அதிர்ச்சிநோய் எமக்கல்ல”இது 1993ஆம் ஆண்டு வெளியான தமிழீழத்தின் ஆன்றோனான நாக – பத்மநாதன் ஐயாவின் உருவகங்களுக்கான தலைப்பு. இத்தலைப்பும், இத்தலைப்பின் கீழ் வரும் உருவக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய அதியுயர் வளர்ச்சிநிலை கண்டு பதறியடித்து வரலாறு பிதற்றும் சர்வதேசத்திற்கு எவ்வளவு சாலப்பொருந்துகின்றது என்பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் இலக்கு. இப் பிதற்றல்களை நாங்கள் தொகுத்தால் . அயலிலுள்ள அதிகாரத்தோர் (தமிழீழம் அமைப்பதற்கு அனுமதிகோரி தமக்கு அனுப்பப்பட்ட விண்ணைப்பத்தை நிராகரிப்பது போன்றதொனியில்) தமிழீழம் அமைவதை அனுமதியோம் என்கிறார்கள். அதிகாரத்தை அண்டி வாழ்வோர் அதற்கு முண்டுகொடுக்கும் ஊடக முதலாளி யங்களைச் சார்ந்தோர் (சிறீலங்காவால் தமக்கு அனுப்பப்பட்ட வழக்கொன்றை விசாரிக்கும் நீதியாளர் போன்ற தொனியில்) தமிழீழம் அமைப்பது பாரியகுற்றம். அது பயங்கரவாதிகளின் பாதகச் செயற்பாடு என நீதி வழங்குகிறார் இன்னும் சிலரோ இதனையொரு பட்டிமன்ற “அரட்டை அரங்க” விவாதப் பொருளாக்கி விழலுக்கு நீர் இறைக்கிறார்கள். உலகத்தின் தொலை இயக்கி தன்னிடமே இருப்பதாகக்கருதுவோரோ செத்த கிரகமொன்றில்தான்

தமிழீழம் அமைவது சாத்தியம் எனக்கூறி தம்மாலும் நகைச்சுவையாக நாலு வார்த்தை உதிர்க்கமுடியும் என நிரூபிக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் அடிமனதில் அதிர்ச்சிநோயன்று பரவியிருப்பதே என்பது எமக்குப் புரிகின்றது.
இவற்றிக்குத் தக்க பதிலை மிகத் தெளிவாக புலிகளின் அரசியல் ஆலோசகரான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறிவிட்டார். “சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அமெரிக்காவும் இந்தியாவும் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டிருக்கலாம் . இந்நாடுகளது பூகோள அரசியல் நலன்களையும் அச்சங்களையும் நாம் புரிவோம். அரசியல் சுதந்திரம் வேண்டித் தமிழர் நடத்தும் போராட்டத்திற்கு பாதகம் விளைவிக்கும் நோக்கில் அந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக நாம் நினைக்கவில்லை. பேசசுவாததை மூலமாக ஒரு அரசியல் தீர்வுகான இருதரப்பினரும் முயற்சி எடுக்க ஊக்கமளிப்பதற்காகவே இக்கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கலாம்.

இப்படியிருந்தும் உலகம் எதற்காக பதறியடித்து பலவாறு அவசரக்கோல அறிக்கைகளைவிடுக்கின்றது? பிரபல செய்தியேடுகள் உரிய முறையில் ஏன் விடுதலைப் போராட்ட வளர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லை. வெல்லப் போகின்றார்கள் என்பதுதான் இவர்கள் அதிர்ச்சிநோய்க்குக் காரணமா? இத்தனை காலம் மெளனம்காத்தார்கள்; ஏறெடுத்தும் ; பார்த்தார்களில்லை உலகை மறக்கவைத்திட முடியும் என நம்பினார்கள். ஆனால் ஆனையிறவுப்பெருந்தள வீழ்ச்சி தவிர்க்கமுடியாத உண்மையை நிர்ப்பந்த நிலையையல்லவா தோற்றுவித்து விட்டது. இங்கேதான் பெருத்த முரண்பா டொன்று அவர்கள் கருத்துக்களிலே தொக்கிநிற்பதை எவரும் உணரமுடியும். இவர்கள் முதலில் என்ன செய்திருக்கவேண்டும்? எவ்வாறேனும் புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி உரிய விபரங்களைப்பெற்று ஆனையிறவுத் தளவீழ்ச்சியின் அரசியல் இராணுவ பரிமாணங்களை யாழ் குடாவில் புலிகள் மீண்டும் காலூன்றுவதைப் பற்றி எழுதியிருக்கவல்லவா வேண்டும்? ஆனால் சிலவரிகள் இவை பற்றி எழுதிவிட்டு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

இவர்களது முரண்பாடுகள் இங்கேதான் அம்பலமாகின்றன இவர்கள் வெளிப்படுத்துவதுபோல தரக்குறைவான, பகுத்தறிவற்ற திரைப்படங்களைப் பார்த்து விடுதலைப் போராட்டத்தை நடத்துகிற ஒரு பயங்கரவாத இயக்கத்தால் எவ்வாறு அதே ரைம் மே 29ம் திகதி இதழில் சிறப்பித்து சிலாகித்துக்கூறப்படும் உயர் பண்புகளை பெற்றிருக்க முடியும்? எவ்வாறு பாரிய அரசியல் இராணுவ வெற்றிகளை அடையத்தக்கதான அமைப்பை கட்டியெழுப்பியிருக்க முடியும்? தினை விதையிலிருந்து பனை தோன்றுமா? ரைம் இதழ் ஒன்றின் பின் ஒன்றாக விபரிக்கும் புலிகளின் இயல்புகளைப்பாருங்கள். உயரிய வளர்ச்சி கண்ட நாடுகளில் விரும்பப்படும் அதியுயர் நகர்திறன்கொண்ட மரபுவழி இராணுவங்களின் மூலோபாயங்களை கையாளும் ஆற்றல் பெற்ற மிக இறுக்கமான தாக்குதல் அணியாக புலிகள் மாறிவிட்டார்கள். வெளிநாடுகள் பலவற்றிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அவற்றினை தமதிடத்திற்கு நகர்த்தும் ஆற்றல் பெற்ற புலிகள், புலிகள் கனரக ஆயுததளபாடங்களான பீரங்கிகள், ராங்குகள், ஏறி கணைகள், துருப்புக்காவிகள் போன்ற தமக்கு முழுமையான தேவையில் ஆகக்குறைந்தது 60 விழுக்காட்டையாவது சிறீலங்கா இராணுவத்திடமிருந்தே கைப்பற்றிக் கொள்கின்றனர். சரி அரைப்பங்கு பெண் போராளிகளைக் கொண்ட புலிகள் தமது போரியல் ஆற்றலில் ஒரு புதிய பக்கத்தினைக் காட்டிநிற்கின்றார்கள். தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றறுக்கொள்ளும் அற்புத ஆற்றல் வாய்ந்தவர்கள் ஒவ்வொரு தாக்குதல் திட்டமும் இம்மிஅளவும் பிசகாது நுட்பமாகத்திட்டமிடப்படுகின்றது. இதற்குத் தேவையான தரவுகள் யாவும் துல்லியமாகப் பெறப்படுகின்றது இடைவிடாது முடிவற்ற பயிற்சிகள் ஒத்திகைகள் மூலம் வெற்றியைத் தமதாக்கிக்கொள்கின்றனர்

இவ்வாறு வியப்புடன் “ஆ” வென வாய்பிளந்து ஆய்வு செய்யும் இக்கட்டுரையிலே புலிகளை தவறாகப் புரிந்து கொள்வதன், குறைத்து மதிப்பிடுவதன் அபாயம் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தியா அனைவருமே இத்தகைய பாரிய தவற்றினைச் செய்திருப்பதாக விபரிக்கும் அமெரிக்க ரைமும் தானும் அதே தவற்றினையே இறுதியில் செய்கின்றது. அமெரிக்க ரைம் இவ்வாறு தடுமாறுகையில் இந்தியாவின் புரென்ட்லைன் ஏடோ ஒரு படி மேலேபோய் தனது மே 26 வெளியீட்டில் முகம் மலர்ந்து (இவர்கள் மனோவிகாரங்களை எள்ளி) நகைக்கும் தலைவர் படத்தை அட்டையில் வெளியிட்டு ஏறத்தாழ 20 பக்கங்களுக்கு ஆனையிறவுச் சமர் அதன் விளைவுகள் பற்றி சிறப்பு விளக்கக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது
ஆனால் அதன் ஆசிரியர் என். ராம் வழமைபோல் தலையங்கத்தில் “வாந்தியெடுக்கிறார்” தமிழீழம் பகற்கனவு நாம் அனுமதியோம். இந்தியாவிற்கு பெரும் தீங்கு என மாயக் கருத்துக்களை உற்பத்தி செய்கிறார். யாரிந்த ராம்? இவருக்கும் எமது விடுதலைப் உட்பட போராட்டத்திற்கும் என்ன சம்மந்தம் ? “வெய்யில் படாத ” – “வீதிக்கு இறங்காத “மேட்டுக்குடி சாய்வு நாற்காலி புகழ் ” ராம் மாக்சை, மனித நேயத்தையே குழிதோண்டிப் புதைக்கிறார் . இவர்களின் இத்தகைய மிக மாறுபாடான போக்குகள் பல வினாக்களை எழுப்புகின்றன. பகுத்தறிவற்ற ஒரு பயங்கரவாத இயக்கம் வீறுடன் எவ்வாறு விடுதலைப்போராட்டத்தினை நடத்த முடியும்? எவ்வாறு நவீன மரபுவழி இராணுவமாக மாற்றமடைய முடியும்? தவறுகளிலிருந்து பட்டறிவைப் பெறும் ஒரு விவேகி எவ்வாறு பயங்கரவாதியாக முடியும்? இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்? எவரும் குழம்பத்தேவையில்லை . அன்றே இதற்கான பதிலை நாக. பத்மநாதன் அவர்கள் கூறி விட்டார்கள். தத்தளிக்கும் மனித உள்ளமும் அதற்கு உறுதி கூறும் குரலொன்றுமாக இவ்வுருவகம் நகர்கின்றது எனலாம்.
“அடிக்க வருவரை நீ அடி! கொல்ல வருவரை நீ கொன்றுமுடி!
வாழ்வுக்கு வேண்டிய வழியும், நெறியும் – பொய்யாமொழியும் இது தான்!” எனத் தொடர்ந்து முழங்கிற்று அக்குரல்
வானமும் இதனையே எதிரொலித்து ஓய்ந்தது.

“அதிர்ச்சியும் பயமும் எமக்கல்ல! அவையும் – அழிவும் எம் பகைவனுக்கே” என்ற விடுதலையின் விளக்கம் அங்கு ஒலித்துக்கொண்டிருந்தது .
ஆக்கம் :விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள்
வெளியீடு :எரிமலை இதழ்
முதல் இணைய வெளியீடு:வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”