இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி உயிராயுதம் கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன்.!

கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன்.!

 

கடற்கரும்புலி

கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்)

குகதாசன் பிரணவன் – நல்லூர், யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு:05.07.1974

வீரச்சாவு:19.09.1994

நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு


 

அவனில்லாமல் போனால் அடிப்பதற்கு வேருவீரர்கள் தயாராய் இருந்தனர். ஆனால்………

வெடிவாயன் பொருத்தமான பெயர்.

கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.

தச்சன்காட்டில், பலாலிப் பெருந்தளத்தின் ஒரு பகுதிக் காவல் வியூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதல்.

கை எலும்புகளையும் நொறுக்கி, வாய்ப் பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன துப்பாக்கிச் சன்னங்கள்.

ஒரு தண்டு இல்லாமல்போய், ஒரு பக்கமாய் இழுபட்டு, நெளிந்துபோயிருந்த வாயால் அவன் பேசும்போது, பார்க்கா அழகாய்த்தான் இருக்கும்.

அது மழலைக் குரல்.

பண்டத்தரிப்புக்குப் பகைவன் நகர்ந்த சண்டையில் காலை இழந்தவன், ‘பலவேகய – 02’ சண்டை துவங்கியபோது பொய்க்கால் பொருத்திக்கொண்டு ஆனையிறவுக்கு ஓடினான்.

இயக்கச்சியில் வைத்து, அடிக்காத குறையாய் துரத்திக் கலைத்த தளபதியோடு சண்டை பிடித்துக்கொண்டுதான் அவன் திரும்பி வந்தான்.

‘மணியந்தோட்டம் – 02’ பயிற்சி முகாம், நான்காண்டுகளுக்கு முன்னர் லக்ஸ்மனை போரிற்குத் தயாராக்கியது.

யாழ்ப்பாணக் கோட்டைதான் அந்த வீரனின் முதற்களம்.

மாங்குளம், சிலாபத்துறை, ஆனையிறவு, மணலாறு, காரைநகர், பலாலி; பகைவன் கூடாரமடித்த இடங்களிலெல்லாம் அந்த வீரன் போர்தொடுத்தான்.

குடிமகனொருவன் தன் தாய்மண்ணுக்குகாகச் செய்யக்கூடிய அதியுயர் தியாகத்தைத் தான் செய்யவேண்டுமென்ற வேட்கையை, சுவாசப்  பகல் சுமந்துகொண்டு திரிந்தான் அந்தக் கரும்புலி.

அந்த சர்ந்தப்பத்திற்காக அவன் கடல்மடியில் தவம் கிடந்த நாட்கள் ஏராளம்.

சதுரங்கப் பலகையில், தனது சேனையை மதிநுட்பத்தோடு வழிநடாத்தி, எதிராளிகளின் அரசர்களை முற்றுகையிட்டு, முறியடித்து வீழ்த்துகிற அந்த சதுரங்க வீரன்.

கற்பிட்டிக் கடலில், ஒரு கரும்புலியாய் எதிரியின் “கடல் அரசனைத்” தகர்த்து மூழ்கடித்தான்.

‘ஆசீர்’ கடற்பயிற்சிப் பாசறையில் தளபதி சாள்ஸ் வனைந்தெடுத்த கடற்புலி வீரர்களுள், லக்ஸ்மனும் ஒருவன்.

கிளாலிக் கடற்தளத்தில் அந்த வீரத் தளபதி வீழ்ந்தபோது, அவனது கைகளில் வளர்ந்த இந்தக் கரும்புலிக் குழந்தைகள் வெகுண்டெழுந்தார்கள்.

சுட்டெரித்துச் சாம்பராக்க எங்கள் கடலெங்கும் பகைவனைத் தேடியலைந்தார்கள்.

பருத்தித்துறையில் ‘சுப்பர் டோறா’ வைத் தகர்த்தபோதும், இதயத்தில் விழுந்த அந்த ஆழமான காயம் ஆறவேயில்லை.

அந்தத் தளபதியின் நினைவோடு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயின்று வெளியேறிய மாணவர்கள்தான்.

சிலாபத்துறையில், பகைவனின் மடியில் நெருப்பு மூட்டினார்கள்;

‘சாகரவர்த்தனா’ வைச் சாகடித்துச் சாதனை படைத்தார்கள்.

லக்ஸ்மன் இயல்பாகவே கெட்டிக்காரன். விஷயம் தெரிந்தவன்.

அநேகமாக, பொதுவான எல்லா விடயங்களைப் பற்றியும் அவனது மூளைக்குள் பதிவுகள் இருந்தன.

முகாமிற்குப் பொருள்கள் ஏற்றிவரும் உழவுப்பொறி ஐயாவைப் பார்த்து, “நடுப்பெரிய சில்லு ரெண்டுக்கும் எத்தினை கிலோ காத்து?” என்பான்.

ஐயா தலைசொறிந்து நிற்க, “பெரிய சில்லுகள்தானே, எப்படியும் 150, 200 கிலோவரும்” என நாங்கள் நினைக்க….

“40 கிலோதானய்யா……….. கணக்கா இல்ல” மேதாவியாய் பதில் சொல்லுவான்.

பள்ளிக்கூட மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் பையன்களைக் கைதட்டிக் கூப்பிட்டு,

“கிரிக்கற் பந்து எவ்வளவு நிறை இருக்க வேண்டும்?” என்பான்.

பதில் தெரியாமல் முழித்து, அப்பாவித்தனமாய்ச் சிரிக்கும் பையன்களைப் பார்த்து “110 கிராம் தம்பி” சொல்லிவிட்டு வருவான்.

அவனைப் பெரிய அறிவாளி என்று சொல்வதற்கில்லை: ஆனால், எவரோடும் எதைப்பற்றியும் கதைக்கக்கூடிய அளவுக்கு அவன் இருந்தான்.

அது அவனது சிறப்பு இயல்புகளில் ஒன்று. வீட்டுக்கு வெளியில், நாட்டுக்கு வெளியில், பூமிக்கு வெளியில், எங்கள் ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியில், எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் வெளியில் மானிடன் கண்டுபிடித்த எல்லாவற்றையும் பற்றித் தானும் அறிந்திருக்க வேண்டும் என்ற முனைப்பும் முயற்சியும் கொண்டவன் லக்ஸ்மன்.

அந்த ஆர்வத்தினால்.

எல்லாவற்றையும் பற்றித் துருவித் துருவி ஆராய்வான்.

‘றாடர்’ படிப்பிக்க வந்தவர் குழம்பியே போனார். அவன் குடைந்த குடையலுக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு,

“பிரண்டவன்”

‘பிரணவன்’ என்ற அவனது இயற்பெயரை நாங்கள் தான் இப்படி மாற்றினோம்!

பிறந்தது 05.07.1974இல்.

ஊர் நல்லூர்; சங்கிலி மன்னனின் பழைய இராசதானி.

படித்தது யாழ்ப்பாணம் ‘ஸ்ரான்லி கல்லூரி’யில் கிரிக்கற் பைத்தியம்.

வீட்டில் துடுப்போடும் பந்தோடும்தான் படுக்கைக்குப் போவானாம்.

லக்ஸ்மனுக்கு தச்சன்காட்டுச் சண்டையில் வெடிபட்டு, ஒரு கையில் இயக்கம் இல்லாமல் போய்விட்டது.

பண்டத்தரிப்பில் மிதிவெடி வெடித்து ஒரு காலில் பாதம் சிதைந்துபோய்வ்ட்டது.

இருந்தபோதும், கடலில் இறங்கி, தோழர்களின் தோள்களைப் பற்றி மெல்ல மெல்ல நீந்தப் பழகியவன், கொஞ்சகாலத்திற்குப் பிறகு, தன்னந்தனியாக நீந்திக் கடந்த தூரம் 5 கடல் மைல்கள.

லக்ஸ்மன் நல்லதொரு படகோட்டி. நீண்டகால அனுபவம் பெற்றிருந்தவர்களை விடவும் குறுகிய காலத்திற்குள் அவன் பெற்றிருந்த திறமை, எங்களை ஆச்சரியப்பட வைத்தது. கடற்புலிகளின் சிறந்த படகோட்டிகளுள் ஒருவனென அவனைச் சொல்ல முடியும்.

இன்னதென்று இல்லாமல், என்னவிதமாக வடிவமைக்கப்பட்ட படகையும் தனது கைகளுக்குள் அவன் வசப்படுத்துவான்.  உருவாக்கப்படும் போது சமநிலை தவறிவிட்ட ஒரு படகை எல்லோரும் கைவிட்டுவிட, கிளாலியில் அவன் தான் கையிலெடுத்துக் கடலில் இறங்கினான்.

தாக்குப்பிடிக்க முடியாமல் தலைதெறிக்க ஓடினான் பகைவன்.

லக்ஸ்மனின் படகு உறுமிக்கொண்டு தண்ணீரில் ஓடும், ‘அக்சிலேற்றரை’ க் கூட்டி அவன் வேகமூட்டும்போது, அணியம் குத்தி நிமிரும், படகு தாவிக் கடந்து பாயும்.

உடலை சரித்து, ‘ஸ்ரியறிங்கை’ அவன் வளைத்துத் திருப்புகிற லாவகத்தில், படகு பக்கவாட்டில் சரிந்து வளையும், தண்ணீர் அள்ளித்தெறிக்கும்.

இயந்திர இயக்கத்தை அவன் உச்சப் பயன்பாட்டுக்கு உயர்த்த, படகு அசுர வேகத்தைப் பெரும். அலை கிழித்து வழிவிடும். கடல் பிளக்கும். நெளிந்த வாயை இன்னும் நெளித்து அவன் ஆனந்தமாய் சிரிப்ப்பான்.

அந்தி சாய்கிற செவ்வானப் பின்னணியில் ஆகா! அது ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.

ஒரு கரும்புலி வீரன், வாழ்வில் எதற்குமே கவலைப்படமாட்டானாம்; ஒரே ஒரு விடயத்தைத் தவிர. தான் தாக்குகிற இலக்கு முக்கியத்துவம் குறைந்ததாக இருந்துவிடக்கூடாது என்பது மட்டும்தான், ஒரு கரும்புலி வீரனுக்குக் கவலையாக இருக்குமாம்.

ஒரு கரும்புலி வீரனென்ற வகையில் தனக்குள்ளிருந்த அந்தமன ஏக்கத்தை அந்த நண்பன் எங்களுக்கு இடைக்கிடை சொல்வதுண்டு.

நெடுநாளாய் அவர்கள் தேடிய பெரிய இலக்கு, வசதியாய்க் கடலில் வருவதாக வேவு வீரர்கள் தகவல் தந்த ஒரு மாலைப்பொழுது.

தனது அன்புத் தங்கையின் ‘சாமத்திய வீட்டுக்குப்’ போகப் புறப்பட்டுக்கொண்டிருந்தான் அந்த அண்ணன்.

ஆசைத் தங்கை, அதிலும் ஒரு நல்ல நாள்; அன்னான் வருவான் என்று அவள் காத்துக்கொண்டேயிருப்பாள்; இனி ஒருபோதும் பார்க்கக் கிடைக்காமலும் போகலாம்….. அங்கேயும் போகவேண்டும்.

பெற்றெடுத்த தேசம்; பிணங்களாய் தினம் ஒதுங்கும் எமதினிய மக்கள்; பகைவனின் ஆளுகையில் எம் கடல்; தேடி அலைந்த இலக்கு; தவறிவிட்டுவிடக்கூடாத ஒரு சர்ந்தப்பம்…… இங்கேயும் நிற்க வேண்டும்.

அவனில்லாமல் போனாலும் அடிப்பதற்கு வேறு வீரர்கள் தயாராகவும் இருந்தார்கள்.

ஆனாலும் அந்தத் தர்மசங்கடமான நிலைக்கு அவன் சுலபமாக முடிவெடுத்தான்.

படகைத் தயார்செய்து கடலில் இறக்கினான்.

நல்ல காலம்….. பகைவனுக்கும் அவனது தங்கைக்கும் நல்ல காலம், காலநிலை வாய்ப்பாக அமையாததாலும் வேறு காரணங்கள் தடையாக வந்ததாலும் பகைவன் தப்பிவிட்டான்.

மறுநாள்தான் தளபதிக்கு விஷயம் தெரிந்தபோது, அவனைத் துரத்துக் கலைத்தார் வீட்டுக்கு.

இதே போலவேதான்,

இன்னொரு நாள், இன்னொரு முறை, இன்னொரு இலக்கு, இன்னொரு தயார்ப்படுத்தல், இன்னொரு தங்கைக்குச் ‘சாமத்திய வீடு’

மீளவும் ஒரு இக்கட்டான நிலை,

புறப்படுவதற்கு முன்னாலிருந்த சின்ன இடைவெளிக்குள்,

ஓடோடி வீட்டுக்குச் சென்று, எல்லாரோடும் ஒன்றாயிருந்து, அன்புத் தங்கையை ஆரத் தழுவி முத்தமிட்டு விடைபெற்றுப் போனவன்…… போனதுதான்.

காத்துக்கொண்டிருந்தவர்க்ளுக்கு, சிலாபத்துறையில் கப்பலடித்த அந்த செய்திதான் வந்தது!

– விடுதலைப்புலிகள்  இதழ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments