு குணம் நிரம்பிய இவனால் எந்த ஒரு காரியத்தையும் கடினமான ஒரு விடையமாக எடுத்து கையால முடிவதில்லை.இதனால் பலமுறை பொருப்பாளர்களின் தண்டனைகளை ஏற்றுக்கொண்டாலும் அந்த தண்டனைகளை கூட ஒரு விளையாட்டாகவே செய்து முடித்து மீண்டும் தனது வழமையான குறும்புத்தனத்தை தொடங்கி விடுவான்.
கடற்புலிகள் அணியின் சகல போராளிகலாலும் அறியப்பட்ட ஒரு சில போராளிகளில் இவனும் ஒருவன்.அதுவும் கதிரொளி என்ற பெயரை தாண்டி இவனை “ லை ” என்றே சகலரும் அழைப்பதும் அறிந்திருந்ததும் அதிகம்.இவனுக்குள் இருந்த அந்த குறும்புத்தனமே இவனை சகலரிடமும் அடையாளம் காட்டி இருந்தது.அவ்வாறே பொருப்பாளர் முதல் தளபதி சிறப்புத்தளபதி ஈராக இவனை அடையாளம் காட்டியது என்றாலும் மிகையல்ல.
கடற்புலிகள் அணியில் களமுனைகளை தாண்டி போராளிகளின் கடமை மிகப்பெரியது.அப்படியாக களமுனையை தாண்டி கனரக வாகன சாரதியாக இவன் அங்கு நீண்ட காலம் கடமை ஆற்றி இருந்தான். இவன் வாகனத்தை ஓட்டி வருகிறான் என்றாலே மற்றையவர்கள் அந்த பாதையை விட்டு விலத்தியே இருப்பார்கள் காரணம் அதில் கூட அவனது குறும்புத்தனம் மிகைப்பட்டே இருக்கும்.
ஒருமுறை புதுக்குடியிருப்பு வழியாக இவன் வாகனம் ஓட்டிச்செல்வதை கண்ட பொதுமக்களில் சிலர் நேரடியாக சிறப்புத்தளபதியிடம் விடையத்தை போட்டுவைக்க அவரது கண்டிப்பான உத்தரவின் பின்னராக இவனது வாகன சாரதி அனுமதி கூட சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருநந்தது.ஆனாலும் போராளிகளுக்கான உணவு பரிமாற்றங்களில் இவனது சாரதித் திறமை வெளிப்பட்டு இருந்தது என்பதை யாராளுமே மறுக்கமுடியாத உண்மை.உணவு எடுத்து முகாம் திரும்பும் அந்த MF240 உளவு இயந்திரத்தின் இரைச்சலே இவனது வரவை அடையாளப்படுத்தி விடும் .அதையும் தாண்டி வந்து சேரும் அந்த உணவில் தற்செயலாக மீன்வகை உணவு இருக்கும் பட்சத்தில் அவை மீனாக அங்கு போராளிகளின் கைகளில் சேர்வடையாது.அப்படி ஒரு இலவகமான ஓட்டம் அவனது.
இப்படியான சில குறும்புத்தனங்களை தாண்டி இவனுக்குள் ஒரு இசைத்திறமை குடிகொண்டிருப்பதை இவனுடன் ஒட்டி உறவாடிய போராளிகள் பலரும் அறிந்திருந்தார்கள்.விடுதலை காணங்களை எந்த வித உணர்வுகளும் பிறளாது அதை அப்படியே ஒப்புவிப்பதில் அவனுக்குள் அப்படி ஒரு திறமை. போராளிகள் மத்தியில் தென்னிந்திய சினிமா பாடல்களின் ஆதிக்கம் குறைவாக இருந்தாலும் அவற்றை எங்காவது வானொலிகளில் கேட்கும் பட்சத்தில் அதை கூட ரசிப்பது வழக்கம். அப்படி இருக்கும் ஒரு சில இசை ரசிகர் மத்தியில் இவனும் ஒருவன்.அதிலும் பின்னனி பாடகர் s.p.பாலசுப்பிரமணியம் இவனது முதல் தேர்வு.இப்படியாக இவனுக்குள் ஒரு கலைஞன் கூட குடியிருந்தான்.அதன் ஒரு வெளிப்பாடு தான் கடற்புலிகளது வெளியீடான “ கடலோர காற்று ” திரைகாவியத்தில் இவனது பங்கும்.அதில் கூட இவனது காட்சிகள் மிகவும் குறும்புத்தனமாகவே வெளிப்பட்டிருப்பதை இவனை தெரிந்து பார்க்கும் பலருக்கும் விளங்கியிருக்கும். இதைவிட இங்கு தான் இவனது மற்றொரு குறும்பு பெயருக்கான அடையாளம் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
ஒருமுறை முகாமில் TOM AND JERRY என்ற கார்ட்டுன் சித்திரம் ஒளிபரப்பப்பட்ட போது அதில் வரும் இசைநகைச்சுவை காட்சி ஒன்று மிகவும் பிரபல்யமானது அது தான் (TOM & JERRY) CRAMBO என்ற அந்த பாத்திரம்.அதில் கிட்டார் இசைகருவியை மீட்டி அந்த பாத்திரம் செய்யும் நகைச்சுவையை அன்றிலிருந்து இவனும் பின்பற்ற தொடங்க அதுவே அவனுக்கு “ காம்போ ” என்ற ஒரு புனைபெயராக உறுவாகி கொண்டது.அதன்பின்னர் போராளிகள் இவனை “காம்போ ” “ காம்போ ” என்றே அழைக்க தொடங்கி இருந்தனர்.
இப்படியான இவனது கடற்புலிகள் வாழ்க்கை ஈழத்து கரைகளுடன் மட்டும் நின்று விடாது பலமைல்கள் தாண்டி கூட பயனித்திருந்தது.கால ஓட்டத்தில் இவனது கடமைகள் மாற்றங்களாகி மீண்டும் அந்த பழைய கடற்கரை வாழ்க்கையுடன் இவன் இணைந்திருந்த காலத்தில் தான் 2002 ஆண்டு சமாதான ஒப்பந்தம் உறுவாகி கொள்ள போராளிகளும் தங்களுக்கான கடமைகளை மாற்றிக்கொண்டிருந்தனர்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இவனும் சிறப்பு தளபதியிடம் கடற்தொழில் மீது தனக்கிருந்த ஆர்வத்தை காரணமாக காட்டி கடற்பரப்பில் போராளிகளுக்கான மீன்பிடி தொழிலை மேற்கொள்ள அனுமதி பெற்றுக்கொண்டான்.அந்த வாழ்க்கை அவனை மிகவும் ஈர்த்திருந்தது.அவனது அந்த தொழில்மீது இருந்த ஈடுபாடு கடைசி நாட்களில் அவனுக்கு என்று ஒரு உந்துருளியை பெற்றுக்கொடுக்கவும் செய்திருந்தது.
அன்றைய காலம் யுத்தமுனைகளை மூடி இருந்தாலும் அங்கும் இங்குமாக ஒரு சில வீரமரணங்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தன.அப்படித்தான் இவனுக்கும் அந்த சம்பவம் அமைந்தது.இவனது எந்த குறும்புத் தனம் இவனை போராளிகள் மத்தியில் அடையாளம் காட்டியதோ அப்படியான ஒரு குறும்புத்தனமும் விளையாட்டுத் தன்மையுமே இவனை போராளிகள் மத்தியில் இருந்து பிரித்தும் சென்றது.
ஒரு நாள் முகாம் பகுதியில் வெடிமருந்து ஒன்றை கையாண்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அது தனது குணத்தை வெளிப்படுத்த அதற்கு “லை காம்பே ” என்று போராளிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட “கதிரொளி ” யும் வீரமரணத்தை அணைத்துக்கொண்டான்.வெறும் “ காம்போ ” என்ற கதிரொளி அன்றைய அந்த துயரச்சம்பவத்துடன் மேஜர் கதிரொளியாக தனது போராட்ட வாழ்வை தற்காலிகமாக நிறுத்தி கொள்ள அவனது கனவுகளை தமதாக்கி ஏனையவர்கள் அந்த பாதையை தொடர தொடங்கினர்.
இன்றுவரை இவனது நினைவுகள் அவர்கள் மத்தியில் நிழலாடிய வண்ணமே உள்ளது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”