இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள் கடற்புலி மேஜர் இன்பநிலா

கடற்புலி மேஜர் இன்பநிலா

‘இன்பன் வீரச்சாவாம்’

இந்தச் சேதி செவிப்பறையில் மோதிய போது மனம் உண்மையை ஏற்க மறுத்தது. ஒரு கூட்டில் விடுதலை வேண்டி பரணிபாட இணைந்த நேசப்பவை அவள்.

ஒரு கூட்டில் ஒன்றிணைந்து எம் இன்ப துன்பங்களில் கரம்கொடுத்த இனிய உயிர் அவள். வேங்கைகளிற்கு மரணம் எப்போதும் அருகிலே என்ற உண்மையினை உணர்ந்த பின்னும், இன்பநிலாவினது மரணம் இதயத்தை ஓயாது வலிக்கச் செய்கின்றது.

எப்ப நடந்தது? எப்படி நடந்தது?

விடையாக நீட்டி நிமிர்ந்து அமைதியாகப் பெட்டியில் ஒளி சிந்திய முகம் சாட்சியானது.

இன்பநிலா! அவள் எம்மிடம் விட்டுச் சென்ற ஞாபகச் சுவடுகள் ஏராளம். அவள் இல்லை என்று பொய்யுரைப்பதைவிட்டு. தேச விடுதலையின் எல்லைகளிற்கு அப்பாலும் எம்மோடு வாழ்வாள் என்பதே உண்மை.

நான்கடி இரண்டு அங்குலம் உயரம் கொண்ட உருவத்துள் எத்தனையோ தீராத கனவுகளும், இலட்சியங்களும் கனன்று கொண்டே இருந்தது.

வீர்ரென்று காற்றைக் கிளத்து தெருப்புழுதியையெல்லாம் வாரி இறைத்தபடி செல்லும் அந்த மோட்டார் கைச்கிளை ஓடுபவர் யாரென்று பார்த்தால், அது நிச்சயம் இன்பநலாவாயத் தானிருக்கும்.

(win) வின்னில் ஏறி இருந்து சமநிலைப் படுத்த சிரமப்பட்டு அப்படியும் இப்படியும் ஆடி கிக்கரை சிரமப்பட்டு உதைத்து ஓட வெளிக்கிட்டாள் என்றாள். பின்னால் இருப்பவர்கள் அவளையோ அல்லது மோட்டார் சைக்கிளில் எட்டிப் பிடிக்கக்கூடிய எதையாவது இறுக்கிப் பிடித்திருப்பார்கள். பள்ளம் திட்டியெல்லாம் ஒரே மாதிரியாக ஓடி பின்னிருப்பவர்களை பயப்படுத்துவது அவளது விரும்பிய பொழுதுபோக்கு.

‘அவளிற்கு விண்ணென்றால் பிளேன் ஓடுறது என்ற நினைப்பாக்கும்’ பின்னால் இருப்பவர் இறங்கியபின்தான் சொல்வார். பிளேன் ஓடும் சாதiணில் வீதியில் அவள் சந்தித்த சிறு விபத்துக்கள் பல.

‘என்ன மாதிரி இன்பன் காவல்துறையினர் உன்னைத் தேடி வந்திருக்கினம்’ என்று அந்த முகாம்காரர் பம்பலடிக்கும் போது வழியை உருட்டி ‘நானில்லை’ என்று சொல்லுங்கோ என்று சொல்லும் அவளது முகபாவம் இன்றம் எம் முன்னே நின்றாடுகின்றது.

குளப்படி என்று அவளை சொல்வதை விட, குறும்புக்காரி என்று சொல்லலாம். எப்போதும் எதையாவது திருகிக்குடைந்து நிமிர்த்தி சரி செய்வது அவளது பணியேதான்.

ஒருமுறை கணக்குப் பார்ப்பதற்காக கல்குலேற்றரை எடுத்து இயக்க முற்பட்ட போது அவ்வாழி அதற்குரிய இடத்தில் காணவில்லை, யார் செய்தது எனறு மகா நாடு நடாத்தும் தேவை அவர்களிற்கு இருக்கவில்லை. அதை செய்தது இன்பன் என்று அனைவருக்கும் தெரியும்.

சின்னஞ்சிறிய அவ்வுருவத்துள் மூழும் கோபம், அந்தக் கோபத்தால் ஏற்படும் விளைவுகள் எல்லாமே ஓய்ந்த பின் தன்னையும் நொந்து, பிறரையும் சமாதானப் படுத்தும்போது சிறு குழந்தையாகி நிற்கும் அந்த இன்பநிலாவை எண்ண, எழுத வேதனைதான் மிகுதியாகின்றது.

நித்திரை கொள்வது என்றால் அவளிற்கு விருப்பமான செயற்பாடாகும். அதற்காக அவள் எதைப் பற்றியும் பொருட்படுத்தவே மாட்டாள். தொலைத் தொடர்பு கல்வி கற்கும் காலத்தில் நித்திரை விழித்து படிக்கக் கஸ்ரப்பட்டு பொறுப்பாளரிடம் உண்மையைக் கூறி நித்திரைக்குச் செல்வாள்.

எதற்கும் உண்மையை பேசுவது அவளது பண்பு. எந்தச் செயற்பாடு என்றாலும் பயம் இன்றி உடனே செய்யும் போர்க்குணம் உடையவள்.

1994 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மகளிரின் ராடார் நிலையம் ஒன்று உடுத்துறைப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கு கடமை புரிந்தவர்களில் இன்பநிலாவும் ஒருத்தி.

இன்று “ஓயாத அலைகள் 03” இல் மீட்கப்பட்ட வெற்றிலைக்கேணி, அன்று எதிரியின் தளமாக இருந்தது. அந்தத் தளத்திற்கு கடல் வழியாக விநியோகத்திற்கு வரும் கலங்களை அவதானிப்பது அந்நிலையத்தின் பணி.

தொடர்ச்சியான அவதானிப்பில் தரையிறங்கும் கலம் ஒன்று குறிப்பிட்ட பகுதியில் தரை தட்டுவது அவதானிக்கப்படுகின்றது. அதனை உறுதிசெய்ய வேண்டும். எதிரியின் நிலைக்கு அருகே சென்று வரவேண்டும். எதிரியின் நிலையிலிருந்து நூறு மீற்றரில் அவதானிக்கலாம் என்று சொன்னபோதும், இன்பநிலை எதிரியின் காவல் நிலையிலிருந்து இருபது மீற்றர் வரைசென்று அவதானித்து வந்தாள்.

அவள் எடுத்து வ்நத தரவின்படியே பின்னாளில் அந்த தரையிறங்குக்கலம் தாக்கப்பட்டது. அந்த திறமையான செயற்பாட்டை தலைவர் அண்ணா, அவர்களை பாராட்டி மோட்டார் சைக்கிள் ஒன்று அந்நிலையத்தினற்கு வழங்கினார்.

1991 காலப்பகுதியில் விடுதலைப்போர் புதிய உத்வேகத்துடன் செயற்பட்ட நேரம். இன்பநிலாவினது மனதுள்ளும் விடுதலைக் கரு துளிர்விடத் தொடங்கியது. போரின் தாக்கத்தை உணராதவளாயினும் தனக்குரிய கடமையொனது விடுதலைப் போராட்டத்தில் இணைவதன் மூலம் நிறைவேற்ற முடியும் என முடிவு எடுத்தாள்.

அவள் இணைந்த காலப்பகுதியில் ஆகாய, கடல் வெளிச்சமர் முனைப்புடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமரில் விழுப்புண்ணடைந்தவர்களை பராமரிக்கும் பணி இன்பநிலாவிற்கு கொடுக்கப்பட்டிருந்தது.

விழுப்புண்ணடைந்து வேதனையில் முனகிய போராளிச் சசோதரிகளிற்கு அவள் இனிய தாயாக, தங்கையாக, அக்காவாக, தோழியாக வெவ்வேறு வடிவங்களில் அவர்களின் வேதனைக்கு ஏற்ப செயற்பட்டாள்.

‘கால் வலிக்குது’ என அழும் போராளியின் காலிற்கு விசிக்கி, ஆறுதல் கூறும் அவளை மறுநிமிடம், ‘தலைக்குள்ளை குத்துது’ என்று கத்தும் போராளியின் முன்காணலாம்.

‘எங்கட போராளிச் சகோதரங்களில் நான் எவ்வளவு ஆழமாய் பற்று வைத்துள்ளேன் என்றதை அவர்களை பராமரித்ததில் இருந்துதான் உணர்ந்து கொண்டேன்’ எனச் சொல்வாள்.

போர் அதன்பால் வந்த பந்தங்கள், அவர்கள் விட்டுச்சென்ற அழியா நினைவுகள் அதில் அழிவில்லை என்பதை இன்னும் இன்பநிலா உணரத்திக் கொண்டிருக்கிறாள்.

1995 காலப்பகுதியில் இனப்நிலாவின் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று மாதகல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. எதுவும் அவசியமான பொருட்கள் எடுக்க வேண்டுமாயின் தொண்டமானாற்றுப் பகுதியில் அமைந்திருந்த பிரதான முகாமிற்குத் தான் வரவேண்டும்.

1995.10.01 அன்று யாழ். குடாநாடு விடியலின் இனிமையை தொலைத்துக் கொண்டே பிறந்தது கூவிவரும் எறிகணைகள் அச்சுவேலிப் பிரதேசத்தை உலுப்பிக் கொண்டிருந்தது.

இன்பநிலா காலை தொண்டமனாற்றிற்கு வல்லைப் பாலத்தாலே வந்தாள். அப்போது அப்பாலம் அமைதியாய் தானிருந்தது. மதியம் இரண்டு மணிக்கு திரும்பவும் அப்பாதை வழியே அவள் திரும்பிக் கொண்டிருந்தாள். அமைதி, ஆள் நடமாட்டமற்ற அமைதியாக வல்லை வீதி காட்சியளித்துக் கொண்டிருந்து. தூரே வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது.

வேகமாக ஓடிய பிக்கப் சாரதிக்கு, இன்பநிலை சொன்னாள் ‘பாலத்திலை செல்வீழ்ந்து பாலம் உடைந்திருக்கும் மெதுவாக பார்த்து ஏத்து’ அவள் கூறிய மறுகணமே கூவிவந்த லோவொன்று அவளிருந்த அருகில் வெடித்துச் சிதறியது.

சிதறிய இரும்புத் துண்டொன்று அவளது கையை சீவிக்கொண்டது. காலிலும், இடுப்பிலும் பலமான காயம். அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து மீளும் முன்பே சிறீலங்கா இராணுவத்தினர் இவர்களை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில்கூட நிதானம் தவறாமல் இன்பன் சாரதிப் போராளிக்கு துணிவூட்டினாள்.

‘பயப்படாமல் ஓடு அண்ணாவை நினைச்சுக்கொண்டு ஓடு, ஓட இயலும்மட்டும் ஓடுவது ஏலாது போனால் குப்பி கடிப்பம்’

ரயர் ஒன்று ஓட்டையாகி இருபது மைல் மணி வேகத்தை தாண்டி ஓட முடியாத அந்தச் சூழலில்கூட இன்பநிலை தீர்க்கமான முடிவெடுத்தாள்.

அந்தச் சூழலில் வல்லைப்பாலம் தாண்டி அவ்வளவு இராணுவத்தினரையும் தாண்டிய பின்பு அவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

சுற்றிவளைத்து சூழ நின்று இலக்குத் தவறாமல் சுடமுடியாத சிறீலங்கா இராணுவப் படையை எண்ணி நகைத்து வந்து, அவர்களை மீண்டும் ஆவரங்கால் சிவன் கோவிலடியில் வைத்து இராணுவத்தை வழிமறித்தடித்து உறுதியை உரமாகக்கொண்டு வெற்றியுடன் வந்தார்கள் இன்பநிலாவும் அந்தச் சக போராளியும்.

‘கரும்புலியாய் போக வேணும்’ அவருள் பர்ணமித்த கனவு அது, அது நிறைவேறவேணுமென்று அவள் துடித்த துடிப்பு அதற்காக அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

இன்பநிலா ஓர் ஆளுமையான பொறுப்பாளரும் கூட. அடங்க மறுக்கும் பிள்ளைகளின் மனநிலைகளிற்கு ஏற்ப அவர்களோடு பழகி, அவர்களது இதயங்களில் தனக்கென்றொரு இடத்தை பிடித்துவிடுவாள்.

தென்னங்கீற்றுகளின் சலசலக்கும் ஓசைகளை புறந்தள்ளிவிட்டு ஓயாது ஒலிக்கும் அலைகள், அலைகளில் முக்குளித்து மீளும் நண்டுகள், இத்தகைய சூழ்நிலையில்தான் இன்பநிலாவினது காவலரண் அமைந்திருந்தது.

ஒரு காலத்தில் ராடார் நிலையம் அமைத்து இன்பநிலை ஓயாது சுற்றித்திரிந்த அந்தப் பகுதி இன்று, எதிரியின் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கிறது. இந்தப் பூமியின் அவலம் அவளது ஆன்மாவினை உலுப்பிக் கொண்டேயிருந்தது.

அந்தக் காவலரண் பகுதயில் கடமை புரிந்தபோது அவள் ஒரு குழுத்தலைவியாகவே செயற்பட்டாள். அசைந்தால் தலையை சீவிச் செல்ல காத்திருக்கும் எதிரியின் சன்னங்கள், நடமாட்டங்களை கண்டுவிட்டால் ஓயாது கூவும் எறிகணைகள், கடலிலிருந்து தரையை நோக்கி எதிரிக் கலத்தின் தாக்குதல்கள் இத்தனைக்கும் மத்தியில் அவள் நின்றாள்.

ஊரை மீட்கப் போகும் உத்வேகத்தோடு அவள் கண் வழித்திருந்தாள். சக போராளிகளையும், பாதுகாத்திருந்தாள். நினைவுப்பதிவேட்டில் அடிக்கடி அருகே இருக்கும் அவளது மருதங்கேணி கிராமம் வந்துபோகும்.

இரு அண்ணாக்களின் மடியில் அன்புத் தங்கையாக அமர்ந்து, செல்ல மொழிபேசி விளையாடியதும் வந்துபோகும்.

இன்று இடம்பெயர்ந்து வன்னியில் எங்கோர் பிரதேசத்தில் அவளிற்காக அந்நிய தேசம் போகாமல் காத்திருக்கும் தாயின் இனிய முகம் வந்து மீளும்முன் அவளிடம் கண்ணீர் அரும்பு காட்டி மறையும்.

தான் அழுவதை ஒருவருமே அறியாமல் துடைத்து, புன்னகை சிந்தித் திரிவதே அவளது சிறப்பாகும். எல்லாமே இரட்டையாக கட்டி பள்ளி சென்றதும், நண்பிகளோடு கடற்கரை பார்க்கச் சென்றதும் நினைவினை ஆக்கிரமிக்கும்.

எதிரி ஏவும் குண்டு ஒன்றின் எதிரொலி அவளது கடமையின் வேகத்தில்கூட, 11.01.2000 அன்று எதிரிகள் ஏவிய பீரங்கிகளோடு பொழுது விடிந்துகொண்டது.

இரவும் நீண்ட நேரம் வழிப்புற்று காவலரண்களில் கடமைபுரியும் போராளிகளை பார்த்துவிட்டு, அப்பதான் வந்து அந்தக் காவலரண் அருகே குந்தினாள் இன்பநிலை. இப்பவும் அதே சிரிப்பு ஆரவாரம்.

இன்னும் சொற்ப வேளையில் விதையாகப் போகிறது அவள் உயிரென்று யார்தான் எதிர்பாத்த்தார்கள். திடீரென இரைந்து வந்த எதிரியின் செல்லொன்று இனப்நிலாவிற்கருகே வெடித்துச் சிதறியது.

புகைமூட்டம் கலைந்தபோது இன்பநிலா எங்களின் நேசத்திற்குரிய இன்பன் நெற்றியில் குருதி கொப்பளிக்க அமைதியாக தேசத்தின் விடுதலைக்காகத் தன் பெயரை பொறித்துக்கொண்டாள்.

தொலைத்தொடர்புப் பரிவில் அவள் பணியாற்றியபோது வானலை வழியே அவள் சேர்த்து வைத்திருந்த போராளிச் சகோதர, சகோதரிகள் அவளின் குரலை காணாது ஏங்கிக் தவிப்பதையோ… இல்லாது போனால், இவளின் வரவிற்காக காத்திருந்த அன்புத் தாயின் கதறலோ, அவளை போரின்பால் நேசித்த எண்ணற்ற மக்களின் கண்ணீர்களையோ அறியாமல் இன்பன் வந்தாள்.

தேசத்தின் புதல்வியாக மேஜர் இன்பநிலாவாக அவளிற்குரிய புன்னகையோடு வந்தாள்.

அவளை விதைகுழியிலிட்டு மண்போட்டு, பூப்போட்டு இறுதி வணக்கம் செய்தபோது இறுகிப்போனோம்.

இன்பநிலாவின் கனவுகளும், கடமைகளும் எமக்காக காத்துள்ளதை உணர்ந்து…

நினைவுப்பகிர்வு: அலையிசை.
 களத்தில் இதழ் (30.11.2000)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments